PDA

View Full Version : எலி சனியன்ரங்கராஜன்
22-07-2012, 06:51 AM
இந்த எலி சனியனுக்கு ஒரு சாவு வந்து தொலைய மாட்டுதே.....

வணக்கம் உறவுகளே... எப்படி இருக்கீங்க... வழக்கம் போல அனைவரும் நலமாகவும், சீறும் பாம்பை நம்பு........சாரி சாரி சீரும் என்றதும் ஆட்டோ பின்னாடி எழுதும் வாக்கியம் ஞாபகம் வந்து வி்ட்டது. சரி நீங்கள் அனைவரும் சீரும் சிறப்பாகவும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்புறம் மன்றம் எப்படி போவது, கண்டிப்பாக நல்லா போகும் என்று நினைக்கிறேன், புது பொலிவுடன் மன்றம் ஜொலிக்குது. தீபாவளிக்கு அம்மா வீட்டிற்கு கணவனுடன் வந்த புதுப்பெண் போல் இருக்கிறது மன்றம். பார்க்கவும் சந்தோஷமாக இருக்கு. அப்புறம் வேலை பளு காரணமாக நான் மன்றம் வரவில்லை என்று வழக்கம் போல, புருடா விட விரும்பவில்லை. உண்மையில் வேறு கம்பனி மாறியதால் பளுவை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால் வரமுடியவில்லை. ஆம் நான் தற்போது பழைய சேனலில் இல்லை தற்போது புதிய சேனலுக்கு மாறி விட்டேன். அப் கம்மிங் சேனல் என்பதால் சவால் நிறைந்ததாக இருக்கிறது வேலை. அதைவிட சவால் நிறைந்ததாக இருக்கிறது தினமும் ரயிலை பிடிப்பது. ஆம் நான் இப்போதெல்லாம் ரயிலில் தான் ஆபிஸுக்கு போகிறேன். பைக்கை தொடுவதே கிடையாது. தினமும் காலையில் எழுந்து வேலைக்கு போகும் போது, என் பைக்கை கடக்கும் போது, மீச்சுவல் இல்லாத டைவஸுக்காக கோர்ட் வாசலில் காத்திருக்கும் மனைவியைப் போல என் பைக் தயங்கி தயங்கி நிற்பதை போல தோன்றும், என் மனது ஓடிப் போய் அதனை கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும், ஆனால் ரயிலுக்கு நேரமாகி வி்ட்டது என்று கிளம்பி விடுவேன்.

சிவில் சர்வீஸ், என்டிஏ, ரா போன்ற துறைகளுக்கு எடுக்கப்படும் ஆட்களுக்கு எந்தளவு திறமை இருக்குமோ....... கண்டிப்பாக அந்தளவு திறமை இருந்தால் மட்டும் தான் குறிப்பிட்ட ரயிலை தினமும் பிடிக்க முடிகிறது. ஒரு முன் எச்சரிக்கை, உள் உணர்வு, டைம் கால்குலேஷன், வேகம், ஞாபக சக்தி, சீரான உடல்நிலை, மார்சியல் ஆர்ட்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தால், தெரிந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட ரயிலை பிடிக்க முடிகிறது. இவன் ஏதோ பதிவு போட வேண்டும் என்று, திரியை நிரப்ப வேண்டும் என்று இவ்வாறு எழுதுகிறான் என்று நினைக்காதீர்கள் உறவுகளே..... தினமும் ரயிலை பிடித்து வேலைக்கு வருபவர்களுக்கு இந்த விஷயம் புரியும். நிறுவன கேப், அல்லது கார் அல்லது விமானத்தில் பயணிக்கிறவர்களுக்கு இந்த விஷயம் ஓரளவுக்காகவது புரியும் காரணம் தற்போது நீங்கள் விமானத்தில் பயணம் செய்தாலும், என்றாவது ஒரு நாள் உங்கள் பால்யத்தில் நீங்கள் இந்த கஷ்டங்களை பட்டு இருப்பீர்கள். ஆனால் உங்கள் காலம் மாதிரி இல்லை இப்போது.... பெரும்பாலானோர் ரயிலை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில், குறி்ப்பாக சென்னையில், அதுவும் அதிமுக ஆட்சிக்கு வந்தததும், (சிவாஜி அண்ணா மன்னிக்கவும்...) பஸ் டிக்கெட் உயர்வுக்கு பின்னர் அனைவரும் ரயிலை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். சோ கூட்டம் ரயிலில் எப்போதும் அம்முகிறது. அதுவும் அடித்து பிடித்து ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் போதே சைதாப்பேட்டையில் இருந்து ரயி்ல் வரும் சத்தம் கேட்டு விடும் உடனே மனம் அடித்துக் கொள்ளும் எப்படி அந்த ரயிலை பிடிப்பது. படிக்கட்டு ஏறி போனா நேரமாகும், அதுவும் என் உடல் எடையைக் கொண்டு நான் படிக்கட்டு ஏறி போனா வருஷமே ஆகும். அதனால் சுவரை ஏறி குதித்து, டிராக்கில் ஓடி வேண்டியது இருக்கும்.... டிராக்கில் ஓடும் போது பின்னாடி ரயில் வருதா இல்லையா வருதா இல்லையா என்று பார்த்து ஓடுவது........

கொடுமையிலும் கொடுமை.......இனிமேல் இந்த வாழ்க்கையில் எதற்கு இந்த இளமை.....தகிடதோம் தகிடதோம்.. அழகு மலர் ஆட, அபிநயங்கள் கூட........

ஹா ஹா அந்த மாதிரி ஒரு கொடுமை அது. நான் இந்த மாதிரி பின்னாடி பார்த்து பார்த்து ஓடி வருவதைப் பார்த்த என் நண்பன், அவன் ரயில் பிடிப்பதில் கில்லி.... இதுவரை அவன் ரயிலை தவற விட்டதே இல்லை. சரியாக பிடிப்பான், பள்ளி பருவத்தில் இருந்து அவன் பாதி வாழ்க்கை ரயிலில் தான் கழிந்தது. ரயிலில் கூட வந்த பொண்ணை தான் காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டான். இப்போ அவனுக்கு ஐந்து வயதில் பையன் இருக்கான். அவனும் தற்போது ஸ்கூலுக்கு ரயிலில் அவங்க அம்மாவுடன் சென்று வருகிறான். பாருங்களேன்.... ரயில் எப்படி என் நண்பனின் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விட்டது. அப்படி பட்ட அனுபவமிக்க நண்பன் கூறினான்,

டேய் எரும மாடே, டிராக்கில் ஓடிவரும் போது, ஏன்டா பின்னாடி பார்த்து பார்த்து ஓடிவர....

பின்ன ரயில அடிப்பட்டு சாவ சொல்றீயா....

ஏன்

என்ன ஏன், நான் முன்னாடி பார்த்து ஓடும் போது, பின்னாடியே சத்தமில்லாமல் டிரைவர் ரயிலை ஓட்டிட்டு வந்து இடிச்சிட்டான்னா....

என்ன சத்தமில்லாமலா...... அடப்பாவி ரயில் எப்படி டா சத்தமில்லாமல் வரும்.... சரி அதவிடு..... அவ்வளவு பயமா இருந்தா டிராக்குல ஏன் ஓடி வர...

ரயிலை பிடிக்கணுமே...

தூ..... பரதேசி, இனிமேல் கொஞ்சம் முன்னாடியே வரப்பாரு.... அப்படி நேரமாச்சுன்னா, ரயில் வரும் டிராக்கில் ஓடி வராதே, எதிரே ஒரு டிராக் இருக்கல்ல அதுல ஓடிவா..... பின்னாடி பின்னாடி பார்த்து ஓடி வரும் கஷ்டம் இருக்காது, ஏன்னா, அதுல வரும் ரயில் எதிர்திசையை நோக்கி வரும் ரயில் சோ உனக்கு முன்னாடி தான் வரும், ரயில் வருதான்னு நீ பார்த்துக் கொண்டே ஓடலாம்......

அட ஆமா, சே இது ஏன் எனக்கு தோணாம போச்சு. நம் வாழ்க்கையில் நமக்கு எல்லாம தெரியும் என்று நினைக்கும் அனைவரும் இவ்வாறு சின்ன சின்ன விஷயங்களில் அசிங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இப்படி ஓடி போய் ரயிலை பிடித்தால், அங்கு நிம்மதியா நிக்க முடியுதா...... பேய் கூட்டம் ரயில் பெட்டிக்குளஅ இருக்கும். அடித்து பிடித்து உள்ளே போனால், என் சைஸுக்கு அல்லது என்னை விட பிரம்மாண்டமா சிலர் அங்கு நின்றுக் கொண்டு இருப்பார்கள்.

சார் கொஞ்சம் வழிவிட்டீங்கன்னா அப்படி போயிடுவேன்...

என்னது...

இல்ல கொஞ்சம் வழி...

இருந்தா போமாட்டோமா....(சொத்தை எழுதி கேட்டதைப் போல முறைப்பான்)

அடுத்த ஸ்டேஷன் வரும், கூட்டம் ஏறும். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்குள் நான் இருக்கும் கம்பார்ட்மெண்ட் கடுகு டப்பா மாதிரி ஆகி விடும். என் காலில் மூன்று பேர், தோளை பிடித்துக் கொண்டு நாலு பேர், காதை பிடித்துக் கொண்டு இரண்டு பேர். அந்த நேரத்தில் பிக்பாக்கெட் திருடன் வந்து என் பர்ஸை அடித்தால் கூட என்னால் அவனை அடிக்க முடியாது.....

டேய் மச்சி, ப்ளீஸ் டா, பர்ஸுல, ஐநூறு ரூபாய் இருக்கு நீ 100 ரூபாய் எடுத்துக்கோ, எனக்கு நானூறு ரூபாய் வச்சிடுடா, ப்ளீஸ்

இப்படி கெஞ்ச வேண்டிய அளவுக்கு என் கை, கால்கள் செயலிழந்து இருக்கும்.

சரி இதுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கு.........

இப்படி அடித்து பிடித்து அலுவலகத்திற்கு போய், அதே மாதிரி பிடித்து அடித்து அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்தால், பசி உயிரை எடுக்கும். அப்படி ஒரு நாள் வீட்டிற்கு வந்தேன், ஃப்ரிச்சில் இருந்து பழங்களை சாப்பிட வாயில் வைத்தேன். பல்லு கூசியது கடிக்காமல் கீழே வைத்து விட்டேன், சரி கொஞ்ச நேரம், வெளியில் வைப்போம், முகத்தை அலம்பி விட்டு, பழத்தை சாப்பிடலாம் என்று என்னை ரிப்ரேஷ் செய்துக் கொண்ட பின்னர் டேபிளில் இருந்த பழத்தை நோக்கி சென்றேன். பழத்தை எடுத்தேன், ஜில்னஸ் இல்லை, வாயில் வைக்கலாம் என்று நினைக்கும் போது, எனக்கு முன்னாடி அதை யாரோ கடித்து இருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன், கதவு தாழ்பாள் போட்டு இருந்தது, அந்த நேரம் என் எதிரே ஓடினான் அந்த எலி சனியன். பசி உயிர் போகுது, பழத்தில் அந்த இடத்தை மட்டும் வெட்டி வீட்டு சாப்பிட்டு விடலாமா என்று கூட எனக்கு தோன்றியது. ஆனால் எலியால் பல நோய்கள் வரும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் பழத்தை தூக்கி போட்டு, சமைக்க ஆரம்பித்தேன். பட்டானி குருமா, சைடு டிஷ்ஷாக ஆம்லெட்......... சமைத்து வைத்தேன். உடல் வியர்த்து விட்டது, குளித்து விட்டு சாப்பிடலாம் என்று நினைத்து குளிக்க சென்றேன். தூய்மையான பின்னர் (உடல் அளவில்...) சமையல் அறை நோக்கி நடந்தேன். தோசை கல்லில் இருந்த என் ஆம்லெட்டை அந்த எலி சனியன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. எனக்கு கோபம் தலைக்கெறியது. அருகே இருக்கும் பூண்டு இஞ்சு நசுக்கும் கல்லை எடுத்து, எலியை நோக்கி வீசினேன்.

அது லாங் ஜம்ப், ஹய் ஜம்ப், எல்லாம் தெரிந்த எலி போல இருக்கு உடனே எகிறி விட்டது. அந்த கல்லு சரியாக போய் சமையல் பாத்திரங்களின் மீது விழ ஒரு மணி நேரம் பசியோடு சமையத்த அனைத்தும் கீழே கொட்டியது. பட்டானி குருமா, சாப்பாடு, ஆம்லெட் எல்லாம் கீழே கொட்டி விட்டது.

யோசித்து பாருங்கள் என் நிலையை, கோபம் தலைக்கெறியது. கண்ணில் பொறி கிளம்பியது, காது அடைத்தது, பேசாமல் போய் படுத்து விட்டேன்........... பின்ன இரவு 11 மணிக்கு நான் என்ன செய்ய முடியும், மீண்டும் சமைக்கவும், த்ராணி இல்லை, வெளியில் கடையில் போய் சாப்பிடவும் விருப்பமில்லை. அதனால் படுத்து விட்டேன், ஆனால் தூங்க வில்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன் தூக்கம் வரமாட்டுது.... கண் இழுத்துக் கொண்டு போனது, காலையில் விடிந்து விட்டது. வேலைக்கார அம்மா வந்தாள், சமையல் அறையில் சாப்பாடு, குழம்பு, ஆம்லெட் கொட்டி இருந்ததை பார்த்து என்னை திட்டி தீர்த்தாள். அந்த ஆம்லெட்டை பார்த்தேன், கால் வாசி தான் இருந்தது, சில பட்டானிகளையும் காணவில்லை. சோ அந்த எலி பயபுள்ள இன்னும் இங்க தான் இருக்கான். கோபம் தலைக்கெறியது..............வேலைக்கு கிளம்பி விட்டேன். அதன் பிறகு, வீட்டில் இருந்த எல்லா பொருட்களை அந்த எலி கடிக்க ஆரம்பித்தது. செருப்பு முதல் பருப்பு வரை, அரிசி முதல் மிக்சி வரை. முக்கியமாக நான் சமைத்து வைக்கும் பதார்த்தங்களை உண்பதில் அந்த எலிக்கு என்ன வெறியோ தெரியவில்லை. ரசம் சாதம் முதல், பிரியாணி வரை அனைத்தையும் வாய் வைத்து இருக்கிறது. அவை அனைத்தையும் நான் குப்பையில் கொட்டியும் இருக்கிறேன்.

இத்தனைக்கும் ஒரே எலி மட்டும் தான் என் வீட்டில் இருக்கு, பலமுறை எலி மருந்து, எலிக்கூண்டு, எலி அடிப்பான் வைத்து பார்த்து விட்டேன் ஒன்றும் முடியவில்லை. கடைசியாக சமாதான புற பறக்க விட்டேன். அந்த எலி வரும் ஓட்டையில் தினமும், நான் சமைக்கும் சாப்பாட்டை கொஞ்சம் வைக்க ஆரம்பித்தேன். சில நாட்கள் அதனை மட்டும் சாப்பிட்ட எலி, அந்த பார்டரை தாண்டி வரவில்லை. கொஞ்ச நாள் கழித்து மீண்டு வர ஆரம்பித்து விட்டது. மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. ஒருநாள் என்னுடைய ஆசிரியர், எனக்கு யாதுமாகி, அனைத்தையும் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ரயில் நிலையத்தில் பார்த்தேன். பெருமையாக என்னை விசாரித்தார். நேர்மைக்கான உதாரணம் அவர்....

அவர் வகுப்பில் அடிக்கடி கூறும் ஒரு வார்த்தை...

ஆசிரியர்கள் ஏணியை போன்றவர்கள், எத்தனையோ பேர் மேலே போக நாங்கள் உதவி செய்து இருக்கிறோம்......நீங்கள் சென்று பார்த்ததை நாங்கள் பார்த்ததில்லை...... காரணம் நாங்கள் மேலே போனதே இல்லை...... என்றாவது ஒருநாள் நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்து எங்களை தெருவில் பார்த்து..... சார் நான் உங்கள் மாணவன், இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன் என்று கூறி ஒரு டீ வாங்கி தந்தால் கூட போதும்..... ஒரு ஆசிரியரா என் பயணை நான் பெற்று விடுவேன் என்பார்.

மிகவும் உன்னதமான மனிதர்.

அந்த மனிதரை நான் சந்தித்தேன்.

விசாரித்தார். மதியம் நேரம், சார் சாப்டீங்களா.....

இல்லப்பா வீட்டுக்கு போய் தான்.

உடனே அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கினேன்.

சார் வீட்டுக்கு வாங்க சார், சாப்பிடலாம்.

இல்லப்பா நான் கிளம்புறேன், காமாட்சி தனியா இருப்பா.

சார் அவங்க பாத்துப்பாங்க நீங்க வாங்க சார்.

கட்டாயமாக அவரை அழைத்துச் சென்றேன். காரணம் அன்று எனக்கு மதியம் ஷிப்டு சோ அப்போது தான் சமைத்து விட்டு வேலைக்கு கிளம்பினேன். வீட்டிற்கு போனோம். அவரை அமர வைத்தேன். தண்ணீர் கொடுத்தேன். அவரை கை கழுவ சொல்லி சமையல் அறைக்கு அனுப்பினேன். நான் என் அறைக்கு வந்து உடையை மாற்றினேன்.

என் ஆசிரியர் கையை அலம்பி விட்டு அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தார். நான் வந்தேன்.

சார் சாப்பிடலாமா...

இல்ல கண்ணா, காமாட்சி சாப்பிடாம இருப்பா வெறும் தண்ணீர் மட்டும் குடு போதும்... சும்மா வீட்டை பார்க்கலாமேன்னு வந்தேன்.

சார் என்ன விளையாடுறீங்களா...

இருங்க சாப்பாடு எடுத்துட்டு வரேன்.

சமையல் அறைக்கு சென்றேன். நான் சமைத்து வைத்த பாத்திரங்கள் கவிழ்ந்து கிடந்தன. சாம்பார், பொறியல் எல்லாம் கொட்டி கிடந்தன. சாதம் மட்டும் தான் இருந்தது. இதனை என் ஆசிரியர் கையை கழுவும் போது பார்த்திருக்க வேண்டும். என் நிலையை உணர்ந்து தண்ணீர் மட்டும் கொடு போதும் என்றார். உன்னத மனிதர்.......

எனக்கு முகம் மாறி போனது....... வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தேன். வீட்டில் பிஸ்கெட் பழங்கள் எதுவும் நான் வைப்பதில்லை எலி தொல்லையினால்.

சரி கண்ணா நான் கிளம்புறேன். என்றார் சார்.

சரி சார் நானும் வரேன்.... உடைகளை மாற்றிக் கொண்டு நானும் புறப்பட்டேன். அவர் ஏதோ பேசிக் கொண்டே வந்தார், எனக்கு ஒன்றும் காதில் விழவில்லை, மனது முழுவதும் அவருக்கு சாப்பாடு போட முடியவில்லையே என்று கவலையாக இருந்தது. போகிற வழியில் ஒரு டீக்கடை இருந்தது.

சார் சாப்பாடு தான் போட முடியல, அட்லீஸ்ட் டீயாவது சாப்பிட்டு போங்க சார்.

இல்லப்பா காமாட்சி தனியா....

ஒரு டீ சாப்பிடறதால, ஒண்ணும் கெட்டுடாது...... மேடம் கோச்சிக்க மாட்டாங்க வாங்க சார்.

டீ சாப்பிட்டோம்..........(அவர் வகுப்பில் கூறியது சரியா போச்சு, எங்காச்சும் ஒரு டீ வாங்கி கொடுத்தால் போதும்)

ச்ச, உண்மையும், என் கையாலாகாத தனமும் எனக்கு முகத்தில் அறைந்தது.

சரி கண்ணா நான் கிளம்புறேன். தாம்பரம் ரயில் வந்தது அவரை ஏற்றி வழியனுப்பினேன். அதே பெட்டியில் இருந்து என் நண்பன் இறங்கினான். சாரை பார்த்தான். அவருக்கு வணக்கம் சொன்னான். ரயில் கிளம்பியது.

என்னடா சாரை எப்ப பார்த்த...

இன்னிக்கு தாண்டா... என்ன காலை ஷிப்டா

ஆமாடா, சே நல்ல மனுஷன் டா,

இல்லையா பின்ன, நம்மளை சிறுவயதில் எப்படி பார்த்துக்கிட்டாரு இல்ல,..

ஆமாடா மச்சி, அந்த காலம் சொர்க்கம் டா, நாம தப்பு செஞ்சாக்கூட யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க, ஆனா இப்போ நாம கரெட்டா செஞ்சாலும் அத தப்புனு சொல்லி பெருசா பேசறாங்க டா.

“...................” மௌனமே என் பதிலாக இருந்தது.

நான் போக வேண்டிய ரயிலும் வந்தது.

சரி மச்சான் பார்ப்போம் என்று நான் கிளம்ப தயாரானேன்....

அவன் எதையோ நினைத்தபடி இருந்தான்.

டேய் மச்சி, மச்சி ட்ரைன் வந்துடுச்சுடா நான் கிளம்பறேன்.

ஓகே ஓகே மச்சி, அந்த மனுஷன் தனியா கஷ்டப்படுறத நினைச்சேன்..... வேறு ஒண்ணுமில்லடா, பை பை.....

ரயிலில் ஏறினேன். அதிசயமாக சீட்டு கிடைத்தது. காதில் ஹெட் போனை மாட்டினேன். பாட்டை கேட்க ஆரம்பித்தேன்.

ஓகே ஓகே மச்சி, அந்த மனுஷன் தனியா கஷ்டப்படுறத நினைச்சேன்..... வேறு ஒண்ணுமில்லடா, பை பை....

அந்த மனுஷன் தனியா கஷ்டப்படுறத நினைச்சேன்.....

மனுஷன் தனியா கஷ்டப்படுறத

தனியா

இந்த வாக்கியம் என் மண்டையில் பாட்டை விட சத்தமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. என் நண்பனுக்கு போன் செய்தேன்.

என்னடா

ஒண்ணுமில்ல மச்சி, அந்த மனுஷன் தனியா கஷ்டப்படுறத நினைச்சேன்னு சொன்னீயா......யாரை சொன்ன.

நம் சாரை தான்டா...

ஏன்

ஆமாடா அவரு புள்ள சிவகாசி இருக்கார்.........அதனால பாவம் தனியா இங்க கஷ்டப்பட்டினு இருக்காரு டா அவரு..

அவங்க வீட்ல மேடம் இருக்காங்கல்ல.......

டேய் அவங்க இறந்து பத்து வருஷத்திற்கு மேல ஆச்சுடா... நான் பதில் பேசவில்லை போனை துண்டித்தேன்.“இல்ல கண்ணா, காமாட்சி சாப்பிடாம இருப்பா வெறும் தண்ணீர் மட்டும் குடு போதும்...”

ச்சே உன்னதமான மனிதன்.

இரவு வீட்டிற்கு வந்தேன். வழக்கம் போல பசி, சமையல் அறைக்கு சென்றேன். விளக்கை போட்டேன், கீழே சிந்தி இருந்த பொறியலை சாப்பிட்டுக் கொண்டு இருந்த எலி வெளிச்சம் வந்ததும் பொந்தில் ஓடிப் போய் ஒளிந்துக் கொண்டது.

வழக்கமாக எனக்கு கோபம் வரும்........ ஆனால் அப்போது வரவில்லை.

அந்த எலி இருக்கும் பொந்தை நோக்கி சென்று, பொந்து அருகில் அமர்ந்தேன்.

“நீ எவ்வளவோ எனக்கு தொல்லை கொடுத்து இருக்க, நானும் உன்னை எத்தனையோ முறை கொல்ல நினைத்து இருக்கேன் இருந்தாலும் நீயும் இந்த வீட்ல இன்னும் இருக்க, காரணம் என்ன தெரியுமா உண்மையில நான் உன்னை கொல்ல நினைக்கல, இந்த வீட்டை விட்டு நீ போயிடணும் தான் நினைச்சேன். ஆனா என் சாரை வீட்டுக்கு கூப்பிட்டும் சாப்பிட முடியாம பண்ண இல்ல........சத்தியமா சொல்றேன் நீ செத்து போயிடு, மனதார சொல்றேன் நீ செத்து போயிடு........ என்று சொல்லி விட்டு.

ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிட்டு படுத்து விட்டேன்.

அதன் பின்னரும் எலி தன் வழக்கமான வேலை காட்டிக் கொண்டு தான் இருந்தது. சமீபத்தில் ஒருமுறை அது பொந்திற்குள் சென்றதை பார்த்தேன். அடுப்பில் சுடுதண்ணீர் ரெடியாக இருந்தது. எடுத்து பொந்தில் ஊத்தினேன். சாதித்து விட்டதாக அப்போது மனம் நினைத்தாலும், சிறிது நேரத்தில் என் மனசாட்சி என்னை தின்ன ஆரம்பித்தது. சமைக்கும் போது, கடுகு வந்து நம் மீது விழுந்தாலே அந்த சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு குட்டி ஜீவன் மீது சுடு தண்ணீ ஊற்றி விட்டோமே என்று மனசாட்சி கொன்றது. அடுத்த நாள் வழக்கம் போல என் காய்கறிகள் கடிக்கப்பட்டிருந்தன.

எனக்கு சந்தோஷம் பிடிப்பவில்லை. அப்பாடி நீ உயிருடன் தான் இருக்கிறாய்.....உன்னை நான் கொல்லவில்லை.....மகிழ்ந்தேன்...... எங்கள் உறவு தொடர்ந்தது.

நேற்று மாலை என் ஆசிரியரை மீண்டும் ரயில் நிலையத்தில் பார்த்தேன். வீட்டிற்கு அழைத்தேன். சாப்பாடு போட்டேன். நிம்மதியாக சாப்பிட்டார். காமாட்சி மேடத்தை பற்றி கேட்ட போது அழுதார். ஆசிரியர் முன் நாம் பலமுறை அழுது இருக்கிறோம். ஆனால் ஆசிரியர் நம் முன் அழும் போது, கண்டிப்பாக நம்மாள் தாங்கிக் கொள்ள முடியாது. அவருடைய கண்ணீர் துளியில் என்னுடைய 94 கிலோ எடை அனைத்தும் சுருங்கி, ஒரு சிறு புள்ளியாக மாறி அந்த கண்ணீரில் நானும் கரைந்து போனேன்.

அவரை ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தேன். வீட்டிற்கு வந்தேன், இரவு படுத்து தூங்கி விட்டேன். வேலைக்கார அம்மா வந்து பெல் அடித்தாள், கதவை திறந்தேன். அவள் வேலையை தொடங்கினாள். நான் ரிஃப்ரேஷ் ஆகிவிட்டு, பாத்ரூமில் பிரஷ் செய்துக் கொண்டிருந்தேன்.

வேலைக்காரம்மா குப்பம்மா என்னிடம் வந்து,

இனிமேல் உனக்கு நல்ல காலம் தான் போ.... என்றாள்.

வாயில் நுரையுடன் என்ன நல்ல காலம்..... என்றேன்.

என்னை கையை பிடித்து அழைத்து சென்றாள். பொந்தின் வெளியில் எலி செத்து கிடந்தது.


“த்தா எலி சனியன் செத்துடுச்சா............. சனியன், சனியன், உண்மையிலே எனக்கு நல்ல காலம் தான்........ சரி குப்பம்மா இந்த சனியனை எடுத்து வெளியே போடு” என்றபடி வாயில் நுரையுடன் பாத்ரூம் நோக்கி ஓடினேன்.

வாய் கொப்பளித்து விட்டு, வாஷ்பேசின் முன்னாடி இருக்கும் கண்ணாடியை பார்த்தேன், வெட்கமாக இருந்தது, அந்த எலிக்கு இருக்கும் சுயமரியாதை எல்லா மனிதர்களுக்கும் இல்லையே என்று தோன்றியது,........ அவமானத்துடன் முகம் கழுவினேன் கண்டிப்பாக கீழே போன தண்ணீரில் என் கண்ணீரும் கலந்திருக்கிறது என்று என்னுடைய எலி நண்பனுக்கு தெரியும்.........

நன்றி.

தாமரை
22-07-2012, 07:38 AM
கட்டா மிட்டா நட்பு என்பார்கள். இனிப்பும் புளிப்புமான ஒரு நட்பு. புரியலை இல்லையா? எளிமையாகச் சொல்லணும்னா டாம் அண்ட் ஜெர்ரி நட்பு...

எலியுடன் வாழ்வது என்பது தனிக்கலை. சேலத்தில் எங்கள் வீட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் எலிகள் உண்டு. அவர்களும் சரி நாங்களும் சரி பட்டினியாக படுத்ததில்லை. காரணம் இருக்கிறது. இது பரவாயில்லை. எங்க அம்மாவின் தாத்தா வீட்டில் பரண் மேல பாம்பே வசித்ததாம். அவங்களும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழ்ந்திருக்காங்க.

பட்டணத்துக்காரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாது என்பது பழமொழியாகவே அங்கீகரிக்கப்படும் காலம் வந்துவிட்டது. இப்ப நம்ம வீட்டில் இருப்பவங்களைப் பற்றியே நமக்கு தெரியாமல் போகிறது. எத்தியோப்பியா சோமாலியா என நம்ம பொது அறிவை தம்பட்டம் அடித்துக் கொண்டு விவரிக்கும் போது நம்ம வீட்ல நம்கூட தினம் தினம் புழங்கும் ஒரு உயிரைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறோம்?

நம்ம வீடு? பார்த்தீங்களா நம்ம ஆணவத்தை. என்னவோ பூமியை நாமதான் உருண்டை பிடிச்சு வச்ச மாதிரி ஒரு எண்ணம். நாம பிறந்த அதே மண்ணில்தான் அந்த எலியும் பிறந்திருக்கு. அதுக்கும் உரிமை இருக்கில்லையா?

பலபேர் செல்லப் பிராணி வளர்ப்பாங்க. தங்களோட சுகதுக்கங்களை அதனோட பங்கு போட்டுக்குவாங்க.. நாய், பூனை, கிளி, எலி (வெள்ளெலி), மைனா,மீன் புறா இப்படிச் செல்லப் பிராணிகள் உண்டு. தன்னுடைய வாழ்வில் பிறருக்கு இடம் கொடுப்பது என்பது மிக முக்கியமான அம்சம். அம்மாக்களுக்கு இதில் பிரச்சனை இருப்பதில்லை. பிள்ளைகள் கிடைத்ததினால் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. பலருக்கும் இப்படி யாராவது கிடைத்து விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் நம் இடத்தில் புதிதாக நுழையும் ஒருவர் மெல்ல மெல்ல நம் சிந்தனையை ஆக்ரமிப்பது போல இயற்கையான ஒரு உறவு உண்டாவது எளியதுதான்.

எனக்கு ஒரு விஷயம் இன்றைய நாள் வரை முழுத்தெளிவு கிடைக்காமலேயே இருந்தது. இன்று உன் பகிர்வு அதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது.
அதுதான் இந்தியத் திருமணவாழ்க்கை. பெற்றோர் நடத்தும் திருமணங்களில் தம்பதிகளுக்கு ஆரம்ப காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல எப்படி அவர்கள் உறவு எப்படி வலு பெறும் என்பதை உன் வீட்டு எலி மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

Ravee
22-07-2012, 10:00 AM
http://www.neilpeterson.com/wp-content/uploads/2009/02/walt-disney_mickey-mouse-drawing.jpg


தகஸ் உன் எழுத்துக்கு நான் எப்பவும் ரசிகன் . ஒரு முறை கூட என்னை ஏமாற்றியது இல்லை உன் எழுத்துக்கள் .... மனதில் உள்ளதை அப்படியே ரசனை குறையாமல் சொல்லும் உன் படைப்புக்களை விட அதில் வரும் பாத்திரங்களை சந்திக்க ஆவலை தூண்டும் . இந்த முறை ஒரு துளி கண்ணீரில் முடிந்து விட்டது .


கேலிச் சித்திர மேதை வால்ட் டிஸ்னி ... தன அங்கீகாரத்துக்காக ஹாலிவுட்டில் போராடிக்கொண்டு இருந்த காலத்தில் அவருடைய அறையை பங்கு போட்டுக்க் கொண்டது ஒரு எலி . எலி எப்போதும் அதன் செயல் என்னவோ அதை தான் செய்தது . துரு துரு வென்று இங்கும் அங்கும் ஓடி திரியும் . காலணிகளை கடித்து வைக்கும் . தின்பண்டங்களை கொறித்து வைக்கும் . உங்கள் சட்டையில் இலவசமாக ஏர்கண்டிசன் வசதிகள் செய்து வைக்கும் . இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள கண்டிப்பாக சாதாரண ஆத்மாக்களால் முடியாது . பரமாத்மாக்களால் மட்டுமே முடியும் . வால்ட் டிஸ்னியும் ஒரு பரமாத்வாக அதை ரசித்தார் . அதன் பின் தான் அவர் கற்பனையில் மிக்கி மவுஸ் பிறந்தது . சாதாரண எலி அவரை சிரஞ்சிவியாக இந்த உலகில் ஆக்கி போனது . இன்று ஒருவருக்கும் அந்த எலியை தெரியாது .... ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இதயத்தையும் அந்த எலியின் பிம்பம் தொட்டுவிட்டு போகிறது .


திருமணத்திற்கு பிறகு நிறைய விசயங்களை ரசிக்கப்பழகி கொள்கிறோம். அதை பார்க்கும் போது கொசுக்கடியை விட எலித்தொல்லை பரவாயில்லை என்றுதான் சொல்வேன் . முடிந்தால் கீழே உள்ள படத்தின் டி வி டி கிடைத்தால் பார்.


http://hindi-comedy.com/humour/wp-content/uploads/2011/12/watch-online-The-Mouse-Hunt-Hollywood-Comedy-movie-for-free.jpg

கீதம்
22-07-2012, 01:05 PM
மீண்டும் தக்ஸின் எழுத்துக்களைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின் மன்றத்தில் உன்னைப் பதிவிட வைத்த எலிக்கு முதலில் நன்றி. எலியுடனான உன் சிநேகத்தையும் பகையையும் அப்பட்டமாய் எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள். எலி, தான் இறந்த விவரம் உனக்குத் தெரியவேண்டுமென்பதற்காகவே பொந்துக்கு வெளியில் வந்து கிடந்ததோ என்று தோன்றுகிறது.

ரயிலைப் பிடிக்க ஓடும் ஓட்டத்தையும், படும் பாட்டையும், நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் அதிலிருக்கும் கஷ்டத்தை உணரமுடிகிறது. சைதாப்பேட்டை முதல் மறைமலைநகர் வரை முன்பு அடிக்கடி ரயில் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஏறுவதை விடவும் இறங்குவதற்குள் முழிபிதுங்கிவிடும்.

ஆசிரியர் மனதில் நிறைந்துவிட்டார். அவருடைய மாணவரும்தான். புதிய பணிக்கு வாழ்த்துக்கள் தக்ஸ்.

கலைவேந்தன்
22-07-2012, 04:54 PM
ரங்கராஜன்.. நான் தங்கள் கதைகளை அதிகம் வாசித்ததில்லை. ( இனிமேல் வாசிக்கவேண்டும் என்னும் வெறியே வந்துவிட்டது.)

ஓர் எலியின் அல்லல்களும் அதனால் மனிதன் படும் அல்லல்களையும் நகைச்சுவை மிளிர அழகாக வழங்கி இருக்கிறீர்கள். நகைச்சுவையாய் எழுத தனிக்கலை அவசியம். அது ஒரு வரம். அந்த வரம் தங்களுக்கு அதிகம் வாய்த்திருக்கிறது.

ஹூம்.. நம் வீடு நமதென்று நாமெண்ணி இருக்க தன் வீடு தனதென்று எலியெண்ணி இருக்க.. இருவருக்கும் இடையில் போராட்டம். அதை இத்தனை நகைச்சுவையுடன் வழங்கிய தங்கள் திறமை மெச்சத்தக்கது.

சிறப்புப்பாராட்டுகள் ரங்கராஜன்..!

மதி
23-07-2012, 04:46 AM
நீண்ட நாள் கழித்து உன் எழுத்தைப்படிக்கிறேன்.. சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை கலந்த சம்பவக்கோர்வை.. நல்ல ஒரு கொரியன் படம் பார்த்த திருப்தி.. :) வேலையெல்லாம் செட்டாச்சா???

ஜானகி
23-07-2012, 05:27 AM
அம்மாவின் வீட்டிற்குப் பெண்ணை அழைத்துவருவதற்காகத் தன் உயிரையே கொடுத்த அந்த எலிக்கு என் அஞ்சலிகள் !

கூடிய சீக்கிரம் நல்ல தோழமை [தோழிமை] கிடைக்க வாழ்த்துகிறேன் !

அமரன்
25-07-2012, 05:40 AM
கட்டா மிட்டா நட்பு என்பார்கள். இனிப்பும் புளிப்புமான ஒரு நட்பு. புரியலை இல்லையா? எளிமையாகச் சொல்லணும்னா டாம் அண்ட் ஜெர்ரி நட்பு...

எலியுடன் வாழ்வது என்பது தனிக்கலை. சேலத்தில் எங்கள் வீட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் எலிகள் உண்டு. அவர்களும் சரி நாங்களும் சரி பட்டினியாக படுத்ததில்லை. காரணம் இருக்கிறது. இது பரவாயில்லை. எங்க அம்மாவின் தாத்தா வீட்டில் பரண் மேல பாம்பே வசித்ததாம். அவங்களும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழ்ந்திருக்காங்க.

பட்டணத்துக்காரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனைத் தெரியாது என்பது பழமொழியாகவே அங்கீகரிக்கப்படும் காலம் வந்துவிட்டது. இப்ப நம்ம வீட்டில் இருப்பவங்களைப் பற்றியே நமக்கு தெரியாமல் போகிறது. எத்தியோப்பியா சோமாலியா என நம்ம பொது அறிவை தம்பட்டம் அடித்துக் கொண்டு விவரிக்கும் போது நம்ம வீட்ல நம்கூட தினம் தினம் புழங்கும் ஒரு உயிரைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டுகிறோம்?

நம்ம வீடு? பார்த்தீங்களா நம்ம ஆணவத்தை. என்னவோ பூமியை நாமதான் உருண்டை பிடிச்சு வச்ச மாதிரி ஒரு எண்ணம். நாம பிறந்த அதே மண்ணில்தான் அந்த எலியும் பிறந்திருக்கு. அதுக்கும் உரிமை இருக்கில்லையா?

பலபேர் செல்லப் பிராணி வளர்ப்பாங்க. தங்களோட சுகதுக்கங்களை அதனோட பங்கு போட்டுக்குவாங்க.. நாய், பூனை, கிளி, எலி (வெள்ளெலி), மைனா,மீன் புறா இப்படிச் செல்லப் பிராணிகள் உண்டு. தன்னுடைய வாழ்வில் பிறருக்கு இடம் கொடுப்பது என்பது மிக முக்கியமான அம்சம். அம்மாக்களுக்கு இதில் பிரச்சனை இருப்பதில்லை. பிள்ளைகள் கிடைத்ததினால் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. பலருக்கும் இப்படி யாராவது கிடைத்து விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் நம் இடத்தில் புதிதாக நுழையும் ஒருவர் மெல்ல மெல்ல நம் சிந்தனையை ஆக்ரமிப்பது போல இயற்கையான ஒரு உறவு உண்டாவது எளியதுதான்.

எனக்கு ஒரு விஷயம் இன்றைய நாள் வரை முழுத்தெளிவு கிடைக்காமலேயே இருந்தது. இன்று உன் பகிர்வு அதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது.
அதுதான் இந்தியத் திருமணவாழ்க்கை. பெற்றோர் நடத்தும் திருமணங்களில் தம்பதிகளுக்கு ஆரம்ப காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல எப்படி அவர்கள் உறவு எப்படி வலு பெறும் என்பதை உன் வீட்டு எலி மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

விபரம் ப்ளீஸ்.

மதி
25-07-2012, 06:49 AM
என்ன விவரங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அமரா??

சுகந்தப்ரீதன்
25-07-2012, 02:16 PM
எலியுடனான ஒருமனிதனின் உறவை கொஞ்சமும் சுவராஸ்யம் குறையாமல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை உணர்வுகளை அப்பட்டமாக வெளிபடுத்தி வாசகனை வசப்படுத்தும் எளிமையான இந்த எழுத்துநடை உங்களின் எழுத்தாளுமையை எடுத்தியம்புகிறது தக்ஸ்..!!

உங்களின் ஆரம்பகால எழுத்துகளை இவ்வேளை நினைக்கையில் நல்லதொரு முன்னேற்றத்தை உங்கள் எழுத்துகளின் உணரமுடிகிறது.. தொடர்ந்து நேரம் கிடைக்கையில் எழுதுங்கள் நண்பரே..!!

எலிசனியனுக்கு எமது ஆழ்ந்தவருத்தங்களும் வாழ்த்துக்களும்..!!:)

ஆதவா
25-07-2012, 03:42 PM
மாப்பி!!
கலக்கிட்ட.. சுவாரசியமா, போரடிக்காம ஒரு பெரிய கட்டுரை எழுதறது சாதாரண விஷயமல்ல... ரெயிலைப் பிடிக்கறதைப் பத்தி எழுதியிருக்கியே.... சான்ஸே இல்ல.. நீ ஒரு “ப்ரொ” !

இந்த நிகழ்வுகளில் இருந்து உனக்கான கதை, கதைப்போக்கு, அனுபவம், எழுத்தாளுமை எல்லாம் எப்படி கிடைக்கிறது என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது!!! வெல்டன் மாப்பி!

அமரன்
26-07-2012, 07:29 AM
என்ன விவரங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அமரா??
நவீனநாரதர்..

மதி
26-07-2012, 07:31 AM
இன்னுமா நாரதர்.... :frown:

Mano.G.
27-07-2012, 01:23 AM
கதையூடே சில தத்துவங்களையும் சொல்லும்
உன் திறமைக்கு சல்யூட்,

வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
29-07-2012, 07:50 AM
நன்றி உறவுகளே.......

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நம் மன்றத்தில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்து தான் என்னுடைய விளையாட்டு தனமான உணர்வுகளையும், எனக்குள் இருக்கும் சில உணர்வுகளையும் அப்படியே பதிக்கிறேன்...... அதற்கு நீங்கள் பாராட்டியது உங்களின் பெருந்தன்மையை தருகிறது....... மன்றம் என்பதாலும், என்னைப் பற்றி மன்றத்தில் தெரியும் என்பதாலும் (லூசுப்பையன் என்று ஹா ஹாஹா) அதனால் குழந்தையின் மனது வலிக்க கூடாது என்பதற்காக தாய், செட்டை செய்யும் குழந்தையை கொஞ்சுவதைப் போல நான் இதை எடுத்துக் கொள்கிறேன்......

இது தன்னடக்கத்தால் அல்ல........காரணம் அப்படி நினைத்திருந்தால் என்னுடைய படைப்பில் தன்னடக்க வாக்கியங்கள் நிறைய அமைந்திருக்கும்........ என் மன்ற முன்னோடிகள்..... அப்படி இப்போது அவர்கள் எழுதுவதில்லை......... அவர்களிடம் வந்தது தான் எல்லாம்.....(நான் தன்னடக்கத்தை பற்றி சொல்லவில்லை, எழுத்தில் திமிர் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறேன்)....எனக்கும் காலம் செல்ல செல்ல தன்னடக்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் உண்மையை நிறைவாக சொல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி வருகிறது.....அதன் வெளிப்பாடு தான் திருடன் திருடன் திருடன் என்ற சமீபத்திய திரி......... நன்றி.......