PDA

View Full Version : சூளுரை



ரௌத்திரன்
20-07-2012, 08:56 PM
("ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இதே மெத்தனப் போக்கு நீடிக்குமானால், தமிழ்நாடு மட்டுமன்று, இந்தியாவே பற்றி எரியும். உச்சகட்டமாக இந்தியாவைவிட்டுத் தமிழ்நாடு தனிநாடாகி ஏனும் தன் இனத்திற்காகத் தானே சேனையாய் எழுந்து நிற்கும்" என்று மத்திய அரசுக்கு விடுக்கும் சூளுரையாய் எழுதப்பட்டக் கவிதை)


நம்பியே வாக்க ளித்தோர்
-------நாடோடி கள்போல் நாளும்
வெம்பியே வாழ்ந்தி ருக்க
-------விசனமே சிறிது மின்றித்
தம்போக்கிற் போவ தென்று
-------தருக்கியே நடக்கும் எம்,பு
றம்போக்கு அரசே! இஃதை
-------புத்தியில் நிறுத்திக் கொள்வாய்!


ஆறாத ரணங்க ளாலே
-------அடிநெஞ்சிற் குமுறு கின்ற
மாறாத வெஞ்சி னத்தால்
-------முடிவாகக் கூறு கின்றோம்!
சேராத சேர்க்கை எல்லாம்
-------சடுதியில் விடுக்கா விட்டால்
பாராத காட்சி எல்லாம்
-------பார்க்கவே நேரும் உண்மை!


முத்தமிழ்க் குலத்தை மாய்த்து
-------மண்ணொடு புதைப்ப தென்று
பித்தமே பிடித்த லையும்
-------பாவிகள் உறவை விட்டுச்
செத்தங்கு மடியு மெங்கள்
-------சோதரர் வாழ்வைக் காக்க
எத்தரை எதிர்த்து நின்றால்
-------பிழைப்பைநீ! இல்லை என்றால்,


பற்றியே எரியும் நாடு!
-------பகலிர வென்ப தின்றி
சுற்றியே சூழும் சோகம்!
------சாம்பலாய்த் தேசம் போகும்!
நற்றமிழ் இனத்தி னுக்கு
-------நீதிதான் கிடைக்கு மட்டும்
இற்றுடல் சாயு மேனும்
-------இக்கொள்கை சாயா நிற்கும்!


அந்தவோர் நாளிற் கூட
-------அரசுநீ இறங்கா விட்டால்
இந்தியா இருதுண் டாகும்!
-------இனிதுடன் இதுந டக்கும்!
செந்தமிழ் நாடு இந்த
-------செகத்திடைத் தனிநா டாகும்!
சொந்தவி னத்தைக் காக்கச்
-------சேனையாய் எழுந்து நிற்கும்!


ஆமாம்,

மாளவே பிறந்தோ மென்று
--------மார்போடு உயிரொ டுங்கி
சாலவே தமிழர் சிந்தும்
--------கண்ணீரைத் துடைக்க விங்கு
நீளவே தயங்கும் எந்த
--------நாய்களின் கையும் நாட்டை
ஆளவே இயலா திஃதை
--------அடிநெஞ்சிற் குறித்துக் கொள்வீர்!


அலங்காரச் சொற்க ளன்று!
--------அருந்தமிழ் நாவாற் சொன்னேன்!
கலங்காத கண்க ளெல்லாம்
--------குருடாகிப் போவ தாக!
புழுங்காத நெஞ்சி ருக்கும்
-------புலையர்தம் தேக மெல்லாம்
புழுக்களுக் குணவே யாகிப்
-------பிணக்காட்டில் சரிவ தாக!


முழங்கினோம்; ஈது வெற்று
-------முனகலென் றெண்ண வேண்டாம்!
வழங்கினோம் இறுதி வாய்ப்பு
-------வாய்தாக்கள் இதிலே இல்லை!
துலங்கினோம்; அறப்போ ராட்டம்
-------துவங்கினோம்; வென்றி கொள்ள
மழுங்கிடா வாளும் உண்டு
--------மானமாம் அதன்பேர் கண்டீர்!






--------ரௌத்திரன்

சுகந்தப்ரீதன்
30-07-2012, 04:33 PM
என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.

தொடருங்கள்... தோழரே...!!:icon_b:

சிவா.ஜி
30-07-2012, 05:32 PM
ரௌத்திரம் மிகுந்த வரிகள்.....நடுவண் அரசை அசைக்குமா? நல்லதே நடக்கட்டுமென்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள் கவிஞரே.