PDA

View Full Version : அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!ரௌத்திரன்
31-07-2012, 10:28 AM
(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)


அமைதியிற் படுக்கை இட்டு
====ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
====இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
====சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
====கற்பனை செய்தி ருக்க,குன்றினில் பூத்த பூவில்
====குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
====தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
====அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
====நலமுடன் ரசித்தி ருக்க,


செல்லாத இடங்க ளெல்லாம்
====சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
====அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
====துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
====சுவையினுக் கருகு வந்தே,


நெற்றியில் முத்த மொன்று
====நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
====ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
====பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
====சூழ்நிலை அறிந்து ஏக,


அந்தியின் சிவப்பு முற்றும்
====அனங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
====கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
====மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
====வெண்ணிலா எங்கு தூங்க?


ஆனதோர் நேரம் மட்டும்
====அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
====நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
====வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
====காலையில் கண்கள் பூத்து,


களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
====கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
====புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
====இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
====அறிந்திலேன் அதனை இன்னும்!


வாட்டுமோர் தனிமை யென்னும்
====வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
====மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
====புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
====நிம்மதி எனக்கு ஏது?


அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
====அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
====தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
====தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
====பழரசம் தொட்டேன்; ஆமாம்!


கன்னத்தில் வழிந்த கண்ணீர்
====கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
====அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
====அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
====இனிதுடன் நிரப்பி வாரீர்!


மாதவன் உருவம் எண்ணி
====மனத்துளே அற்றை நாளில்
மா"தவம்" புரிந்த தாலே
====மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
====சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
====எழிலுடன் உதித்தான் கண்டீர்!


தோற்றத்தில் மாறி னாலும்
====தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
====அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
====எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
====அழுவதில் மாற்ற மில்லை!


சிதையினில் நெருப்பு மூட்டச்
====செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
====இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
====ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
====அவனியீர் அறிவி ராக!


ஒற்றுமை அதிகம் உண்டு
====ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
====உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
====கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
====பல்கலைப் படிப்பு மில்லை!


தேறாத மானி டத்தின்
====தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
====கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
====மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
====மென்தமிழ் நூற்ச மைப்பேன்!


திரிகளைக் கருக விட்டுத்
====தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
====நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
====துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
====புன்னகை புரிந்தி ருப்பேன்!


சரித்திரம் படைக்க வந்தேன்!
====சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
====அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
====மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
====செந்தமிழ் வடிவந் தன்னில்!


சாகாத காவி யங்கள்
====சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
====புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
====வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
====எக்காள மிட்டி ருப்பேன்!

கீதம்
31-07-2012, 12:00 PM
எக்காளமிட்டக் கவிதை எக்காலமும் ரசிக்கத்தக்கதானது. தமிழோடு கொஞ்சி விளையாடுகின்றன க(ன்)னிரசத்தால் விளைந்த கவின்மிகு வர்ணனைகள்!

காரமும் கரிப்பும் தூக்கலான தங்கள் கவிதைகளுக்கு மத்தியில் புளித்துப்போன (வாழ்க்கைக்) கவிதை! ஆனால் தமிழின் இனிமையும் கலந்து சுவைக்கிறது!

மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் தீந்தமிழ் கவிதைக்குப் பாராட்டுகள் ரௌத்திரன்.

ஓர் ஐயம் - அனங்கு, அணங்கு. எது சரி?

ரௌத்திரன்
31-07-2012, 12:08 PM
அனங்கு, அணங்கு.

இரண்டும் ஒரே அர்த்தத்தில் பல முறை வருவதுண்டு.

இரண்டுக்கும் பெண் என்ற அர்த்தம் வருவதுண்டு.

இருப்பினும், அனங்கு-பெண்-அழகான பெண்
அணங்கு-அழகு
ஆரனங்கு- பேரழகுடைய பெண்
இந்த அர்த்தத்தில்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது.-------ரெளத்திரன்

கீதம்
31-07-2012, 12:10 PM
அனங்கு, அணங்கு.

இரண்டும் ஒரே அர்த்தத்தில் பல முறை வருவதுண்டு.

இரண்டுக்கும் பெண் என்ற அர்த்தம் வருவதுண்டு.

இருப்பினும், அனங்கு-பெண்-அழகான பெண்
அணங்கு-அழகு
ஆரனங்கு- பேரழகுடைய பெண்
இந்த அர்த்தத்தில்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது.-------ரெளத்திரன்

ஐயம் தெளிந்தேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி ரௌத்திரன்.

கலைவேந்தன்
31-07-2012, 03:10 PM
செந்தமிழில் சிறப்பான கவிதை. கண்ணதாசனை வாசித்திருப்பதால் அவனது தமிழ்நடை ஆங்காங்கே அழகாய்ப் பரந்துள்ளது. பாராட்டுகள் ரௌத்திரன்.

அணங்கு என்பதே தமிழில் ஆளப்படும் சொல்லாகக் கருதுகிறேன்..

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.

என வள்ளுவனும்,
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே


என மனோன்மனீயம் சுந்தரம் பிள்ளை அவர்களும்..

அம்புயத்து அணங்கின் அன்னார்
அம் மலர்க் கைகள் தீண்ட.
வம்பு இயல் அலங்கல் பங்கி.
வாள் அரி மருளும் கோளார்-
தம் புய வரைகள் வந்து
தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல்.
கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ!

என கவிச்சக்கரவர்த்தி கம்பனும் அணங்கு என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். எங்கும் நான் அனங்கு என்னும் சொல்லைக் கண்டிலேன்.

எனவே அணங்கு என்பதே சரியான சொல்லாகக் கருதுகின்றேன். அல்லாது அனங்கு என்னும் சொல் பயன்பாட்டினைக் காண்பின் அறியததருக.


( வாதத்திற்காய் அல்ல யான் பகர்ந்தது. சொல்லில் பிழை இருக்கலாகாது என்பதால் குறித்தேன். தவறெனக்கொள்ளற்க.)

ரௌத்திரன்
01-08-2012, 05:56 AM
செந்தமிழில் சிறப்பான கவிதை. கண்ணதாசனை வாசித்திருப்பதால் அவனது தமிழ்நடை ஆங்காங்கே அழகாய்ப் பரந்துள்ளது. பாராட்டுகள் ரௌத்திரன்.

அணங்கு என்பதே தமிழில் ஆளப்படும் சொல்லாகக் கருதுகிறேன்..

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.

என வள்ளுவனும்,
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே


என மனோன்மனீயம் சுந்தரம் பிள்ளை அவர்களும்..

அம்புயத்து அணங்கின் அன்னார்
அம் மலர்க் கைகள் தீண்ட.
வம்பு இயல் அலங்கல் பங்கி.
வாள் அரி மருளும் கோளார்-
தம் புய வரைகள் வந்து
தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல்.
கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ!

என கவிச்சக்கரவர்த்தி கம்பனும் அணங்கு என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். எங்கும் நான் அனங்கு என்னும் சொல்லைக் கண்டிலேன்.

எனவே அணங்கு என்பதே சரியான சொல்லாகக் கருதுகின்றேன். அல்லாது அனங்கு என்னும் சொல் பயன்பாட்டினைக் காண்பின் அறியததருக.


( வாதத்திற்காய் அல்ல யான் பகர்ந்தது. சொல்லில் பிழை இருக்கலாகாது என்பதால் குறித்தேன். தவறெனக்கொள்ளற்க.)

நன்றி கலைவேந்தன் அவர்களே!

மேலே நான் அளித்துள்ள விளக்கம் தவறானதுதான்.

பிழைக்கு வருந்துகிறேன்.

அணங்கு--பெண்; அழகு; தேவமகள்; பத்ரகாளி;மோக மயக்கம்; காதல் நோய் ஆகிய பொருளில் வருகிறது.

அனங்கு என்பதும் பயன்பாட்டில் இருந்த சொல்லேதான். அதனால் தான் மேற்படி எனது விளக்கத்தில் அத்தவறு நேர்ந்திருக்கிறது.

அனங்கு என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும் செய்யுள் ஏதும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

ஆயினும்,

அனங்கு---மன்மதன் என்பது பொருள்.

செய்யுளைத் தேட எனக்குத் தற்போது நேரமில்லை. மன்றக் கவியரங்குக்கான கவிதையைச் சமர்ப்பித்துவிட்டு உடனே நான் விடைபெற வேண்டும்.

எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு "பெளர்ணமி அலைகள்" வெளியாகவிருப்பதால்....!

நீண்ட நாட்களுக்கு என்னால் மன்றத்திற்கு வர இயலாது.

"கீதம்" அவர்களே!
மீண்டும் எனது கவனக் குறைவால் நான் அளித்த தவறான விளக்கத்திற்கு மன்னிப்பீராக!

சரியான நேரத்தில் பிழையைச் சுட்டிக்காட்டிய கலைவேந்தன் அவர்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்!--------ரெளத்திரன்