PDA

View Full Version : முயன்று பாரீர்!



ரௌத்திரன்
16-07-2012, 07:20 AM
நாளை யென்பது இல்லை-சிறு
====நன்மை யென்பது
====முற்றிலு மில்லை!
கோழை யெனக்கி டப்பார்-தமக்குக்
====கேடன்றி வாழ்வில்
====வேறெது மில்லை!


கண்ணீர் சிந்து தற்கோ-இரு
====கண்களைக் கொண்டு
====பிறந்துநாம் வந்தோம்?
மண்ணிலும் விண்ணிலும் ஆடி-மிக்கச்
====சந்தோஷங் கொண்டு
====வாழ்ந்திட வந்தோம்!


விதிமிக வலியுடைத் தாகும்-அஃதை
====வெல்லல் கடிதென
====உரைத்தவர் மூடர்!
விதியினை மாய்த்திடச் செய்யும்-ஒரு
====வெற்றி மந்திரம்
====முயற்சியாம் காணீர்!

எண்ணிய யாவுங் கிட்டும்-என்றும்
====அயர்ச்சி யுறாதொரு
====முயற்சி மேற்கொண்டால்!
பின்னொரு துன்பிங் கில்லை-என்றும்
====பேரா நித்தியப்
====பேரின்ப மொன்றே!


மலையொடு காடுகள் கடக்கும்-நதியே
====முடிவிற் கடலினிற்
====சேர்ந்திடு மன்றோ?
நிலையாய் ஓரிடந் தன்னில்-தேங்கும்
====குட்டை கடல்சேரக்
====கண்டவ ருண்டோ?



அதிர்வுகள் தாங்கிட வில்லை-எனில்
====காற்றுக் கேதிங்கு
====கானங்கள் சொல்லீர்!
வதியுமா மரங்களோர் கோடி-மலர்
====மகுடங்கள் தரிப்பது
====பாறைகள்கடக் கும்வேர்களாலே!


எந்தக் கல்லும் இம்மண்ணில்-ஒற்றைச்
====செதுக்கலில் அழகிய
====சிற்பமாய் விடாது!
எந்தச் செயலிலும் வெற்றி-இங்கு
====ஒற்றை முயற்சியிற்
====கிடைத்து விடாது!


தோல்விகள் தாங்கிட வேண்டும்-ஆயின்
====துவண்டு வீழ்ந்திடக்
====கூடா தென்றும்!
தோல்விகள் தோலெனச் சொன்னேன்-உள்ளே
====வெற்றியெனுங் கனியுண்டு
====சுவைத்து மகிழ்வீர்!



சோற்றினுக் கிலாதபல பேர்கள்-இந்த
====செகத்தினை ஆண்டது
====முயற்சியி னாலே!
சாற்றிடுங் கதைக ளன்று-சாகா
====சரித்திரமா வீர்நீரும்
====சற்று முயன்றுபாரீர்!





---------------ரெளத்திரன்

ஜானகி
16-07-2012, 07:35 AM
பயமறியா இளங்கன்றின் ஆசை பலிக்கட்டும்.... முயற்சியெனும் ஆடை உடுத்திய புதிய தலைமுறை உருவாகட்டும்...!