PDA

View Full Version : தூங்காத துயரம்!



ரௌத்திரன்
17-07-2012, 01:17 AM
மொட்டு விழியிரண்டால்-சிறு
மோகனப் புன்னகையால்
பட்டுத் தமிழெடுத்து-எனைப்
பாடச் சொன்னவளே!

ஆயிரம் கற்பனைக்கு-நெஞ்சின்
ஆழத்தில் குடியிருந்து
பாயிரம் எழுதிவந்த-என்றன்
பருவத்துப் பைங்கிளியே!


வட்ட வெண்ணிலவு-புவியை
வெளிச்ச விரல்களினால்
நட்ட நடுநிசியில்-தீண்டி
நேசம் பேசுகையில்,

தங்கச் சிலையுனக்காய்-கொடுந்
தனிமை பொறுத்திருந்தேன்
வங்கக் கடல்போலே-இன்றென்
விழிகள் பொங்குதடி!


தங்கம்போல் நீவந்தாய்-சுடும்
தீயாய் நானிருந்தேன்
தங்கம்நீ சுட்டதனால்-அடி
தீநான் உருகுகிறேன்!

கானல் கடல்சேர-ஒரு
கங்கை அலைந்ததுபோல்
நானும் நடந்தேனா?-அடி
நிஜமும் அதுதானா?


ஏட்டைச் சேராத-ஓர்
ஏக்கக் கதைபோல
கூட்டைக் கறையானாய்-அடி
காதல் அரிக்கிறதே!

இரவில் நள்ளிரவில்-உன்
இளமை நினைவுவர
விரகக் கனவுகளில்-என்
விழிகள் வேகிறதே!


இணையில்லா காவியமாய்-உன்னை
இதயத்தில் வடித்ததற்கா
துணையில்லா வாழ்க்கைக்குள்-என்னைத்
துப்பிவிட்டுப் போகின்றாய்?

ஒப்பில்லா அழகென்று-உன்னை
ஓயாமல் உரைத்ததற்கா
தப்பாமல் பாழ்நரகில்-என்னைத்
தள்ளிவிட்டுப் போகின்றாய்?


மூடிக் கிடப்பதனால்-மொட்டு
மலர மறுப்பதனால்
ஏடி வாசம்தான்-உள்ளே
உறங்கிக் கிடந்திடுமா?

நெஞ்சை மறைப்பதனால்-உன்
நிழலை மறைப்பதனால்
கொஞ்சும் பார்வையினால்-எழுதிய
காதல் மறைந்திடுமா?


கீத மொழியிலையே-என்
கவலை மறந்திருக்க!
பாதக் கொலுசிலையே-எங்கு
பாரம் இறக்கிவைக்க?

ஏக்கம் உள்ளவரை-கவியால்
ஏட்டை நிரப்பிடுவேன்
யாக்கை உள்ளவரை-காதல்
யாகம் நடத்திடுவேன்!




-----------ரெளத்திரன்

கீதம்
24-07-2012, 12:57 PM
பட்டுத் தமிழால் நெய்த காதல் கவிதை மனதை வசீகரிக்கிறது. பாராட்டுகள்.

கலைவேந்தன்
24-07-2012, 01:10 PM
அழகுத்தமிழ்ச்சந்தங்கள் நிறைந்த அருமையான பாடல். பாராட்டுகள் ரௌத்திரன்.

சுகந்தப்ரீதன்
25-07-2012, 03:38 PM
சோகத்தைக்கூட சுகமானதாக்கும் வசீகரம் கவிதை வரிகளில்..!!

ரௌத்திரரை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா...?!:)