PDA

View Full Version : அவர்களையும் வாழவிடுங்கள்!



ரௌத்திரன்
31-07-2012, 09:22 AM
கருவில் நித்தம் சுமந்தவளும்
====கண்போல் எண்ணி வளர்த்தவனும்
உருவில் நேரும் மாற்றத்தால்
====உள்ளம் வெதும்பிப் பின்நாளில்
தெருவில் வீசி எறிகின்றார்
====தவறு யார்மேல் என்பதனை
அறிவில் வைத்துச் சிந்திக்க
====அவரும் ஏனோ மறந்திட்டார்!

இந்த முகத்தைப் பெறுவதற்கும்
====இந்த நிறத்தைப் பெறுவதற்கும்
இந்தப் "பாலில்" பிறப்பதற்கும்
====இந்த நாளில் பிறப்பதாகவும்
விந்தில் தோன்றும் காலத்தே
====வரமாய்க் கேட்டு ஒருவருமே
வந்து பிறப்ப தில்லையிது
====வையம் தன்னில் பொதுவேகாண்!


எந்த வகையில் குறைந்திட்டார்?
====எதனில் இங்கு இறங்கிட்டார்?
மந்த புத்தி கொண்டவரே!
====மதியும் மெத்தக் கொழுத்தவர்தான்!
விந்தை தானும் புரிந்திடுவார்
====விண்ணும் மண்ணும் அளந்திடுவார்!
சந்தைப் பொருளோ மனிதர்கள்?
====ரகத்தைப் பார்த்துப் பிரிப்பதற்கு?


மேகம் கருப்பு என்பதனால்
====மழையை வேண்டாம் என்பீரோ?
காகச் சிறகு நள்ளிரவில்
====கனிந்து நிற்கும் பிறையதனை
மோக நிலவு தானுற்ற
====ஊன மென்று வெறுப்பீரோ?
தேகச் சிறப்பு ஏதுக்கு?
====மதியும் மனதும் தான்பெரிது!


ஏற்றம் இறக்கம் பேசாதீர்
====எவரும் இங்கு ஒன்றேதான்!
காற்றில் தவழும் ஒருகொடியில்
====கண்வி ழிக்கும் பூக்களிலே
நாற்ற பேதம் உண்டென்று
====நாசி கண்ட துண்டோகாண்!
சாற்றிச் சாற்றிப் பேதங்கள்
====சரிந்த தெல்லாம் போதாதோ?


ஆணும் பெண்ணும் சரிபாகம்
====ஆன சிவனை இறைஎன்றால்
நானும் இவரை இறைஎன்பேன்!
====நாய்க்குப் பிறந்தோர் குரைக்கட்டும்!
ஆணும் பெண்ணும் கலப்பானோர்
====அலிஎன் றினியும் உரைப்போர்கள்
தாணு வான ஆதிசிவன்
====தன்னை முதலில் உரைக்கட்டும்!

கீதம்
01-08-2012, 06:25 AM
மரபணுக் கோளாறால் உருமாறியவர்களை பரிகாசம், பரிதாபம் செய்வதை விடுத்து மரியாதையோடு பழகலும், மனிதாபிமானத்தோடு அரவணைப்பதுமே மனிதராய்ப் பிறந்தவர்க்கழகு. கவிதைக் கனல் மனம் சுடுகிறது. பாராட்டுகள் ரௌத்திரன்.