PDA

View Full Version : சாலைகள் சொல்லும் கண்ணீர்க் கதைகள்....!!!



சிவா.ஜி
17-06-2012, 08:50 AM
நெடுஞ்சாலைப் பயணங்களில்
கறுத்த சாலைகளில்
காணக்கிடைக்கும்
ரத்தத் தீற்றல்களும், உடைந்த பாகங்களும்,
சக்கரங்களின் அவசர நிறுத்தலைக் காட்டும் அச்சுக்களும்...
அவைகளுக்குப் பின்னே வைத்திருக்கும்
கண்ணீர் கதைகளைச் சொல்லுகின்றன....!!
கணவனை இழந்த மனைவிகளையும்
பெற்றோரை இழந்த பிள்ளைகளையும்
பிள்ளையை இழந்த பெற்றோரையும்
நிச்சயித்தவனின் நிரந்தர கண்மூடலால்
ராசியற்றவளென்ற முத்திரைக் குத்தப்பட்டு
அடுத்த வரனுக்குக் காத்திருக்கும் கன்னிகளையும்
மகனில்லாவிட்டாலென்ன, பார் நம் மகள்
காரோட்டும் அழகையென பூரித்திருந்த
பெற்றவர்களின் கதறலையும்..
காதலனை, காதலியை இழந்த நெஞ்சங்களையும்...
தங்கள் கண்ணீர்க் கதைகளின் மாந்தர்களாய் வைத்துக்கொண்டு
மௌனமாய் படுத்துக்கிடக்கும் சாலைகள்....
யாரையும் கதைகளாக்க விரும்புவதில்லை
விபத்தை விதியென நினைக்காமல்
விதிகளைக் கடைபிடித்தால்
விவேகமான வேகம் செலுத்தினால்
இந்தக் கண்ணீர்க் கதைகள்
இல்லாமல் போய்விடும்....!!!

jayanth
17-06-2012, 12:33 PM
நன்றாய் சொன்னீர்கள் சிவா...(.) (மித)வேகத்துடன் விவேகமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் இத்தகைய நிகழ்வுகள் இருக்காதே...

தாமரை
21-06-2012, 08:37 AM
சாலைகளில் அடிக்கடி பயணிப்பவன் நான்..


விசித்திர நீதிமன்றம்!!
இங்கே மட்டும்
தவறிழைத்தது யார் என்பது
தண்டனைக்குப் பின்னேதான்
விசாரிக்கப்படும்

அன்புரசிகன்
21-06-2012, 11:57 AM
கவலை என்னவென்றால் எந்தபாவமும் அறியாதசாலையோரத்தில் நிற்பவர்கள் கூட தக்கசமயத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.


அண்மையில் முகப்புத்தகத்தில்பார்த்தது.


தயவுசெய்து இரத்தத்தை இரத்தவங்கியில் கொடுங்கள்... வீதிகளில் அல்ல....


என்று... தங்களதுகவிவரிகளைம்படிக்கும் போதும்தோன்றியது.




விழிப்புணர்வு ஊட்டும் வரிகள் அண்ணா...

M.Jagadeesan
21-06-2012, 04:06 PM
சாலையைப் பார்! சேலையைப் பார்க்காதே!

பயணம் செய்யும்போது செல்போனில் பேசாதே!
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம் !

போன்ற விளம்பரங்களை சாலை ஓரங்களில் எழுதி வைக்கவேண்டும்.

வாகன ஓட்டிகள் நினைவில் வைக்கவேண்டிய கவிதை ! பாராட்டுக்கள் சிவா.ஜி !

கீதம்
22-06-2012, 12:27 AM
சாலையோரக் கம்பங்களில் செருகப்பட்டிருக்கும் புத்தம்புது மலர்க்கொத்து காணும்போதெல்லாம் மனம் பிசையும் துயரம்.

எவருடைய இழப்பின் வலியையோ நித்தமும் புதிதாய்க் காட்டும் பூக்கள். பூக்கள் பார்த்து வலி பரவும் விநோதம்.

மனதில் இனம் புரியா வேதனை எழுப்பி, கூடவே...

நமக்காக வாழும் ஜீவன்களை நினைவுக்கு கொண்டுவந்து நிதானிக்கச் செய்யும் அதிசயம்.

கண்கள் தன்னிச்சையாய் வேகமானியைக் கண்காணிக்க, கட்டுக்குள் கண்டு மனதோரம் ஒரு பெரும் ஆசுவாசம்.

விபத்தின் சுவடுகளே இத்தனைத் துயர் தரும் என்றால் விபத்தின் தாண்டவம்?

மனம் பதைக்கும் வரிகளில் விபத்தின் வன்மையை, வலியை உரைத்து, இறுதியில் கண்ணீர்க் கதைகளை காணாமற்போகச் செய்யும் தீர்வும் தந்து கவிதை படைத்த விதம் மனம் தொட்டது. அருமை அண்ணா.

vasikaran.g
24-06-2012, 11:17 AM
வலி வளி வழி !
உங்கள் கவிதை ,
பின்னூட்டம்
எழுதும்
மனதையும்
சேர்ந்து
பிசைகிறது

சிவா.ஜி
25-06-2012, 09:08 AM
ரொம்ப சரியா சொன்னீங்க தாமரை. விசித்திரமும், கூடவே குற்றவாளி தப்பித்துவிடும் வேதனையும் உள்ளது.

சிவா.ஜி
25-06-2012, 09:10 AM
கவலை என்னவென்றால் எந்தபாவமும் அறியாதசாலையோரத்தில் நிற்பவர்கள் கூட தக்கசமயத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.


அண்மையில் முகப்புத்தகத்தில்பார்த்தது.


தயவுசெய்து இரத்தத்தை இரத்தவங்கியில் கொடுங்கள்... வீதிகளில் அல்ல....


என்று... தங்களதுகவிவரிகளைம்படிக்கும் போதும்தோன்றியது.




மிக நல்ல வரிகள் அன்பு. சில நொடி அலட்சியம் பயங்கரமான விபரீதம். சாலைவிதிகளை மதிப்பவர்களை சாலை மதிக்கும்....மீறுபவர்களை தண்டிக்கும்.

மிக்க நன்றி அன்பு.

சிவா.ஜி
25-06-2012, 09:12 AM
எத்தனைதான் விழிப்புணர்வு எச்சரிக்கைப் பலகைகள் வைத்தாலும்...வாகன ஓட்டிகள் தவறு செய்துகொண்டே இருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கபட வேண்டும்....கூடவே அனைவருக்கும் சட்டத்தை மதிக்கும் நேர்மை வேண்டும்.

மிக்க நன்றி ஜகதீசன் ஐயா.

சிவா.ஜி
25-06-2012, 09:13 AM
உண்மைதான் தங்கையே....அந்த சாலையோர மலர்க்கொத்துக்களைப் பார்த்தாவது வாழ்வின் சுவாரசியத்தை, வாழ்வதின் அர்த்தத்தை உணர்ந்தால்....விபத்துக்கள் குறையும்...மெல்ல மறையும்.

நன்றிம்மா தங்கையே.

சிவா.ஜி
25-06-2012, 09:14 AM
அழகாய் சொன்னீர்கள் வசீகரன். மிக்க நன்றி.

கலையரசி
28-06-2012, 01:41 PM
சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை நம்மவர்கள் எப்போது தான் தெரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.
சாலைகளில் சிதறிக் கிடக்கும் கண்ணாடிக் குவியல்கள் நெஞ்சில் ஒரு முள்ளாக உறுத்தத் தான் செய்கின்றன. வேதனையை வெளிப்படுத்தும் அருமையான ஒரு கவிதை. பாராட்டுக்கள் சிவாஜி சார்!

Keelai Naadaan
28-06-2012, 05:21 PM
தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமான கவிதை.
இது போன்ற விழிப்புணர்வு கவிதைகளை கூட சாலைகளில் பதாகையாக வைக்கலாம்.
அவசரம்...அலட்சியம்...குடிபோதை.....பிறர் தன்னை பார்க்க வேண்டும் என்ற புகழ் போதை.... இவற்றை தவிர்த்தால் விபத்துகள் குறைந்து பல குடும்பங்களின் விதி நல்ல படியாக அமையும்.
விபத்துக்கு பிறகு கொஞ்சம் மெதுவா போயிருந்திருக்கலாமே என தோன்றும். விபத்துக்கு முன்பாகவே யோசிப்பது நல்லது.

சிவா.ஜி
28-06-2012, 07:32 PM
ஆமாங்க மேடம். சிதறிக்கிடக்கிற அந்தக் கண்ணாடிக்குவியலைப் பார்க்கும்போது...அதற்குப்பின்னேயான கதறல் கேட்கிறது. எல்லோருமே விதிகளைப் பின்பற்றினால்...நலமே.

மிக்க நன்றிங்க கலையரசி மேடம்.

சிவா.ஜி
28-06-2012, 07:34 PM
மிகச் சரி கீழைநாடான் அவர்களே. விபத்துக்குப் பிறகு யோசிப்பதைவிட, விபத்துக்கு முன் யோசித்து நிதானமாய் செயல்பட்டால்...பல விபத்துக்களை தவிர்க்க முடியும்.

மேலானக் கருத்துக்கு நன்றி நண்பரே.

lenram80
29-06-2012, 12:33 PM
ஒவ்வொரு சாலையும் கறுப்புத் துணியால் மூடப்பட்ட கல்லறைகள்!
நொடி நொடியாய் வளரும் உயிர்
ஒரு நொடியில் போவது - ஏற்றுக் கொள்ளப்பட முடியாத உண்மை!

பத்திரமாய் பயணம் செய்யும் கவிதைக்கு நன்றிகள் சிவா.ஜி!

Sasi Dharan
29-06-2012, 12:40 PM
நல்லதொரு விழிப்புணர்வு கவிதை!
விபத்துக்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துதான் வருகின்றன தவிர
குறைந்தமாதிரி தெரியவில்லை...!

சிவா.ஜி
29-06-2012, 01:04 PM
ஆமாம் லெனின் ஒரு நொடியில் மரணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால்...அலட்சிய மனப்போக்குதான் இந்த அவலத்துக்கு காரணம். சமீபத்தில் நிகழ்ந்த சென்னைப் பேருந்து விபத்து உட்பட.

நன்றி லெனின்.

சிவா.ஜி
29-06-2012, 01:05 PM
விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும் சசிதரன்...பிறகு மெள்ள குறையும்.

நன்றி நண்பரே.

கலைவேந்தன்
30-06-2012, 11:58 AM
வீட்டில் காத்திருப்போரை ஒருகணம் நினைத்தால் வேகமாய் ஓட்டுவது குறையும். சாலைப் பாதுகாப்பை பலப்படுத்தும் பாங்கான கவிதை..! பாராட்டுகள் சிவா..!

உங்கள் கவிதைகளில் சமுதாய நோக்கும் பரிவும் மிகுந்திருப்பதை என்றும் காண்கிறேன். வாழ்த்துகள்...!

சிவா.ஜி
30-06-2012, 02:07 PM
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
05-07-2012, 03:43 PM
விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே


மிகவும் நன்று சிவா. ஜி அவர்களே. :aktion033:

சிவா.ஜி
05-07-2012, 05:47 PM
அழகான தமிழால் தாங்களித்த பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

(வாங்க....நலமா....இப்ப வேலைப் பளு பரவால்லையா?)