PDA

View Full Version : நீ குரங்கிலிருந்து வித்யாசம் பெற்ற மனிதனென்றால்...



thamizhkkaadhalan
04-07-2012, 01:15 AM
அடே மானுடா... அதோ பார்... ஆகாயப் பந்தல்...
உன் நீளக் கடற்க்கண்ணாடி பிரதிபலிக்கும் நிஜபிம்பம்... நீல வானம்..!
உன் தூரிகை சிந்தா செவ்வண்ணக்கலவை... செவ்வானம்..!
உன் விஞ்ஞானம் விளக்கா விளக்கு... சூரியன்..!
உன் சிற்பி செதுக்கமுடியா ஒளிச்சிற்பம்... சந்திரன்..!
உன் கஜானாவில் சேரா சில்லரைத்துண்டுகள்...நட்சத்திரங்கள்..!
உன் கரங்கள் கட்டவியலா மிதக்கும் அணைகள்... மேகங்கள்..!
உன் கண்களில் வடியா வைரத்துளிகள்... மழை..!

ஓர் அழகுப்பெண்ணின் கிழிந்துவிட்ட சேலைத்துண்டு... வானவில்..!
... என்று என்னால் கவிப்பொய் கூறவியலாது.
ஏனென்றால் அது,
கதிரவனும் கார்முகிலும் காற்றிலே செய்துவிட்ட வர்ணக்குழந்தை..!

வெண்ணிலவின் வரவைக்கண்டு,
கதிரவன் வெட்கி மறைந்துவிடும் நிறம் மங்கிய மாலைப் பொழுதில்,
உன் நிஜமனதைத் தொலைத்ததுண்டா, மானிடா..?
வாய்க்காதென்று அறிந்திருந்தும், வால்நட்சத்திரத்தின் வாலைப் பற்றி,
அண்டம் சுற்ற ஆசைப்பட்டதுண்டா..?
சுயஒளி கொள்ளாச் சூரிய பிம்பம் கண்டதுண்டா..? உன் கண்கள்...

பணக்காகிதங்களின் மடிப்புகளில்...
சுயநலச் சிந்தனைத் துடிப்புகளில்...
மாயாவி மனதை மறைத்துவைத்திருப்பவனே...
உன் கண்களுக்குக் காற்றே வானம்... கடலே தானம்...

ஆகாயம் பார்... அதில் அழகான உலகம் தேடு...
அதன் நீலம் பார்... அதில் நீள்கின்ற ஆழம் தேடு...
வானம், தன் வயதாய்ச் சொல்லும் விண்மீன்கள் பார்...
முடிந்தால், விடியும் முன் அதில் மூத்த ஒன்றைத் தேடு...
...(நீ குரங்கிலிருந்து வித்யாசம் பெற்ற மனிதனென்றால்...)

சுகந்தப்ரீதன்
12-07-2012, 07:21 PM
:aktion033: :aktion033: :aktion033:

சிவா.ஜி
12-07-2012, 08:57 PM
அசத்தல். இயற்கையை பாடும் கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் தமிழ்காதலன்.


கதிரவனும் கார்முகிலும் காற்றிலே செய்துவிட்ட வர்ணக்குழந்தை..!”

பிரமாதமான கற்பனை.

thamizhkkaadhalan
15-07-2012, 12:38 PM
கருத்தெழுதிய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்...