PDA

View Full Version : முதுகு வலி ஒழிக!அமீனுதீன்
20-07-2012, 04:22 PM
மோசமான வலிகளில் முக்கியமானது முதுகு வலி. பள்ளி மாணவர்கள் முதல் ஈசி சேர் தாத்தாக்கள் வரை யாரையும் விட்டுவைக்காத வலி. ஒரே நாளில் இந்த வலி உருவாகிவிடுவது இல்லை. நம்முடைய தினசரிப் பழக்கவழக்கமே முதுகு வலியைப் படிப்படியாக உருவாக்குகிறது. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு நிலையிலாவது முதுகு வலிப் பிரச்னைக்கு ஆளாவது சகஜம். 'ஒரு மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் மட்டும் 25 சதவிகிதம் பேர்களாவது முதுகு வலி சிகிச்சைக்காக வந்திருப்பார்கள். இந்தச் சதவிகிதம் அதிரடியாக அதிகரித்துவருகிறது என்பதுதான் அதிர்ச்சி’ என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் மருத்துவர்கள்.

நம்முடைய முதுகுத் தண்டுவடம் எலும்புத் தொடர்களால் மிகவும் பாதுகாப்பான முறையில் அமைந்திருக்கிறது. இந்த எலும்புத் தொடருக்கு ஸ்பைன் (Spine என்றும், ஒவ்வொரு எலும்பு கண்ணிக்கும் வெர்ட்டிப்ரா (Vertebra) என்றும் பெயர். நம்முடைய உடலின் எடையைத் தாங்கும் வகையிலும் நிமிர்ந்து நிற்கும் வகையிலும், எலும்பு கண்ணிகள் ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு எலும்புக்கு இடையிலும் அதிர்வுகளைத் தாங்கும் பொருளாக டிஸ்க் ஒன்றும் உள்ளது. எலும்புகள் மற்றும் டிஸ்குகளுக்கு உள்ளே மிகவும் பாதுகாப்பாகத் தண்டுவடம் உள்ளது. சில சமயங்களில் இந்த டிஸ்குகளில் ஏதேனும் ஒன்று வெளியே பிதுங்கிவிடும். அப்படி வெளியே பிதுங்கும் டிஸ்க் தண்டுவடத்தின் உள்ளே இருக்கும் நரம்புகளை அழுத்தும்போது, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. உயரத்தில் இருந்து கீழே விழுவது அல்லது எடை அதிகமான பொருள் நம் மீது விழுந்துவிடுவது, அதிக எடை உள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் முதுகு வலி வருகிறது.

'நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகளே நமக்கு முதுகு வலியை வரவழைத்துவிடும்' என்றனர் அப்போலோ க்ளினிக் முதுகு மற்றும் வலி மையத்தின் வலி நீக்கவியல் நிபுணர்களான டாக்டர் கார்த்திக் பாபு நடராஜன் மற்றும் டாக்டர் ரவி கிருஷ்ணா களத்தூர். தொடர்ந்து, முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்களையும் அவர்கள் பட்டியல் இட்டனர்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgநீண்ட நேரம் அமர்ந்திருத்தல்:
நிற்பதைக் காட்டிலும் அமர்ந்திருக்கும்போது முதுகுத் தண்டுவடத்துக்கு 40 சதவிகித அழுத்தம் அதிகரிக்கிறது. நம்மில் பலர் மணிக்கணக்கில் இருக்கையில் அமர்ந்துகொண்டே இருக்கிறோம்; சரியான நிலையில் அமர்வதும் இல்லை. அவ்வப்போது எழுந்து நடப்பதையோ, சிறிய நேரம் ஓய்வு எடுப்பதையோ வேலைப் பளு காரணமாக மறந்துவிடுகிறோம். இப்படி உடல் செயல்படாமல் இருப்பதால், தசைகள் தளர்வுற்று முதுகு வலி வருகிறது. நாற்காலியில் அமரும் போது, உங்கள் பாதங்கள் தரையில் சரியாகப் படும்படி அமர வேண்டும். முதுகின் அனைத்துப் பகுதிகளும் நாற் காலியில் சாய்ந்து இருக்குமாறு நிமிர்ந்து அமர வேண்டும்; குறிப்பாக கீழ் முதுகு நன்றாகப் படும்படி அமர வேண்டும். என்னதான் அலுவலக வேலையாக இருந்தாலும்கூட அவ்வப்போது தண்ணீர் குடிக்க, சக ஊழியர்களிடம் கலந்துரையாட என்று நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgஉடல் உழைப்பு குறைவு:
போதிய உடற்பயிற்சிகள் இன்றி உடல் உழைப்புக் குறைவாக இருப்பவர்களுக்கும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், முதுகு வலிப் பிரச்னை வரும். அளவுக்கு அதிகமான தீவிர உடற்பயிற்சியில் தங்களை வருத்திக்கொள்பவர்களுக்கும் முதுகு வலி வரும். தொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மட்டுமே செய்தாலும் முதுகு வலி வரும். எடை தூக்குதல் மற்றும் முதுகை வளைத்துச் செய்யும் உடற்பயிற்சி களாலும் முதுகு வலி வரலாம். இதைத் தவிர்க்க நடைப்பயிற்சி, நீச்சல், ஏரோபிக்ஸ் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம். யோகாவில் சொல்லித்தரப்படும் சில பயிற்சிகள் முதுகு மற்றும் தசைகளை வலிமைப்படுத்தும். அதேபோல, தினசரி 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொண்டால், முதுகுத் தசைகள் பலப்படுவதுடன், முதுகின் வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgஹை ஹீல்ஸ் அணியாதீர்கள்:
குதிகாலை உயர்த்தும்படியான ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம். ஏனெனில், உங்கள் முன்னங்கால் பகுதி அழுத்தப்படும்போது, அது முதுகையும் பாதிக்கும். ஹை ஹீல்ஸ் உங்கள் முதுகை வளைக்கச் செய்து முதுகுத் தசையைக் கடினமாக்குகிறது. ஓர் அங்குலத்துக்கும் குறைவான ஹீல்ஸ் அணிவதில் தவறு இல்லை. உங்கள் காலணி உங்கள் பாதத்துக்கு ஏற்றதாக இல்லாமல், நடக்கும்போது பாதம் வெளியே வருகிறது என்றால், அத்தகைய காலணிகளைத் தவிர்த்துவிடுங்கள்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgநீண்ட பயணம்:
பேருந்து உள்ளிட்ட வாகனங்க ளில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் போது அவ்வப் போது எழுந்து நடக்க வேண்டும். சொகுசான இரு சக்கர வாகனப் பயணத்துக்குப் பிறகு முதுகில் வலி ஏற்பட்டால், நீங்கள் தவறான இரு சக்கர வாகனத்தைப் பயன் படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். மோட்டார் சைக்கிளில் ஷாக் அப்சார்பர் நல்ல நிலையில் இல்லை என்றாலும், மோசமான சாலைகளில் பயணிப்பதினாலும், முதுகு வலியை நாமே வரவழைத்துக்கொள்கிறோம்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgசைக்கிள் ஓட்டுதல்:
சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி என்று பலரும் நினைக்கின்ற னர். ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி பொருந்தாது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, சைக்கிள் பயிற்சி உங்களுக்கு ஏற்றதுதானா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgபுகை பழக்கம்:
புகை பிடிப்பதால், தசைகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் போய்விடுகிறது. முதுகுத் தண்டுவட பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைவதால், டிஸ்க் பாதிக்கப்பட்டு முதுகு வலி ஏற்படுகிறது. எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgவீட்டிலும் வசதியாய்:
அதி மென்மையான படுக்கை, உயரமான தலையணை, ஒழுங்கற்ற முறைகளில் படுப்பது போன்றவையும் முதுகு வலியை வரவழைக்கும் காரணிகள். முதுகெலும்புத் தொடரை வளைப்பது போன்ற நிலையில் தூங்க வேண்டாம். உறுதியான சமதளத்தில் தூங்கிப் பழக வேண்டும். எடை அதிக மான பொருட்களைத் தூக்கும்போது முதுகை வளைத்துத் தூக்காமல், முதுகு நிமிர்ந்த நிலையிலேயே தரையில் குதிகால் இட்டு அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே தூக்கிப் பழகுங்கள்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgஅதிக எடை உள்ள பை:
கைகளில் எடுத்துச்செல்லும் பைகூட உங்களுக்கு முதுகு வலியை ஏற்படுத்து வதாக இருக்கலாம். அதிகப்படியான எடை கொண்ட கைப்பையைத் தோளில் மாட்டி எடுத்துச்செல்லும் போது அது கூடுதல் அழுத்தத்தை முதுகுத் தண்டுக்கு அளிக்கிறது. மேலும், பையை மாட்டும்போது சமன்பாட்டைச் சரிசெய்துகொள்ளும் விதமாகத் தோள்பட்டை உயரும். எனவே, இரண்டு பைகளில் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். கைப்பைகளைத் தோள்பட்டையின் ஒரே பக்கமாக மாட்டிச் செல்லாமல், அவ்வப்போது இடது, வலது என மாற்றிக்கொள்ளுங்கள்.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgஇதர முதுகுவலிக் காரணிகள்:
இவை தவிர வயது அதிகரித்தல், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங் களாலும் முதுகு வலி ஏற்படுகின்றது. நம்முடைய முதுகு எலும்பும் இடுப்பு எலும்பும் சந்திக்கும் பகுதியில் நம்முடைய உடலின் மிகப் பெரிய மூட்டுகளுள் ஒன்றான சேக்ரோஇலியாக் மூட்டு (Sacroiliac Joint) உள்ளது. இது நம் உடல் எடையைக் காலுக்குக் கடத்துகிறது. இந்த மூட்டில் வீக்கம் அல்லது வேறு பிரச்னைகள் ஏற்படும்போது, முதுகு வலி வரவும் காரணமாகிவிடுகிறது. வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்கு உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் வலி குறைக்கும் மருந்துகள் உள்ளன.

http://www.vikatan.com/doctor/2012/08/zmqmfj/images/plus(1).jpgநோய் கண்டறிதல் - சிகிச்சை:
முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதை எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சை, ஓய்வு போன்றவற்றின் மூலம் முதுகு வலியைச் சரிப்படுத்திவிடலாம். இரண்டாவது நிலையில் உள்ளவர்களுக்கு வலியைக் குறைக்கும் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த ஊசிகள் எக்ஸ் ரே மூலம் கண்காணிக்கப்பட்டுச் செலுத்தப்படும். இப்படித் துல்லியமான இடத்தில் ஊசி செலுத்தப்படுவதால், வலியும் இருக்காது. டிஸ்க் அதிக அளவில் பாதிக்கப்பட்டால், அதைச் சரிசெய்ய அறுவைசிகிச்சைகளும் உள்ளன.

முதுகு வலி வருவதை நம்மால் தவிர்க்க முடியும். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் பெரிய பாதிப்புகளைத் தடுக்கலாம். டேக் கேர்!

நன்றி: www.vikatan.com

jayanth
21-07-2012, 04:19 AM
பகிர்விற்கு நன்றி நண்பரே...

ஜான்
21-07-2012, 04:56 AM
நன்றி அமீனுதீன் ...

சில தகவல்கள் இருக்கின்றன இன்னும்