PDA

View Full Version : என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....!



ரௌத்திரன்
29-07-2012, 10:40 AM
வயிறொடு சேர்ந்து
உயிரது தேயுமோர்
துயரெனைத் தொடர்கின்ற பொழுதும்-நெஞ்சம்
நயமொடு கவிதைகள் எழுதும்!


பந்தங்களால்; சூழும்
சொந்தங்களால்; நாளும்
வெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்
செந்தமிழ் உயிருக்குள் ஊறும்!


சுற்றிநான்கு சுவர்களன்றி
சுற்றமில்லை என்றபோதும்
கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே
முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்!


திசைகளொரு எட்டும்
வசைகளையே கொட்டும்
பசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்
இசைத்தமிழ் இடைவிடாமல் மோதும்!


மெய்யிருக்கும் பலமும்
கையிருக்கும் பணமும்
மெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்
மலைபோலத் தமிழ்மட்டும் விரியும்!


ஓடியுழைக்கச் சக்தியின்றி
கூடுகாக்கக் கையிரண்டில்
ஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி
பாடிடுவேன் இதுமட்டும் திண்ணம்!



சூரிய வெப்பத்தின்
வீரியம் கூடஇங்கு
வருஷமொன்று சொல்லக் குன்றும் - அதுவும்
வாராதென் கற்பனைக்கு என்றும்!


அணைக்கவொரு ஆளுமின்றி
துணைக்குவரக் கோலுமின்றி
தனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்
தமிழ்க்கவிதை நெஞ்சோடு ஜனனம்!


கட்டையிது தூக்கவொரு
எட்டுக்கால் களில்லாமல்
வெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்
கொட்டுகின்ற தமிழ்மட்டும் வாழட்டும்!


பத்துமாதச் சிறைகடந்து
பலவருஷச் சிறைநடந்து
சத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி
முத்தமிழ் மூச்சோடு நுரைக்கும்!


நோவென்ற ஒன்றும்
சாவென்ற ஒன்றும்
கேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்
கடந்தது கவியென்பது மானிடா!


காற்றை ஒத்தது
கூற்றைக் குடிப்பது
ஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு
மாற்றில்லை மயங்குமிந்தப் புவியே!


திரையிட்டால் மறையாது
சிறையிட்டால் மரிக்காது
தரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்
தகிக்கின்ற தமிழுணர்வு உண்மை!


உதிரத்தின் அணுவெங்கும்
சதிராடும் கவியுணர்வை
எதுவந்து மாய்த்திடக் கூடும்? - தமிழ்
நதியெந்த நாளுமெனில் ஓடும்!


காலத்தின் கோடோ
ஞாலத்தின் கேடோயென்
நாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க
நினைக்குமெனில் முறியுமதன் இடுப்பு!

அமரன்
29-07-2012, 02:19 PM
தமிழ் மீதான காதல் ரசமாலிகாவாக..

பாராட்டுகள்.

சுகந்தப்ரீதன்
30-07-2012, 03:20 PM
பொறாமையா இருக்குங்க... உங்களை பார்த்தா... பின்ன என்னவாம் இப்படியெல்லாம் என்னால எழுத முடியலியே..:sprachlos020:

சாவிலும் தமிழ்படித்து சாகவேண்டும்; என் சாம்பலிலும் தமிழ் மணந்து வீசவேண்டும்; என்ற பாவேந்தனின் பா வீச்சை உங்கள் கவிகளிலும் கண்டேன்.. களித்தேன்...!!:)

தொடர்ந்து சுடர்விட்டு ஜோதியாய் ஒளிரட்டும் உம் விரல்விட்டு வெளியேறும் தமிழெனும் அக்னிகுஞ்சு..!!:icon_b: