PDA

View Full Version : கற்றலும் நிற்றலும்



சுகந்தப்ரீதன்
02-08-2012, 10:32 PM
எட்டுவருட இல்லற வாழ்வில் சங்கரனை புரிந்து கொள்வதில் சுந்தரிக்கு பெரிதாக சிரமம் இருந்ததேயில்லை, ஆனால் இன்று தொலைக்காட்சியில் வழக்கமான அன்றாட செய்திகளுக்கு இடையே அந்த செய்தியையும் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் வாசித்து, வாசிப்பாளர் தன் கடைமையை சரிவர செய்துவிட்டு சென்றதிலிருந்து அவன் சித்தபிரமை பிடித்தவன்போல சிந்தனையில் ஆய்ந்திருப்பது அவளுக்கு சற்று பயத்தையும் கூடவே அவன்மீது ஒருவித பரிதாபத்தையும் கூட்டிவிட்டிருந்தது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் இரவு சாப்பிடும்போது அவனிடம் கேட்டேவிட்டாள் அவள்.

“ஏங்க நானும் அப்பயிலருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்.. பதிலே சொல்லாம இப்படி மௌனசாமியாட்டாம் இருந்தா என்னங்க அர்த்தம்..?!”

“இல்ல சுந்தரி.. அந்த செய்தியை கேட்டீல்ல… உனக்கு வருத்தமா இல்லியாம்மா..?!”

“அதுதானா இப்ப உங்க பிரச்சனை.. சரி அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்..?!”

சுந்தரியின் கேள்வி சங்கரனுக்கு ஒருவித இனம்புரியாத குற்ற உணர்வைதான் ஏற்படுத்தியது.. அதனால் பதில் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான்..!! ஒரு பெண்ணாக அந்த செய்தியை சுந்தரியாலும் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்பதே அவளது யதார்த்த நிலைப்பாடாக இருந்தது.

படுக்கையிலும் அதே மௌனதவத்தில் அவன் மூழ்கியிருந்தது சுந்தரிக்கு ஒருவித எரிச்சலை தோற்றுவித்தது..!! “சரி.. சரி.. அதைபற்றியே யோசிச்சிக்கிட்டு இருக்காம, பேசாம படுத்து தூங்குங்க” என்று கூறிவிட்டு குழந்தைகளுக்கும் போர்த்திவிட்டு தானும் படுத்து உறங்கிபோனாள். சங்கரனுக்கோ மனப்புழுக்கத்தால் தூக்கம் வராமல் போகவே, நீண்டநேரம் புரண்டுபுரண்டு படுத்து கொண்டிருந்தான்.

வழக்கம்போல அன்றைக்கும் அவனது அம்மாவின் குரல்தான் சங்கரனை தூக்கத்திலிருந்து எழுப்பியது.

‘டேய் சங்கரா எந்திரிடா…. மணி ஏழுக்கு மேலாச்சி இன்னும் என்னடா தூக்கம்?’

‘போம்மா இப்ப என்ன பள்ளிக்கூடமா நடக்குது… லீவுதானே?!’

‘அதில்லடா, ஊர்லருந்து ஒரு துக்கசேதி வந்திருக்கு.. கொஞ்சம் என்னை பஸ்டாண்ட் வரைக்கும் சைக்கிள்ல கொண்டுவந்து விட்டுட்டு வாடா’

சங்கரனுக்கு எரிச்சலாக வந்தது. வேண்டா வெறுப்பாக படுக்கையிலிருந்து எழுந்தான். துக்கசெய்தி கொண்டுவருபவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் வந்து தூது சொல்லிவிட்டு போய்விடுவார்கள். சங்கரனின் தாய்பிறந்த ஊரில் அவளுடைய வகையறாதான் ஊரிலே பெரியது என்பதால் வருடத்தின் எல்லா மாதத்திலும் நல்லது கெட்டது என்று குறைந்தது இரண்டு தூதாவது அவளை தேடி வந்துவிடும். சங்கரனின் தந்தைதான் அடிக்கடி அலுத்துக்கொள்வார்,

‘பெரியக் கூட்டம்ன்னு தெரியாமா வந்து மாட்டிக்கிட்டேன்டி, மாசாமாசம் இப்படி கல்யாணம் காரியம்ன்னு வந்துக்கிட்டிருந்தா மனுசன் காசுக்கு எங்கடி போறது?’

‘ஆமாம், இன்னிக்கு நாலு காரியத்துக்கு நாம போகலைன்னா நாளைக்கு நம்ப காரியத்துக்கு யாரு வருவா? நமக்கும் மூனு புள்ளைங்க இருக்காங்கிறது மனசுல வச்சிக்கிட்டு பேசுங்க’

‘ஆமாண்டி, கல்யாணமாகி பாஞ்சு வருசமாச்சு. என்னவோ இப்பதான் உன்ன புதுசா கட்டிக்கிட்டு வந்தாப்ல பொறந்தவத்துலருந்து இன்னும் தூது விட்டுக்கிட்டு இருக்கானுங்க’

‘அங்கமட்டும் என்ன வாழுதான், உங்க ஆளுங்கக்கிட்ட இருந்து சேதிவந்தாக்க துண்டை தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு போறீங்களே, நான் ஏதாவது சொல்லுறனா?”

சங்கரன் கோட்டுவாயை கழுவ, வீட்டின் பின்புறம் வந்தபோது வெயில் சுல்லென்று முகத்தில் அடித்தது. வைகாசி வந்தும் சித்திரை வெயிலின் தாக்கம் சற்றும் தணியாமலே இருந்து கொண்டிருந்தது. வீட்டின் பின்புறம் இருந்த முருங்கையில் கூட்டுக்கு தழை ஒடித்து கொண்டிருந்தாள் அக்கா செவ்வந்தி. பட்டியிலிருந்த ஆடுகள் தலையை உயர்த்தி அவள் தழை பறிப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன. சங்கரன் முகத்தை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வந்தபோது அம்மா புறப்படுவதற்கு தயாராக இருந்தாள். ஊரிலிருந்து பஸ்டாண்டு ரெண்டு கல் தொலைவில் இருந்தது.

‘சங்கரா, சீக்கிரம் சட்டய மாட்டிக்கிட்டு வாடா, எட்டுமணி வண்டியை விட்டா அப்புறம் உங்க அப்பாக்கிட்ட பேச்சுவாங்க முடியாது’

‘என்னடி, அங்க ஏதோ என்னபத்தி தொணதொணக்குற மாதிரி தெரியுது’ – குரல் வீட்டின் முன்புறத்திலிருந்து வந்தது.

‘ஒன்னுமில்லப்பா, பஸுக்கு நேரமாச்சி, சீக்கிரம் கெளம்புடான்னு சொன்னாங்கப்பா’

– அம்மா பதில் சொல்வதற்க்குள் அவன் முந்திக்கொண்டான். அம்மாவை பதில் சொல்லவிட்டால் அடுத்து அடுத்து என்னவாகுமென்று அவனுக்கு புரிந்து இருந்தது.

வருவோர் போவோரை வரவேற்பதுபோல், கல்சாலையின் இருமருங்கிலும் இடைவெளிவிட்டு பசுமையுடன் படர்ந்து கிடந்தது காட்டுவேலி. அதன் பின்னால் நீண்டு கிடந்த உழுத காடுகளில் பசுமையை பார்ப்பதே அரிதாக பட்டது. வெயில் படர்ந்த அந்த பூமியில் காற்று எதிர்திசையில் சுழன்று கொண்டிருந்தது. ஏழாம்வகுப்பு சிறுவனான சங்கரனுக்கு அந்த எதிர்காற்றில் சைக்கிள் மிதிப்பது என்பது சற்று சிரமமாகவே இருந்தது. ஆனாலும் சங்கரனின் தாய்க்கு வேறு வழியில்லை. அதிகாலையில் தூது வந்ததிலிருந்து அவளும் அரக்கபரக்க வேலை செய்துதான் பார்த்தாள். ஆனாலும் முடிந்தபாடில்லை. காலை சமையலைகூட மகள் செவ்வந்தியிடம் முடித்துவிடும்படி கெஞ்சலாக கேட்டுக்கொண்டுதான் புறப்பட வேண்டியிருந்தது.

சங்கரனது ஊருக்கும், அவனது தாய் பிறந்த ஊருக்கும் இடையில் இருக்கும் தொலைவு என்னவோ வெறும் எட்டுமைல் தூரம்தான். ஆனால் அங்கு நேரடியாக சென்றுவர சரியான சாலை வசதி இல்லாததால், பத்து ஊரை சுற்றிக்கொண்டு செல்லும் எட்டுமணி பேருந்தைத்தான் எப்போதும் நம்ப வேண்டியிருந்தது. அதை தவறவிட்டால் பிற்பகல் இரண்டு மணிக்குதான் அடுத்தவண்டி. நல்லதோ, கெட்டதோ பொழுதுக்குள் வீடு திரும்ப வேண்டுமானால் காலையில் கிளம்பி போவதுதான் சரியாக இருக்கும். இல்லையென்றால் இரவில் ஊர்தங்க வேண்டிவரும். அதில் சங்கரனின் தாய்க்கு ஏனோ ஒருபோதும் உடன்பாடு உண்டாவதில்லை.

கோடை விடுமுறைக்கு தாய்மாமன் வீட்டிற்க்கு சென்றிருந்த சங்கரனையும் அவன் தங்கையையும் இரண்டுநாள் முன்புதான் ஊருக்கு அழைத்து வந்திருந்தாள் அவனது தாய்.

சிவசாமிமாமா வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக ஊரிலிருந்து வந்த அம்மாவை பார்த்துவிட்டு சங்கரனின் தங்கை ஓடிவந்து அவனிடம் சேதி சொல்லிவிட்டு போனாள். அப்போது சங்கரன் நந்தினி வீட்டில்தான் இருந்தான். அவனுக்கு அம்மாவை போய்பார்க்க வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை. சங்கரனின் தாய்மாமன் வீட்டிலிருந்து ஆறு வீடுகள் தள்ளி அதே தெருவில்தான் நந்தினியின் வீடும் இருந்தது. நந்தினியின் தந்தையும் சங்கரனின் தாய்மாமனும் உடன் பங்காளிகள்.

விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தன் மாமன் வீட்டில் கழியும் பொழுதை காட்டிலும் அதிகமாக நந்தினியின் வீட்டில்தான் அவனது பொழுதுகள் கழியும். அதுவும் நந்தினியுடன் சேர்ந்துகொண்டால் காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு கதவடைக்கும் வரை பொழுது எப்படி போகிறதென்பது அவனுக்கே தெரிவதில்லை. அந்த அளவுக்கு காடுகரை, வயல், ஆறு, ஏரி, கோவில், குளம் என்று தான் செல்லுமிடமெங்கும் சங்கரனையும் கூடவே கூட்டிக்கொண்டு திரிவாள் நந்தினி.

நந்தினி ஒன்றும் சங்கரனைப்போல சிறுவிளையாட்டு பிள்ளையில்லைதான், +2 தேர்வெழுதிவிட்டு அடுத்து கல்லூரிப்போக காத்திருக்கும் மாணவி அவள். ஆனால் அவள் செய்கையிலோ குழந்தைதனம் என்பது கொஞ்சமும் குறையாமல் எப்போதும் நிரந்தரமாய் குடிக்கொண்டிருக்கும். அதற்காக நந்தினியின் தந்தையைத்தான் அவ்வப்போது கரித்துக் கொட்டுவாள் அவளின் தாய் மங்களம்.

‘ஏங்க, வயசுக்கு வந்தபுள்ள மாதிரியா நடந்துக்கிறா இவ? பள்ளிக்கூடம் இருக்கும்போதுதான் படிக்கறேன்னு சொல்லி புத்தகத்தை தூக்கிட்டு உட்காந்துக்குறா.. இப்ப லீவுலியாவது வூட்ல கூடமாட வேலை செய்யலாமில்ல.. அதவுட்டுட்டு எப்பப்பாரு குஞ்சு குளாவானையெல்லாம் கூடக் கூட்டிக்கிட்டு திரியுறா… இதெல்லாம் ஏன்னே நீங்க கேட்க மாட்டீங்களா?’

‘ஏண்டி, அவ என்ன இப்ப வயசு பசங்கக்கூடயா சுத்துறா? இப்படி வாள்வாள்ன்னு கிடந்துக்கிட்டு கத்துறவா நீயி?’

‘ஆமாம்.. இப்ப அது ஒன்னு மட்டும்தான் பாக்கி. நான் என்ன சொல்ல வரேன், நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க… எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்தான்.. நான் கத்துறத எங்கியாவது காதுல வாங்குறாளா பாருங்க..’

நந்தினியுடன் திண்ணையில் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருந்த சங்கரனின் காதில் எல்லாமே விழுந்தது. காய் நகர்த்தலை மறந்து தலையை தூக்கி உள்ளே மங்களம் அத்தையை அவன் பார்த்தபோது ‘நறுக்’கென்று தலையில் ஒரு கொட்டு வந்து விழுந்தது. கொட்டியது நந்தினிதான்.

‘இங்க விளாடும்போது அங்க என்னடா வேடிக்கை?’

‘போடி, இனி உங்கூட நான் விளாடமாட்டேன் போ’ - என்று உச்சந்தலையை தேய்த்துக்கொண்டே திண்ணைவிட்டு இறங்கி வெளியே ஓடினான் சங்கரன்.

‘போடா போ, எங்க போனாலும் மாப்ள திரும்பி இங்கதான் வந்தாகனும்’ என்று கூறிகொண்டே எழுந்து வீட்டினுள் சென்றாள் நந்தினி.

வீட்டில் கடைக்குட்டி என்பதால் வேலுச்சாமிக்கு எப்போதுமே தன் மகள் நந்தினிமீது தனிப்பிரியம். நந்தினியின் தமக்கை சாந்தினி வயதுக்கு வந்தவுடனே அவளை பள்ளியைவிட்டு நிறுத்திவிட்டாள் மங்களம். ‘அப்பாடா தப்பித்தோம்’ என்று சாந்தினியும் சந்தோசத்தோடு படிப்புக்கு முழுக்கு போட்டாள். ஆனால் நந்தினி விசயத்தில் அவளின் தாய் வழக்கம்போல் தோற்றுத்தான் போனாள்.

நந்தினி ஊரில் நடுநிலைப்பள்ளி மட்டுமே இருந்தது. அதற்குமேல் படிக்க வேண்டுமானால் ஐந்துமைல் தொலைவில் உள்ள கரம்பூருக்குதான் செல்ல வேண்டும். பேருந்துவசதி சரிவர இல்லாத அந்த தடத்தில் பிள்ளைகள் நடந்தோ, சைக்கிளிலோதான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளால் பெரிதாக பிரச்சனையில்லை, பெண் பிள்ளைகளால் எங்கே இல்லாத கவுரவம் இல்லாமலே போய்விடுமோ என்ற எண்ணத்தில் யாருமே அதுவரை பெண் பிள்ளைகளை கரம்பூருக்கு படிக்க அனுப்பவில்லை. உள்ளூருக்கே ஒப்புக்கொள்ளாத மங்களத்தின் மனமா வெளியூர் செல்ல நந்தினியை அனுமதிக்க போகிறது? ஆனால் நந்தினி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் தந்தையிடம் அடம்பிடித்து தன் உயர்கல்வியை கரம்பூர் சென்று கற்கலானாள்.

“ஏன்யா.. பொட்டைப்புள்ளை படிச்சி உனக்கு என்ன சம்பாரிச்சா போடப்போகுது…?”, “வயசுக்கு வந்த புள்ளைக்கு காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணிவைப்பியா அதை வுட்டுபுட்டு வெளியூருக்கு அனுப்பிக்கிட்டு?”, “காலம் கெட்டுக்கிடக்கையில ஏன் வேலு உம்பொண்ணுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்?”- இப்படி மற்றவர்கள் தங்களது அறியாமையை விருப்பமாக வெளிப்படுத்தியப்போதும் வேலுச்சாமி தன் மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. இது நந்தினிமூலம் சங்கரனுக்கு தெரிந்தபோது, வேலுமாமா மீது இனம்புரியாத ஒருவித தனிமரியாதையும் பாசமும் அவனுக்கு உண்டானது.

பள்ளிக்கு சென்றுவர தன் மகளுக்கு விட்டமில்லாத ’BSA சைக்கிள்’ ஒன்றை வேலுச்சாமி வாங்கி தந்திருந்தார். சீருடையில் நந்தினி அதை ஓட்டிச் செல்கையில் காணும் அவ்வூர் மக்களுக்கு, மண்ணில் ஒரு தேவதை திரிவதை போன்ற உணர்வைதான் அவள் தோற்றுவித்தாள். சென்ற கோடை விடுமுறையில் சங்கரனுக்கு அதில்தான் ’சைக்கிள்’ ஓட்ட கற்பித்து பயிற்றுவித்திருந்தாள் அவள். அவசரத்துக்கு தன் தமக்கைக்குக்கூட தர மறுக்கும் சைக்கிளை, பலமுறை தானும் காயப்பட்டு சைக்கிளையும் காயப்படுத்திய சங்கரனுக்கு மட்டும் சிறிதும் மனம்கோணாது சிரித்த முகத்துடன் கற்றுதரும் அளவுக்கு நந்தினிக்கு சங்கரன்மீது பாசம் படர்ந்திருந்தது.

ஏனோ தெரியவில்லை… நந்தினி வெளியூர் சென்று படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளின் தாய் மங்களத்திற்கும் அவளுக்குமிடையே ஒருவித முறுகல்நிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டிருந்தது. அதை சில சமயங்களில் நேரில் காண நேர்கையில், சங்கரனுக்கு சற்று அச்சமாககூட இருக்கும். அதுபற்றி ஒருமுறை அவன் நந்தினியிடமே கேட்டுவிட்டான்.

‘அக்கா, ஏன் நீயும் அத்தையும் எப்ப பார்த்தாலும் சண்டை பிடிச்சிக்கிறீங்க..?’

கேள்விக்கு பதில் வரும்முன் சங்கரன் தலையில் கொட்டுதான் வந்து விழுந்தது.

“உனக்கு எத்தனைவாட்டி சொல்றது… நான் உனக்கு முறைபொண்ணுடா.. நீ என்னை வாடி போடின்னு கூப்பிடு.. இல்லைன்னா நந்தினின்னு பேரை சொல்லிக்கூப்பிடு.. அக்கான்னு கூப்பிட்டா தொலைச்சிப்புடுவேன்” என்று மிரட்டிவிட்டு சிரித்தாள்.

”போடி லூசு”ன்னு சொல்லிவிட்டு ஓட நினைத்த சங்கரன் பிறகு தலையை தடவிக்கொண்டே ‘சரி சொல்லுடி’ என்றான்.

’என் சமர்த்து’ என்று சங்கரனின் கன்னத்தை கிள்ளியவள், “அது ஒன்னுமில்லடா, எனக்கு ரிசல்ட் வந்ததும் எப்படியாவது அப்பாக்கிட்ட அடம்பண்ணி காலேஜிக்கு படிக்க போயிடுவேன்.. அப்படி காலேஜ்க்கு போயிட்டா அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதுல்ல… அப்புறம் எப்படி அம்மாக்கூட சண்டைப்போடறதாம்… அதான் எல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே சண்டைப் போடுறனாக்கும்..”

”அப்பசரி, அத்தை ஏன் உன்கிட்ட சண்டைப்போடுது..?”

“அதுவா..? உங்க அத்தை ஒரு லூசுடா சங்கரா... அதுக்கு எம்மேல பாசமும் அதிகம் கூடவே ஊருகாரங்களால உண்டான பயமும் அதிகம்.. அதான் அப்பப்ப எதையாவது கரிச்சுக் கொட்டிக்கிட்டு திரியும்.. அதையெல்லாம் நீ கண்டுக்காதடா கண்ணா..” என்றாள்.

தன் மாமன்வீட்டு வெளித் திண்ணையில் அமர்ந்து யாரோ ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிந்த தன் தாயை தூரத்தில் ஒடிவரும்போதே சங்கரன் பார்த்துவிட்டான். அருகில் வந்தவனிடம், “டேய் சங்கரா.. சட்டையை மாத்திக்கிட்டு சீக்கிரம் கிளம்புடா… அப்பா உன்னை கையோட கூட்டிக்கிட்டு வரசொன்னாரு” என்று அம்மா சொன்னதும் அவனுக்கு முகம் சோர்ந்துவிட்டது.

அதை கண்டுகொண்ட சங்கரனின் தாய்மாமன், ‘இன்னந்தான் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க ஒரு வாரமிருக்கே, அதுக்குள்ள ஏம்மா கூட்டிட்டு போற?’

‘இல்ல அண்ணாச்சி, காட்ல மெலாறு இன்னும் வெட்டாம அப்படியே கிடக்குது, நாலு ஆள வச்சிக்கிட்டு வெட்டிப் போட்டாத்தான் ஏரோட்ட முடியும் போலிருக்கு. இதுல இதுங்கள கூட்டிட்டு போறதுக்காக மறுபடியும் இங்க வரதுங்கிறது ஆகாத காரியம்’

‘சரி, அப்படிண்ணா நா அடுத்தவாரம் புள்ளைங்கள கொண்டாந்து விடுறனேம்மா’

‘வேண்டாம் அண்ணாச்சி, அந்த ஆளு இதுங்களுக்கு பள்ளிக்கூடத்துக்கு துணி அளவெடுத்து தைக்க குடுக்கனும், கையோட கூட்டிட்டு வான்னு சொன்னாரு’

தன் மைத்துனன் குணமறிந்த அவர் அதற்குமேல் தன் தங்கையிடம் எதுவும் சொல்லி வற்புறுத்த விரும்பவில்லை. இதற்கிடையில் வீட்டுக்குள் சென்று மாற்றுடை அணிந்து தலையை வாரிகொண்டு வெளியே வந்த சங்கரன் தன் தாயிடன், “அம்மா.. நான் நந்தினி அக்காக்கிட்ட ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு வந்திடுறேம்மா..” என்று படியிறங்கி ஓடவும், ஒருகையால் தன் பாவாடையை உயர்த்தி பிடித்துக்கொண்டு அவன் கூடவே பின்னால் ஓடினாள் சங்கரனின் தங்கை..!!

திண்ணையில் அமர்ந்திருந்த வேலுச்சாமி சங்கரனும் அவன் தங்கையும் ஓடிவந்ததை கண்டுவிட்டு, “என்ன.. மாப்பிள்ளையும் பொண்ணும் ஜோடிபோட்டுக்கிட்டு வராங்கா?” என்று கிண்டலடித்தார்.

“போங்க மாமா..” என்று சிணுங்கிய சங்கரனின் பின்னால் தெத்துபல் தெரிய அவரை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள் அவன் தங்கை.

வீட்டுக்குள் எட்டிபார்த்த சங்கரன், “நந்தினி அக்கா.. நந்தினி அக்கா?” என்றழைக்கலானான்.

”நீ அவகிட்ட கொட்டு வாங்கிக்கிட்டு இந்தபக்கம் போனதுமே, கூட படிச்ச கூட்டாளியை பாக்க பக்கத்தூருக்கு போறேன்னு சொல்லி சைக்கிளை தூக்கிகிட்டு அவ அந்த பக்கம் கிளம்பி போயிட்டா” என்ற மங்களம் அத்தையின் குரலில் இருந்த கடுமையை கண்டு, “நான் ஊருக்கு கிளம்புறேன் மாமா.. காலாண்டுலீவுக்கு வரேன்னு நந்தினி அக்காகிட்ட சொல்லிடுங்க..” என்று வேலுமாமாவிடம் சொல்லிகொண்டே பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நைசாக நழுவினார்கள் சங்கரனும் அவன் தங்கையும்.

சங்கரன் தன் தாயை பஸ்நிறுத்தத்தில் இறக்கிவிடவும் தூரத்தில் எட்டுமணி வண்டி வந்துகொண்டிருப்பதை காணவும் சரியாக இருந்தது. சைக்கிளை வீட்டுக்கு திரும்பியவனிடம், “டேய் சங்கரா… உங்கப்பாகிட்ட நேத்து எடுத்துகிட்டு வந்த துணியை கொண்டுபோயி பக்கத்தூர் டைலருகிட்ட கொடுத்து தைக்க சொல்லுடா.. பள்ளிக்கூடம் ஆரம்பிக்க இன்னும் ஒருவாரம்கூட இல்லை...” என்றாள் அவன் தாய்.

”சரிம்மா” என்று தலையாட்டியவன் விசுகென்று சைக்கிளில் ஏறி தள்ளுகாற்றில் சிட்டாக வீட்டைநோக்கி பறந்தான்.

ஆடியில் விதைத்த பயிர்கள் அனைத்தும் காடெங்கும் பசுமை போர்த்திக்கொண்ட ஆவணியின் ஒரு காலைப்பொழுதில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஆரம்பமானது. தேர்வுக்கு பிறகு கிடைக்கும் விடுமுறை என்னும் விடுதலைக்காவே தேர்வை ஆவலுடன் எதிர்நோக்கும் சராசரி இந்திய குழந்தைகளில் சங்கரனும் ஒருவன். அதுவும் விடுப்பில் தாய்மாமன் ஊருக்கு சென்று நந்தினியுடன் ஊர்சுற்றலாம் என்ற எண்ணமே அவனுக்கு பெருங்களிப்பை தந்து கொண்டிருந்தது. தேர்வு முடிந்த மறுநாளே ஊருக்கு கிளம்ப தயாராகிவிட்டனர். சங்கரனும் செவ்வந்தியும். அவர்களின் தந்தைதான் இருவரையும் பஸ் ஏற்றிவிட்டு, “மாமா ஊரு வந்ததும்… தம்பியை கூட்டிக்கிட்டு இறங்கிக்க.. லீவு முடிஞ்சதும் மாமாவை கொண்டுவந்து விடசொல்லும்மா” என்று சொல்லி செவ்வந்தி கையில் இருபது ரூபாயை கொடுத்துவிட்டு போனார்.

மாமன் வீட்டுக்கு சென்றபோது முற்றத்தில் அமர்ந்திருந்த அவனது அத்தையும் மாமனும் முகம்மலர சங்கரனையும் செவ்வந்தியையும் வரவேற்றனர். செவ்வந்தி கையைபிடித்து இழுத்து தன்அருகில் ஒட்ட அமரவைத்து தலைகோதியவாறு அவளிடம் நலம்விசாரிக்க ஆரம்பித்துவிட்டாள் அத்தை கண்ணம்மா. சங்கரனின் மாமன் அவனிடம், ”எங்கடா சின்னபுள்ளய கூட்டிட்டு வரலியா” என்ற கேள்விக்கு சம்பிரதாயமாய் பதில் சொல்லிவிட்டு கொண்டுவந்த பையை அத்தையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்று நந்தினியை நாடி அவள் வீட்டைநோக்கி ஓடினான்.

வழக்கமாக திண்ணையில் தென்படும் வேலுமாமா அன்றைக்கு அங்கே இல்லை. பொதுவாக அவர் இருந்தால் மங்களம் அத்தை சற்றே தணிவாக பேசுவாள்.. இல்லையென்றால் குரல் சற்று காட்டமாக வெளிபடுவதுபோல் இருக்கும்… அதைகண்டு மருட்சியுடன் அவன் மௌனமாகி விடுவான்.. அவர் அங்கு இல்லாதது ஒருவித அசௌகரியமாகவே பட்டது அவனுக்கு. இருந்தாலும் நந்தினி இருக்கிற தைரியத்தில் மெதுவாக வாசற்கதவை அடைந்தவன் தலையை மட்டும் உள்ளே நீட்டி “நந்தி்னி… நந்தினி..” என்று குரலெயுப்பினான். சத்தமில்லாமல் போகவே மெல்ல பூனைநடை போட்டு உள்ளே சென்றான். அதேசமயம் பின்வாசல் புறமிருந்து உள்ளே வந்த மங்களம் அத்தையை கண்டு தயங்கி தயங்கி “நந்தினியக்கா எங்கத்த?” என்றான் சங்கரன்.

அவன் கேட்டு முடிப்பதற்குள், அவனை வாரியெடுத்து தன்மடியில் வைத்துக்கொண்டு வாய்விட்டு அழத் தொடங்கினாள் மங்களம். சங்கரனுக்கு ஒருகணம் என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவன் திகைப்புடன் மங்களம் அத்தையை பார்த்தான்… அவளின் செயல் அவனையறியாமலே அவனுக்குள் அழுகையை வரவழைத்தது. மங்களத்தின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்து ஆட்கள் வேலுச்சாமிவீட்டு திண்ணைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். அப்போது அங்கே வீட்டுக்குள் வந்த வேலுச்சாமி நிலமையை உணர்ந்தவராக, மங்களத்தின் மடியிலிருந்த சங்கரனை தூக்கிக்கொண்டு அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

சங்கரன் ஒன்றுமே பேசவில்லை... மங்களத்தின் அருகில் பக்கத்துவீட்டு பெண்கள் அமர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தனர்… வேலுச்சாமியின் தளர்வான பாசபிடிப்பில் அவரது மடியில் அமர்ந்து அழுத வண்ணம் நிகழ்வதை கவனித்துக் கொண்டிருந்தான் அவன்..!! அதே சமயம் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது அவன் காதில் தெளிவாக விழத்தொடங்கியது..!!

“யாரை குறைசொல்லி இனி என்ன பண்ண..? போனது இனி திரும்ப வரப்போகுதா..?”

“எல்லாம் கெட்டநேரம்ன்னுதான் சொல்லனும்… இல்லன்ன அந்த புள்ளைக்கு சாகுற வயசா இது… நல்லமார்க் வாங்கி பாஸ்பண்ணியும் அநியாயமா அதைக்கூட தெரிஞ்சுக்காம அவசரபட்டு போய் சேந்துடுச்சே..?”

அடுத்தடுத்து அவர்கள் பேசியதில் சங்கரனுக்கு புரிந்தது இதுதான்... “+2 தேர்வு முடிவுகள் பத்திரிக்கையில் வெளியானபோது அதில் நந்தினியின் தேர்வுஎண் விடுபட்டிருந்திருக்கிறது… அந்த அதிர்ச்சியை தாங்கிகொள்ள முடியாத அந்த தைரியசாலி வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்… ஆனால் அதற்கு அடுத்தநாள் வெளியான பத்திரிக்கையில் “தவறுக்கு வருந்துகிறோம்… நேற்று தவறுதலாக விடுபட்டு போன எண்கள்” என்ற பட்டியலில் நந்தினியின் தேர்வுஎண்ணும் இடம்பெற்றிருக்கிறது… அதன்பின் வந்த மதிப்பெண் பட்டியலில் அவள் அதிக மதிபெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறாள்”

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வேலுச்சாமி மடியில் அமர்ந்திருந்த சங்கரன் சுவற்றில் மாலையுடன் மாட்டியிருந்த நந்தினியின் புகைப்படத்தை அப்போதுதான் கவனித்தான். அதில் பள்ளி சீருடையில் ஒரு தேவதையாகவே மாறி சங்கரனை நோக்கி சிநேகமுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் அவனது நந்தினி. அதைகண்ட சங்கரனுக்கு நந்தினிமேல் கோவம் கோவமாக வந்தது, ‘நான் காலாண்டு விடுமுறைக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு போயும், எப்படி அவள் என்னை மறந்துவிட்டு தனியே செத்துப்போகலாம்’ என்ற குழந்தைத்தனமான அவனது கோவம்… இயலாமையாக மாறி அழுகையாக வெடித்தது. தேம்பி தேம்பி அழுதவன் சட்டென்று ஏதோ மனதில் பட்டவனாய் வேலுச்சாமியின் மடியிலிருந்து இறங்கி தன் தாய்மாமன் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தான்..!!

பின் தன்மாமனிடம் அடம்பிடித்து அன்றே தன் ஊருக்கு திரும்பியவன், அதன்பிறகு எத்தனையோ முறை அவர் கெஞ்சிகேட்டும் நந்தினியின் ஊருக்கு அவன் திரும்பி செல்லவேயில்லை…!! அதற்கு காரணம் தூதுசொல்ல வந்தவரிடம், ”எக்காரணம் கொண்டும் இப்போதைக்கு நந்தினியின் பிரிவு சங்கரனுக்கு தெரியவேண்டாம்” என்று தன் தங்கையிடமும் மைத்துனனிடமும் சொல்லும்படி அவர் சொல்லியிருந்ததுதான்..!!

கடைசியாக சங்கரன் சுந்தரியை கைப்பிடிக்கும்போது, ”அவன் வந்து எனக்கு பத்திரிக்கை வைத்து அழைக்காவிட்டால் நான் அவன் கல்யாணத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை” என்று அவனது தாய்மாமன் திட்டவட்டமாக சங்கரனின் தாயிடம் தெரிவித்து விட்டதால், வேறுவழியின்றி வெகுகாலத்திற்க்கு பின் நந்தினியில்லாத நந்தினியின் ஊருக்கு அவன் செல்லவேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

காலவோட்டத்தில் நந்தினியின் ஊர் வெகுவாக மாறியிருந்தது. முன்பு இயற்கையுடன் இயைந்து செழித்திருந்த ஊர் இப்போது செயற்கையிடம் சிக்கி சிதைந்திருப்பதாய் தோன்றியது அவனுக்கு. முதலில் தன் மாமன் வீட்டுக்கு சென்றவன் பின் அப்படியே வேலுமாமாவை கண்டுவர எண்ணி நந்தினி வீட்டை நோக்கி நடக்கலானான். அக்கம் பக்கத்திலிருந்த வீடெல்லாம் அடையாளம் மாறியிருக்க நந்தினி வீடுமட்டும் அன்று பார்த்த அதே பழமையுடன் அப்படியே இருப்பதாக பட்டது சங்கரனுக்கு. அவன் அங்கே சென்றபோது, வேலுச்சாமியும் மங்களமும் அவனை அடையாளம் கண்டுக்கொண்டு முகத்தில் புன்னகை தவழ வரவேற்று நலம் விசாரித்தனர்.

வேலுமாமாவும் மங்களம் அத்தையும் அந்திம காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவர்களின் தோற்றம் அவனுக்கு உணர்த்தியது. ”சாந்தினி கல்யாணமாகி போனபிறகு அவ்வப்போது வந்து எங்களை பார்த்துவிட்டு போவாள்… மற்றபடி எனக்கு இவள்.. இவளுக்கு நானென ஆறுதலாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. நந்தினி போனபிறகு தங்கள் வீடும் வாழ்வும் பொலிவிழந்து போனதாக” வேலுமாமா குரல்தாழ்த்தி சொன்னபோது ஏதோ ஒரு இனம்புரியாத வலி சங்கரன் மனதை ஆழமாக ஊடுருவியது.

இப்போதெல்லாம் பல நந்தினிகள் அந்த ஊரிலிருந்து படிப்பதற்கும் வேலைபார்ப்பதற்கும் பட்டிணம்தாண்டியும் பயணிப்பதாக வேலுச்சாமிதான் அவனிடம் சொன்னார். அவருடன் பேசிமுடித்து திரும்பும் வழியில் எதிர்பட்ட அவ்வூர் நவயுக தேவதைகளை காண நேர்கையில், நட்சத்திரங்கள் மின்னும் இவ்வேளையில் முதல்பயணத்தை தொடங்கி வைத்த முழுநிலவை தான் எங்கோ தூரவானில் தொலைத்து விட்டதாகவே தோன்றியது சங்கரனுக்கு.

அன்று தொலைத்த அந்த பௌர்ணமியை இந்த அமாவாசை இருட்டில் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறான் அவன் தன் நினைவில். மெல்ல மெல்ல நினைவின் அழற்சியில், அதிகாலையில் தூக்கம் அவன் கண்களை தழுவ தொடங்கியிருந்தது. அவனது நினைவை கால்நூற்றாண்டு பின்னோக்கி இழுத்து நித்திரையை நெட்டித் தள்ளிய அந்த செய்தி, ”இன்றும் கலைவாணி தைரியலட்சுமியை கோழையாக்குகிறாள்” என்பதுதான்..!!

கீதம்
02-08-2012, 11:53 PM
கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றவள், கற்றபின் அதற்குத் தக்கவாறு நில்லாமல் போனாளே... பாவி, சொல்லாமல் போனாளே…

ஒரு நிகழ்வுச்சாட்டை, நினைவுப்பம்பரத்தைச் சுழற்றிவிட, அது மெல்ல அங்குமிங்கும் ஆடி, மையத்தில் நிலைகொள்வதைப் போல் கதையின் ஆரம்பம் முதல் விரியும் காட்சிகள் மெல்ல நந்தினியைச் சுற்றத் துவங்கியபோதே துக்கசேதியின் மையப்புள்ளியும் துலங்கிவிடுகிறது.

நந்தினி வெளிப்பார்வைக்கு துணிச்சலாய்த் தெரிந்தாலும் உள்ளுக்குள் அவளும் அவள் தாயைப் போலவே சமூக அழுத்தங்களுக்கு ஆளானவள் என்பது அவள் நடவடிக்கை மூலம் தெரிகிறது. இத்தனைப் பேரின் எதிர்ப்பை மீறி படிக்கிறேன் என்று போனவள் என்னத்தைக் கிழித்தாள் என்று ஏளனப்பேச்சுக்குப் பயந்துதான் அப்படியொரு அவசர முடிவை எடுத்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.

நம் கல்வித்திட்டத்தின் குறைபாடு இதுதான். வாழ்க்கை என்பது தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் என்ற எண்ணம் இன்னும் நம்மில் பலருக்கு இருக்கிறது. அதைத் தாண்டியும் வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும் என்னும் உத்வேகம் ஒருசிலருக்கே உண்டாகிறது.

கொடுமை என்னவெனில் இன்றும் இதுபோன்ற கோழைத்தனமிகு செயல்கள் தொடர்வதுதான். இன்றும் கலைவாணி தைரியலட்சுமியைக் கோழையாக்குகிறாள் என்னும் முத்தாய்ப்பான வரிகளில் முழுக்கதையும் அடக்கம்.

கதையின் எழுத்தோட்டம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. ஊர்களின் தொலைவைக் குறிக்கும் கல், மைல் அளவுகள், கிராமிய வயற்புறப் பசுமைக் காட்சிகள், சொந்தங்களோடு உறவாடும் முறை என்று ஒவ்வொன்றிலும் நேர்த்தியைக் காட்டிய எழுத்து. மிகுந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்க சுகந்தப்ரீதன்.

Keelai Naadaan
04-08-2012, 06:27 PM
கதையை படித்து முடித்த போது மனக்கண் முன்பு நந்தினியை போல ஒரு முகம் தெரியாத தேவதை சிரிப்பது போல் உணர்கிறேன்.
சங்கரனை போலவே குழந்தை தனமான கோபம் ஏற்படுகிறது.
காரணம் அத்தனை அருமையான வர்ணனை.
கதாபாத்திரங்களும் அந்த ஊரும் பேச்சுகளும் மனதில் பதிகிறது.
பாராட்டுக்கள் சுகந்த ப்ரீதன். வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
05-08-2012, 06:15 PM
ஆழ்ந்த கருத்திட்டு ஆழமான பின்னூட்டமிட்டு அழகாக ஊக்கமளித்த அன்பு உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாகட்டும்!!:icon_b:

A Thainis
05-08-2012, 08:41 PM
முன்பு இயற்கையுடன் இயைந்து செழித்திருந்த ஊர் இப்போது செயற்கையிடம் சிக்கி சிதைந்திருப்பதாய் தோன்றியது அவனுக்கு.

சுற்றலும் நிற்றலும் என்ற கதை நல்ல கருத்துக்களை வாரி தெளிதுள்ளது, வாழ்த்துகள். இயற்கை செயற்கை மாற்றமா, அழகான பதிவு, இயற்கையை பாதுகாக்க ஒரு அழகான இடைச்சொருகல். :icon_b::icon_b::icon_b:

jayanth
07-08-2012, 10:36 PM
படித்து முடித்தவுடன் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு...இது கதை என்றாலும் சிலரின் வாழ்க்கையிலும் இதுபோன்ற நந்தினி நட்சத்திரங்கள் மின்னி மறைந்திருக்கும்...ம்.

எழிய நடையுடன் மனதை வருடிய கதை...

அன்புரசிகன்
08-08-2012, 12:04 AM
அந்த செய்தி, ”இன்றும் கலைவாணி தைரியலட்சுமியை கோழையாக்குகிறாள்” என்பதுதான்..!!

நல்ல கதை. சில திரைப்படங்கள் கூட வந்துசென்று விட்டன... இன்றய ஊடகங்கள் அரசியலுக்கும் விளையாட்டுக்கும் சினிமாவுக்கும் கொடுக்கும் முக்கியம் இவ்வாறான விடையங்களுக்கு கொடுப்பதில்லை. அதை இறுதிக்கருவாக கதையில் கொண்டு அதுவரை அசராது அழகான வர்ணனைகளுடன் நம்மையும் சிறுபராயத்துக்கு அழைத்துச்சென்றதில் அசத்தியுள்ளீர்கள். துடிப்பான பெண் அவளின் துடிப்பிற்கு இசைந்த சிறுவன், இயல்பான உறவு சுற்றம் என அழகான நேரடி வர்ணணை...
வாழ்த்துக்கள் சுபி...


ஆனால் இறுதி வரிகளை மறுக்கிறேன்...
சற்று யதார்த்தமாக பார்க்கலாம்...

நான் தோற்றுவிட்டேன். ஆகவே தற்கொலை செய்கிறேன் என்று செய்தாளா? இல்லை தன் தாயை எதிர்த்து தன்மேல் வைத்திருந்த நம்பிக்கையில் வழியனுப்பி வைத்த தந்தையை ஏமாற்றிவிட்டேன் என்று நினைத்தாளா? இல்லை எனக்கு அப்பவே தெரியும். இவள் ஆடின ஆட்டத்துக்கு இப்படித்தான் நடக்கும் என்று ஒரு 12 மணித்தியால சுற்றத்தின் தூற்றத்துக்கு பயந்தாளா?

தற்கொலை அவ்வளவு இலகுவாக செய்துவிடஇயலாது என்பது பல மனோதத்துவ ஆய்வாகளர்கள் கூறுவது. நிச்சயம் ஒரு கோழையால் இயலவே இயலாது... இங்கே மேலே கூறிய விடையங்களுக்கு புள்ளி போட்டீர்கள் என்றால் அந்த புள்ளிகள் இறங்கு வரிசையில் இருந்தால் நிச்சயம் கோழை தான். ஆனால் உண்மை ஏறுவரிசையில் தான் இருக்கும். இது தான் பல இடங்களில் நடப்பது. இன்று நாம் பலரும் பயப்படுவது தாய் தந்தை ஆசான் கடவுள் இந்த அளவிலேயே இல்ல. இதையும் தாண்டி சுற்றம் எனும் ஒரு மாயையில்.. இதற்கு படித்த படிக்காக துணிந்த துணியாத கெடட்டிக்கார முட்டாள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. எவரும் மிக இலகுவாக அகப்பட்டுவிடுவார்கள்.

அன்று காலை 8 மணிக்கு வந்த செய்தி ஏறத்தாள 9 மணிக்கெல்லாம் அவள் சித்தியடையவில்லை என்ற பொய் பரவி அவர்கள் அன்றிரவு படுக்கும் வரை அந்த ஊரில் அது தான் பேச்சாக இருந்திருக்கும்... இதயெல்லாம் தாங்குறது யாராக இருக்க முடியும் என்று நினைக்கிறீங்க... ஊரில ஆலமரங்களுக்குக்கீழ சும்மா இருப்பாங்களே... அவங்களால தான்.... (ஒருவேள அப்படித்தான் இருக்க வேணுமோ??? :D)

அதவுட்டுட்டு கலைவாணி தைரியலட்சுமி என்று சும்மா சாமிப்பேரா சொல்லிக்கிட்டு.. என்ன கொடும சுபி இது... கைய எடுத்து உலகத்த பாருங்க.. இப்படி எப்ப பார்த்தாலும் மூடிக்கிட்டு... :D

seguwera
08-08-2012, 05:38 PM
நட்சத்திரங்கள் மின்னும் இவ்வேளையில் முதல்பயணத்தை தொடங்கி வைத்த முழுநிலவை தான் எங்கோ தூரவானில் தொலைத்து விட்டதாகவே தோன்றியது

அருமையான வரிகள்

பெண்ணின் உயர் கல்வி என்பது அவ்வளவு அரிதாக காணப்பட்ட காலத்தில் நந்தினியை
இழந்தது சோகமே.

நந்தினியின் தற்கொலை கோழைத்தனம் என்றால் இங்கு சங்கரன் நந்தினி இல்லாத அந்த வூருக்கு மறுபடி போகாமல் இருந்ததும் ஒருவித கோழைத்தனமே.

எல்லாருக்கும் எல்லா வயதிலும் பக்குவம் என்பது வருவதில்லையே...

வாழ்த்துக்கள் சுகந்தப்ரிதன்

சிவா.ஜி
09-08-2012, 01:06 PM
தெளிவான கதையோட்டமே எங்கும் நிற்காமல் கதையினூடே பயணிக்க வைக்கிறது. நல்ல நடை. உறவுகளைப் பற்றிய குறிப்புகள், கிராமத்தின் வழக்கங்கள்...பெண்பிள்ளையை படிக்க வைக்கக்கூடாது என்ற பழமைவாதிகளின் எதார்த்தப் பேச்சு என அழகாய் இருக்கிறது.

சுபி ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுது.....!!!

சுகந்தப்ரீதன்
09-08-2012, 03:06 PM
உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அன்பு பெருந்தகைகளுக்கு எமது உளம்கனிந்த நன்றிகளை உவகையுடன் சமர்பிக்கிறேன்..!!:icon_b::icon_b::icon_b:


ஊரில ஆலமரங்களுக்குக்கீழ சும்மா இருப்பாங்களே... அவங்களால தான்.... (ஒருவேள அப்படித்தான் இருக்க வேணுமோ??? :D)இருக்கலாம்... சங்கரன்மேல் அந்த ஊர் இளவட்டங்களுக்கு ஒருவித பொறாமை இருந்ததை இக்கதையில் சொல்ல மறந்துவிட்டேனோ..:confused:

அதவுட்டுட்டு கலைவாணி தைரியலட்சுமி என்று சும்மா சாமிப்பேரா சொல்லிக்கிட்டு.. என்ன கொடும சுபி இது... கைய எடுத்து உலகத்த பாருங்க.. இப்படி எப்ப பார்த்தாலும் மூடிக்கிட்டு... :Dசாமி பேரை சொல்லலை அன்பு... எல்லாம் ஒரு காரணமாகத்தான் (http://news.vikatan.com/index.php?nid=7622#cmt241)..!!:)

அனுராகவன்
11-08-2012, 06:14 PM
நானும் ஆழ்ந்து படித்தேன்..நன்றி தம்பி...