PDA

View Full Version : இது கதையல்ல....சிறுகதை



PUTHUVAI PRABA
01-07-2012, 02:30 PM
மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதிப் பாட்டி கதை சொல்லத்தொடங்கினாள்.

"ஒரு ஊர்ல. . . ஒரு நிலா."

"ஐயோ. . .பாட்டி! ஊரக்கு ஒரு நிலாலாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்." இலக்கியா தொடக்கத்திலேயே திருத்தினாள்.

"அது என்ன கண்றாவியோ, அந்த நிலாவுல. . .ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்"

"ஐயோ! பொய்!பொய்!நிலாவுல ஆக்சிஜனே கிடையாது.. . அங்க எப்படி அடுப்பு எரிக்கமுடியும்? வடை சுடமுடியும் பாட்டி?"

"அதெல்லாம் எனக்குத்தெரியாது.எப்படியோ சுட்டாங்க. அப்போ அங்க. . .ஒரு காக்கா வந்து. . " பார்வதிப் பாட்டி முடிப்பதற்குள்-

"இதுவும் தப்பு. காக்காவால நிலாவுல வாழமுடியாதே!" இலக்கியா இடைமறிக்க, பாட்டி கடுப்பாகி,

"அப்போ நரியாலையும் அங்க போக முடியாதும்பே. போ! ஏன்னாலையும் உங்கிட்ட கதை சொல்ல முடியாது" என்றாள்.

" பாட்டி. . . கதையின்னா,அது அறிவுப்பூர்வமாவும் அறிவியல் உண்மைய மையமாக்கொண்டும் இருக்கணும். சும்மா ஏமாத்துறதுக்காகயெல்லாம் கதை சொல்லக்கூடாது .நாளைக்காவது நல்ல கதையா சொல்லுங்க." சொல்லிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள், இலக்கியா.

அதற்குப்பிறகு, பார்வதிப் பாட்டி அந்தக்கதையை தப்பித்தவறியும் யாருக்கும் சொல்லவில்லை. காரணம்-அறிவியல் யுகத்தில் அது அர்த்தமற்ற கதையோ என்ற எண்ணம் அவளுக்குள் வேர்விடத்தொடங்கியிருந்ததுதான்.

-புதுவைப்பிரபா-

இராஜிசங்கர்
02-07-2012, 07:21 AM
நல்ல சிறுகதை பிரபா.. உங்கள் பார்வை புதிதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..

ஆனால் நான் ஒரு சின்ன விஷயம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பழைய கதைகள் இன்றைய சூழலுக்கு பத்தாம்பசலித் தனமாக இருக்கலாம் - பொதுப்படையாகப் பார்க்கும் போது. ஆழ்ந்து பார்த்தால் தெரியும் ஏன் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று. ஏமாற்று வேலை என்று முழுசாக சொல்லிட முடியாது.

ஒரு கண்ணோட்டதில் பார்த்தால், அறிவியல் இன்று அவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு நாள் நிலவில் பாட்டி, நரி. காக்கா எல்லாம் வாழும் காலம் வரலாம். அத்தகைய அறிவியல் சிந்தனை இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்களின் கற்பனை நிலவிலே அந்த அனைவரையும் குடி வைத்திருக்கிறதே? அதை எப்படி நாம் ஏமாற்று வேலை என்று சொல்ல முடியும்? இன்றைய கற்பனைகள் தானே நாளைய கண்டுபிடிப்புகள் ஆகும்? இன்றைய கண்டுபிடிப்புகள் நாளைய நடைமுறைச் செயல். இன்றைய நடைமுறைச் செயல் நாளைக்கு பழமை ஆகும்.

இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், அந்தக் கதை குழந்தைகளுக்கு அறிவியல் சொல்லித் தர படைக்கப்பட்டது அல்ல. திருடுதல் தவறென்றும், திருடிய பொருள் நிலைக்காது என்றும், நம்மைச் சுற்றி வஞ்சகர்கள் இருக்கிறார்கள், ஆதலால் வார்த்தைகளில் மயங்கி புத்தியை உபயோகிக்க தவறக் கூடாது என்றும் அல்லவா சொல்லித் தருகிறது! இது எப்படி ஏமாற்றுக் கதையாகும்?

இலக்கியா கேட்டதில் தவறே இல்லை. புத்திசாலிப்பெண் அவள். இந்தச் சிறு வயதில் இப்படிப் பல கேள்விகள் வருவது பாராட்டுக்குரியது தான். ஆனால் அந்தப் பாட்டி கொஞ்சம் நான் மேற்சொன்னதைச் சொல்வதுபோல் கதையை முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பிரபா, இது என் கருத்து மட்டும் தான். மனதில் பட்டதை பதிந்து விட்டேன். இது தான் உண்மையாக/சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே என் பின்னூட்டம் தங்களுக்கு ஏதேனும் மனச்சங்கடதைக் கொடுத்தால் தோழியாக நினைத்து தயவுசெய்து மன்னித்து விடவும். நன்றி.

சிவா.ஜி
02-07-2012, 08:15 AM
கதைக்கு காலில்லை எனும் சொல்லுண்டு. அன்றாட வாழ்க்கையில்தான் பிள்ளைகள் அறிவியலைக் கட்டிகொண்டு அலைகின்றன. எல்லாவற்றையும் மறந்து பிள்ளைகளாய் வாழ்வதே பாட்டி சொல்லும் கதைக் கேட்கும் வேளையில்தான் அதிலும் அறிவார்த்த கேள்விகேட்டு ஆனந்தம் இழக்க வேண்டுமா?

எல்லாம் தெரிந்த தகப்பன், பிள்ளைகளின் கேள்விக்கு பதில் தெரியாததைப்போல நடித்து தோற்கும் வேளையில் கிடைக்கும் ஆனந்தமே வேறு. அப்படிப்பட்டதுதான் பாட்டி சொல்லும் கதைகள்.

கீதம்
02-07-2012, 09:32 AM
இப்போதிருக்கும் குழந்தைகள் பலர் எதையும் ஆதாரபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிரூபித்தால்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். நிறைய கேள்விகள் மூலம் தங்கள் அறிவை விசாலப்படுத்த முனைகிறார்கள். சில குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பல குழந்தைகள் அடக்கிவைக்கப்படுகிறார்கள். கட்டுப்பாடற்ற ஊடக வழி அவர்கள் பெறும் அரைகுறை அறிவு பல சமயம் ஆபத்தையே விளைவிக்கிறது. அவை அவர்களைச் சேராமல் செய்ய நம்மிடையே தணிக்கை வடிகட்டிகள் இல்லை.

பெற்றோர்களாய் ஆசிரியர்களாய் அவர்களை வழிநடத்த வேண்டிய கடமையிலிருந்து நம்மில் பலரும் தவறிவிடுகிறோம். இச்சூழ்நிலையில் இலக்கியா போன்ற குழந்தை பாட்டியிடம் சொல்வது நடைமுறையில் பல இல்லங்களிலும் நடக்கக்கூடியதே...

முதியவரின் நிலையிலிருந்து பார்ப்போம். பொதுவாகவே பல குடும்பங்களில் அவர்களுக்கு தனி மரியாதை கிடைப்பதில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அவர்களுடைய கருத்தும் ஆலோசனையும் கடுகளவும் மதிக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட இல்லங்களில் வாழ்பவருக்கு வாழ்க்கை ஒரு பெரும் சுமையாகவே இருக்கும். விரக்தியின் விளிம்பிலும் சிலர் இருப்பார்கள். அவர்களுடைய ஒரே ஆறுதல் அண்டிவரும் பேரக்குழந்தைகளின் அன்பு ஒன்றுதான். தான் எதைச் சொன்னாலும் தலையாட்டி ரசிக்கும் பேரக்குழந்தைகளை அவர்கள் ரசிப்பார்கள். கதை என்ற பேரில் நல்ல கருத்துக்களை அவர்கள் மனதில் விதைப்பார்கள்.

அப்பிள்ளைகள் வளர்ந்து ஒரு நாள் 'உனக்கொண்ணும் தெரியாது, பாட்டி. நீ சும்மா இரு' என்று சொல்லும் நாளில் அவர்களது மனநிலை எப்படியிருக்கும்?

சுய பச்சாதாபம் தலையெடுக்க, தானே ஒதுங்கி வாழ முனைவர். இந்தக் கதையில் அப்படியொரு நிலையில்தான் பார்வதிப் பாட்டியைக் காண்கிறேன். அதனால்தான் அவர் குழந்தையின் பேச்சை மறுத்து அதிலிருக்கும் நீதியைச் சொல்லத் துணியவில்லை. தனக்கொன்றும் தெரியாது என்பதைப்போல் பேத்தி பேசுவதைக் கேட்க அவருக்கு தன் மீதே கழிவிரக்கம் உண்டாவதன் காரணமாய் அடுத்து கதை சொல்லும் முயற்சியில் இறங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்த கதையின் மீதே அவநம்பிக்கை கொள்கிறார்.

தலைமுறை இடைவெளியின் பிரஸ்தாபம் என்பதை விடவும், இன்றைய சூழலில், ஒதுக்கப்பட்ட வயோதிகமும், சாதிக்கத் துடிக்கும் பால்யமும் சந்திக்கும் ஒரு புள்ளியைக் கதைப்படுத்தியமைக்குப் பாராட்டுகள் புதுவை பிரபா.

ஒரு மூன்றாம் மனிதராய் எட்டிநின்று பார்க்கும்போது கதையில் வெளிப்படும் யதார்த்தம் பதைக்கவைப்பதும் உண்மைதான். ஐயோ இப்படி எங்கும் நடந்துவிடக்கூடாதே என்னும் ஆதங்கத்தை வெளியிட்ட வகையில் ராஜியின் பின்னூட்டம் பாராட்டுக்குரியது.

PUTHUVAI PRABA
02-07-2012, 09:36 AM
பிரபா, இது என் கருத்து மட்டும் தான். மனதில் பட்டதை பதிந்து விட்டேன். இது தான் உண்மையாக/சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே என் பின்னூட்டம் தங்களுக்கு ஏதேனும் மனச்சங்கடதைக் கொடுத்தால் தோழியாக நினைத்து தயவுசெய்து மன்னித்து விடவும். நன்றி.
இராஜி சங்கர்

இராஜி சங்கர் அவர்களுக்கு..மனமார்ந்த பாராட்டுக்கள்....
ஆழமான பார்வை.தங்களின் விமர்சனத்திற்கு தலைவணங்குகிறேன். நிச்சயம் மனசங்கடத்திற்கு இடமில்லை.

இராஜிசங்கர்
02-07-2012, 09:55 AM
இராஜி சங்கர் அவர்களுக்கு..மனமார்ந்த பாராட்டுக்கள்....
ஆழமான பார்வை.தங்களின் விமர்சனத்திற்கு தலைவணங்குகிறேன். நிச்சயம் மனசங்கடத்திற்கு இடமில்லை.

நன்றி நண்பா...

தாமரை
02-07-2012, 10:23 AM
அந்தக் குழந்தையின் வடையை காக்கா நிஜமாவே தூக்கிட்டுப் போய் இருந்தா கதை சூப்பரா இன்ருந்திருக்குமில்ல. :)

PUTHUVAI PRABA
03-07-2012, 01:27 AM
தலைமுறை இடைவெளியின் பிரஸ்தாபம் என்பதை விடவும், இன்றைய சூழலில், ஒதுக்கப்பட்ட வயோதிகமும், சாதிக்கத் துடிக்கும் பால்யமும் சந்திக்கும் ஒரு புள்ளியைக் கதைப்படுத்தியமைக்குப் பாராட்டுகள் புதுவை பிரபா.
-கீதம்


தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி...