PDA

View Full Version : ----சே----குவேரா----



ரௌத்திரன்
15-07-2012, 10:39 PM
எப்போது எவ்வி டத்தில்
-------அநியாயம் நிகழ்ந்த போதும்
அப்போது அவ்வி டத்தில்
-------அதர்மத்தின் தலையைக் கொய்யத்
தப்பாமல் வருவேன் என்றான்
-------கீதையில் கண்ணன்; ஆமாம்
அப்படி வந்தோன் பேரே
-------எர்னஸ்டோ சே-கு வேரா!

கால்பட்ட இடங்கள் தோறும்
-------காலனி நாடு கண்டு
வேல்பட்ட தாக நெஞ்சில்
-------வேதனை பட்ட தேவன்
சீழ்பட்ட வாழ்க்கைக் குள்ளே
-------சிறைபட்ட மக்கள் தம்மின்
மேல்பட்ட அடிமைச் சாயம்
--------மாற்றிட வழியோ சித்தான்!

மருட்சியில் வீழ்ந்து வீழ்ந்து
-------மனங்கொதித் திருந்த தீரர்
திரட்சியில் ஈடு பட்டான்
-------தீமைக்கு நாள்கு றித்தான்!
புரட்சியாம் சொல்லுக் கான
-------பொருளினைப் புகட்டி நின்றான்
மிரட்சியில் வீழ்ந்தார் நாளும்
-------மீண்டிலர் பகைவர் யாரும்!

நடுதலை மீதில் அந்த
--------நாயகன் எழுதி வைத்த
கொடுதலை விதியிஃ தென்று
--------கருதிய மக்க ளுக்கு
விடுதலை நாட்டி நின்றான்
--------விமோசனம் காட்டி நின்றான்
கெடுதலை நீக்கி நின்றான்
--------கண்ணீரைப் போக்கி நின்றான்!


புதுமைகள் புலர்ந்த தங்கே
-------புன்னகை மலர்ந்த தங்கே!
நதியதன் வெள்ளம் ஒத்த
-------நன்மைகள் நிகழ்ந்த தங்கே!
பதியென அமர்ந்தார் "கேஸ்ட்ரோ"
-------பல்துறை ஆளு கின்ற
பதவிகள் குவேரா வுக்குப்
-------பாங்குடன் பகிர்ந்த ளித்தார்!

வெடித்ததோர் புரட்சி யாலே
--------வெளுத்தது அடிமைக் கங்குல்!
எடுத்தனர் மக்கள் யாரும்
--------நாடெலாம் விழவுக் கோலம்!
துடித்தது ஒற்றை உள்ளம்
--------தூயவன் குவேரா உள்ளம்!
விடுத்தனன் ஓலை யொன்று
--------விடைகொடு தோழா என்று!

அடிமைகள் இல்லா தாக
--------அகிலத்தை ஆக்க வேண்டும்
கொடுமைகள் நேரா தாக
---------குவலயம் காக்க வேண்டும்!
அடுத்ததென் இலக்கு இஃதே
---------அதற்காக விரைகின் றேன்யான்!
தடுத்திட வேண்டாம்; என்னைத்
---------தேடிட வேண்டாம் என்றான்

எண்டிசை வாழ வேண்டி
--------எழுச்சியைக் காண வேண்டி
கொண்டதோர் கோலம் மாற்றிக்
---------கொள்கையை மாற்றா வேந்தன்
கொண்டாடும் மக்கள் விட்டுக்
--------கொடுங்கோலர் ஆட்சி யாலே
திண்டாடும் மக்கள் வாழும்
---------தேசங்கள் நோக்கிச் சென்றான்!

பொலிவியா நாட்டைக் காக்கப்
--------போர்முனை சென்ற வீரன்
தழுவினான் மரணம்; ஆமாம்
--------தேவடி யாளின் மக்கள்
அலிகளாம் அமெரிக் கர்கள்
--------அன்னவன் உடம்பி ருந்து
வழிந்தசெங் குருதி யாலே
---------அஞ்சனம் தீட்டிக் கொண்டார்!

தனையீன்ற நாட்டுக் காக
-------தன்னுயிர் தந்தா ரையே
இணையற்ற தியாகி யென்று
--------இயம்பிடில், பாரி லுள்ள
அனைவரும் வாழ வேண்டி
--------ஆருயிர் தந்த செல்வன்
தனையிங்கு புகழ்வ தற்கு
--------தகுந்ததோர் வார்த்தை யுண்டோ?

புகழினைப் பெறுவ தற்காய்ப்
--------புரட்சிகள் செய்தி ருந்தால்
சரித்திரம் தன்னின் சட்டைப்
--------பையாகிப் போயி ருப்பான்!
புரட்சிகள் செய்து நல்ல
--------புகழினைப் பெற்ற தாலே
சரித்திரம் இன்று அன்னான்
--------சட்டைப்பை ஆகிற் றென்பேன்!





---------ரௌத்திரன்

கீதம்
17-07-2012, 07:35 AM
சரித்திரத்தை சட்டைப்பைக்குள் அடக்கிவிட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கையை இனிய தமிழ்ப்பாவாய் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

வாசிக்கும் வார்த்தைகளில் தெறிக்கிறது புரட்சியின் எழுச்சி. பாராட்டுகள் ரௌத்திரன்.