PDA

View Full Version : விழுதை மறந்த வேர்கள்.



M.Jagadeesan
29-07-2012, 10:05 AM
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியை
மறக்காமல் வலியுறுத்தும் மாண்புமிகு பெற்றோரே!
தந்தை மகனுக்குச் செய்யும் கடமையை
தயைகூர்ந்து நெஞ்சிலே நினைவில் கொள்ளுங்கள்.


பெற்றது பெண்ணென்று தெரிந்து விட்டால்
குற்றம் வந்ததே எனக்கூறி அச்சிசுவைக்
குப்பைத் தொட்டியில் எறிந்தது யார்குற்றம்?
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

பள்ளிக்குச் சென்று படிக்கும் வயதில்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
பட்டாசு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்தது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

பள்ளித் தேர்விலே மதிப்பெண் குறைவானால்
எள்ளி நகையாடி ஏகடியம் பேசியே
தண்டித்து அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

காதலித்த ஒருவனைக் கைப்பிடிக்க வழியின்றி
ஜாதிமத பேதங்கள் பேசியே அவள் வாழ்வை
வேதனையில் தள்ளி வேடிக்கைப் பார்ப்பது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

வேர்களே! என்றும் விழுதுகள் நல்லவைதான்
நீர்தான் அவற்றை நிலைநிறுத்த வேண்டும்
விழுதுகளை வேர்கள் மறந்து போனால்
பொழுது போக்கிடம் முதியோர் காப்பகம் !

அமரன்
29-07-2012, 02:52 PM
பொருத்தமான கருத்தாண்மை.. பொருத்தமான எடுத்தாளுகை..

விழுதினை நம்பி வேர்களில்லை..

வேரில்லாமல் விழுதுகளில்லை..

இதுதான் நிதர்சனம்.

M.Jagadeesan
29-07-2012, 03:00 PM
பொருத்தமான கருத்தாண்மை.. பொருத்தமான எடுத்தாளுகை..

விழுதினை நம்பி வேர்களில்லை..

வேரில்லாமல் விழுதுகளில்லை..

இதுதான் நிதர்சனம்.

அமரன் அவர்களின் கருத்துக்கு நன்றி!

சிவா.ஜி
29-07-2012, 05:41 PM
நல்ல கருத்தைக் கூறும் கவிதை. வேர்களை விழுதுகளும், விழுதுகளை வேர்களும் புரிந்துகொண்டு, அரவணைத்துப் போனால்...இதை அது தாங்கும்....அதை இது தாங்கும்.

வாழ்த்துக்கள் ஐயா.

கீதம்
29-07-2012, 11:41 PM
பெற்றவர்களின் கடனை வலியுறுத்தி பிள்ளைகளுக்காதரவாய் மொழிந்த வார்த்தைகளில் இல்லாமல் இல்லை உண்மை.

குமுறும் மனங்களுக்காதரவாய் சொல்லாடுகிறது அழகிய கவிதை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
30-07-2012, 01:02 AM
சிவா.ஜி, கீதம் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

ஜானகி
30-07-2012, 02:02 AM
பாடம் போதிப்பவர்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...!

வேரும் விழுதும் தாங்கள் வந்த வழியை மறக்காமலிருந்தாலே போதும்.

M.Jagadeesan
30-07-2012, 02:20 AM
நன்றி! ஜானகி அவர்களே!!

rema
30-07-2012, 03:21 AM
பராசக்தி பாணியில் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நன்று !

M.Jagadeesan
30-07-2012, 03:28 AM
நன்றி! மின்மினி அவர்களே!!