PDA

View Full Version : எங்கிருக்கிறாய்?



ரௌத்திரன்
31-07-2012, 09:25 AM
இருமுறை காத லித்து
====இருதயம் நொறுங்கிப் பொனேன்!
பெருந்திரைக் கடலிற் சென்று
====கலப்பது போல எண்ணி
சிறுகுட்டை நாடி கங்கை
====சித்தமே கலங்கி நின்றேன்!
சருகிலை ஒளிச்சேர்க் கைதான்
====செய்யவோர் வழியு முண்டோ?


கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
====கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
====அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
====தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
====இவனுக்கோர் விதியு முண்டோ?



வாலிபம் வடிய வில்லை
====உணர்ச்சிகள் மடிய வில்லை
நாளுமே இரவு கொல்லும்
====நட்டவான் நிலவு கொல்லும்
சாலவே இமைய ணைத்தால்
====சிறுதூக்கம் கொள்வேன்; ஆனால்
பாழுமென் இமைகள் கண்ணைப்
====பழிவாங்கும் கசைசொ டுக்கி!



மொத்தமும் வாழ்ந்து தேர்ந்து
====முடித்தவன் போல நானும்
தத்துவம் பேசி னாலும்
====தனிமையிற் கிடக்கும் வேளை
தொத்திடும் ஓர்நி னைவு!
====தூயநற் காதல் பேசி
முத்தெழிற் பெண்ணொ ருத்தி
====மார்பினிற் சாய்தற் போலே!


பெரும்பிழை யில்லை யென்பேன்
====புலவனென் எண்ணம் தன்னில்!
மரக்கட்டை யல்ல நானும்!
====மானிட வாழ்வில் என்றும்
ஒருமுறை மட்டும் காதல்
====உதித்திடும் என்ப தான
கருத்தினில் உடன்பா டில்லை
====காலமும் இதையே சொல்லும்!


கசையிருள் நீங்கு தற்கு
====கதிரவன் வேண்டு மென்பேன்!
விசையுடன் கதிரெ ழுந்து
====விடியலைத் தரவி லையேல்
நசையுடன் நிலவு கொள்வோம்!
====நிலவுமே தொலைந்து போனால்
வசையிலை வெளிச்சத் திற்கோர்
====விளக்கினை ஏற்றிக் கொள்வோம்!


இன்னார்க்கு இன்னார் என்று
====இறைவன்தான் எழுதி வைத்தப்
பொன்னான கணக்கிற் கேற்ப
====பூமியில் நமக்கும் காதல்
அன்னாரோ டமைந்து விட்டால்
====அடுத்தொரு குழப்ப மில்லை!
மன்னவன் சதிகள் செய்தால்
====மனிதர்நாம் என்ன செய்வோம்?


முடிந்ததை எண்ணி யெண்ணி
====முனகினால் லாப மில்லை!
வடித்திடுங் கண்ணீ ராலே
====வருவது ஏது மில்லை!
எடுத்ததோர் பிறவி தன்னை
====எழிலுடன் வாழ்ந்தி ருப்போம்
வடிந்தது நுரைதான்; மிச்சம்
====இருப்பதோ கடலே என்பேன்!


தனித்தது போதும்; நாளும்
====தவித்தது போதும்; கண்ணே!
இனித்தடம் மறைத்து என்னை
====இளைத்திடச் செய்தல் வேண்டாம்!
எனக்கெனப் பிறந்த பாவாய்
====இன்முகம் காட்டு; ஈது
உனக்கெனப் பிறந்து வந்த
====உயிர்விடும் தூது; ஆமாம்!


மலர்வனச் சோலை கண்டு
====வண்டுமே கூடும் போது
அலைகடல் தன்னிற் சென்று
====நதியுமே கலக்கும் போது
மழைத்துளி கூட மண்ணின்
====மடியிலே வீழும் போது
அலைப்புறும் எந்தன் நெஞ்சை
====அனங்குநீ ஏய்ப்ப தேனோ?


கண்ணீரில் நனைந்த வென்றன்
====கன்னங்க ளிரண்டை யுன்றன்
பொன்னிதழ் சிந்தும் முத்தச்
====சூட்டிலே உலர்த்து; வானின்
மின்னலில் நூலெ டுத்து
====விண்மீன்கள் கோத்தெ டுத்து
உன்னிடை மீதில் நானும்
====மேகலை பூட்ட வேண்டும்!


தாவியே எந்தன் மார்பில்
====தண்முகம் வைப்பாய்; வண்ணம்
தூவிடும் சிரிப்புச் சிந்தி
====தலைகுனி வாய்;உன் கூந்தல்
நீவிய படியே அந்த
====நிமிஷங்கள் வடியு முன்பே
காவியத் தமிழில் நூறு
====கவிதைநான் பாட வேண்டும்!


சூரிய னையெ டுத்துப்
====பாக்காக வைத்து; ராவில்
ஏறிடும் வெண்ணி லாவைச்
====சுண்ணாம்பு தடவி; நீலம்
வீறிடும் விரிவா னத்தை
====வெற்றிலை யாய்ம டித்து
நேரிழை யே!தாம் பூலம்
====போட்டுநான் துப்ப வேண்டும்!

சுகந்தப்ரீதன்
02-08-2012, 06:56 PM
எங்கிருக்கிறாள் என்றறியாது.. எதிர்காலத்தில் இணையபோகும் தந்துணையை ஏக்கத்துடன் தேடும் ஒரு வாலிபனின் உணர்வுகளை அழகாய் படம்பிடித்த கவிதை..!! வாழ்த்துக்கள் ரௌத்திரரே..!!:)

இதே உணர்வுடன் கூடிய ஒருபாடலின் வரிகள் நினைவில்...

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன்விரல் தலைக்கோதிட வேண்டும்..!!

கீதம்
03-08-2012, 12:11 AM
இருமுறை காதலித்து இதயம் நொறுங்கிப் போனாலும் இனியொரு காதலுக்கு இடமில்லாமல் போகவில்லை.

காதற்பெண்ணுடன் களித்துவாழும் நாளைப் பற்றிய கனவுகளும் கற்பனைகளும் தமிழ் தமிழ் என்றே கவிபாடுதல் அழகு.

சூரியப் பாக்கு, நிலாச் சுண்ணாம்பு, வான வெற்றிலையால் தாம்பூலம் - மிகவும் ரசித்தேன்.

இனியவொரு காதற்கவிதைக்குப் பாராட்டுகள் ரௌத்திரன்.