PDA

View Full Version : கற்பின் கண்ணீர்!



ரௌத்திரன்
16-07-2012, 06:37 AM
(வரதட்சணைக் கொடுமையால் தாய்வீட்டிற்கு
அடித்துத் துரத்தப் படுகிறாள் ஒரு தமிழச்சி. ஆனால் அவளோ மற்ற பெண்களைப் போல, விரட்டப் பட்டதற்காய் விழிகசக்கி விசும்பிக் கொண்டிராமல் தன் தாயையும் இந்த சமூகத்தையும் பார்த்து ஆவேசமாக வீர உரை ஆற்றுகிறாள்.
இதோ அவள் குரல்..)


தாயே!

வயதுக்கு
வந்த நாளிருந்து
எத்தனைக் கட்டுப்பாடுகள்
எனக்குரைத்தாய் நீ?

நற்பெண்ணுக்கு இலக்கணம்
நிலம் பார்த்து நடத்தல்...

மறந்தும் கூட
எந்த ஆடவனையும்
ஏறெடுத்துப் பார்க்கலாகாது.

அது
கற்புக்குக் களங்கம்...

சப்தமிட்டுச்
சிரித்தலாகாது.

சிந்திவிடக் கூடும்
கற்பு...

இன்று
நடந்தது என்ன?

கற்புக்கு மரியாதை
காவியத்தில் மட்டும்தானம்மா...




இவர்களைப் பொறுத்தவரை
எச்சில் சோறாய் இருந்தாலும்
பரவாயில்லை

ஆனால்,

பறிமாறப் படுவது
தங்கத்தட்டாய் இருக்க வேண்டும்!


இலையில்
இடுவது
தெய்வத்தின் பிரசாதமாயினும்
இவர்கள் வயிறு
செரிப்பதற்குச்
சம்மதிக்காது...

இன்று
கல்யாணப் பெண்களும்
காசோலைகளும் ஒன்று.

பணம் இருந்தால் ஆச்சு.

இல்லையேல்
இந்த மாப்பிள்ளை வங்கிகள்
அவற்றை
அனுப்பியவனிடமே
திருப்பியனுப்பிவிடும்...

திருமணத்தை
தெய்வீகச் சடங்கென்று சொல்பவரைத்
தண்டிப்பதற்கென்றே
புதிய சட்டம்
பிறப்பிக்கப் படவேண்டும்!

அந்த
தெய்வீகச் சடங்கு
இன்று
விபச்சாரத்தைக் காட்டிலும் தாழ்ந்துவிட்டது.




பின்னென்ன?

ஒன்று கேட்கிறேன்.

எங்கானும் நீ
எந்த விலைமகளாவது
பணத்தைக் கொடுத்துப்
படுக்கை விரித்துப்
பார்த்ததுண்டா?

சீர்வரிசை என்ற பெயரில்
இந்தச் சீமான்கள்
என்னென்ன கேட்கிறார்கள்?

"ஹோண்டா" இல்லையென்றால்
எங்கள் வாழ்க்கை ஓடாதாம்.

நல்ல வேளை
அந்த ஹோண்டாக்கள் இன்னும்
பெட்ரோலில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன

இல்லையேல்,

அந்தோ!
தினமும் நாங்கள்
இன்னும்
இரண்டு லிட்டர்
அதிகம்
அழவேண்டியிருக்கும்....

கற்புக்கு மரியாதை
காவியத்தில் மட்டும்தானம்மா....!

ஆண்களாம்
ஆணகள்!

பத்து பெண்கள் ஒன்றுசேர்ந்தாற்போல்
நிராகரித்தால் போதும்

இவர்கள் ஆண்மையில்
இவர்களுக்கே சந்தேகம் தட்டும்!



இவர்கள் படுக்கையின் மீது
இன்னொரு படுக்கையாய்க் கிடப்பதற்குத்தானா
பெண்கள் பிறந்தோம்?

போதும் தாய்மார்காள்!
போதும்!

இதுவரை
உங்கள் பெண்களுக்கு
"தலைகுனிந்து வாழக்"
கற்றுக்கொடுத்தது போதும்

இனியேனும்
"தலைநிமிர்ந்து வாழக்"
கற்றுக்கொடுங்கள்...



------------ரெளத்திரன்