PDA

View Full Version : அங்கே நீ...



HEMA BALAJI
28-07-2012, 07:22 AM
உனை நோக்கிய நெடுந்தூரப் பயணம்

வழியில்
வண்ணத்துப்பூச்சி ஒன்று
தன் இறகுகளின் வண்ணத்தை எல்லாம்
என் மேல் உதிர்த்துச் சென்றது...

தென்றல்
பூக்களின் மகரந்தத் துளிகளைத்
தாங்கி வந்து எனைத் தழுவிச் சென்றது...

புல் நுணியில் தவமிருந்த பனித்துளிகள்
என் பாதம் தொட்டவுடன் முக்தியடைந்தன...

மரக்கிளைகள்
என் வெயில் வெளியில்
தாழ்ந்து வந்து குடை பிடித்தன...

சில் வண்டுகள் பண் பாடி வாழ்த்துச் சொல்லின..

இதை எதையுமே ஏற்கும் மனநிலை தவிர்த்து
உனை மட்டுமே கண்கள் தேட...

நீண்ட சாலைகளில் தனித்து அலைந்து
உனைக் காணாமல் மிகச் சோர்வுற்று
எனதறைக்குத் திரும்பினேன்...

அங்கே நீ...

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் ஏந்தி
மகரந்தத்தின் வாசம் பூசி
என் பாதத்தில் பதித்த
உன் முத்தத்தின் ஈரத்துடன்
எனக்கான ஒரு பாடலை இசைத்துக் கொண்டு
கருணையின் குடை பிடித்து அமர்ந்திருந்தாய்...

கீதம்
28-07-2012, 11:13 AM
எதைத் தேடுகிறோம் என்பதிலேயே நமக்கு இன்னும் தெளிவேற்படவில்லை.

தேடும் பொருள் கைவரப்பெற்றாலும் அறியாது தொடர்கிறது தேடுதல் பயணம்.

ஆழ்மனம் தொடும் அழகான கவிதை. பாராட்டுகள் ஹேமா.

HEMA BALAJI
04-08-2012, 04:13 PM
ஒவ்வொரு கவிதக்கான ஊக்குவிக்கும் பின்னூட்டத்துகும் பாராட்டுகளுக்கும் மிக நன்றி கீதம்.