PDA

View Full Version : சிறகடிக்கும் ஆசைகள்



A Thainis
08-08-2012, 08:30 PM
குளிர்ந்திடும் சூரியன் வேண்டும்
சுட்டெரிக்கும் நிலவு வேண்டும்
கொடியில் மின்னிடும் விண்மீன்கள் வேண்டும்
வானத்தில் பூத்திடும் மலர்கள் வேண்டும்
வான்திரள் வையகமாக வேண்டும்
நீர்த்திரள் நீலவனமாக வேண்டும்
வானலை வெண்மேகத்தை வீதிக்கு அழைத்து விளையாட வேண்டும்
கடலை வானத்தில் மிதக்க அதில் நான் நீராட வேண்டும்

வானத்தை கிழித்திடும் மின்கீற்றுகளால் - என்
கனவு கூரையை வேய்ந்திட வேண்டும் - அது
நாளல்லம் நனவாகி வாழ்வு மின்னிட வேண்டும்
புயல் குயிலாக மாறி கூவிட வேண்டும் - அவ்
இனிய ஓசை தென்றலாக என் மேனியை தழுவிட வேண்டும்
கொளுந்துவிடும் தீபந்தம் வேண்டும் - அதை
ஆசை தீர நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும்

இமயத்தின் உச்சியில் கால் பதிக்க வேண்டும்
இவ்விகம் வாழ்வோரின் உள்ளங்களில் வாழ வேண்டும்
பரரெல்லாம் பசுமையாக வேண்டும்
பார்போரின் மனசெல்லாம் பாசத்தால் நிறைய வேண்டும்
மனிதத்தின் மாண்பு வானுயர உழைக்க வேண்டும் - அதற்கு
நீதியும் உண்மையும் என்னில் நிலைக்க வேண்டும்.

தாய்தமிழ் தரணியெல்லாம் தழைத்திட வேண்டும்
கோடியாய் நூல்களை கோர்த்து - நாளும்
அவளின் சிறப்பின் செமமையினை புகழ வேண்டும்
அய்யன் வள்ளுவனின் ஈரடி வரிகள்
அவனியில் பவனிவர வேண்டும் - அது
இம் மானுடரின் வாழ்வியல் நெறியாய் போற்றிட வேண்டும்.

மலைகளில் துள்ளிடும் அருவிகள் வானின்று புறப்பட்டு
மழையாக கொட்டி தீர்த்திட வேண்டும்
வற்றாத ஆறுகளால் வறுமையில்லா உலக வேண்டும்
ஆழ்கடல் நானாக வேண்டும் - அங்கு
நிலவும் அமைதி என் வாழ்வாக வேண்டும்
இவற்றை எல்லாம் புதுமையை படைத்திட - ஒருமுறை
இறைவன் மீண்டும் மண்ணில் வேண்டும் - அவன்
என் உள்ளத்தில் என்றும் உறைந்திட வேண்டும்
அவனோடு நான் சங்கமமாகிட வேண்டும்

கீதம்
09-08-2012, 12:26 AM
குளிரந்திடும் சூரியன், சுட்டெரிக்கும் நிலவு சாத்தியம்தான். நிலவு சூரியனாகும், சூரியன் நிலவாகும். இரவைப் பகல் என்போம், பகலை இரவென்போம். முரண்பட்ட ஆசைகளை முன்னிறுத்தி, நிறைவுறா மனம்படும் பாட்டினை எடுத்துரைப்பது போல் உள்ளன முதலிரண்டு பத்திகள்.

முரண் ஆசைகளின் பட்டியலுக்குள் செருகிவைக்கப்பட்ட நியாயமானதும் சாத்தியமானதுமான ஆசைகள் சில அடுத்த இரண்டு பத்திகளை ஆக்கிரமிக்கின்றன. தமிழுக்கும் தனக்கும் பேரும் புகழும் நாடும் மனதின் ஏக்கங்களை வெளிப்படுத்தும் அவற்றில் உள்ள நியாயம் ஏற்கப்படவேண்டியதே. மானுடம் உயர்வடையவும், தமிழ் தழைக்கவும், நீதி,நியாயம் நிலைபெறவும் வேண்டும் மனதின் ஆசைகள் யாவும் பேராசைகளோ, முரணாசைகளோ அல்லவே. தனிமனித எண்ணத்தின் உயர்வில் தரணி செழிக்கும். வானளாவிப் பறந்த ஆசைகளை நிதானப்படுத்தித் தரைக்குக் கொண்டுவந்துவிடுகின்றன இப்பத்திகள்.

தரைக்கு வந்த ஆசைகள் இறுதியில் தனக்குள்ளே இறைதேடும் நிறைமனதோடு நிறைவாக்குகிறது கவிதையை. கட்டுப்பாடற்ற மனதின் வேண்டுதல்களை சிறகடிக்கும் ஆசைகளெனத் தலைப்பிட்டல் மிகப் பொருத்தம். பாராட்டுகள் தைனிஸ்.

ஆங்காங்கு தென்படும் சில எழுத்துப்பிழைகளைக் களைந்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். (வெண்மேகம், கொளுந்துவிடும் தீப்பந்தம், அணைத்து, பார்ப்போரின், நூல்களை, நாளெல்லாம்)

A Thainis
09-08-2012, 06:14 AM
நன்கு வாசித்து கருத்துகள் மற்றும் எழுத்து பிழைகளை சரிவர தந்தமைக்கு நன்றி.

ஆசைகள் எவ்வாறால்லாம் முரண்பட்டு சிறகடிக்கின்றன என்பதற்கு இக்கவிதை ஒரு துளி. நம் இலக்கு இவ்வாறு சிறகடித்தால் அது தவறு, பயனற்றது.

சுகந்தப்ரீதன்
09-08-2012, 03:27 PM
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
-என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அமைந்த கவிதை...!!

வாழ்த்துக்கள் தைனிஸ்..!!:icon_b:

ந.க
29-10-2012, 09:53 PM
'வற்றாத ஆறுகளால் வறுமையில்லா உலக வேண்டும் '
கனவுகளைக் காணவேண்டும் அவை கனியாக்க எம் கை பட வேண்டும்... ..........நன்று......நன்றி.......