PDA

View Full Version : வாயும் வயிறுமாக



M.Jagadeesan
14-07-2012, 06:44 AM
விமானத்தில் இருந்து இறங்கிவந்த அந்தப் பெண்ணின் நடையில் ஒரு தள்ளாட்டம் இருந்தது; வயிறு பெருத்துக் காணப்பட்டதால் அவளால் நடக்க இயலவில்லை. கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. சிரமப்பட்டு நடந்தாள். நடக்கும்போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. "அம்மா ! அப்பா ! என்று முனகிக்கொண்டே நடந்தாள். அவளின் நிலைகண்டு அங்கிருந்த சிலர்,

" ஏம்மா! வாயும் வயிறுமா இருக்குற நீ இப்படித் தனியே வரலாமா? துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வரலாமில்ல? ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்ன என்னம்மா பண்ணுவே?" என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

சட்டென்று அந்தப்பெண் மயங்கி விழுந்தாள். அவளுடைய உடமைகள் அங்கே சிதறிக் கிடந்தன. விமான நிலைய அதிகாரிகள் பதட்டமடைந்தனர். அவசரமாக அவளை அருகிலிருந்த பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டுமணி நேரத்திற்குப்பின் அங்குவந்த அதிகாரிகள் டாக்டரைப் பார்த்து

" என்ன டாக்டர்! தாயும் சேயும் நலமா ?" என்று கேட்டனர்.

" பெண்ணும், பொன்னும் நலம் " என்று பதில் சொன்னார் டாக்டர்.

" ஒ பெண் குழந்தையா ! சுகப் பிரசவம்தானே?"

" பொன்னும் " என்று நான் சொன்னது பெண் குழந்தை அல்ல. தங்க நாணயங்களை! அந்தப் பெண் கர்ப்பவதி அல்ல. நிறைய தங்க நாணயங்களை விழுங்கியதால்தான் வயிறு பெருத்துக் காணப்பட்டாள்." என்று கூறி தங்க நாணயங்களைக் காட்டினார்.

கஸ்டம்ஸ் அதிகாரிகள் விரைந்துவந்து அவள்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கீதம்
14-07-2012, 10:19 AM
குறுக்கு வழியில் தப்பிக்க குறுக்கு வலி என்றாளோ? :)

மசியாத மருத்துவரால் தங்கம் சுங்கம் சேர்ந்ததோ?

வித்தியாச சிந்தனை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
14-07-2012, 04:29 PM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

சிவா.ஜி
15-07-2012, 11:42 AM
கடத்தல்காரர்களின் இன்னுமோர் வழி.

வாழ்த்துக்கள் ஐயா.

தங்கை கீதத்தின் பின்னூட்டம்....ஆஹா....பின்னீட்டீங்க....பாராட்டுக்கள்மா..!!

கீதம்
15-07-2012, 10:39 PM
தங்கை கீதத்தின் பின்னூட்டம்....ஆஹா....பின்னீட்டீங்க....பாராட்டுக்கள்மா..!!

தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி அண்ணா.

கலையரசி
18-07-2012, 02:46 PM
நல்லதொரு திருப்பத்துடன் கூடிய கதைக்குப் பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
18-07-2012, 03:54 PM
கதையின் தொடக்கவரி வாசித்தவுடனேயே இந்த திருப்பத்தை நான் எதிர்பார்த்தேன்.. காரணம் ஒன்றுண்டு.

நிறைமாத கர்ப்பிணிகளை அதிலும் ஒரு சில நாட்களில் பிரசவம் என்னும் நிலையில் விமானத்தில் ஏற்றுவதில்லை. அதற்குப் பல காரணங்களை அடுக்கினாலும் அதுதான் நிலைமை.

எனவே அந்த சூழலில் அவள் விமானப்பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவள் இறங்கிய விமான நிலையத்தில் சோதனை செய்யப்படவில்லை என்றாலும் ஏறிய விமானநிலையத்தில் கண்டிப்பாக சோதித்தே அனுப்புவார்கள். இதுபோன்ற சில லாஜிக்குகள் இடித்தாலும் கதை என்று பார்த்தால் பாராட்டத்தக்கது தான்..!

பாராட்டுகள் ஐயா...