PDA

View Full Version : நாற்பதடி வெண்பா: நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்Dr.சுந்தரராஜ் தயாளன்
24-06-2012, 11:43 AM
நாற்பதடி வெண்பா:
நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்

[இன்னிசைக் கலிவெண்பா]
அன்றெல்லாம் நம்முன்னோர் அக்களிப்பாய் வாழ்ந்திட்டார்
நன்றென்றே நல்லியற்கை நல்கியதை ஏற்றார்கள்
தேங்காயும் நற்பழங்கள் தேர்ந்தெடுத்துப் பூசித்தார்
மாங்காயும் நல்லபலா வாழைவகை உண்டுவந்தார்
அன்றவருக் கச்சமில்லை அல்சரென்றும் கேன்சரென்றும்
நன்றாக வாழ்ந்தார்கள் நல்லதையே சிந்தித்தார்.
பாலைவன நாடுகளில்* பல்திராட்சைச் சாறுடனே
சோலைவளர் பேரீச்சம் சோர்வின்றி உண்டார்கள்
எத்தகைய சூட்டினிலும் ஏதமிகும் மண்ணிடையில்
சித்தமதே குன்றாமல் சீர்மிகுந்தே வாழ்ந்தார்கள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* அத்தனைபேர் நல்லுயிரை
காப்பதுவும் யாதென்றீர்? வாழைமரக் காய்கனியே!
கேரளத்தைப் பாருங்கள் கப்பையுடன் நேந்திரமும்
தாரளமாய் காலையிலே தக்கபடி உண்ணுகின்றார்.
இப்படியாய் இங்கிருக்க இன்றிளைய செந்தமிழர்
எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்
நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவு சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்துப் பேசுகிறார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!?
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?
உண்மையிதே ஆனாலும் உண்பதற்கு என்னவென்பீர்?
திண்மையுடன் நான்சொல்வேன் தின்பதற்குண் டேராளம்
நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.
[நேரிசை வெண்பா]
வாழ்த்திடுவோம் நல்லுணவை வந்தனங்கள் சொல்லித்தான்
தாழ்த்திடுவோம் நம்தலையை தண்டமிழா – பாழ்கொள்ளை
நோய்நொடிகள் நீங்கிநல்ல நுண்மையுற நாமுண்போம்
காய்கனிகள் கச்சிதமாய் சேர்த்து

பாலைவன நாடுகளில்* = அரேபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* = கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி,ருவாண்டா
போத்தென்றே* = போத்து = பறவை, விலங்குகளின் ஆணினத்தைக் குறிக்கும்
சொல். கேரளத்தில் (மலையாளத்தில்) எருமை.
மச்சையையும்* = மஜ்ஜை = எலும்பின் உட்திசு (மச்சை) = marrow of the bone.
[ஆதாரங்கள்: சென்னை பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி]

மேற்கொண்டு படிப்பதற்கு:
1. இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.ஆ. அப்பன். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, மூலிகை விளக்கங்கள், இயற்கை உணவு செய்முறைகள்.
2. டாக்டர் தேவேந்திர வோரா அவர்களின் “நம் நலம் நம் கையில் பாகம்-1 (தமிழ், ஆங்கிலம்), பாகம்-2, (ஆங்கிலம்).
3. இயற்கை வாழ்வியல் கலை. கொ.எத்திராஜ், சித்த வித்தை தவ மையம், சித்தர் வழி சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
4. எளிய முறை உடற்பயிற்சி-வேதாத்திரி மகரிஷி

----- Dr. சுந்தரராஜ் தயாளன்,பெங்களூர். .

vasikaran.g
24-06-2012, 12:07 PM
யம்மாடியோவ் ! ஐய்யா சுந்தர்ராஜ் அவர்களே அருமை அருமை ..இன்னமும் வெண்பாவும் வஞ்சிப்பாவும் களிக்கத்தேன் செய்யுது ..

கீதம்
03-07-2012, 01:52 AM
காய்கறிகளின் அருமை பற்றி காய்ச்சீர்களைக் கொண்டே விளக்கிய விதம் பாராட்டுக்குரியது.

கலி தீர்க்கும் வழிகளைக் கலிவெண்பா மூலம் காட்டி, களிப்பேருவகை கொள்ளச் செய்துவிட்டீர்கள்.

ஒவ்வொரு அடியையும் அழகுற அமைத்து எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாவியற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு தயாளன் ஐயா.

கலைவேந்தன்
08-07-2012, 02:54 PM
இயற்கை உணவின் மகத்துவத்தைச் சிறப்பிக்கும் அற்புதமான கலிவெண்பா ஐயா.. மிக வியந்தேன். பலமுறை வாசித்தேன். வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பொழிவை..!

பாராட்டுகள் என்று சொன்னால் அது மிக மிக குறைவே. என் செய்வேன்..?

கலைவேந்தன்
08-07-2012, 02:56 PM
தங்களை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்னும் ஆவல் மிகுகிறது ஐயா.. அடுத்தமுறை ஊருக்கு வந்தால் பெங்களூரில் தங்களைச் சந்திப்பேன் இன்ஷா அல்லாஹ்..!

Dr.சுந்தரராஜ் தயாளன்
17-07-2012, 01:36 PM
யம்மாடியோவ் ! ஐய்யா சுந்தர்ராஜ் அவர்களே அருமை அருமை ..இன்னமும் வெண்பாவும் வஞ்சிப்பாவும் களிக்கத்தேன் செய்யுது ..
மிகவும் நன்றி வசிகரன். முதலில் பின்னுடமிட்டவர் நீங்களே. :aktion033:

சிவா.ஜி
17-07-2012, 01:52 PM
வெகு அருமை....எனச் சொன்னாலும் அது சம்பிரதாயமே. இதமான கவிதை.....பதமாக பகிரும் நல்லுணவு தகவல்கள் நல்ல கவி வடிவத்தில், தெள்ளுதமிழ் வெண்பாவில் அள்ளுகிறது மனதை.

மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

(உடல்நலம் தேவலையா இப்போது?)

ஜானகி
17-07-2012, 04:03 PM
அறுசுவை விருந்து உண்ட மாதிரி திருப்தியாக இருக்கிறது. வாழ்த்த வகை தெரியவில்லை....!

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-07-2012, 06:47 AM
காய்கறிகளின் அருமை பற்றி காய்ச்சீர்களைக் கொண்டே விளக்கிய விதம் பாராட்டுக்குரியது.

கலி தீர்க்கும் வழிகளைக் கலிவெண்பா மூலம் காட்டி, களிப்பேருவகை கொள்ளச் செய்துவிட்டீர்கள்.

ஒவ்வொரு அடியையும் அழகுற அமைத்து எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாவியற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு தயாளன் ஐயா.

கீதம் அவர்களுக்கு மிக்க நன்றி...உங்களின் பின்னுட்டம் கண்டு அகமகிழ்ந்தேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
28-07-2012, 01:19 PM
இயற்கை உணவின் மகத்துவத்தைச் சிறப்பிக்கும் அற்புதமான கலிவெண்பா ஐயா.. மிக வியந்தேன். பலமுறை வாசித்தேன். வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பொழிவை..!

பாராட்டுகள் என்று சொன்னால் அது மிக மிக குறைவே. என் செய்வேன்..?
மிகவும் நன்றி கலைவேந்தன் அவர்களே...உண்மையில் உங்களின் முன்பு நான் ஒன்றுமில்லை...சாதாரணம்தான்.

jayaprakash
28-07-2012, 05:08 PM
இப்பவும் இப்படீல்லாம் எழுத ஆள் இருக்காகளா? தமிழ் பொழைச்சிக்கும்.

M.Jagadeesan
29-07-2012, 02:08 AM
இரக்கமின்றிக் கொன்று புசிப்போரே! நிற்க!
மரக்கறியின் மாண்பதனைப் பாவில் - உரக்கவே
ஓதும் தயாளராம் சுந்தரரின் நல்லுரையைக்
காதுகொடுத் துக்கேட்பீர் இங்கு.

சுகந்தப்ரீதன்
30-07-2012, 04:50 PM
இன்னிசை கலிவெண்பாவில் உங்களின் உளசுவையும் நளசுவையும் ஒருங்கே கண்டு உள்ளம் களிப்புற்றேன்.. தயாளன் ஐயா..!!:):)

எனக்கு மரபுகளின் வரம்புகள் தெரியாது..புரியாது.. இருந்தாலும் வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு பத்திகளாக்கி பதிந்தால் வாசகர்களுக்கு வாசிக்க வசீகரமாய் இருக்குமென்று தோன்றுகிறது... என் கூற்றில் தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா..!!

இயற்கை உணவின் அவசியத்தை எள்ளலுடன் எடுத்தியம்பிய மரபுகவிதைக்கு நன்றி ஐயா..!! தொடர்ந்து கவிபாடுங்கள்..!!:icon_b:

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-08-2012, 11:31 AM
தங்களை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்னும் ஆவல் மிகுகிறது ஐயா.. அடுத்தமுறை ஊருக்கு வந்தால் பெங்களூரில் தங்களைச் சந்திப்பேன் இன்ஷா அல்லாஹ்..!
தாராளமாக, கலைவேந்தன் அவர்களே...நானும் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அடுத்தமுறை ஊருக்கு வரும்போது சொல்லுங்கள் அதற்குத் தகுந்தார்ப் போல் ஏற்பாடு செய்யலாம்.:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
03-08-2012, 03:46 PM
வெகு அருமை....எனச் சொன்னாலும் அது சம்பிரதாயமே. இதமான கவிதை.....பதமாக பகிரும் நல்லுணவு தகவல்கள் நல்ல கவி வடிவத்தில், தெள்ளுதமிழ் வெண்பாவில் அள்ளுகிறது மனதை.

மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

(உடல்நலம் தேவலையா இப்போது?)
மிக நன்றி சிவா.ஜி அவர்களே. இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும், மேலும் எழுதத்தூண்டுகிறது. எனது உடல்நலம் இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு கூடுதலாகியுள்ளது:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-08-2012, 08:11 AM
அறுசுவை விருந்து உண்ட மாதிரி திருப்தியாக இருக்கிறது. வாழ்த்த வகை தெரியவில்லை....!

மிகவும் நன்றி ஜானகி அவர்களே :)

தீபா
04-08-2012, 08:46 AM
வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும் அலவுக்கு எனக்கு தகுதியில்லை..
நல்லாயிருக்குன்னு சொல்லணும்னா அதைப் படிக்கணும் இல்லையா, ஆனா நான் படிக்கலை. (புரிஞ்சாத்தானெ படிக்கிறதுக்கு.)

வாழ்த்துக்கள் அண்ணா

Dr.சுந்தரராஜ் தயாளன்
08-08-2012, 05:45 AM
இப்பவும் இப்படீல்லாம் எழுத ஆள் இருக்காகளா? தமிழ் பொழைச்சிக்கும்.

நிச்சயம் தமிழ் பிழைக்கும் நண்பரே. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னவரை / கனவுகண்டவர்களை எல்லாம் அது பொய்ப்பிக்கும். வருகைக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-08-2012, 03:25 PM
இரக்கமின்றிக் கொன்று புசிப்போரே! நிற்க!
மரக்கறியின் மாண்பதனைப் பாவில் - உரக்கவே
ஓதும் தயாளராம் சுந்தரரின் நல்லுரையைக்
காதுகொடுத் துக்கேட்பீர் இங்கு.
மிகவும் நன்றி ஜெகதீசன் ஐயா...அழகான சாற்றுக்கவி தந்தீர் நேரிசை வெண்பாவில்... இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-10-2012, 04:53 PM
இன்னிசை கலிவெண்பாவில் உங்களின் உளசுவையும் நளசுவையும் ஒருங்கே கண்டு உள்ளம் களிப்புற்றேன்.. தயாளன் ஐயா..!!:):)

எனக்கு மரபுகளின் வரம்புகள் தெரியாது..புரியாது.. இருந்தாலும் வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு பத்திகளாக்கி பதிந்தால் வாசகர்களுக்கு வாசிக்க வசீகரமாய் இருக்குமென்று தோன்றுகிறது... என் கூற்றில் தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா..!!

இயற்கை உணவின் அவசியத்தை எள்ளலுடன் எடுத்தியம்பிய மரபுகவிதைக்கு நன்றி ஐயா..!! தொடர்ந்து கவிபாடுங்கள்..!!:icon_b:

அழகிய பின்னுட்டம் தந்ததற்கு மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன். பொதுவாக, இரண்டு அடிகள் இருப்பது குறள் வெண்பா என்றும், மூன்று அடிகள் வருவது சிந்தியல் வெண்பா என்றும், நான்கு அடிகள் வருவது அளவியல் வெண்பா என்றும் சொல்லப்படும். நான்கில் இருந்து பதினோரு அடிகள் வரை உள்ளது பல்தொடை வெண்பா (பஃறொடை வெண்பா) எனப்படும். பன்னிரண்டு முதல் எவ்வளவு அடிகள் வேண்டுமானாலும் (ஆயிரம் அடிகள் கூட) நீளுவது கலிவெண்பா என்றும் அழைக்கபடுகிறது, தொல்காப்பியர் காலம் தொட்டு. தற்போது நான் எழுதியுள்ள இந்த வெண்பா நாற்பது அடிகள் உள்ளதால் இது கலிவெண்பா ஆகிறது. நீங்கள் சொல்வதுபோல் இடைவெளி இட்டு பத்திகளாகப் பதிந்திருக்கலாம். அதற்குப்பதிலாக, நிறங்களை மாற்றி பதியலாம் என்று வேறு வேறு நிறத்தில் பதிந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. போகட்டும், அடுத்த முறை நிச்சயம் பத்திகள் இட்டு பதிகிறேன். சரீங்களா?:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-12-2012, 05:07 PM
வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும் அலவுக்கு எனக்கு தகுதியில்லை..
நல்லாயிருக்குன்னு சொல்லணும்னா அதைப் படிக்கணும் இல்லையா, ஆனா நான் படிக்கலை. (புரிஞ்சாத்தானெ படிக்கிறதுக்கு.)

வாழ்த்துக்கள் அண்ணா
படிக்காமலேயே வாழ்த்துகள் சொன்ன தீபா அவர்களுக்கு மிக்க நன்றி!!!