PDA

View Full Version : ஆச வச்ச பாவத்துக்கு.......



ரௌத்திரன்
15-07-2012, 10:33 PM
"ராசாத்தி உன்தேகம்
வேர்த்தாலே கண்ணீர்வரும்"-காதில்
பூசுத்தும் வார்த்தையின்னு
புரியாம போயிருச்சே!

ஒடம்பு வேர்த்தாலே
ஒடஞ்சியழும் மச்சானா
கொடமாக நானழுதும்
காணாம இருக்கீங்க?

அப்பன் ஒருபக்கம்
ஆத்தா மறுபக்கம்
மாப்பிள்ளை பாக்குறாங்க
மனசு பதறுதல்லோ?

கொடுக்கு மொளச்சிருச்சோ?
கொள்ளவெஷம் வந்துருச்சோ?
வெடுக்குன்னு தென்றலும்தான்
வீசுறத என்னசொல்ல?

மாமன் வெரல்தொட்டு
மயங்காத இடமெல்லாம்
மயானம் போனாலும்
வேகத்தான் வழியிருக்கா?


முந்திச் சேலையத்தான்
முறைமாமன் நீவெலக்கி
அந்திபகல் நான்மறக்க
அணைச்சிருக்கக் கூடாதா?

வேரோட நீர்போல
வெலகாம என்மாமன்
மாரோட சாஞ்சுபுட்டா
மயக்கந்தான் தீராதா?

முத்து வடம்பட்டு
முழுமார்பு புண்ணாச்சே
கொத்தோட நீபுடிச்சா
காயந்தான் ஆறாதா?


தனிமையில நானழுக
தலையணையும் சேர்ந்தழுக
இனிமேலும் தாமதிச்சா
இழவுவந்து சேராதா?


வெரசமாகப் பேசவில்ல
வெட்கம்கெட்டும் போகவில்ல
சரசமாட வேணுமின்னு
சிறுக்கி நானும் அலையவில்ல

பாசம் வச்ச பாவத்துக்கு
புலம்பித்தான் வச்சிருக்கேன்
ஆச வச்ச பாவத்துக்கு
அழுதுதான் வச்சிருக்கேன்!




----------ரெளத்திரன்

கீதம்
16-07-2012, 12:08 AM
ராசாத்தியின் ஆசையெல்லாம் அறியாதவனா அவள் மாமன்?

பாசத்தின் வெளிப்பாட்டை, பதறித் தவிக்கும் அவள் தவிப்பை,

ரகசியமாய் ரசிக்கிறான், அவளறியாமல் நகைக்கிறான்.

அன்று அமுதவாய் திறந்து காதல் சொல்ல வெட்கியவள்,

இன்று கண்ணீரும் கதறலுமாய் தாபம் சொல்லித் தவிக்கிறாள்.

போதுமிது என்று சொல்லி பாசாங்கு உடைத்திடுவான்.

என் வாழ்வே நீயென்று ஆனந்தமாய் அள்ளி அணைத்திடுவான். :)