PDA

View Full Version : விண்மீன்கள்



ஆதி
15-06-2012, 06:31 AM
நிதம்நிதம் வானை
நிமிர்ந்தவள் பார்த்தால்
நீங்காமல் பதிந்துவிட்ட
நீள்விழி சுவடுகள்

பாவையர் மேனியை
பகல்விளக்கில் சுட்டதற்கு
மாலையில் விம்மிடும்
மேல்கருத்த வானம்


விண்ணவள் ஒருத்தியை
விண்ணவன் நோக்கையில்
மின்னவள் விழிகளை
மீறிவிழுந்த நாணத்துளிகள்

ரதியவள் ஆடிடும்
ரம்மிய அழகினில்
மதிகெட்ட வானவர்
வார்த்திட்ட ஜொள்ளுகள்

அங்கொரு ஆண்டவன்
அந்தரமாக மனைவியை
அணைத்திடும் முன்பொழுதில்
அவிழ்த்திட்ட ஆபரணங்கள்

இங்கொரு ஆண்டவன்
இன்பத்து பாலிலே
திளைத்திட்ட தருணத்தில்
திமிறிய விரகங்கள்

விண்ணக வீதியில்
விளையாட்டு மகிழ்வினில்
சின்னஞ் சிறியவர்
சிந்திய சிரிப்புக்கள்

வாலிபை ஒருத்தி
வடிவாய் உருட்டிய சோழிகள்
தோழி ஒருத்தி
தொலைய வீசிய வட்டாங்காய்கள்

கற்பகதருவிலே தேவப்பறவைகள்
கட்டிய கூடுகள்
காமதேனுவை கறக்கையில்
சிதறிய காம்பு தூறல்கள்

vasikaran.g
16-06-2012, 11:38 AM
விண்மீன்
பற்றி
செம்மீன்
ஒன்று
அம்மானை
பாடுகிறது ..

அருமை ஆதன் .

ஆதி
18-06-2012, 06:59 PM
நன்றி வசிகரன்

jayanth
19-06-2012, 10:30 AM
ஒருவார்த்தையில் பின்னூடம் இட்டால்...
அருமை...

கீதம்
04-07-2012, 10:41 PM
வானம் பார்க்கும்போதெல்லாம் வந்து சிந்தை நிறைக்கக்கூடும் ஆதனின் விண்மீன் வர்ணனைகள். கடைசி இரு பத்திகள் ரசனையின் உச்சம். பாராட்டுகள் ஆதன்.

தாமரை
05-07-2012, 04:40 AM
கவிதையில்
சில எழுத்துப்பிழைகள்
சில சொற்பிழைகள்
இருந்தும் இருந்தும்
அவையெல்லாம் இருண்டிருக்க
மின்னுகின்ற உவமைகள்
விண்மீன்கள்!!!