PDA

View Full Version : மோகத்தின் முற்றுகையில்....



ரௌத்திரன்
17-07-2012, 10:02 PM
கணவன்:-

கண்ணே வா!

ஐந்தடிக் கோப்பையில் ஊற்றப்பட்ட
அமிர்தமே!
அருகில் வா!

நமக்கிடையில் எதற்கு
நான்கடி தூரம்?

தெரியும்.
இதை நீ
உன்
நாணத்தின்
நீளம் என்பாய்!

எனக்கோ
நரகத்தின்
நீளமடி...

வா!
அருகில் வா!

இன்று
"முதல் இரவு"

பூமிக்கல்ல.
பூமகளே நமக்கு!

அருகில் வா!


முத்தத்தின்
முகவரியை அறியாத
என் உதடுகள்
அதை உன் மூலமாகவே
அறியத் துடிக்கின்றன...


வா!
அருகில் வா!

இது என்ன?
நெருப்புக்கும் வேர்க்குமா?
வேர்க்கிறதே!

தீயின் துண்டுகளாய்த்
தகிக்கும் நம் உடல்களுக்கு
வேர்க்கிறதே!

வா!
அருகில் வா!

கண்ணுக்கும்
கருமணிக்கும் இடைவெளி ஏது?

வா!

வாளுக்கும்
வீரத்திற்கும்
இடைவெளி
இருக்கலாமா?

வா!

உன் சூரியன் நான்.
என் தாமரை நீ!

சூரியனைக் கண்டு
தாமரை
தண்ணீரில் ஒளிவது
தகாது பெண்ணே!

வா!

இந்த
இரவை
உன்
வெட்கச் சிவப்பிலேயே
விடியவைத்துவிடாதே!

வா!

புடைக்கும் நரம்புகளெல்லாம்
பூப்பூக்கும் கொடிகளாகட்டும் !

வா....வா......



மனைவி:-


ம்...

பொறுங்கள்!

கடலும்
காமமும் ஒன்று.

அங்கே
துடுப்பு மட்டும் போதாது
படகும் வேண்டும்

இங்கே
துடிப்பு மட்டும் போதாது
நிதானமும் வேண்டும்!

சாலையிலும்
சரசத்திலும்
அவசரம்
ஆகாது....

சந்தேகமே இல்லை

"தவத்தின்" நீளம் பொறுத்தே
வரத்தின்
வலிமை இருக்கிறது!


படிக்காத
பாடத்திற்கு
பரீட்சை வைக்கும்
பொல்லாத "பள்ளிக்"கூடம் இதுதான்!


இருவரும் விரும்பிப் பொருதி
இருவரும் தோற்று
இறுதியில்
ஒருவரிடம்
ஒருவர் சரணடையும்
வித்தியாசப் போர் இதுதான்!

ஆ...........!

அப்படிப் பார்க்காதீர்கள்!

புரிகிறது...புரிகிறது...

ஆண்புத்தி எப்போதுமே
விபரீத புத்தி.

சந்தேகமே வேண்டாம்

நீங்கள் உரைத்ததுபோல்
இது
"முதல் இரவுதான்" நமக்கு!



புரவலனிடம்
பொருள்யாசிக்க வந்த
புலவன் நான்.

இவ்வளவு வேண்டுமென்று
கட்டளை இடமுடியாது!

அதிகம் கிடைத்தால்
ஆனந்தமே...

இப்போது வாருங்கள்!

ஓ!
கொஞ்சம் இருங்கள்!

கொலுசைக்
கழற்றிவிடுகிறேன்

"சூரியன் உறக்கம்
கலைந்துவிடப் போகிறது......."



------------ரௌத்திரன்

கலைவேந்தன்
18-07-2012, 05:15 AM
காதல் வழியும் இந்த முதல் இரவுக்கவிதையில் தங்களின் கவித்திறமை அழகாகப் பளிச்சிடுகிறது.


படிக்காத
பாடத்திற்கு
பரீட்சை வைக்கும்
பொல்லாத "பள்ளிக்"கூடம் இதுதான்!

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

பாராட்டுகள் ரௌத்திரன்.