PDA

View Full Version : உலகுக்குப் பகையானேன்.



M.Jagadeesan
04-07-2012, 10:15 AM
சுண்டி இழுக்கும் காந்தக் கண்களை
மானுக்கு ஒப்பிட்டால் மீனுக்குக் கோபம்
மீனுக்கு ஒப்பிட்டால் மானுக்குக் கோபம்.

கருநிறம் கொண்ட கள்ளிருக்கும் கூந்தலை
நாகமெனச் சொன்னால் மேகத்திற்குக் கோபம்
மேகமெனச் சொன்னால் நாகத்திற்குக் கோபம்.

பால்வண்ணம் கொண்ட பச்சரிசிப் பற்களை
முல்லைஎனச் சொன்னால் முத்திற்குக் கோபம்
முத்துஎனச் சொன்னால் முல்லைக்குக் கோபம்.

வழுவழுப்பாய் இருக்கும் வஞ்சியே உன்கழுத்தை
சங்குஎனச் சொன்னால் நுங்கிற்குக் கோபம்
நுங்குஎனச் சொன்னால் சங்கிற்குக் கோபம்.

பொய்யோ மெய்யோ என்றிருக்கும் இடையை
உடுக்கையிடை என்றால் மின்னலுக்குக் கோபம்
மின்னலிடை என்றால் உடுக்கைக்குக் கோபம்.

மெத்தென்று இருக்கும் மோகினியே உன்னுடலை
பஞ்சிற்கு ஒப்பிட்டால் பட்டுக்குக் கோபம்
பட்டுக்கு ஒப்பிட்டால் பஞ்சிற்குக் கோபம்.

ஏந்திழையே ! உன்னுடைய அழகான விரல்களை
காந்தளுக்கு ஒப்பிட்டால் வெண்டைக்குக் கோபம்
வெண்டைக்கு ஒப்பிட்டால் காந்தளுக்குக் கோபம்.

உம்பர் உலகமும் கண்டிரா உன்னழகை
ரம்பைக்கு ஒப்பிட்டால் ஊர்வசிக்குக் கோபம்
ஊர்வசிக்கு ஒப்பிட்டால் ரம்பைக்குக் கோபம்.

உன்னை வர்ணித்து உலகுக்குப் பகையானேன்
என்னை விட்டுவிடு என்வழியே செல்கின்றேன்.

aasaiajiith
04-07-2012, 11:48 AM
உண்மையை உரைப்பதனால் ஊருக்கு பகையானால் என்ன
உலகிற்கு பகையானால் என்ன என்று உதறிதள்ளி
உண்மையை உரக்க உரைத்திருப்பேன்
உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் !

நல்ல வரிகள் !

கலைவேந்தன்
04-07-2012, 02:31 PM
அழகான இந்த கவிதையை மேன்மை என்று சொன்னால் செந்தமிழுக்கு கோபம் இல்லை. அழகான அழகியல் கவிதைக்கு பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
04-07-2012, 03:35 PM
ஆசைஅஜீத் , கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !

சிவா.ஜி
04-07-2012, 05:51 PM
ஆஹா....மிக வித்தியாசமான கவிதை. அழகுற எழுதப்பட்ட அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் ஜகதீசன் ஐயா.

jayanth
04-07-2012, 07:58 PM
இக்கவிதையை பாராட்டவில்லையென்றால் எனக்கே என்மேல் கோபம் வந்துவிடும்... எனவே...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கீதம்
04-07-2012, 10:27 PM
அழகிய காதலை உள்ளடக்கிய வரிகளில் வெளிப்படும் ரசனை வியக்கவைக்கிறது. பெரும்பாலும் ஒரு நேரத்தில் ஒரு உவமையைத்தான் கவிஞர்கள் கையாளுவார்கள். தாங்கள் ஒரே நேரத்தில் இரு உவமைகள் சொல்லி, இனிய காதலியை வர்ணித்த அழகுக்கு ஈடில்லை. ஆர்ப்பாட்டமில்லாது, மனதுள் புகுந்து ஆர்ப்பரிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
05-07-2012, 12:38 AM
சிவா.ஜி, ஜெயந்த், கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

thamizhkkaadhalan
05-07-2012, 01:19 AM
இக்கவிதையினை விமர்சித்தால்...
தமிழுக்கு கோபம்...

விமர்சிக்காவிட்டால்...
தமிழனுக்கு கோபம்...

அருமையான வார்த்தைகள் விளையாடும், அழகான கவிதை...

M.Jagadeesan
05-07-2012, 02:13 AM
தமிழ்க் காதலன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

ஜானகி
05-07-2012, 04:02 AM
யருக்குக் கோபமோ......ரசிகனுக்கு ஒரு வித்தியாசமான விருந்து.... பாராட்டுக்கள் !

தாமரை
05-07-2012, 04:07 AM
அத்தனை பேரும்
அவளின் பங்கு
விலகி நின்று வர்ணித்தால்
பகையாகாவோ உலகு?

HEMA BALAJI
05-07-2012, 04:46 AM
அழகான, ரசனை மிக்க அழகியல் கவிதை ரசித்துப் படிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
05-07-2012, 05:07 AM
ஜானகி, தாமரை, ஹேமாபாலாஜி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !