PDA

View Full Version : செத்துவிடவா....?



ரௌத்திரன்
14-07-2012, 11:55 PM
பொன்னே திருமகளே
பூவின் தலைமகளே!
என்னைப் பிரிந்தனையே
புகல்வாய் முறையோடீ?


அழகென்ற சொல்லுக்கு
அடித்தள மாய்நின்று
வளங்காட்டி வதைக்கின்ற
வடிவழகு எங்கேடீ?


மத்தாக இரவுபகல்
மனமெனுங் கடல்கடைந்து
பித்தாகச் செய்துவைக்கும்
பேரழகு எங்கேடீ?


வைத்த கண்ணை
வாங்காமல் பார்த்து
லயித்து நான்கிடக்கும்
பொன்னழகு எங்கேடீ?


அற்பனாய் வாழ்ந்தேனை
அருந்தமிழ்க் கவியாக்கி
கற்பனையில் மிதக்கவிட்ட
கட்டழகு எங்கேடீ?


போர்வாளைக் கூடப்
புறங்காட்டச் செய்யும்
கூர்வாளாய் நெஞ்சைக்
கிழித்தவிழி எங்கேடீ?


இதழை விரிக்காத
இளமொட்டு காட்டியெனை
வதைக்காமல் வதைக்கின்ற
வளமார்பு எங்கேடீ?


பின்னலிட்ட கார்கூந்தல்
பின்புறம் இறங்கிவந்து
என்னை அழைக்கின்ற
எழில்ஜாடை எங்கேடீ?


படம்போடும் நினைவாலே
முப்போதும் நெஞ்சை
வடம்போட்டு இழுக்கின்ற
வண்ணமுகம் எங்கேடீ?


கத்துங் கடல்வந்து
கையேந்தி யாசிக்க
முத்துப் பல்காட்டும்
முறுவல் எங்கேடீ?


மின்னலும் வந்து
மெருகேற்றிச் செல்லப்
பொன்னொளி வீசிவரும்
பூவிழிகள் எங்கேடீ?


ஒருவாறு வெட்கத்தை
ஒதுக்கி வைத்துச்
சிருங்காரக் கதைபேசிச்
சிரிக்குமிதழ் எங்கேடீ?


மண்ணில் கால்வைத்து
நடந்தாலும், நெஞ்சந்
தன்னில் தடம்பதிக்கும்
திருப்பாதம் எங்கேடீ?


அழுது துடிக்கின்றேன்;
அழகே உன்னாலென்
நிழலும் இப்போது
நிம்மதி இழந்ததடீ!


பேடைக் குயில்நீ
பிரிந்து போனதனால்
வாடைக் காற்றுந்தான்
வாள்வீசிப் போகுதடீ!


மணவறைக்குப் பின்னேயென
மோகத்தின் தலைதட்டிக்
கனவினிற் கூடஎல்லை
காத்தமனம் வேகுதடீ!


மண்குழிக்குள் என்தேகம்
மறைந்தேதான் போனாலும்
கண்குழிக்குள் உன்பிம்பம்
கலையாமல் வாழுமடீ!


-------------ரெளத்திரன்

jayanth
15-07-2012, 11:28 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

சிவா.ஜி
15-07-2012, 11:37 AM
நல்ல தமிழை நல் மரபில் வார்த்தளித்த கவிதைக்கு வாழ்த்துக்கள் ரௌத்திரன்.

கீதம்
15-07-2012, 10:51 PM
ஆறாத் துயரிலும் அருந்தமிழ் கவிவார்க்க ஆரால் இயலும்?

மாறாக் காதல் மனதில் இருந்தால் மண்தின்னும் நாள்வரை

மங்கையவள் நினைவில் பொங்கிவரும் தமிழுக்கேது வரையறை?

பிரிவுத்துயரிலும் சுகம் காண்கிறது மனம்.

பாராட்டுகள் ரௌத்திரன்.