PDA

View Full Version : சொரணையிலையோ தமிழர்காள்?



ரௌத்திரன்
15-07-2012, 01:50 PM
பண்டை பெருமை யாவையுமே-கட்டிப்
பரண்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத்
தொண்டை கிழியக் கத்துகிறீர்-உம்மால்
துலங்கும் நண்மை ஏதுமிலை!
அண்டை நாட்டில் அனுதினமும்-நம்
அருமைச் சோதர் துடிக்கின்றார்!
கண்ட தல்லால் என்செய்தீர்?-தமிழ்க்
குலமென் றெங்கும் சொல்லாதீர்!

"வீர மற்றப் பேடிகளே-என்றும்
வெட்டிப் பேச்சில் வல்லவர்கள்!
சார மென்று ஏதுண்டு?-வெறும்
சக்கை தமிழர் கதைகள்காண்!
சீறும் புலிகள் என்றவர்யார்?-புன்மைச்
சிறுவ ளைவாழ் எலிகள்"எனக்
காறித் துப்பும் சரித்திரமே-இஃதை
கண்மும் நினைக்க மறந்தீரே!

திலகம் இழந்த மாதர்களும்-தங்கள்
தாயை இழந்த மதலைகளும்
அலறும் குரல்கள் கேட்டிலிரோ?-அறிவு
ஐந்தாய்க் குறைந்து போனீரோ?
உலகம் முழுதும் இக்கொடுமை-தனையே
உள்ளம் நடுங்கப் பேசுகையில்
கலகம் என்ன நடந்ததென-நீரோ
கேளாக் குறையாய் இருக்கின்றீர்!

கூச விலையோ நும்தேகம்?-சற்றும்
குமைய விலையோ நும்நெஞ்சு?
பேசு வதற்கு ஒன்றுமிலை-இன்னும்
பேசு வதிலோர் பயனுமிலை!
பூசி மெழுகப் பார்க்காதீர்-நிஜத்தைப்
பூட்டி மறைக்க எண்ணாதீர்!
மீசை யன்றி மற்றேதும்-நும்
ஆண்மைக் குண்டோ சாட்சிசொல்லீர்!


இழுக்குக் கென்றே பிறந்தீரோ?-வெற்று
இன்ன லுக்கே வாழ்வீரோ?
கலக்கத் திற்கே பிறந்தீரோ?-இழவுக்
கண்ணீர் சிந்தப் பிறந்தீரோ?
வழக்கு இனியும் செய்வீரோ?-நம்
சுற்றம் அழிக்கத் துடிப்போர்க்குச்
சுளுக்கு எடுக்க வேண்டாமோ?-தமிழர்காள்!
சொரணை யிலையோ பொங்கிடுவீர்!





---------------ரெளத்திரன்