PDA

View Full Version : நாகேஷ்!



ரௌத்திரன்
17-07-2012, 09:52 PM
தொகைசுவை மொத்தம் ஆறா?
====இலையென்பேன்; ஆமாம் நாவில்
சுகம்தரும் சுவைக ளோடு
====சித்தத்தை இனிக்கச் செய்யும்
நகைச்சுவை சேர்த்து ஏழு!
====அச்சுவை இன்றேல் யாவும்
பகைசுவை ஆகும்; அஃதைப்
====படைத்தவன் பெயரே நாகேஷ்!


நடிப்பென்ற சொல்லுக் கெந்த
====நாளுமே ஒருவன் தான்!ஆம்
அடுத்தெவன் உள்ளா னென்று
====அவனியே ஆர்ப்ப ரிக்க
எடுத்ததோர் முடிவு தப்பு!
====என்திறம் பார்ப்பீர் என்று
துடிப்புடன் எழுந்து வந்த
====தூயவன் பெயரே நாகேஷ்!


தன்முகம் அழகில்! என்று
====தனைத்தானே வெறுத்த வன்தான்!
மண்முகம் படைத்த வேதன்
====மாண்புறத் தனக்குள் வைத்த
பன்முகம் அறிந்த பின்னர்
====பழந்துயர் பொசுக்கிப் போட்டு
பொன்முகம் காட்டி நின்றான்
====பெரும்புகழ் கூட்டி நின்றான்!



சிரிப்பெனும் செல்வம் தந்தான்
====சிந்திக்கும் திறனும் தந்தான்!
இறப்பென்ற சொல்லுக் குள்ளே
====இறுதியில் வீழ்ந்தால் கூட
சரித்திர மாக என்றும்
====சாகாமல் வாழு கின்ற
பெரும்பெற்றி மானி டர்க்கே
====பெரியவன் இறைவன் தந்தான்!


பிறப்புக்கு அர்த்தம் உண்டு!
====புரிந்தவர் வாழ்வ துண்டு!
இறப்புக்கும் பெருமை உண்டு!
====சாட்சியம் பலபேர் உண்டு!
மரத்திற்கும் கோடை யோடு
====வசந்தத்தை வைத்த தேவன்
தரப்புக்கோர் வரத்தை வாழ்வில்
====மனிதர்க்கும் தருவ துண்டு!


அகத்திலே துணிச்சல் வைத்து
====அச்சத்தை தூரம் வைத்தால்
வகுத்திடும் பாதை யாவும்
====வளமான வாழ்வை நல்கும்!
தகுந்ததோர் எடுத்துக் காட்டு
====தாரணி திசைகள் எட்டும்
திகைப்புறச் செய்து நின்ற
====திண்ணியன் நாகேஷ் என்பேன்!


தன்விதி எண்ணி யெண்ணி
====தனக்குளே குமைந்தி ருக்கும்
மண்வழி வாழும் மாந்தர்
====மனத்துயர் மறக்க வேண்டி
நன்வழி தேர்ந்தெ டுத்தான்!
====நானிலச் சிரிப்பில் என்றும்
தன்விழி சிந்தும் நீரை
====தான்துடைத் திடம றந்தான்!


பாத்திரம் எதுவா னாலும்
====பொலிவினைக் கூட்டு கின்ற
சூத்திரம் அறிந்தோன்; ஆனால்
====சூழ்ச்சிகள் அறியோன்; என்றும்
நாத்திறம் தேவை யில்லை
====நடிப்பினை நாட்டு தற்கு!
நேத்திரம் அசைந்தால் போதும்
====நவரசம் அதிலே மோதும்!


அன்னவன் மறைந்தா னேனும்
====அவனியைத் துறந்தா னேனும்
விண்ணவன் புக்கா னேனும்
====வியத்தகு கலைஞன் எங்கள்
கண்ணகம் வாழு கின்றான்!
====கனித்தமிழ் நாட்டோர் தம்மின்
புன்னகை யில்வாழ் கின்றான்
====பொய்யிலை உண்மை ஆமாம்!


திரைகடல் உள்ள மட்டும்
====தீநிலம் உள்ள மட்டும்
வரையிலா வானம் இங்கு
====வாழுமோர் காலம் மட்டும்
பிறைநிலா தேய்ந்து மீண்டும்
====பிறக்காமல் போகு மட்டும்
"திரைகடல்" வேந்தன் எங்கள்
====தென்னவன் நாகேஷ் வாழ்வான்!




------------ரௌத்திரன்