PDA

View Full Version : நட்புக்காலம்-அறிவுமதிஇ.இசாக்
31-12-2003, 10:46 AM
*
உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை
#

*
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....
#

*
அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது
#

*
நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ
#

*
உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்
#

*
பள்ளி மைதானம்
காலை
வணக்கம்
காற்று கலைத்ததைக்
கண்களால்
மூடினேன்
#

*
இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்
#

*
நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
சந்தேகங்களுக்குத்
துணையாய்ப்
புத்தகங்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
நிதானமாய்ப்
பேசிக் கொண்டிருந்தோம்
நாம்
#

*
அனைத்துக் கல்லூரிப்
போட்டிகளுக்கான
பங்கேற்பிற்காகத்
தற்செயலாக
அமைந்த
அந்தத்
தொடர்வண்டிப் பயணத்தில்
என்
தோள் வாங்கித்
தூங்கிய
உன் மூடிய விழிகளில்
விழித்தேன்
முதன் முதலாய்
நான்
#

*
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்
#

*
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
#

*
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
#

*
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை
#

*
நீ
நிரூபித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான்
மதிக்கும்
ஆண்மை
#

*
பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு
#

*
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்
#

*
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
#

*
பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத் துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை
#

*
உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன
#

*
போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்
#

*
'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு
#

*
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று
#

*
கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன
#

*
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது
#

*
காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று
#

*
பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்
#

*
அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறித்
தூங்கிக்கொண்டு வந்தோம்

தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது
#

*
சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிர்க்கச்
சிர்க்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்
#

*
எதைப் பற்றித்தான் நாம்
பேசிக் கொள்ளவில்லை
காதல் காமம்
குல்சாரி
தெறி
ஈழம்
அகிரா குரசேவா
புல்லாங்குழல்...
காற்றுக்குள் மிதக்கும்
நம்
உரையாடல்களைச்
சேகரிக்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா
#

*
கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
#

*
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்
#

*
என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
#

*
அந்தப் பந்தியில் நான்
மேற்பார்வை
செய்து கொண்டிருக்கையில்
உனது
இலையிலிருந்து
காற்றில் பறந்துவந்து விழுந்த
உடைந்ததே
அந்த
அப்பளத்திற்குத்தான்
முதலில் நாம்
நன்றி சொல்ல
வேண்டும்
#

*
இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த
அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக
பெண்ணே
உனக்குக் கற்றுக் கொடுத்தது
யார்
#

*
எனக்குத் தெரியும்
நீ சாப்பிடும் நேரத்தின் கடைசி குவளை
தண்*ணீரில் இருக்கிறேன்
நான்
#

*
அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன
#

*
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய
அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன்
மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
#

*
உனக்கான பதில்களை
என்னிடமிருந்து
நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிற போதெல்லாம்
தலைமுறைகளைத்
தாண்டிய நம்
பாட்களின்
உறைந்து கிடைக்கும்
மௌனங்களையெல்லாம்
உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான்
கருதுகிறேன்
#

*
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு
#

*
அந்த விளையாட்டுப்
போட்டியைப்
பார்க்க நாம்
ஒன்றாகச்
சென்றோம்
இரசிக்கையில்
இரண்டானோம்
திரும்பினோம்
மறுபடியும்
ஒன்றாகவே
#

*
உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்
#


*
உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதானப்படுத்திக்
கொள்வதற்காகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்
#

*
போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை
#

*
ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்
#

*
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது
#

*
சன்னலில்லாத
விடுதி அறையும்
அட்டவணைச் சமையலும்
நம்மை
வாடகைக்கு வீடெடுக்க வைத்தன
கல்லூரிக்கு
வெளியே
அறைக்குள் வந்து
இல்லறத்திற்காகவே கூடுதேடும்
இந்தச்
சிட்டுகளுக்குத் தெரியுமா
நமது நட்பு
#

*
ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி
#

மிகநேர்த்தியான வடிவமைப்பில்
வெளியான அறிவுமதி அவர்களின் நட்புக்காலம் தொகுப்பு.
நண்பர்களுக்காக.

இக்பால்
31-12-2003, 11:06 AM
முதலில் வியந்து ஒரு பாராட்டு தம்பி.

இனி...இப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறேன்.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
31-12-2003, 11:20 AM
நட்பையும் காதலையும் பிரித்துக் காட்டி
நட்பையும் விளக்கி காதலையும் தொட்டு
பழைய ஞாபகங்களை அவ்வப்பொழுது
கிள்ளும் கவிதை. மகிழ்ச்சி தம்பி.
-அன்புடன் அண்ணா.

இக்பால்
31-12-2003, 11:22 AM
தலைப்பில் ஏன் அத்தனை ஆச்சரியக் குறிகள்?

தலைப்புக்கு பெயர் கொடுக்காததின் தத்துவம்தான் என்னங்க இசாக் தம்பி?

-அன்புடன் அண்ணா.

aren
31-12-2003, 03:47 PM
ஆச்சரியக்குறி தலைப்பு கொடுத்திருப்பதின் அர்த்தம் என்னவோ?

இ.இசாக்
01-01-2004, 02:42 PM
மன்னிக்கவும் தோழர்களே!
இக்கவிதைகள்
இலக்கியம் பகுதியில் பதிவு செய்ததால்
வேறு கவிஞரின் படைப்பு என்பதை உணர்வீர்கள்
என நம்பினேன்.
தவறு நிகழ்ந்துவிட்டது.
இது
அண்ணன் அறிவுமதி அவர்களின் '' நட்புக்காலம்''
தொகுப்பிலிருந்து.

இளசு
01-01-2004, 06:49 PM
பலமுறை பலவரிகள் பரவலாய் மேற்கோள் காட்டப்பட்ட
அழகிய படைப்பு.

பகிர்ந்தமைக்கு நன்றி இளவலே..

Nanban
06-01-2004, 06:52 AM
ஏதோ என்னைத் தெரிந்து கொண்டு, எனக்கே, எனக்காக எழுதியது போன்ற பிரம்மை....... மீண்டும், மீண்டும் வாசிக்கத்தூண்டும் இயல்பான வரிகள். மெனகெடாது எழுதப்பட்ட மென்மையான உணர்வுகள்....... எப்படிச் சொல்லி மகிழ......

நல்ல பல கவிதைகளை அறிமுகப்படுத்தி, நம் அறிவையும் வளரச் செய்யும் நண்பர் இசாக்கிற்கு நன்றிகள் பல.........

மதுரகன்
09-05-2007, 05:18 PM
நட்புக்காலம்

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை


தொடரும்

mgandhi
09-05-2007, 06:26 PM
நல்ல கவி

அறிஞர்
09-05-2007, 06:31 PM
வாழ்த்து அட்டையில் கிடைக்காத இன்பம்
அன்பான உள்ளம் எழுதும் போது கிடைக்குமே..

தொடருங்கள்.. மது,,,

ஜோய்ஸ்
10-05-2007, 06:08 AM
அட்டையில் கிடைக்காமல் போன வாழ்த்துச் செய்தி,உங்கள் கவிதையில் கிடைத்து விட்டதே.

பாரதி
10-05-2007, 12:47 PM
அன்பு மது,

அறிவுமதியின் நட்புக்காலம் திஸ்கி மன்றத்தில் வந்ததாக நினைவு இருக்கிறது. மேற்பார்வையாளர்கள் ஒருங்குறியாக மாற்றி ஒரே திரியாக்கினால் அனைவரும் பயன் பெறுவார்கள்.

அறிஞர்
10-05-2007, 01:01 PM
பாரதி அண்ணா சொன்னபடி பழைய திரியை இணைத்தாச்சு.

அரசன்
10-05-2007, 01:52 PM
காதலுக்கும், நட்புக்கும் ஒரு விரிவான விளக்கம் இது. பாராட்டுக்கள் நண்பரே! கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.

மதுரகன்
10-05-2007, 04:54 PM
நண்பர்களே ஏற்கனவே நட்புக்காலம் நணஇபர் இசாக் இனால் பதிவு செய்யப்பட்டுள்ளதை தற்பாததான் அறிகிறேன்
இருப்பினும் அதில் விட்டுப்போன சில பகுதிகளை தருகிறேன்...

ஷீ-நிசி
10-05-2007, 05:03 PM
கவிதை பேசுகிறது இரண்டு இதயங்களுக்கான இடைவெளியை படிக்கின்ற இதயங்களுக்கு.. நாகரீகமான வார்த்தைகளை சில இடங்களில் எப்படி உபயோகபடுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் கவிஞர்...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

அறிஞர்
10-05-2007, 05:09 PM
நண்பர்களே ஏற்கனவே நட்புக்காலம் நணஇபர் இசாக் இனால் பதிவு செய்யப்பட்டுள்ளதை தற்பாததான் அறிகிறேன்
இருப்பினும் அதில் விட்டுப்போன சில பகுதிகளை தருகிறேன்...
அவசியம் தாருங்கள்.. படிக்க ஆவலுடன் இருக்கிறோம்

மதுரகன்
16-05-2007, 06:22 PM
எனது புத்தகத்தை நண்பர் கொண்டுசென்று விட்டார் கைக்கு கிடைத்ததும் தொடர்கிறேன்...