PDA

View Full Version : சங்க இலக்கியங்கள் என் வழியில்..கவிதை எண் - ஒன்று

கலைவேந்தன்
02-08-2012, 05:01 PM
வாழ்க்கை நெறிக்கு முற்றாத முடிவுகளை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பகிர்ந்து சென்றுள்ளன..

இக்கால இளைஞர்கள் பழங்கால இலக்கியங்களை வாசிப்பது இல்லை. காரணம் அவற்றின் இலகுதன்மை அல்லாததே ஆகும்.

ஆயினும் அவ்விலககியங்கள் நமக்குத் தரும் நெறிமுறைகளை நம் தவற விடுதல் தகுமோ.?

என் சிறிய ஒரு முயறசி எதுவெனில் சங்க இலக்கியங்களில் சத்தானவைகளை முத்தானவைகளை அதன் சாராம்சத்தை இன்றைய காலகட்டத்திற்கேற்ப எளிய கவிதைகளாய்ப் படைத்து வழங்குதல்.

முயற்சியே இது. வெற்றியா அல்லவா என்பதைக் காலம் காட்டும்.!

அந்த வரிசையில் என் முதல் கவிதை..!

உலகு தழுவிய உறவன்றோ நாம்..?
கலகமும் கவின் வாழ்வும்
விலைகொடுத்து வாங்குகிறோம்..!

நோயதை அழைப்பதும்
பின் அதைத்தணிப்பதும்
துன்பமும் இன்பமும் புறத்தினில் சுமப்பதும்
நாமே அன்றி வேறெவர் பொறுப்பு..?

இறப்பினில் மகிழ்வதும் பிறப்பினில் அழுவதும்
மனிதரின் செயல்களில் மட்டுமே யன்றி
வேறொரு விலங்கினில் கண்டதுமுண்டோ..?

இனிமையும் கைப்பும் உப்பும் துவர்ப்பும்
நாவது வரையே என்பதை மறந்தோம்..

இல்லறம் அல்லது துறவறம் என்னும்
பொல்லா மனநிலை விலங்கினில் இல்லை..!

வான்பெய்த கவின்மழை ஆறாய்க்கடந்து
கல்லும் மலையும் காடும் கடந்து
தன் வழிச்சென்று கடலினில் கலந்திடும்..

அதுவே வாழ்க்கை அதுவே ஊழ்வினை
இதனை மறந்தவர் இன்னலில் உளைந்தார்..!

ஆன்றோர் கண்டனர் கண்டதை விண்டனர்..
ஆதலின் இன்றோர் சபதமெடுப்போம்..!

மூத்தோரைக் கண்டு வியத்தலை விடுவோம்
எளியோரைக் கண்டு எள்ளுதல் தொலைப்போம்..

மூலம் :

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

_ கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்

M.Jagadeesan
03-08-2012, 12:57 AM
சீரிய முயற்சி ! சங்க இலக்கியங்கள் தமிழ்மொழியின் தனிப்பெரும் சொத்தாகும். ஆனால் புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது. அதை எளிமைப்படுத்தி எல்லோரும் புரிந்துகொள்ளத் தக்கவகையில் கொடுக்கும் தங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். தொய்வில்லாமல் தொடருங்கள்!!

கீதம்
03-08-2012, 01:33 AM
மிகவும் அருமையான முயற்சி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும். இலக்கிய அறிவெனும் நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே சங்கமெனும் அரங்கம் அமர்ந்து சங்கத்தமிழை ரசிக்கமுடியும், ருசிக்கமுடியும் என்றிருக்க, வெளியிலிருந்து எட்டி எட்டி, எட்டுமளவு மட்டும் ரசித்துக்கொண்டிருந்த என்னைப் போன்ற தமிழார்வம் மிக்க ஏராளமானோர்க்கு இதைவிடவும் களிப்பான செய்தி வேறெதுவும் இருக்காது. மன்றத்தில் முன்பு இளசு அவர்கள் சில புறநானூற்றுப் பாடல்களை (http://www.tamilmantram.com/vb/showthread.php/446-புறநானூற்றுக்-கவிதைகள்/page3)இப்படி எளிய கவிதைவடிவில் தந்திருந்தார். அதைப் பார்த்தத் தாக்கத்தால் (பேராசையாலும் என்று சொல்லலாம்:) ) என்னுடைய அரைகுறை இலக்கியப் பரிச்சயத்தைக் கொண்டு நெடுநல்வாடையை (http://www.tamilmantram.com/vb/showthread.php/26589-நெடுநல்வாடையை-நுகர-வாருங்கள்) கவிதை வடிவில் தந்தேன். இன்னும் நிறைய நிறையக் கற்றுக்கொள்ளும் ஆசை இருக்கிறது. முறையாய் தமிழறிந்த தங்கள் மூலம் என் ஆசை நிறைவேறவிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து தாருங்கள். மன்றத்தின் பொக்கிஷமாக எந்நாளும் அவை நிலைத்திருக்கும்.

தங்களிடம் சிறு வேண்டுகோள் : இத்திரி கவிதைப்பட்டறையில் இருப்பதை விடவும் இலக்கியங்கள் பகுதியில் இருப்பது பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. தங்கள் கருத்தை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.

kulakkottan
03-08-2012, 02:26 AM
நல்ல முயற்சி ஐயா !கூடவே ஒரு வேண்டுகோள் பழம் இலக்கியத்தில் உள்ள அரும் சொல்களுக்கு அர்த்ம் தந்தாள் அது இன்னும் பொருத்தமாய் இருக்கும் .
அவற்றோர் அன்ன = ?,மல்லல் பேர்யாற்று=?

jayanth
03-08-2012, 03:30 AM
நல்ல முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள் கலை...

கலைவேந்தன்
03-08-2012, 03:31 AM
சீரிய முயற்சி ! சங்க இலக்கியங்கள் தமிழ்மொழியின் தனிப்பெரும் சொத்தாகும். ஆனால் புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியது. அதை எளிமைப்படுத்தி எல்லோரும் புரிந்துகொள்ளத் தக்கவகையில் கொடுக்கும் தங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். தொய்வில்லாமல் தொடருங்கள்!!

தங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. இயன்ற மட்டிலும் தொடர விழைகிறேன் இன்ஷா அல்லாஹ்..

கலைவேந்தன்
03-08-2012, 03:34 AM
மிகவும் அருமையான முயற்சி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும். இலக்கிய அறிவெனும் நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே சங்கமெனும் அரங்கம் அமர்ந்து சங்கத்தமிழை ரசிக்கமுடியும், ருசிக்கமுடியும் என்றிருக்க, வெளியிலிருந்து எட்டி எட்டி, எட்டுமளவு மட்டும் ரசித்துக்கொண்டிருந்த என்னைப் போன்ற தமிழார்வம் மிக்க ஏராளமானோர்க்கு இதைவிடவும் களிப்பான செய்தி வேறெதுவும் இருக்காது. மன்றத்தில் முன்பு இளசு அவர்கள் சில புறநானூற்றுப் பாடல்களை (http://www.tamilmantram.com/vb/showthread.php/446-புறநானூற்றுக்-கவிதைகள்/page3)இப்படி எளிய கவிதைவடிவில் தந்திருந்தார். அதைப் பார்த்தத் தாக்கத்தால் (பேராசையாலும் என்று சொல்லலாம்:) ) என்னுடைய அரைகுறை இலக்கியப் பரிச்சயத்தைக் கொண்டு நெடுநல்வாடையை (http://www.tamilmantram.com/vb/showthread.php/26589-நெடுநல்வாடையை-நுகர-வாருங்கள்) கவிதை வடிவில் தந்தேன். இன்னும் நிறைய நிறையக் கற்றுக்கொள்ளும் ஆசை இருக்கிறது. முறையாய் தமிழறிந்த தங்கள் மூலம் என் ஆசை நிறைவேறவிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து தாருங்கள். மன்றத்தின் பொக்கிஷமாக எந்நாளும் அவை நிலைத்திருக்கும்.

தங்களிடம் சிறு வேண்டுகோள் : இத்திரி கவிதைப்பட்டறையில் இருப்பதை விடவும் இலக்கியங்கள் பகுதியில் இருப்பது பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. தங்கள் கருத்தை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.

மிக நல்ல முயற்சிகளுக்கு தங்களின் பாராட்டும் ஊக்கமும் மன்றம் அறிந்த ஒன்றே. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு திரிகளையும் நான் இன்னும் பார்வையிடவில்லை. காலம் கருதி விரைவில் அவற்றினை வாசிக்கிறேன்.

இது ஒரு கவிதை முயற்சி என்பதால் ( நான் முழுதும் கற்றவன் அல்லன். கற்றது கைமண்ணளவே என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.) கவிதைப்பட்டறையில் பதிந்தேன். தங்களுக்கு உசிதமான பகுதிக்கு மாற்றிட சம்மதிக்கிறேன்.

மீண்டும் நன்றி கீதம்..!

கலைவேந்தன்
03-08-2012, 03:45 AM
நல்ல முயற்சி ஐயா !கூடவே ஒரு வேண்டுகோள் பழம் இலக்கியத்தில் உள்ள அரும் சொல்களுக்கு அர்த்ம் தந்தாள் அது இன்னும் பொருத்தமாய் இருக்கும் .
அவற்றோர் அன்ன = ?,மல்லல் பேர்யாற்று=?

என்னால் இயன்ற அளவில் பொருளும் இனி வழங்க முயல்கிறேன் குளகோட்டன்.

அவற்றோர் அன்ன = அவற்றினைப்போலவே ( அன்ன / போல ஆகியன உவம உருபுகள் )

மல்லல் பேர்யாற்று = மலைப்பகுதியில் பெருகிப்பரவி ஆறாய் மாறி.

தங்களின் வசதிக்காக அப்புறநானூற்றுப்பாடலின் வரிக்கு வரி பொருளாக விக்கிபீடியாவில் கிடைத்ததை இங்கே மீள்பதிவில் தருகிறேன்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே!
செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே!
மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது,
வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,
அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே!
பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

இவை உதவி புரியும் என எண்ணுகிறேன். இனியும் ஐயமிருப்பின் தெளிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.

மிக்க நன்றி குளக்கோட்டன்.

கலைவேந்தன்
03-08-2012, 03:46 AM
நல்ல முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள் கலை...

என்றும் என் முயற்சிகளுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கும் ஜெயந்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி..!