PDA

View Full Version : சொல்லத் துடிக்குது மனசு..! 7.மனப்புழுக்கம்..மருந்தெதுவோ..?



கலைவேந்தன்
07-07-2012, 09:31 AM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி ஒன்று

விக்னேஷின் டைரி. நாள் : டிசம்பர் ஐந்து.

அன்பே உருவான வசந்திக்கு என்ன ஆச்சு..?

சட்டென்று என்னை விட்டேத்தியாகப் பேச எப்படி மனம் வந்தது..? அதுவும் திருமண நாளான இன்னைக்கு...?

எப்பவும் இப்படி விட்டேத்தியாகப் பேசமனம் வராதே..? இத்தனைக்கும் காதலித்து என் மேல் அன்பொழுக எனக்காக தவம் இருந்து தன் பெற்றோர் அரைமனசாக சம்மதித்தும் பிடிவாதமாக நின்று என்னைத்திருமணம் செய்துகொண்டவள் தானே..?

சட்டம் படித்துவிட்டு மிகச்சிறந்த துப்பறியும் நிபுணன் என்று பெயர் எடுத்து மிகச்சிறப்பாக தொழில் நடந்துகொண்டிருந்த போதெல்லாம் என்னுடன் இணைக்கிணையாக நின்று தோள்கொடுத்து என் பெயருக்கும் புகழுக்கும் காரணமாய் இருந்த காதல் பருவத்தில் எத்தனை இனிமையாக நடந்துகொண்டாள்..?

அப்பாவின் வற்புறுத்துதலுக்கு செவிகொடுத்து சட்டம் படித்து பயனில்லாமல் போவதா என்னும் ஆதங்கத்தில் எனது துப்பறியும் நிறுவனத்தில் இருந்து விலகி மிகப்பெரிய லீடிங் லாயர் சந்தான கோபாலனுக்கு அஸிஸ்டண்ட்டாக சேர்ந்த போது கூட எங்களிடையே மன வருத்தம் வரவில்லையே..?

மிகச்சிறந்த லாயராகப் பெயரெடுக்க எனது ஆசிகள் என்று சொல்லித்தானே நானும் அனுப்பிவைத்தேன்..?

பிறகு எப்படியோ அவள் தந்தையை சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொண்டு நல்லவிதமாகத்தானே வாழ்க்கை போயிற்று...?

திருமணம் செய்துகொண்டது தவறோ..?

காதலிக்கும்போது கண்களுக்குத்தெரியாத சில குறைகள் திருமணத்திற்குப் பின் பூதாகாரமாகத்தெரிவதற்கு காரணம் என்ன..?

ஒன்றும் புரியவில்லை.

குழந்தை வேண்டாம். கொஞ்சம் வக்கீல் தொழிலில் பேரும் புகழும் கிடைத்த பின் நாம பெத்துக்கலாம்னு வசந்தி சொன்னப்ப கூட ஒரு பேச்சு மறுக்காமல் ஏற்றுக்கொண்டேனே..

ஒரு நல்ல கணவனாக அவளை ஆண்டு திருப்தியுடன் தானே திருமணவாழ்க்கை போயிற்று.?

இன்று நடந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது..

இத்தனைக்கும் இன்றைய திருமணநாளை அதிகாலையில் அவள் கண்விழிக்கும் முன் கட்டிஅணைத்து உதட்டில் முத்தமிட்டு ‘’ ஹேப்பி ஆன்வர்சரி மைடியர் வசந்தி ’’ என்று கண்சிமிட்டிக் கூறியபோது சொக்கிப்போய் ‘’ டு யூ ட்டூ மைடியர் கணவா ’’ என்று இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட முத்தம் தந்தாளே..?

’’இன்னைக்கு என்ன சமையல் பிடிக்கும்டா ... சொல்லு ... செய்யறேன்.. இன்னைக்கு கோர்ட்டுக்கும் லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கப்போறேண்டா படவா ‘’ என்று என் மூக்கைத் திருகி செல்லமாய்த் தலை கோதினாளே..?

இன்னைக்கு எனக்கு என்ன பரிசு தரப்போறேன்னு குழந்தையாய்க் கேட்ட வசந்தியா அப்படி ஒரு வார்த்தை சொன்னாள்..?

அப்படி என்ன சொல்லிட்டேன்னு அத்தனை கடுமையாய் என்னைப்பேசிவிட்டாள்..?

லாயர்ஸ் ஃபெடரேஷனின் செயலாளர் ராஜ சேகரை அதிகமாக நெருங்க விடாதே... அவன் மிகவும் பொல்லாதவன்... சுயநலத்துக்காக எதையும் செய்ய வல்லவன்.. வேண்டாம் அவன் சகவாசம் என்று சில நாட்களாகவே சொல்லிக்கொண்டு வரும்போதெல்லாம்.. ஆமாம் விக்னேஷ்... அவன் பேச்சும் பார்வையும் சரியில்லைடா ... ஆனாலும் அவன் அவசியம் வேண்டி இருக்குதே... ஃபெடரேஷன் செயலர் அவன்.. அவனிடம் பேசாமலோ பழகாமலோ இருக்க முடியாதுடா.. ஒரே சேம்பர்... அடுத்தடுத்த அறையும் கூட ... எங்க சீனியர் பலகேஸ்களுக்காகவும் அவனிடம் அடிக்கடி போகச்சொல்லுறார்.. அப்ப எல்லாம் பயமா இருக்கும் எனக்கு.. என்று மலங்க மலங்க விழித்துச் சொன்னவள் தானே வசந்தி..?

முதலாம் திருமண நாளை ஜாலியாக் கொண்டாடனும்னு மகாபலிபுரம் போகலாம்னு யோசனை சொன்னதும் அவள்தானே..?

என் க்ளையண்ட்ஸ் இன்னைக்கு மொபைலில் தொல்லை செய்யக்கூடாது இன்றைய நாள் முழுக்க முழுக்க நமக்காக என்று என் மொபைலை ஆஃப் செய்த போது நான் செய்ய மாட்டேண்டா... எங்க சீனியர் அழைச்சா ஆஃப் செய்திருந்தா நல்லா இருக்காது என்று வசந்தி சொன்னபோது கூட ஒன்றும் சொல்லாமல் அமைதியாகத் தலையாட்டத்தானே செய்தேன்..?

குடைவரைக்கோயில்களின் அழகை ரசித்துக்கொண்டே வசந்தியின் இடுப்பில் வளைத்துப் பிடித்திருந்த கைகளை விலக்காமல் உன்னதமாக நடை போட்டுக்கொண்டிருந்தபோது இடையூறாய் அவள் மொபைல் சிணுங்கியபோது கொஞ்சம் மனம் துணுக்குற்றாலும் அவளை அழைத்தவன் ராஜசேகர் என்னும் போது மனம் குமுறலாய் இருந்தது உண்மைதான்.. ஆனாலும் அமைதி காத்தேனே..

ஆனால் அந்த ஒரே நாளில் ஆறாவது முறையாக அவன் அழைத்ததும் தானே எரிச்சல் அதிகமாகி ‘’ பாரு வசந்தி... இது நமக்கான நாள். இதில் மூன்றாமவன் இப்படி விடாமல் இடையூறு செய்வது நல்லா இல்லை.. சொல்லி புரியவை அல்லது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்...இதைத்தானே சொன்னேன்... இதில் என்ன மகாதவறு இருக்கிறது என்று சட்டென்று என்னை ஒருகணம் கடுமையாகப் பார்த்துவிட்டு அவன் போனை அட்டெண்ட் செய்தாளே...

அவனிடம் பேசி முடித்தபின்... ‘’ விக்னேஷ்... உங்க கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை.. என் துறையில் நான் பேரும் புகழும் பெற விரும்புவதை நீங்க விரும்பலையா... என் பர்சனல் விஷயத்தில் நீங்க அதிகம் குறுக்கிடுவதாகப் படலையா ? ‘’ என்று கேட்டபோது சாட்டையடி பட்டது போல் சட்டென்று நிமிர்ந்து வலியுடன் பார்த்தேனே... அவளோ சட்டென்று முகம் திருப்பிக்கொண்டு அறியாதவளைப் போல சட்டென்று என்னிடம் இருந்து விலகி தொலைவில் நடந்து போனாளே..

வசந்தி... என்னை நீ புரிந்துகொண்டது இவ்வளவுதானா..? நானா உன் வளர்ச்சியில் விருப்பம் இல்லாமல் நடப்பேன்..? இதை சொல்வது நீ தானா..? ஒரே வருடத்தில் நான் சலித்துப்போயிட்டேனா வசந்தி..? என்று நான் கேட்டபோது அவளது ரியாக்*ஷன் எப்படி இருந்தது ... கடவுளே..!

இதோ பாருங்க விக்னேஷ்.. என் தொழிலில் பேரெடுக்கறதுன்னா அது அத்தனை எளிதான விஷயம் இல்லைன்னு தெரியுமா..? என்று கேட்டபோது அடிபட்டது போல உணர்ந்தேனே..

ஏன் வசந்தி... இது உன் தொழில் என்று பிரிச்சுப்பேசறே..? நானும் ஒரு லாயர்தான் மறந்துட்டியா..? துறைவேற தான் ஆனாலும் அத்தொழிலைப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சியா..? உன் தொழில் அபிவிருத்திக்கும் இந்த ராஜசேகருக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகுது..? அவனை தவிர்த்துவிட்டு உன்னால் முன்னேற முடியாதா..? என்று பரிதாபமாக நான் கேட்டபோது கூட வசந்தியின் போக்கில் மாற்றமில்லாமல் பதிலேதும் சொல்லாமல் போனாளே..

ரம்மியமாய் இனிமையாய்க் கடந்திருக்கவேண்டிய எங்கள் முதலாம் திருமண நாள் இப்படி கசந்து போய் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் வீடு வந்து சேர்ந்து முகம் திருப்பிக்கொண்டு உறங்கினோமே..

இறைவா... இனியேனும் வசந்தியின் மனதை மாற்றி எங்கள் பழைய வசந்த காலத்தை மீட்டுத்தரமாட்டாயா.. என்ற பிரார்த்தனையுடன் உறங்கச்செல்கிறேன்.



இனி வசந்தியின் டைரி .... தொடரும்..!

jayanth
08-07-2012, 09:56 AM
வசந்தியின் டயரியை படிக்க ஆவலாய் உள்ளேன் கலை...

கலைவேந்தன்
08-07-2012, 01:45 PM
நன்றி ஜெயந்த். இதோ வசந்தியின் டைரி வருகிறது.

கலைவேந்தன்
08-07-2012, 01:48 PM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி இரண்டு

வசந்தியின் டைரி. நாள் : டிசம்பர் ஐந்து.

விக்னேஷ் என்னை படுக்கையில் மெல்ல அணைத்து எழுப்பி என் உதட்டில் அழகாக மென்மையாக முத்தமிட்டு ஹாப்பி ஆனிவர்சரி மைடியர் வசந்தின்னு சொல்லி எழுப்பும் போது இன்றைய பொழுது ரம்மியமாகப்போகும்னு தான் நினைத்தேன்.

ஆனால் எவர் போட்ட தீய பார்வையோ கசப்பான சம்பவங்களுடன் இன்றைய நாள் கடந்தது.

திருமண நாளுக்கு மாமல்லபுரம் போகலாம்னு நாங்க முடிவெடுத்து போகும் வரை எல்லாமே நல்லாத்தானே போயிட்டு இருந்தது.

பரபரன்னு அவரை கஷ்டப்பட்டு விலக்கி எழுந்து சுறுசுறுப்பாக குளித்து முடித்து அவருக்கு பிடித்த பால் பாயசம் செய்து விக்னேஷுக்கு ஆசை ஆசையா கொடுத்தப்ப எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது..

விக்னேஷ் என் ஆசைக்கணவர் தான். நான் காத்திருந்து கைப்பிடித்த அன்புக்கணவர் தான். ஆனால் ஏன் என் லட்சியத்தை புரிந்துகொண்டு ஏன் ஆதரவு தருவதில்லை என்பது மட்டும் புரியவே இல்லை.

இத்தனைக்கும் விக்னேஷுக்கு எல்லாம் தெளிவாகச்சொல்லி இருந்தேனே...

என் லட்சியம் இந்தியாவின் நம்பர் ஒன் லாயராக வரவேண்டும். ராம் ஜேத்மலானியை விட பாரத் பூஷனைவிட மேலே வரவேண்டும்.

இது விக்னேஷுக்கும் நன்றாகத்தெரியும்தானே..?

அதற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கிறேனே.. இது ஏன் புரியவில்லை என் அன்புக்கணவனுக்கு..?

இத்தனைக்கும் விக்னேஷுக்கு எந்த குறையும் நான் வைக்கவில்லையே.. தாயற்ற அந்த வெகுளிக்குழந்தைக்கு தாயாக இருக்கிறேன் என்று விக்னேஷ் அடிக்கடி சொல்லி பெருமைப்படுவது உண்டுதானே..?

இன்று எங்கள் திருமண நாளில் ராஜ சேகரின் போன் அடிக்கடி வந்தது விக்னேஷுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. ஆனால் என் மனதை அறிந்தவன் தானே விக்னேஷ்..?

ராஜ சேகர் கொஞ்சம் அப்படி இப்படி பெண்கள் விஷயத்தில் வீக்தான் ... இல்லைன்னு சொல்லலையே.. ஆனால் தன் தொழிலில் தனித்திறமை வாய்ந்தவன் ஆயிற்றே..

அவன் லாயர் ஃபெடரேஷனுக்கு செயலாளர் என்பதால் தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய புள்ளிகள் அத்தனை பேருக்கும் பரிச்சயமானவன் மட்டுமல்ல. அவன் நினைத்தால் அவன் கைகாட்டும் லாயரிடம் போய் கண்ணை மூடிக்கொண்டு தமது கேசை ஒப்படைப்பார்கள் என்பதை கண்கூடாகக் கண்டும் இருக்கிறேன்.

என் சீனியர் சந்தான கோபாலன் திறமைசாலி என்றாலும் சில விஷயங்களில் அனுசரிக்கத்தெரியாதவர் என்பதால் கிளையன்ட்டுகள் அதிகம் வருவதும் இல்லை. ஆனாலும் அவரிடம் ஜூனியராக இருந்தால் தனிமதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..?

விக்னேஷ் என்னிடம் அடிக்கடி ஆயாசப்படும் ஒரு வாக்கியம் '' நீ வர வர செல்ஃபிஷ் ஆக மாறுகிறாயோ வசந்தி '' என்று வருந்துகிறான்.

என்ன செய்வது.. இத்தொழிலில் ஓரளவுக்கு அப்படி இருந்தால் தான் பெயரும் புகழும் கிடைக்கிறது என்பதும் உண்மைதானே..?

விக்னேஷுக்கு நான் ராஜ சேகரிடம் அடிக்கடி பேசுவதும் அவனுடன் சேம்பர் கேன்ட்டீனில் காபி குடிக்கப்போவதும் சுத்தமாக விருப்பம் இல்லை. இதை தெளிவாகச் சொல்லியும் விட்டான். ஆனால் என் நிலைமையை யோசிக்கவேண்டாமா..?

என்னை சந்தேகப்படுகிறானோ விக்னேஷ்..?

அடப்பாவி.. இந்த உலகமே திரண்டு வந்து ஒரு பக்கம் நின்றாலும் எனக்கு என் விக்னேஷைப்போல யாருமே கிடையாது என்று சத்தியம் செய்வேனேடா.

என்னை நல்லாப் புரிஞ்சுகிட்டவன் என்று விக்னேஷை நினைத்தது தவறோ..?

அடுத்த வாரம் எங்கள் லாயர்ஸ் சேம்பரில் ஒரு சிறப்பு மீட்டிங் இருக்கிறது. அதை முன்னிட்டு சில ஏற்பாடுகளைச் செய்யத்தான் ராஜ சேகர் அத்தனை முறை அழைத்தான் என்பதை எப்படி புரியவைப்பது விக்னேஷுக்கு.. சொன்னால் அது எல்லாம் உன் வேலையா.. நீ ஏன் தலையில் போட்டுக்கொள்கிறேன்னு திட்டுவான்..

தப்புதான்.. இன்றைய மகிழ்ச்சிகரமான நாளில் மூன்றாம் நபரின் தலையீடு கூடாது தான். ஆனால் நல்ல நாளும் சிறப்பு நாளும் என்பதெல்லாம் நமக்கு மட்டும் தானே... உலகம் அதை புரிஞ்சுக்கனும்னு எதிர்பார்ப்பது எத்தனை தவறு..?

ராஜ சேகர் தன் இயல்பில் எப்படி இருந்தாலும் என்னிடம் நன்றாகப்பழகுகிறான். அத்து மீறி எதையும் பேசுவதும் இல்லை. என் இயல்பு எல்லாரையும் கொஞ்சம் தள்ளித்தான் இருக்கச்செய்யும் என்பது என்னை முழுதாகப் புரிந்த விக்னேஷுக்கு புரியாமல் போனது வருந்தத்தக்கது தான்.

ஹூம். என்ன செய்வது..?

இன்றைய* நாளில் இப்படி ஆனது எனக்கும் மிகுந்த வருத்தம் தான். எப்படியும் மாலைக்குள் விக்னேஷைச் சரிசெய்துவிடலாம் என்று நான் நினைத்தது இயலாமல் போனது வேதனை தான். நான் தான் கொஞ்சம் அலட்சியமாகப்பேசிட்டேனோ..? பூப்போன்ற விக்னேஷின் மனசை நோகடித்துட்டேனோ..?

விக்னேஷ்.. என் இனிய நண்பா.. என் ஆசைக்கணவனே.. என் எல்லாத் தேவைகளும் தேடித்தேடி பூர்த்தி செய்யும் கலாபக்காதலனே..

இன்றைய என் செயலை மன்னித்துவிடு. என் லட்சியத்திற்கு எனக்கு தோள்கொடு. நான் உன்னைத் தாயாக அரவணைக்கும் அதே நேரத்தில் என் தேவை என்ன என்று என்னைப்புரிந்து எனக்கு ஆதரவு தாடா..

முகிழ்த்து அலர்ந்து விரிந்து பரந்து மணத்துப் பின் அதே நாளில் அழுகிப்போகும் மல்லிகைப் பூவல்ல நம் காதல் வாழ்க்கை..

அடிதோறும் உயிர்பெற்று கால காலத்துக்கும் தழைத்து நிற்கும் வாழையடி வாழையடா நம் காதல்..

நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேனடா.. என் லட்சியம் தவறெனில் என் மனசாட்சியைத் தொலைத்துவிட்டு அதை அடையும் மூடப்பெண் அல்லவே நான்..

இன்று இரவில் நமது இன்றைய கசந்த ஊடல் கலைந்து வசந்தமாய் இனிக்கவேண்டுமடா என் புருஷா.. படவா..

என் ஈகோவை விட்டு உன்னை அரவணைத்து உன் இன்றைய காயத்தை ஆற்றிவிடுகிறேனடா.. வா என் அன்புத்தோழனே.. என்னை ஆளும் வீரனே..

எங்கோ படித்தேன்.. தன் கணவனிடம் தானாகச் சென்று கொஞ்சுவதும் அவனை அரவணைத்து உற்சாகமளிப்பதும் தவறு என்றும் அது பெண்மைக்கு அழகல்ல என்றும்.. ஆனால் அது முட்டாள் தனமில்லையா..?

என் அன்புப்புருஷனை நான் வலியச்சென்று அரவணைத்து ஆறுதல் அளிக்கவில்லையெனில் அவன் எங்கே போவான்..?

விக்னேஷ்... இதோ வருகிறேனடா.. என்னை மன்னித்து என் தவறைப் பொறுத்து என்னை ஏற்றுக்கொள்ளடா..

இன்றைய பூசல் இன்றோடு தொலையட்டும்.. நாளைய பொழுது நன்றாக இருக்கவேண்டும். அதற்கு நான் உனக்கு வேண்டும். எனக்கும் நீ வேண்டுமடா..

இதோ வருகிறேன் என் இனிய திருடனே..


இன்றைய இரவின் ஊடல் தணிந்ததா.. அங்கே இருவரும் தமது பிணக்குகளை ஒழித்து இணங்கிப் போனார்களா..?

அதை விக்னேஷின் நாளைய டைரியில்தான் காணவேண்டும்.

இனி விக்னேஷின் டைரி... தொடரும்..

jayanth
08-07-2012, 03:06 PM
படித்தேன்...///வசந்தி லாயர்ஸ் ஃபெடரேஷன் மீட்டிங் பற்றி விக்னேஷிடம் சொல்லியிருக்கலாமே...///விறுவிறுப்பு.../// தொடருங்கள் கலை...///

கீதம்
09-07-2012, 06:25 AM
கணவன் மனைவிக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுந்திருக்கும் மனத்தாபப் புள்ளிகளை அழகாய் வைத்திருக்கிறீர்கள்.

வாழ்க்கைக் கோலத்தை இனிதான் பார்க்கவேண்டும். அழகிய கோலமாகுமா? அலங்கோலமாகுமா?

அவரவர் பார்வையிலான எண்ண ஓட்டங்களும் அவற்றைக் குறிக்கும் எழுத்தோட்டமும் அருமை.

டைரிக்குறிப்புகளே தொடர்வதைப் பார்த்தால் எண்ணங்கள் இன்னும் பரஸ்பரம் பகிரப்படவில்லையென்றே தோன்றுகிறது.

தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கலைவேந்தன்
11-07-2012, 12:25 PM
தொடர்ந்து வாசித்த் தொடரும் ஜெயந்த் மற்றும் கீதமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!

கலைவேந்தன்
11-07-2012, 12:28 PM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி மூன்று

விக்னேஷின் டைரி. நாள் : டிசம்பர் ஆறு.

சில்லென்று இருக்கிறது இப்போது நினைத்தாலும்.

ஊடலுக்குப் பின் கூடலில் அதிக இன்பம் இருக்கிறது என்று கூறிச்சென்ற வள்ளுவன் இன்றிருந்தால் அவனைக்கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தட்டாமாலை ஆடத்தோன்றுகிறது.

நேற்றிருந்த மனநிலையில் இனி வசந்தியிடம் முன்பு போல அன்பாகப் பேசமுடியுமா என்னும் ஐயம் பூதாகாரமாக எழுந்து நின்றது உண்மைதான்.

நான் இயந்திரம்போல உணவை முடித்துக்கொண்டு காலாற மொட்டைமாடியில் உலவிவிட்டு கீழிறங்கிவந்து படுக்கையறையில் நுழைந்து ஒருபக்கம் சரிந்துபடுத்து அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு கண்மூடி உறங்காமல் கிடந்தேன்.

சமையலறையில் பாத்திரங்களை ஒதுக்கி காலையில் வரும் வேலைக்காரிக்காக எல்லாம் சரிப்படுத்திவிட்டு முகம்கைகால்களை அலம்பிக்கொண்டு முகத்தைத் திருத்தி வந்து வசந்தி என்அருகில் படுத்தபோது உயர்ந்து எழுந்த ஃபோமின் அசைவு எனக்கு தாலாட்டுவது போல இருந்தது.

அருகில் படுத்தவள் சில வினாடிகள் பேசவே இல்லை. எதையோ அவளும் யோசிக்கிறாள் என்று உணர்ந்து பேசாமல் உறங்குவது போல் கிடந்தேன்.

நான் அவளை சமாதானப்படுத்துவேனெ என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்தாளோ என்னமோ..?

அப்படியும் இப்படியும் இருமுறை அசைந்து ஹூம் என்னும் ஒலியைஎழுப்பி ஆயாசப்பெருமூச்சு விட்டாள்.

ஒரு நிமிடம் அனைத்தையும் மறந்து சட்டெனத் திரும்பி அவளை வாரி இழுத்து மேலே சார்த்திக்கொண்டு ஏண்டி என்னை இப்படி சித்திரவதைப்படுத்தறே பாவி என்று தழுதழுக்கக்கூறி இறுக அணைத்து முத்தம் தரலமா என்று எழுந்த உணர்வுகளை எனது ஈகோ வந்து அதட்டி நிறுத்தியது.

இதுதான் ஆண்களின் மிகப்பெரிய குறையே போலும். தன்னவளிடம் என்ன தயக்கம். எதுக்கு ஈகோ..? தனக்காக வந்து தன்னை அவளது உள்ளில் இருத்தி அனைத்தும் அவளதாக்கி எல்லாம் கொடுத்து எல்லாம் எடுத்து உந்துசக்தியாக இயங்கும் சகதர்மிணியுடன் என்ன தயக்கம்..?

ஆனாலும் இந்த வீணாய்ப்போன ஈகோ வந்து தடுக்கிறதே.

சற்றே உரக்கசிந்தித்தேனோ என்னமோ எனது பலத்த பெருமுச்சு ஹூங்காரமாய் வெளிவந்தது.

சட்டென என்பக்கம் திரும்பியவள் அம்மு அம்மு டேய் அம்மு என்ன ஆச்சுடா உனக்கு..? ஏன் இப்படி என்னை சித்திரவதை செய்கிறே என்று என் மார்பில் செல்லமாகக் குத்தி என் மார்பில் முகம்புதைத்தாளே..

அந்த கணம் நான் உச்சிநேர பனிமலையாய் உருகித்தான்விட்டேன்.

என் கைகள் தானாகவே அவளை அணைத்துக்கொண்டு நீ மட்டும் என்னவாம்..? சுமார் ஐந்து மணி நேரம் என்னிடம் பேசாம இருந்தே மாடே.. உன்னால் எப்படி தங்கம் முடிந்தது..? என்று கூறிய என் குரல் தழுதழுத்த*தால் அடிக்கடி வரும் லேசான திக்குவாய்ப்பிரச்சினை வந்து எட்டிப்பார்த்தது,

ப்ளீஸ்டா ப்ளீஸ்டா அம்மு என் செயல்களை மன்னிச்சுடுடா என்னை அறியாமல் நான் செய்த தவறுகளை நீதானே என்னை மன்னித்து கொண்டு போகனும்..? நான் உன் பிள்ளை இல்லையாடா..? என்று என் வசந்தி என்னிடம் குரல் விசுக்க கேட்டபோது என்னை மறந்தேன்.

வாரியணைத்து முகமெல்லாம் முத்தமழை பொழிந்தபோது இது போதும்டா உன் மனதுல நான் ஆழமா இருக்கேன்னு எனக்கு தெரியும்டா அம்மு.. என்னை புரிஞ்சுக்க முயற்சி செய்டா அம்மு.. நான் உன்னவள்டா என்று கூறி அந்த இரவையே புதுசொர்க்கமாக்கிய என் வசந்தி என்னை எதோ ஒரு புது உலகத்துக்குக் கொண்டுசென்றாள்.


விக்னேஷின் டைரி இன்னும் முடியவில்லை.

கீதம்
11-07-2012, 11:13 PM
அப்பாடா... ஊடல் கரைந்துபோனதா உன்னதக் காதல் கரைசலில்! ஆனாலும் இந்த ஈகோ படுத்தும்பாடு அதிகம்தான். ஒருபக்க ஈகோவால் ஒன்றும் பெரிதாய் ஆகப்போவதில்லை. ஆனால் எத்தனைநாள்தான் இன்னொரு பக்கம் பொறுமையாய் இருக்கும்? என்றேனும் அவ்விடமும் ஈகோ எட்டிப்பார்த்தால் வாழ்க்கை போராட்டம்தான்.

அடுத்தவர் டைரி என்றாலே ஒரு ஈர்ப்பு இருக்கும். அதிலும் காதற்தம்பதிகளின் டைரிக்குறிப்பு என்றால்? ரசித்துப் படிக்கவைக்கின்றன. ஆவலைத் தூண்டும் அழகானக் கதைக்குப் பாராட்டுகள்.

கலைவேந்தன்
13-07-2012, 04:09 AM
அழகான பின்னூட்டத்துக்கும் ரசனைக்கும் பின் தொடர்ந்து வாசிப்பதற்கும் மிக்க நன்றி கீதம்..!

கலைவேந்தன்
13-07-2012, 04:13 AM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி நான்கு

விக்னேஷின் டைரி தொடர்ச்சி..

எத்தனை நேரம் ஆனந்தக்கடலில் அன்பு முத்துக்குளித்தோம் என்று நினைவில்லை.வசந்தி கடந்த ஒருவருடத்தில் காட்டியிராத புதுக்கோணத்தில் தன் அன்பினைப் பகிர்ந்துகொண்ட போது இதற்குத்தானா காத்திருந்தாய் ராஜகுமாரா என்று ஆனந்தக்கூத்தாடினேன்.

அப்பொது தான் சட்டென இடிபோல ரீங்காரமிட்டது வசந்தியின் மொபைல்.

ஒரு மகிழ்ச்சிப்பிரவாளத்தில் ஆனந்த அமைதியின் போது தூக்குத்தண்டனை விதிக்கப்படுமுன் எழும் துப்பாக்கித்தோட்டாவின் அதிரடிபோல் அந்த மொபைல் ஒலித்தது. சட்டென்று வானில் இருந்து சிறகு ஒடிந்து விழுந்த பறவைப்போல பதறி அடித்து அவள் அணைப்பில் இருந்து விலகினேன்.

மணி நள்ளிரவு 12:15. இது போன்ற நேரங்களில் எனது மொபைலை சைலண்ட்டில் அல்லது ஆஃப் செய்து வைப்பது வழக்கம். இல்லற இன்பத்தில் இடையூறு என்பது எரிமலை வெடிக்கும் சீற்றத்தினும் கொடிய சீற்றத்தை விளைவிக்கக் கூடியது என்பது என் கருத்து.

ஆனால் வசந்தியோ சற்றும் சிரமமோ அல்லது இடையூறோ உணராமல் மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்துவிட்டு ஆன் செய்து ‘’ சொல்லுங்க ராஜசேகர்.. ‘’ என்ற போது என்னுள் அமிழ்ந்திருந்த ஆத்திரப்பந்து சட்டென மேல் வந்தது.

என்ன இவன்..? எந்த நேரத்தில் அழைப்பது என்ற இங்கிதம் தெரியாதவனா..? இவள் என்ன அவன் அடிமையா..? ஆஃப்டர் ஆல் அவன் சேம்பரும் வேறு. தொடர்புகளும் வேறு. இவளிடம் என்ன வேண்டி இருக்கிறது..? அதுவும் இந்த அர்த்த ராத்திரியில்..?

ஆத்திரத்துடன் நான் கவனித்துக்கொண்டிருக்க கூலாக அவனுடன் பேசினாள் வசந்தி.

‘’ சொல்லுங்க.. ஹிஹி அதெல்லாம் இல்லை.. இன்னைக்கு வெளில சுத்த போயிருந்தோம்.. ஆமாம்.. ஹிஹி தேங்க்ஸ்.. ச்சீ.. அதெல்லாம் விடுங்க.. என்ன சேதி ..? இந்நேரத்தில்..? ........................................................... ஓ .... ஓகே... ஐ வில் டூ.. .. நோ நோ.. டோண்ட் வர்ரி.. ஹான்... கண்டிப்பா.. ஷ்யோர் சார்.. ஓகே.. ஓகே.. ஹிஹி .. என்ன கண்டினியூ..? யூ ஆர் கோயிங் வெரி நாட்டி... ம்ம்ம் .. சரி வைக்கிறேன் சார்.. சீயூ... மார்னிங்..? எத்தனை மணிக்கு...? ஓ .. சரி சரி.. ஓகே... குட் நைட்.. பை. ‘’

இவைதான் நடந்த உரையாடல். அந்த உரையாடல் போன போக்கினையும் மறுபுறத்தில் என்ன பேசி இருப்பான் என்பதை முழுவதும் ஊகிக்க முடியாவிட்டாலும் இவள் சொன்ன பதிலிலிருந்து ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

அவள் தானாக என்ன பேசினாள் என்பதைச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது நாகரிகம் இல்லை என்பதை என் பண்பு சொன்னாலும் உள்ளுக்குள் இருந்த ஆண்மைத்தனம் என்னமோ அதைப் பொருட்படுத்தாமல் ‘’ யாரு ..? ராஜசேகர் தானே..? ‘’ என்று உறுமினேன்.

உண்மையில் கோபம் என் கண்களையும் காதையும் கணகணவென்று துடிக்கவைத்தது. ஏசியிலும் காதுமடல் சூடானதை உணர்ந்தேன்.

வசந்திக்கோ அவள் செய்தது எதுவும் பெரிய குற்றம் இல்லை என்பதைப் போல ஒருவித மிதப்பில் இருப்பதாக எனக்குப் பட்டது.

அந்த அலட்சிய மனப்பான்மை என் கோபத்தை இன்னும் அதிகரிக்க வைத்தது என்னவோ உண்மை.

ஹூம் ஹூம் என என் உறுமல் எனக்கே மெலிதாகக் கேட்டது.

‘’ ஆமாம் .. ராஜசேகர்தான்.. நான் சொன்னேனில்லையா ..? அந்த பார்கௌன்சில் எலக் ஷன்.. அதுபத்தி பேசினோம்.. சில முக்கிய காரியங்கள் நாளைக்கு இருக்கு அதை நினைவுபடுத்தி சில ஐடியாக்கள் சொன்னார்.. ‘’ வசந்தியின் முகத்தில் கனவுபோல பிரகாசம் தெரிந்ததை உணர்ந்து இன்னும் எரிச்சலானேன்..

‘’ ஓ .. அந்த ஐடியாவில் ச்சீ என்று சொல்லும் படியும் ஒரு சில ஐடியா இருந்ததோ..? நாட்டியான காரியங்கள் குறித்த டிஸ்கஷனோ..? ‘’

‘’ ஓ .. மை அம்மு... டோண்ட் பி சில்லி... பிஹேவ் யுவர்செல்ஃப்.. இந்த நேரத்தில் கணவனுடன் இன்பமா இருந்த உன்னை தொந்தரவு செய்துட்டேனா..? என்று கிண்டல் செய்தார். அதுக்குதான் சொன்னேன்.. போதுமா வக்கீல் சார்..? ‘’ என்றவள் தனது கலைந்த முடிகளைத்தூக்கி கொண்டையாக முடிந்துகொண்டு நைட்டியை எடுத்து அணிந்துகொண்டு பாத்ரூமுக்குச் சென்றாள்.

அவ்வளவுதான். இன்றைய இந்த வசந்த இரவு அவ்வளவுதான் போல..

அதுகூட எனக்கு அத்தனை ஆத்திரம் தரவில்லை. அவள் சொன்ன அலட்சியமான பதில்..? கணவன் மனைவி அந்தரங்கத்தைப்பற்றி கமெண்ட் அடிச்சு இருக்கான்.. இந்த முட்டாள் அதைப் புரிஞ்சுக்கலை..

பெண்களை வசியப்படுத்துபவன் இப்படித்தான் குறும்பாக இரட்டை அர்த்தம் பொதிய பேசிப் பின் வியக்கும்பெண்களை மடக்குவான்...

நான் என் வசந்தியை இழந்துவிடுவேனோ..?

சட்டென எழுந்த கேவலையும் அழுகையையும் அடக்கமுடியாமல் தலையணையில் முகம் புதைத்து அப்படியே நீண்டநேரம் கழித்து உறங்கிப் போனேன்..


இனி வசந்தி தன் டைரியில் என்ன சொல்கிறாள் எனப் பார்ப்போமா..?

jayanth
13-07-2012, 04:28 AM
மூன்றையும் நான்கையும் படித்தேன். சுவாரசியம். தொடருங்கள் கலை...

கலைவேந்தன்
15-07-2012, 02:07 PM
மிக்க நன்றி நண்பரே..!

கலைவேந்தன்
15-07-2012, 02:15 PM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி ஐந்து

வசந்தியின் டைரி .. அதே நாள்..

விக்னேஷ் இப்படி இருப்பானென்று நான் கனவிலும் கருதவில்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகமா..? நான் அன்னைக்கு பகலில் கல்யாண நாளும் அதுவுமா கொஞ்சம் அசிரத்தையா இருந்தேன் அப்படின்னு ஒத்துகிட்டு தானே அவனிடம் எல்லாம் மறக்கும் படி மன்னிப்பும் கேட்டு எப்படி எல்லாம் சுகமாக எங்கள் ஊடல் முடிந்து நடந்த கூடல் இருந்தது.

பாசமும் காதலும் எப்படி எல்லாம் கரைபுரண்டு ஓடிச்சு.. விக்னேஷ் எவ்வளவு அருமையான ரொமாண்டிக் ஹீரோன்னு எனக்கு புரிய வைச்சானே..

படவா அவன் காது கடிச்சாலும் சுகம்.. முடி கோதினாலும் சுகம். எவ்வளவு ரம்யமா இருந்தது..?

இப்படிப்பட்டவனுக்கு நான் துரோகம் மனசாலயும் நினைப்பேனா..? அது ஏன் அந்த கருப்பனுக்கு புரியவே இல்லை..? ஒன்னுமில்லாத விஷயம்தான் நேத்து நைட்டும் நடந்திச்சு. சுகமாக சுமுகமாக இருந்து அணைப்பில் இருந்த எனக்கு மட்டும் அந்த நேரம் ராஜ சேகர் போன் செய்தது பிடிச்சதா என்ன..?

என் அம்முவோட நான் இருக்கும் போது எந்த இடையூறையும் நான் விரும்பமாட்டேனே.. அது ஏன் அந்த மடையனுக்கு புரியவில்லை.

ராஜசேகர் அந்த நேரத்தில் அழைத்தது அவசியமில்லைதான். அந்த விஷயத்தை மறுநாள் கூட சொல்லி இருக்கலாம்தான். ஆனா அவர் கொஞ்சம் சபலப்புத்தி உள்ளவர். அத்துமீற மாட்டார் என்றாலும் பெண்களிடம் பேசுவதில் சுகம் காண்பவர், அதனால் அந்த இரவிலும் அவருக்கு தெரிய வந்த தகவலைப்பகிர்ந்துக்க போன் செய்தார்.

போன் விஷயம் ஒன்னுமே இல்லை. அடுத்தமாதம் லாயர் சேம்பருக்கு தேர்தல் அறிவிச்சு இருக்கு, இப்போது செகரட்டரியாக இருக்கும் ராஜசேகர் மீண்டும் உடனே போட்டி இட விதிமுறைகள் அனுமதிக்காது...அதான்.. அவன் நினைச்சது அந்த பதவிக்கு நான் வரனும்னு. எனக்கும் அந்த கனவு நெடுநாள் கனவுதான். ஏன்னா அந்த பதவிக்கு இருக்கும் பவர் அப்படி. ஜட்ஜ் கூட கொஞ்சம் பயப்படுவார்.

அந்த பதவிக்கு போட்டி இட இன்னொரு குரூப் மங்கையர்க்கரசியை போட்டு இருக்காம். ஆக எனக்கு பிரைட் சான்ஸாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் .நீ ஜஸ்ட் ஆமாம் மட்டும் சொல்லுன்னு ரெண்டு நாள் முந்திகூட சொல்லி இருந்தார். அது சம்பந்தமாத்தான் நேத்து பகலிலும் கூட அத்தனை முறை போன் பண்ணி இருந்தார்.

நேத்து மாலை முதல் நிறைய பேரைப்பார்த்து எனக்கு ஆதரவு திரட்டி இருந்தாராம். அப்போ எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் ஆள் பலம்கிடைக்கிது என்று சொன்னார்.

இதை எல்லாம் விளக்கமா சொன்னாலும் விக்னேஷ் புரிஞ்சுக்கமாட்டான். அவனுக்கு நான் மட்டும்தான் உலகம், வேற எது பத்தியும் கவலையும் இல்லை. ஆனா எனக்கு இது வாழ்க்கையில் கிடைச்ச அரிய சான்ஸ் இல்லையா..? சென்னை லாயர் ஃபெடரேஷனுக்கு செகரட்டரி ... ஆகா நினைக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. எல்லா லாயர்களும் சல்யூட் அடிப்பாங்க. என்னை சந்திக்க நேரம் கேட்டு காத்திருப்பாங்க..

நாலுபேரு நமக்காக காத்திருக்காங்க என்றாலே எத்தனை சுகமா இருக்கு..? இன்னும் தனியா பிராக்டீஸ் செய்யும் அளவுக்கு கேஸ்கள் கிடைக்குமே.. ஹூம். இதெல்லாம் புரியாத விக்னேஷ் என்னிடம் சிடு சிடுன்னு இருக்கானே..

என்னைக்கும் என் போன் பத்தியோ என்ன பேசறேன் யார்கிட்ட பேசறேன்னு எல்லாம் கண்டுக்காத பக்கா ஜெண்ட்டில் மேன் ஆக இருந்தவன் ரெண்டு நாளா என்னாச்சு..?

எத்தனை கிராஸ் கேள்வி கேட்டான்..? யார் செய்தா..? இந்த நேரத்துல ஏன் செய்தா..? ராஜசேகருக்கு நேரம் காலம் கிடையாதா..? நம் பெட்ரூம் வரைக்கும் வரனுமா..? எத்தனை கூரிய சொற்கள்..?

பாவி பாவி.. நமக்கு இடையில் யாரும் வர அனுமதிக்கமாட்டேனே படவா.. ஏண்டா என்னை வதைக்க தொடங்கிட்டே..?

கல்யாண நாளைக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்டார் ராஜசேகர்.. ஹோட்டல் சாப்பாடு வெளியில ஊர் சுத்தினோம்னு இவ்வளவுதானே சொன்னேன்..? அதுக்கு ஏன் விக்னேஷ் எரிஞ்சு விழுந்தான்..?

உங்க ரொம்ப அந்தரங்கமான நேரத்துல கரடி போல நுழைந்துட்டேனோன்னு கிண்டலாத்தானே கேட்டார்..?

எனக்கு அதில் ஒன்னும் வக்கிரம் தெரியலையே.. அவர் கொஞ்சம் ஜாலி பேர்வழி. மனைவி அவருக்கு சரியா அமையலை என்பதை புலம்பி தீர்ப்பார். அதுவும் சேம்பர்ல சில பேர் இருக்கும் சமயத்தில் கூட.

பல சமயம் எனக்கு எரிச்சல்தான். என்ன இப்படி சொல்றாரே.. இவர் மனைவியை மதிச்சா தானே அவளும் இவரை மதிப்பாள்..? இவர் தான் ஒரு ஆண்பிள்ளை என்னும் ஆங்காரம் காட்டினா..?

அடிக்கடி ஒருமாதிரி இருக்கும் அவர் பேச்சு. பாவம். மனைவியால் நிம்மதி கிடைக்கலை, அதான் இங்கே வந்து தன் கஷ்டத்தை பகிர்கிறான்னு இந்த காதில் வாங்கி அந்த காதுல விடுவது என் பழக்கம்.

அவர் அப்படி எல்லாம் பேசினாலும் இதுவரை கண்ணியம் குறைவதில்லை தான். மேலும் நான் எப்படி அப்படின்னு அவருக்கு நல்லாவே தெரியும். அதனால ஒரு பிரச்சினையும் இல்லையே..

விக்னேஷுக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது..? என் மேல நம்பிக்கை இல்லையா..? என்னை இழந்துடுவானோன்னு பயப்படறானோ..?

கடவுள்தான் அவனுக்கு நல்ல புத்தியைத்தரனும். நிறைய வேலை இருக்கு அந்த தேர்தல் தொடர்பா.. நானும் விக்னேஷ் போல எல்லாத்தையும் யோசிச்சு டென்ஷன் ஆகாம ஆக வேண்டியதைக் கவனிக்கனும்.

அவன் கோபத்துல அந்த பக்கம் தலைவைச்சு படுத்து தூங்கிட்டான். எல்லாம் சரியாகனும் கடவுளே..

இனி விக்னேஷின் டைரி தொடரும்..

கீதம்
15-07-2012, 11:10 PM
பொஸஸிவ்னெஸ் எனப்படும் அன்பின் ஆளுமை அத்துமீறிவிட்டால் எல்லாமே அவதிதான்.

அற்புதமான காதற் தம்பதியரிடையே விரிசல் உண்டாக ஆரம்பிப்பதை அழகாக வெளிப்படுத்தும் எழுத்தோட்டம்.

எண்ணங்களாய் பகிரவேண்டிய யாவும் எழுத்துக்களாய் பத்திரப்படுத்தப்படுகின்றன. இனி என்னாகும்? பதைப்புடன் காத்திருக்கிறேன்.

jayanth
16-07-2012, 02:39 PM
மிக மிக சுவராசியம். எறும்பு ஊர கல்லும் கரையும் கதையாகிவிடக்கூடாது...!!!

கலைவேந்தன்
19-07-2012, 03:58 AM
மிக்க நன்றி ஜெயந்த். வாழ்க்கையில் பல விடயங்கள் இப்படித்தான். எறும்பு ஊர்தல் கல் தேய்தல். இவைதான்.

கலைவேந்தன்
19-07-2012, 04:01 AM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி ஆறு

விக்னேஷின் டைரி .. சில நாள் கழித்து..

எனக்கும் வசந்திக்கும் இடையில் மெல்லிய திரை விழுந்துடுச்சு போல.

இப்ப எல்லாம் போனில் அதிக நேரம் பேசுகிறாள். பெரும்பாலும் அது ராஜ சேகர் போன் தான். போனில் பேசும் போது அவளின் முக பாவனை ரொம்பவே மாறிடுச்சே.. பூவா மலர்ந்து பேசுறா.. தேவையில்லாததுக்கெல்லாம் களுக்குன்னு சிரிக்கிறா.. அடிக்கடி நாட்டி பாய் .. க்ரேசி பாய்ன்னு கமெண்ட் வேற.. மிக அதிகமாக நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது.

அதிலும் அன்றொருநாள் வசந்தி என்னிடம் பொய் சொல்லவும் தொடங்கிவிட்டாள். முதல் பொய். அல்லது எத்தனையாவது பொய்யோ..?

அன்னைக்கு ஹைகோர்ட்ல எனது க்ளையண்ட் விஷயமாக போயிருந்த சமயம் அசந்தர்ப்பமாக அவளது சேம்பருக்கு போனேன்.

அங்கே அவளைக் காணவில்லை. அவளது சீனியர் சந்தான கோபாலனின் சேம்பரில் நுழைந்தேன். புன்னகையுடன் வரவேற்ற அவரிடம் வசந்தியை எங்காவது அனுப்பி இருக்கீங்களான்னு கேட்டேன்..

அட நோக்கு சமாச்சாரம் தெரியாதா என்ன..? அவ எலக்*ஷன்ல நிக்கிறாளோன்னோ..? அதுக்கு அடிக்கடி அந்த எக்ஸ் செக்ரட்டரியோட போயிண்டு இருக்கா.. இன்னைக்கு கூட மஹாபலிபுரம் காட்டேஜ்ல சில லாயர்ஸ் மீட்டிங் இருக்காம்.. பிரச்சாரம் சூடு பிடித்துடுத்தோன்னோ..?

சந்தானம் சொல்லிக்கொண்டு போனது எதுவும் என் மனதில் தங்கவில்லை.. வசந்தி ஏன் என்னிடம் சொல்லவில்லை..?

இன்னைக்கு காலையில் புறப்படும்போதுகூட வசந்தி ஜிம் கேரி படம் ஒன்னு ரிலீஸ் ஆயிருக்கு இன்னைக்கு ஈவ்னிங் போலாமான்னு கேட்டப்ப இல்லை விக்னேஷ் .. சாரிப்பா.. எனக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.. என்றாளே தவிர எங்கேன்னு சொல்லவில்லையே..

அட மீட்டிங் என்ன மாலை வரையா இருக்கும்... ஆறுமணி ஷோக்கு போலாம் செல்லம்.. என்ற என்னிடம் இல்லடா பட்டு.. மீட்டிங் முடிந்து வர இரவு கூட ஆகலாம்டா.. புரிஞ்சிக்கோ செல்லமே.. என்று அன்பொழுக பேசினாளே தவிர மகாபலிபுரம் காட்டேஜ் மீட்டிங் எதுவும் மூச்சு விடலையே..

ஒருவேளை மறந்திருப்பாளோ..? அது எப்படி..? மீட்டிங் என்பது நினைவில் இருக்கச்சே எங்கேன்னு மறந்தா போயிடும்..? அன்னைக்கு மாலை நான் 7 மணிக்கு வீட்டுக்கு வந்து காத்திருந்தேன். எட்டு ஒன்பது.. பத்து.. என நேரம் கடந்தது.

சரியாக பதினொருமணிக்கு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தமும் கார் கதவு திறக்கப்பட்டு சடாரென்று மூடப்பட்ட சத்தமும் கேட்டு சிறிது நேரம் கழித்து வசந்தி உள்ளே வந்தாள்.

நான் அமைதியாக சரி வா.. சாப்பிடலாம்.. சமையல்காரம்மா இன்னைக்கு காரக்குழம்பு கத்திரிக்காய் போட்டு மணமா செய்து வைச்சு இருக்கா.. உனக்காகத்தான் காத்திருந்தேன்.. நல்ல பசி .. வா சாப்பிட்டுட்டு பேசலாம் என்றேனே..

அப்போது அவள் பதில் என் முகத்தில் அறைந்தது. நான் சாப்பிட்டு வந்துட்டேன் விக்னேஷ்.. நீங்க சாப்பிடுங்க.. எனக்காக ஏன் காத்திருந்தீங்க என்று கூலாகச் சொல்லிவிட்டு உடை மாற்றச்சென்றுவிட்டாளே..

அதுக்குப்பின்னும் சாப்பிட நான் உணர்ச்சியற்ற வயித்துச்சோத்துப்பிண்டமா என்ன..?

ஏன் சாப்பிடலையா விக்னேஷ் என்றவளிடம் என்ன வசந்தி இன்னைக்கு மீட்டிங் ரொம்ப நேரமா நடந்திச்சோ.. என்றேன்.

ஆமாங்க.. ஆனா ஃப்ரூட்ஃபுல்லா இருந்திச்சு.. என் வெற்றி சான்ஸ் 80 சதம் உறுதியாயாச்சு என்று முகம் மலரச்சொன்னாள்.

அது சரி வசந்தி .. மீட்டிங் எங்கே நடந்திச்சு..? சேம்பரிலா..? என்று கொக்கிபோட்டது போல் கேட்டேன்.

அவள் முகம் சற்றே துணுக்குற்றது கண்டு உள்ளுக்குள் குமையத்தொடங்கினேன்.

ஏன் விக்னேஷ்.. என் மேல் சந்தேகப்படறியா..? என்று உணர்ச்சியில்லாமல் பார்வையை வைத்துக் கேட்டாள் வசந்தி.

சந்தேகம்லாம் இல்ல.. ஆனா நீ மகாபலி புரம் போனதும் காட்டேஜ்ல தங்கி மீட்டிங் அட்டெண்ட் பண்ணினதும் என் கிட்ட சொல்லனும்னு ஏன் தோணலை..?

சட்டென்று அவள் முகம் ரத்தச்சிவப்பாய் சிவந்து நான் என்ன உன் அடிமையா..? உன் கிட்ட எல்லாம் சொல்லிட்டு செய்யனும்னு ஏதேனும் சட்டம் போட்டு இருக்கியா..? என்று கேட்டபோது உடைந்தேன்.

அத்தோடு நான் பேச்சை முடித்துவிட்டு அப்புறம் திரும்பி தூங்குவதுபோல் இருந்தாலும் கண்களில் வழிந்த கண்ணீர் தலையணையை நனைத்துக்கொண்டே இருந்தது..?

என் வசந்தியா..? என்னவளா இப்படி..?

அதளபாளாத்தில் நான் அமிழ்வதாக எனக்குத் தோன்றியது..

இனி வசந்தியின் டைரி தொடரும்..

சுகந்தப்ரீதன்
19-07-2012, 08:20 PM
ஆண்-பெண் உறவுகளில் வெளிப்படை தன்மை இல்லாது போனால் ஒருவரைபற்றி மற்றொருவர் தவறான கருத்தை ஏற்படுத்திகொள்ளவே அது வழிவகுக்கும்.. முக்கியமா புருசனும் பொண்டாட்டியும் சரிவர பேசிக்கொள்ளாவிட்டால் தாம்பத்யம் தடுமாறிவிடும்..!!

சிக்மண்ட் ப்ராய்டு என்ற மனோவியல் அறிஞர் இப்படி சொல்கிறார்.. “மனிதர்கள் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது, பேசக்கூடாததை பேசுவது எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் தான் புறக்கணிக்கபட்டு விட்டோம் என்ற காயத்தினால்தான்.. பெரும்பாலும் பாலியல் ரீதியாக ஒருவர் புறக்கணிக்கபட்டு அவமானபடுத்தபட்டால் கிட்டதட்ட அவர்கள் பைத்தியநிலைக்கு போகிறார்கள்”

கதையில் விக்னேஷ் அந்த நிலையை நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது... உறவுச்சிக்கலை மையகருவாக வைத்து நகரும் கதையின் அடுத்தடுத்த காட்சிகளை காண துடிக்குது மனசு..!!:) கலக்குங்க கலையண்ணா..!!:icon_b:

jayanth
20-07-2012, 12:35 PM
தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கீதம்
21-07-2012, 09:55 AM
உள்ளத்தின் விரிசல்களை விஸ்தாரமாக்கும் வார்த்தைகள். கணவன் மனைவியின் மனங்களில் உண்டாகும் போராட்டத்தைத் தெள்ளந்தெளிவாகக் காட்டும் கண்ணாடியாய்க் கதையோட்டம். பாராட்டுகள். தொடரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறோம்.

கலைவேந்தன்
21-07-2012, 04:47 PM
நன்றி சுகந்த ப்ரீதன் ஜெயந்த் மற்றும் கீதம்..

நாளை விடுமுறை. அடுத்த பகுதி எழுதுவேன்..!

கலைவேந்தன்
22-07-2012, 04:26 AM
சொல்லத்துடிக்குது மனசு..! பகுதி - ஏழு

வசந்தியின் டைரி.. அதே நாள்.

ஹூம்.. இன்னைக்கு எத்தனை சந்தோஷமா இருந்தேன்.. பார்கவுன்சில் செக்ரட்டரி ஆகப்போவது உறுதி ஆகி மனசு நிறைய சந்தோஷத்தோட வீட்டுக்கு வந்தேன். ஆனா இந்த விக்னேஷ்..?

ஒன்னும் இல்லாத விஷயத்தை எத்தனை பெரிசாக்கிட்டான்..?

இன்னைக்கு மீட்டிங் மகாபலி புரம் ரெசார்ட்ல என்பது நேத்தே தெரியும்னாலும் அதை விக்னேஷ் கிட்ட சொல்ல மறந்துட்டேன். அது என்ன கொலைக்குற்றமா..? அதுக்காக எத்தனை ஆர்ப்பாட்டம்..? என் சேம்பருக்கெல்லாம் போய் உளவு பார்த்திருக்கானே..

வர வர விக்னேஷ் போக்கு ஏன் இப்படி மாறிப்போச்சு..? மீட்டிங் பிசியில இடையில் அவனுக்கு கால் செய்ய முடியலை தான். மேலும் செல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தேன். அது என் தப்பா..?

மீட்டிங் முடிஞ்சு டின்னர் சாப்பிட்டு வர லேட்டாச்சுன்னு ராஜ சேகர் கார்ல கொண்டுவந்து விட்டார். ஹூம்.. எம்மாம் பெரிய கார்..? விக்னேஷ் இன்னும் பைக்ல தான் குதிரை ஓட்டுறான். என்ன சம்பாதிக்கிறான்..? எப்பவானும் க்ளையண்ட் வந்தா பத்து இருபது .. அதுலயும் இவன் நேர்மையானவன் வேற..

அவனவன் அவுட்புட்டுக்கு 10 சதவீதம் வரை சார்ஜ் பண்றான். விக்னேஷ் அதெல்லாம் நியாயமில்லை அது இதுன்னு வேதாந்தம் பேசுறான்.

இருந்தாலும் அவன் கிட்ட என் இந்த வருத்தம் எல்லாம் சொன்னது உண்டா..? இருப்பதை வைச்சு ஓட்டத்தானே செய்றேன்..?

இந்த தேர்தல்ல நான் ஜெயிச்சப்பறம் எனக்கு வந்து குவியப்போகும் க்ளையண்ட்ஸ் எத்தனைன்னு ஏன் யோசிப்பதில்லை இவன்..?

சில சமயம் நான் தேர்ந்தெடுத்தது சரியில்லையோ..? விக்னேஷின் அழகில் மயங்கிப் பொருளாதாரம் யோசிக்க மறந்துட்டேனோ..? ஹூம். என் அப்பா கிட்ட சொன்னா ஒரே மணி நேரத்துல பி எம் டபுள்யூ கார் கூட கொண்டு வந்து நிறுத்திடுவார் தான்.. ஆனா இவன் ரொம்ப சுய மரியாதை பார்க்கிறான்.. அடச்சே .. ஏன் எனக்கு கார் மேல புத்தி போகுது..?

ராஜசேகர் செய்த வேலையை பாராட்டியே ஆகனும். தன் கௌரவம் காத்துக்க வேண்டி என்னை ஜெயிக்க வைக்க நினைச்சாலும் அந்த அளவுக்கு மனசு வேணுமே..

ராஜசேகருக்கு கிடைத்த மனைவி அவரைப் புரிஞ்சுக்காம விட்டுப்போயிட்டான்னு சொல்லிக்கிறாங்க. இன்னொருத்திக்காக இவ்வளவு மெனக்கெடும் ராஜ சேகரை அவ புரிஞ்சுக்காம போயிட்டாளோ..? ஹூம்.. அவரவர்க்கு கிடைத்த கொடுப்பினை அவ்ளோதான்..

இன்னைக்கு மீட்டிங்ல ஓபனாவே எல்லார் கிட்டயும் என் உடை நேர்த்தியையும் என் பல் அழகையும் சிலாகிச்சார் ராஜ சேகர். எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்தாலும் அது தேவைதான் பட்டது. ஒரு பெண்ணுக்கு தன்னைப் புகழ்பவர்களைப் பிடிக்காம போகுமா என்ன..?

பார்ட்டில லேசா குடிச்சு இருந்தாலும் லிமிட்டைத் தாண்டல ராஜ சேகர். அந்த மரியாதை எல்லார் முன்னும் தர மறக்கலை. தனியா இருக்கும் போது நீ போ வான்னு பேசினாலும் எல்லார் முன்னாலும் மேடம் என்னும் வார்த்தை தவறுவதில்லை. ஜெண்டில் மேன் தான் ராஜ சேகர்.

ஆனா இந்த விக்னேஷின் போக்கைத்தான் புரிஞ்சுக்க முடியலை. சில நாளா அவனுக்கு படுக்கையில் என்னால் ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை அந்த கோபமோ..?

பொழுதுக்கும் கிளையண்ட் மற்றும் மற்ற வக்கீல்களுடன் சந்திப்புன்னு உடம்பு விட்டுப்போயிடுது. இதுல வீட்டுக்கு வந்தால் விக்னேஷின் எரிச்சலூட்டும் நடவடிக்கை.

பாரேன். நான் வர லேட்டாகுதுன்னா அவன் சாப்பிட்டு படுக்கவேண்டியது தானே..? எனக்காக காத்திருந்தானாம்.. இது என்ன பத்தாம் பசலித்தனம்..? நான் சாப்பிட்டு வந்துட்டேன்னதும் அவனும் சாப்பிடாம படுத்துட்டான்.ரொம்ப வருத்தமா இருந்தாலும் வேறு வழி இல்லையே..

நான் இப்படித்தான்னு அவனுக்கு முன்னாலேயே சொல்லாதது தவறோ..? வாழ்க்கையில் எனக்கு பேரும் புகழும் வரனும். நம்பர் ஒன்னா என்னை எல்லாரும் மதிக்கனும். அதுக்கு என்ன விலைன்னாலும் கொடுக்கத் தயார். ராஜசேகர் அதுக்கு உதவறார் என்னும் போது இவனுக்கு ஏன் கடுப்பு..?

ஆம்பிளைகளுக்கு பெண்கள் முன்னேறினா பிடிக்காதுன்னு சொல்லுவாங்க. விக்னேஷும் சாதாரண ஆம்பிளை தானோ..?

பெண்கள் சமுதாயத்துல நாலு ஆம்பிளைகளோடு பழகினா தப்பா..? இதையே ஆண்கள் செய்தா சோஷல்னு சொல்லிடுவாங்க.. இது என்ன நியாயமோ..?

இதே நிலை நீடித்தால் இனி என்ன ஆகும்னு பயமா இருக்கு.. எது எப்படின்னாலும் என் உயர்வை என் பேரும் புகழும் பெறும் வாய்ப்பை இழக்கமாட்டேன். இதை விக்னேஷ் புரிஞ்சுகிட்டா தேவலை.

சில சமயம் விக்னேஷின் அதீத அன்பு என்னை மூச்சு முட்ட வைக்குதே..

கற்பக விநாயகா.. எங்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்துப்பா..


இனி விக்னேஷும் டைரி தொடரும்.

கீதம்
23-07-2012, 01:30 PM
வசந்தியின் இந்த டைரிக் குறிப்பில்தான் வசந்தியின் ஆழ்மன ஆசைகளின் வேகமும், விக்னேஷைப் பற்றிய அவளுடைய ஆதங்கமும், அவர்களுக்கிடையிலான பிரச்சனையின் முழுவீச்சும் வெளிப்படுகிறது. முதல் திருமண நாளன்று கணவனுடன் உல்லாசமாய்ப் பொழுதைப் போக்கும் தருணத்தில் அவனுக்காக அலைபேசியை கொஞ்ச நேரம் கூட ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியவில்லை. ஆனால் அலுவலக மீட்டிங்குக்காக ஸ்விட்ச் ஆஃப் செய்கிறாள் என்னும்போது விக்னேஷூக்கு அவள் தன்னை உதாசீனப்படுத்துவது போல் தோன்றுவது தவறில்லையே.

தான் அப்படித்தான் என்பதை விக்னேஷிடம் வசந்தி முன்கூட்டியே சொல்லாதது அவள் தவறுதான். அதை இப்போது உணர்கிறாள். மேலும் கணவனை மற்றவனோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அவளுக்கு பொருளாதாரத்தின் மேல் பற்று அதிகரித்துவிட்டது. இது போன்ற எண்ணங்களே போதுமே... இருவருக்குள்ளும் இருக்கும் விரிசலை விஸ்தரிக்க!

மிகவும் நேர்த்தியாக கணவன் மனைவி இருவரின் எண்ணங்களை விவரிக்கிறீர்கள். பாராட்டுகள். தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

jayanth
23-07-2012, 07:42 PM
படித்தேன்... மற்றப் பதிவுகளுக்கு ஆவலுடன்...

jayanth
31-08-2012, 07:53 PM
விக்னேஷின் டைரி எங்கே...???

கலைவேந்தன்
01-09-2012, 04:44 PM
விரைவில் நண்பரே.. ( கொஞ்சம் ஸ்கூலில்பிசி. மனசும் கொஞ்சூண்டு சரியில்லை அதான்.)

sarcharan
01-09-2012, 07:21 PM
இன்னிக்கு ஸ்கூல் லீவு....சீக்கிரம் தொடருங்கள்