PDA

View Full Version : மழைரௌத்திரன்
25-07-2012, 02:56 AM
மனிதர்களே!

இமைகளைக்
கண்களுக்குக்
கடிவாளமாய்க்
கட்டிக் கொண்டவர்களே!

பாருங்கள்!

சொட்டுச் சொட்டாய் வழியும்
சொர்க்கம் பாருங்கள்!

பூமிக்கு
ஆகாயம் நடத்தும்
அர்ச்சனை பாருங்கள்...

வான விவசாயி
மேக மூட்டையை அவிழ்த்து
மண்ணிலே
தண்ணீர் விதைகளைத்
தூவுவதைப் பாருங்கள்!

அதோ!

மொட்டுகள்
முகம் கழுவிக் கொள்வதைப்
பாருங்கள்!

இதோ!

சிட்டுகள்
சிறகு நனைப்பதைப்
பாருங்கள்!

பாருங்கள்..பாருங்கள்..

மலர்கள்
மூக்குத்தி அணிந்தது போல்
முத்து முத்தாய்ச் சில துளிகள்!


கேளுங்கள்!

வானக் கலைஞன்
இலைமேடையில் அரங்கேற்றும்
இன்னிசைக் கச்சேரியைக்
கேளுங்கள்...

அடே மனிதா
ஏன் ஒதுங்குகிறாய்?

சட்டை நனைந்தாலென்ன
செத்தா போவாய்?

அப்படியே செத்தாலும்
அமரனாவாய்...

மழையில் செத்தால்
மோட்சமடா!

வைட்டமின் B12
மழையில் உண்டென்று
மருத்துவம் சொல்கிறது...
அறிவாயா?

உன்
உடம்பிலிருக்கும்
ஐந்து லிட்டர் ரத்தத்தை
அப்படியே இறைத்தாலும்
ஒற்றை மழைத்துளிக்கு
ஈடாகுமோ?

வானத்தில்
வாழச்சென்ற
தண்ணீர் மகள்
தாய் வீடு வருகிறாள்!

எங்கே கற்பூரம்?

ஆனந்தமாய்
ஆரத்தி எடுத்து
அழையுங்கள்...!

ஓ!
எதைவேண்டி
மண்ணிடம் வானம்
மழை மனு கொடுக்கிறது?
மழை மருந்து கொடுத்து
மண்ணுக்கு
வைத்தியம் பார்க்கிறதா
வானம்?

இது என்ன?
இங்கே நனைந்துகொண்டிருப்பது
பூமிதானே?

வானம் ஏனப்படி
விடாமல்
இருமிக் கொண்டே
இருக்கிறது.....?

யாரவன்
மழைக்கே குடைபிடிக்கும்
மேதாவி?


அது வானவில்லோ?

இல்லையா?
பிறகு?

ஓ!
மண்ணுக்கு வருகைதரும்
மழைக்குப் பொன்னாடையா?

ஆஹா!
இது என்ன வாசம்?

உதிர்வது
மழையா?
மகரந்தமா?

அல்லது
மழையில் நனையும்
என்
மனதின் மணமா?

இல்லை!

மணம்
மண்ணில் இருந்து...

ஓ!
மழையின்
மெல்லிய தீண்டலில்
மண் கூட மலர்கிறதோ?

துளிகள் ஒவ்வொன்றும்
தூளி கட்டித்
தாலாட்டுகிறதே!

மனிதா!
மழையை ரசிக்க
இனியேனும் கற்றுக் கொள்!

மனிதன் என்பதை
மறந்து
மரமாகிவிடு!

ஒற்றை அறிவு போதும்
இயற்கையை ரசிக்க!

ஆம்,
ஆறறிவு என்பது
ஆராய்ச்சிக்குத்தான் உதவும்...

இயற்கையை மறந்தால்
இளமை இல்லை...

இயற்கையில் கறைந்தால்
முதுமை இல்லை...

இயற்கையின் மடிதான்
இன்பத்தின் எல்லை...

இயற்கையை மறந்தார்
அவலத்தின் பிள்ளை...

இயற்கையில் ஊறாத
கவிதைகள் இல்லை...

இயற்கையை மீறிய
கவிதையும் இல்லை...

இயற்கையைப் பாடாத
கவிஞன் இல்லை...

இயற்கையைப் பாடாதவர்
கவிஞரே இல்லை!


இனியேனும்
இயற்கையை ரசிக்க
இதயத்தைப் பழக்கு!

யாரது
அங்கே
அசையாமல் நின்று
அப்படி ரசிப்பது?

ஓ! எருமையா?

பாரடா மனிதா!
எருமைக்கும் தெரிகிறது
மழையின் மகத்துவம்

உனக்குத் தெரிவது
எப்போது?----------ரெளத்திரன்

ஜானகி
25-07-2012, 05:38 AM
பார்த்து ரசித்தாலும், இப்படிப் பாடத் தெரியவில்லை...இனி ஒவ்வொரு மழையின்போதும் உம்மை நினைவுகூர்வோம்...

கீதம்
25-07-2012, 01:41 PM
மழையின் ஒவ்வொரு துளியையும் கவிதையால் வரவேற்கும் உமது ரசனை எங்களையும் தொற்றிக்கொண்டது.

கிடைக்கும் இடங்களிலெல்லாம் புகுந்து மண் அணைக்கும் மழை, இங்கே கவிதையின் ஒவ்வொரு எழுத்தினூடும் நுழைந்து மனம் நனைப்பது அழகு.

பாராட்டுகள் ரௌத்திரன்.

சுகந்தப்ரீதன்
25-07-2012, 03:30 PM
கொஞ்சம் சாரலாய்... கொஞ்சம் தூறலாய்... கொஞ்சம் மீறலாய்... அடைமழையென சடசடவென பொழிந்துவிட்டீர்கள் மழையின் மகத்துவத்தை..!!

விழுந்து தெரிக்கும் மழைத்துளிகளாய் ஒருசில வரிகள் கவிதை நடையையுடன் ஒட்டாமல் ஆங்காங்கே வெளிபட்டு நிற்பதைப்போல் தோன்றுகிறது..!!

பருவமழை பொய்த்த கணத்தில் கவிதைமழை... வாழ்த்துக்கள் ரௌத்திரன்..!!:icon_b: