PDA

View Full Version : பூக்கூட்டம் போர்க்களமானது !



நாகசுந்தரம்
30-07-2012, 04:49 PM
பூக்கூட்டம் போர்க்களமானது !
ரோஜாவும் மல்லியும் நிறைந்த ஒரு பூந்தோட்டம் !
ரோஜா முட்களாய் மட்டுமே மாறியது எப்போது ?
மல்லிகைப்பூ மணத்தை மறந்தது எப்போது ?
தீவிரவாதம் சாந்தியை தொலைத்து விட்டது !
மன்னராட்சி மறைந்து விட்டது !
மக்களே மன்னர்கள் என்பதனால்
மக்களே மக்களை மாய்க்கும்
பூக்கூட்டம் போர்க்களமானது !
சிறுத்தொண்டர் சிவனுக்காக
அறுத்தவர் தன் மகவை !
அறுத்தது தவறு என்று அறற்றுவோர்
அருவாட்களினால் அன்பு மறந்து
தெருமக்களைக் கொல்வது சரியா ?
உருவத்தை அழிக்கும்
கருவான ஆசிட் தண்ணி
திருமகளாம் பெண்மேல்
எரித்து உருவழிப்பது சரியா ?
பூக்கூட்டம் போர்க்களமானது !
..................அன்று
மஹாராஷ்ட்ராவும் ஒரிஸாவும்
மஹான் நாமதேவரையும்
மஹான் ஜயதேவரையும் தந்தது !
அருள் பொருளை வென்ற கதை
அவர்களுடையது !
.................இன்று
மாநிலத்திற்கு மாநிலம்
தீவிரவாத இயக்கங்கள்
ஆவி பறக்க செய்திகள் !
தாவிப்பிடிக்க காவலர் முயற்சி !
கூவிக் கதற குண்டுகள் !
பாவிகளாய் மக்கள் !
ஏவி விட்டவர் யாரென்று தெரியாமல்
தூவி நிற்கிறது சயனைட் விடங்கள் !
பூக்கூட்டம் போர்க்களமானது !
வடக்கிருந்த ராமாயணத்தை
வடம்பிடித்து இழுத்தான் கம்பன் !
தடம் மாறாமல் தத்துவம் தந்தான் !
தகராறினால் இன்று அவன் காவியம்
இராமரையே கேள்விக்குறியாக்கியது !
வாலியை மறைந்து அழித்தான் என்று
போலியாய் பேசுவோர்
மாநிலம் மாநிலமாய் மண்ணில்
மறைத்து வைத்து அழிக்கும்
வெடிகுண்டுகளே வேதம் என்று
அடித்துக் கூறுவார்களா?
அன்று ஒரு வாலியைத்தான்
மறைந்து கொன்றான் இராமன் !
.................இன்று
அப்பாவி மக்கள் மறைவாய்க்
கொலைகள் தினம் தினம் இங்கே !
இரயில்வே நிலையமும்
விமான நிலையமும்
குண்டுமிரட்டலினால்
குமுறிக் கிடக்கிறது !
எங்கிருந்து யார் இயக்குகிறார்கள்
என்றறியாமல் இறக்கின்றனர் மக்கள் இங்கே !
பூக்கூட்டம் போர்க்களமானது !
.................அன்று
காமமயக்கம் தீரந்த துளசி தாசர்
நாமத்தை கூறி இலக்கியம் செய்தார் !
காமமே காவியமாகிறது இன்று !
பூக்கூட்டம் போர்க்களமானது !
இவை மாற ...................
அன்பென்ற விதையை தினமும் விதைப்போம் !
பண்பென்ற பாதையை தினமும் போடுவோம் !
விண்ணிலே தானாய் பறக்கும் இன்சாட்டுக்களோடு
கண்ணிலே கண்ணீரை மானிடத்திற்கு இடுவோம் !
பண்ணிலே பாக்களை பதமாக இயற்றி
நுண்ணிய விஞ்ஞானத்தை
பெண்ணினத்திற்கு இரக்கமாய் மாற்றுவோம் !
இன்சாட்டினால் சானல்கள் மாறுகின்றன !
பண்பாட்டினால் மனதினை மாற்றுவோம் !
துண்டுகளை மாற்றி கொள்கைகளை மாற்றுவோம் !
திண்டாடும் மாந்தர் திறம் மாறுவது எப்போது ?
தானே இயங்கும் ரோபோட்டுக்கள்
தயாரிப்பதில் தவறில்லை ! ஆனால்
இரக்கமுள்ள மனிதன்
இயந்திரமாக மாறலாமா ?
யோசியுங்கள் !
தனியாய் அமர்ந்து யோசியுங்கள் !
பூக்கூட்டம் போர்க்களமாகலாமா ?
போர்க்களதில் பூக்களை விதைப்போம் !
மக்கள் குண்டுகளாய் மாறாமல்
பூக்கள் குண்டு குண்டாய் மலரட்டும் !
அன்பு என்று பூக்கள்
அறிவு நிலத்தில் விளையட்டும் !
அன்பான பூக்கள்
பண்பான மணம் வீசட்டும் !

(அன்பன் - நாகசுந்தரம்)

சிவா.ஜி
30-07-2012, 05:29 PM
மனிதம் மறந்து மதமேறிவர்களும், பண்பு மறந்து பணமேறியவர்களும், அன்பு மறந்து அறம் மீறியவர்களும், அறிவை மறந்து அரிவாள் எடுத்தவர்களும்.....அனைத்தையும் மறந்து அரசியலேறியவர்களும் செய்யும் செயல்களால்தான் பூந்தோட்டம் இன்று போர்க்களமாகியது.

நாளய விடியலாவது நல்லவிதமாய் விடியாதா...வானம் மட்டுமே ரத்தம் பூசிக்கொள்ளாதா என்ற ஏக்கத்துடனே விழிமூட வேண்டிய நிர்பந்தம்.

நடக்கும் கொடுமைகளை நயமாய் சொன்னக் கவிதைக்குப் பாராட்டுக்கள் நாகசுந்தரம்.

கீதம்
31-07-2012, 02:53 AM
ஆதங்கத்துடனான வரிகளில் ஆழ்மனப் பதைப்பு தெளிவாய்த் தெரிகிறது.

அன்பின் ஆட்சியும் மனதின் சாட்சியும் இல்லாத இடங்களில் அரங்கேறிடும் அராஜகக் காட்சிகள்.

மனம் இளக்கிய கவிதைக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ராஜா
31-07-2012, 08:34 AM
சமூக அவலங்களைச் சாடும் வேளையில், சமாதானப் பெருவாழ்வுக்காக ஏங்கவும் வைக்கிறது உங்கள் கவிதை..

அப்படிப் போடுங்க அறிவாலே..!

பாராட்டுகள் சுந்தரம்..!

சுகந்தப்ரீதன்
02-08-2012, 06:13 PM
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான் என்றார் ஒருவர்... அதே சமயம் எதிரிக்கும் இரங்கு என்றார் இன்னொருவர்... இதில் எதை ஏற்பது..?! தர்மத்தின் எல்லைக்குள் இருந்து எதிரி இயங்குவானேயானால் அவன்மீது இரக்கம் காட்டுவதில் நமக்கு தயக்கமெதுவுமில்லை... எல்லைதாண்டும்போதுதான் இங்கே பூக்கள்கூட புயலாக மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது..!!

அன்பே உருவாய் இருக்கும் ஆதிசிவனும் அவ்வப்போது ருத்ரதாண்டவம் ஆடத்தானே வேண்டியிருக்கிறது..?! கவிதையில் தாங்கள் கூறும் மேன்மையான கருத்து போற்றி வளர்க்கதக்கது... ஆனால் யதார்த்தம் சிலசமயம் அதற்கு எதிராய் இருக்கும்போது எதிர்க்கவேண்டியதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது..!! எங்கெங்கும் அன்பான பூக்கள் மலர்ந்து பண்பான மணம் வீசவேண்டுன்ற விருப்பமே இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும்..!!

சமாதான பெருவாழ்வை நாடி பேரன்புடன் நாகசுந்தரம் ஐயா படைத்திட்ட நலம்மிகு கவிதைக்கு எமது உளம்கனிந்த வாழ்த்துக்கள்..!!:icon_b: