PDA

View Full Version : தமிழ் மாதங்களும் தமிழக வாழ்வும்



A Thainis
02-08-2012, 10:00 AM
தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
தமிழர் அறுவடை பொங்கல் விழா
தமிழர் நிலமெங்கும் பொங்கிடும்
உழவு தொழிலுக்கு வந்தனம் செய்து
உழவர் பெருமக்களை போற்றிடும்
மஞ்சு விரட்டு வீர விளையாட்டு
தமிழகமெங்கும் அடங்கமருத்து ஆர்பரிக்கும்
தமிழ் புத்தாண்டும் விரிந்திடும்
தாயான தமிழ் மொழியை வணங்கி
தமிழ் பண்பாடு காக்க தமிழ் பற்று மேலோங்கும்
தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும்
தைபூசம் பக்தி பரவசம் கரைபுரளும்

மாசியில் மங்களம் சூடிடும்
மாசி மகம் நாளும் விரைந்திடும்
புது மனைகள் புகுதலும்
புதிய தொழில்கள் தொடங்கிட
புது வரவுகள் பொங்கிடும்
அம்மன் தெய்வங்களுக்கு பூசொரிதலும்
சிவனுக்கு தீசட்டி திருவிழாவும் நிகழ்ந்திடும்

பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
தெய்வங்களின் கோலாகல திருமணங்களால்
பங்குனி உத்திரத்தில் உற்சாகம்

சித்திரையில் உற்சாகம் கரைபுரள
வைகை கரையெங்கும் தேரோட்டம்
சித்திரை வெய்யிலில் இரவு நித்திரையும்
கலைந்திருக்கும் குளிர்நிலவும் கொதித்திடும்
சித்திரை வெயிலை தணித்திட
இளநீர் பதநீர் விற்பனை களைகட்டும்
மலர்கள் கனிகள் பூத்திட விழிகளுக்கு
உதகை கோடை விழா விருந்தளிக்கும்
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா களைகட்டும்

வைகாசியில் வைபோகம்
கன்னியரும் காளையரும்
புது மாலைச்சூடி மகிழ்ச்சி வெள்ளத்தில்
தொடங்கிடுவர் புது வாழ்வு
முருகன்-வள்ளி திருமணம் முரசுகொட்ட
காவடி பால் குடம் தமிழ் பக்தி பரவசமூட்டும்

ஆனியில் உச்சிவெயில் தணியும்
மாலை பொழுதில் ஊரெல்லாம்
மெல்லிய தென்றல் வீசும் - இன்பக்
கல்வியாண்டு இனிதே தொடங்கிடும்
புத்தக கண்காட்சி நகரெங்கும் நடந்திடும்

ஆடியில் அருவிகள் பெருக்கெடுக்க
மழை மேகங்கள் தூவானம் தூவிட
ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவர் ஆடிப்பட்டம் தேடி விதைக்க
காவேரி கரையெங்கும் ஆடிபெருக்கு
மாங்கலியம் சிறக்க கரைபுரளும்
ஆடி தள்ளுபடியில் ஏழையும் உடுத்திட
மலிவு விலையில் துணியொன்று கிடைத்திடும்

ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி நடைகள் திறந்திடும்
திருமண சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
வேளாங்கண்ணி மாதா திருவிழா
கோலாகலமாய் நடந்திடும்

புரட்டாசியில் புலால் உண்ணாது
உண்ணாநிலை இருந்து
உடலை வருத்தி மனதை
பக்குவபடுத்தும் பரமநிலை
நவராத்திரி விழாவில் சிதம்பரம்
நடராஜர் நாட்டியஞ்சலி சிறந்தோங்கும்

ஐப்பசி மழை அடை மழை
குளம் குட்டைகளும் உடைபெடுக்கும்
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்
அடை மழை கொட்டினாலும் தீப விழாவில்
பட்டாசு விடாது வெடித்து சிதறி கொண்டாடும்

கார்த்திகையில் இல்லம்தோரும்
அகல்விளக்கு ஒளிரிந்திடும்
தீய பீடை வருமம் துன்பம் அகன்று
இன்பம் அன்பு அமைதி குடி புகுந்திடும்
திருவண்ணாமலை தீபம் காண்பவரின்
வாழ்வில் அருளொளி ஏற்றும் விழா

மார்கழியில் மரமெல்லாம் குளிரும்
கொதித்திடும் சூரியனும் குளிர்ந்திடும்
வாசல்களில் கோலங்களும்
வயல்களில் மலர்களும் பூத்திருக்கும்
ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க
பக்தி பாடல்கள் பரவசமூட்டும்
கிறிஸ்துமஸ் விழாவால் வானத்து விண்மீன்கள்
வீட்டின் கூரைகளில் வீற்றிருக்கும்
மாமல்லபுரம் நாட்டிய கலைவிழா
சென்னை இசை விழா சங்கமம்
நாட்டுபுற கலை விழா என மார்கழி
தமிழர் கலைகளால் களைகட்டும்

- ஆ. தைனிஸ்

kulakkottan
02-08-2012, 11:02 AM
வாழையடி வாழை நாட்காட்டி உங்கள் கவிதையில் தெரிகிறது !அபாரம் !

M.Jagadeesan
02-08-2012, 11:09 AM
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நிகழும் நிகழ்வுகளைக் கவிதையில் காட்டியவிதம் அருமை! பாராட்டுக்கள்!!

சுகந்தப்ரீதன்
02-08-2012, 03:40 PM
தமிழரின் வாழ்வியலை மாதங்களின் அடிப்படையில் இயல்பாக கவிதையில் வடித்திட்டவிதம் அழகு..!!:)

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள் தைனிஷ்..!!:icon_b: