PDA

View Full Version : தேடல்...



thamizhkkaadhalan
28-06-2012, 04:41 PM
தேடிவரும் தென்றல் காற்றே...
ஓடிவரும் ஓடை நீரே...
கேட்டீரோ தரணி சுற்றும் தமிழின் ஓசைகளை..?

துயின்று எழும் பசுந்தளிரே...
இதழ் விரித்துச் சிரிக்கும் மலரின் மொட்டே...
விளைத்தீரோ மண்ணில் மிதந்த தமிழின் ஆசைகளை..?

நாளிதழ் ஏந்திய எழுத்துப்பிழைகளே...
நாவிதழ் தாண்டிய சந்தப்பிழைகளே...
பயின்றீரோ அகத்தியன் அளித்த அழகுத்தமிழை..?

பகலில் படரும் சூரியச்சுடரே...
இரவில் நகரும் வெள்ளைநிலவே...
பார்த்தீரோ கன்னித்தமிழின் கரையும் ஒளியை..?

தள்ளாடி நடக்கும் தண்ணீர் மேகங்களே...
சிந்தை நனைத்துச் சிதறும் மழையே...
நுகர்ந்தீரோ குமரியாற்றின் குளிறும் வாசனையை..?

எந்தன் செவிகளில் நின்று சிரிக்கும், நிழலாய் வாழும் மயங்கொலிப்பிழைகளே...
உணர்ந்தீரோ நாவுகள் நவிழும் தமிழின் தனித்துவங்களை..?

ஈர இதழ்களில் பட்டுச்சிதறும் பச்சைமுத்தங்களே...
பரந்த உலகில் நிறைந்து கிடக்கும் கலியுகக் காதலே...
சுவைத்தீரோ தமிழ்மகளின் இதயத்தில் எழுதிய இனியகவிகளை..?

காதல் பேசும் இத்தாலியமே...
தத்துவம் தந்த ஜெர்மனியே...
களவாடிக்கொண்டீரோ எம் பக்திமொழியின் பழைய வார்த்தைகளை..?

கடலின் ஆழத்தில் கரைந்திருக்கும் இருளே...
மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் இருளே...
கண்டீரோ ஓசையின்றிப்பரவும் தமிழொளிச்சுடரினை..?

ஆதியிலே அதிசயமாய்ப் பிறந்து-பின்
அவனியிலே அவலமாய்ப்போன மனிதர்களே...
மொழிந்தீரோ சங்கம் வளர்த்த சாகாத்தமிழை..?

அத்துனை வி்னாக்களுக்கும் விடைகள் வந்தன...
எட்டுத்திக்கும் எழுந்துவந்த மௌனமாய்..!


தமிழே...
உன் பூர்வீகம் கண்டெடுக்க, உருமாறி மண்ணில் வந்தேனடி...
ஓர் கன்னிமன ஆழம் கடந்தும், அதைக் காணாமலே நான் நொந்தேனடி..!

உலகம் வாழும் வரை, புகழ் உலவும் உனைப்பற்றி...
எந்நாளும் தமிழர் வாழ்வில் நிலவும் இனி வெற்றி..!
...தமிழ் வெல்க...

ராஜா
27-07-2012, 07:30 AM
தங்கள் ஆதங்கம் புரிகிறது தமிழ்க்காதலரே..!

வெற்றுக்கவியல்ல இது.. மொழியின்பால் கொண்ட பற்றுக்கவி..

தமிழுக்காய் சிந்திக்கும் தங்கள் தகைமைக்கு தலை வணங்குகிறேன்..

கீதம்
29-07-2012, 11:27 PM
நாளிதழ் ஏந்திய எழுத்துப்பிழைகளே...
நாவிதழ் தாண்டிய சந்தப்பிழைகளே...
பயின்றீரோ அகத்தியன் அளித்த அழகுத்தமிழை..?

தனியொருவரின் எழுத்தில் பிழைகண்டே தவியாய்த் தவிக்கும் மனம், பொதுமக்கள் பலரைச் சென்றடையும் ஊடகங்களில் உலா வருவதைக் கண்டு மௌனமாய் அழுவதுண்டு. அதை எடுத்தியம்பும் வரிகளில் கண்ட அழுத்தம் கண்டு நெகிழ்ந்தேன்.




உலகம் வாழும் வரை, புகழ் உலவும் உனைப்பற்றி...
எந்நாளும் தமிழர் வாழ்வில் நிலவும் இனி வெற்றி..!
...தமிழ் வெல்க...

முடிவில் தமிழ் வெல்லும் என்னும் நம்பிக்கை மொழி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தமிழின் இனிமையோடு பெருமையும் பறைசாற்றிய அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் தமிழ்க்காதலன்.

அமரன்
30-07-2012, 09:10 PM
பெயருக்கேற்ற கவிதை..

பொருள் படர்ந்த கவிதை..

பாராட்டுகள்.

M.Jagadeesan
31-07-2012, 12:58 AM
தங்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் கவிக்குப் பாராட்டுக்கள்!!