PDA

View Full Version : ஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….!!



பூமகள்
15-06-2012, 06:56 AM
ஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….!!


http://4.bp.blogspot.com/-jn1txz07Pfo/T9rJw8GuwCI/AAAAAAAAC64/AHH3wVZzyYQ/s1600/girl_story_image.jpeg

அத்தெரு வழி நடக்கையிலெல்லாம் எல்லார் கண்ணிலும் அக்கதவு படும்.. நீண்ட பெரிய மரக்கதவு பல ஆண்டுகாலமாக மழை கண்டு ஈரமேறி, வெயிலின் காட்டலில் முறுக்கேறி இளவட்ட பயல்களின் அரும்பு மீசை முறுக்கைப் போல் வளைந்து நெளிந்து நிற்கும்..

அந்தக் கதவு பல நேரம் அடைத்தே இருக்கும்.. வெகு சில நேரத்தில் மட்டுமே அதன் மேல் அச்சிறுமி ஏறி இங்குமங்கும் ஆடிய நிலையில் காணலாம்.. அவள் செந்தூர வானத்தின் வெளிறிய மேகம் போல் வெளுத்திருந்தாள்.. அது அழகால் வந்த வெண்ணிறமாய்த் தெரியவில்லை.. சத்தின்றி, ரத்தமற்று மெலிந்து காணும் அவள் உடல் அதனை நன்கு உணர்த்தியது..

அவள் கண்கள் எதையோ தொலைத்த சோகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.. எப்போதேனும் அவ்வழியில் அவளொத்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவள் ஏக்கம் அதில் மேலும் எட்டிப் பார்க்கும்.. பள்ளிச் செல்ல சீருடையோடு போகும் பள்ளிக் குழந்தைகளின் சிரிப்பொலியும் பேச்சுகளும் அவளை கதவிடுக்கில் ஒளிந்தபடி பார்க்க வைக்கும்.. அவளை நான் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவள் முற்றத்தில் பெரும்பாலும் கூட்டி தண்ணீர் இட்டுக் கொண்டிருப்பாள்.. வீட்டினுள்ளிருந்து வரும் கஞ்சியின் வாசனை அவள் அரிசிச் சோறு சமைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொடுக்கும்..

கிழிந்த தன் உடுப்புகளில் அழகழகாய் தையல் கடை குப்பை துணித் துண்டுகளைக் கச்சிதமாய் தைத்திருப்பாள்.. அது அந்த அழுக்கேறிய உடப்பை வனப்பாக்கியிருக்கும்.. ஒன்பது பத்து வயதிருக்கும் அவளுக்கு… தலை முழுக்க தேங்காய் நாறான கூந்தலை பல நேரம் அவள் அலட்சியப் படுத்தி ஒருவாறு முடிந்திருப்பாள்.. சில நேரம் அதில் பக்கத்து வீட்டில் மலரும் சின்ன ரோஜாக்களைச் சூடியிருப்பாள்..


அக்கதவுகளுள் செல்ல யாருக்கும் துணிவு வந்ததில்லை.. காரணம் பல நேரம் அக்கதவு வழி கசியும் இறுமலோடான கரடு முரடான கெட்ட வார்த்தைகளென்று ஒரு நாள் யாரோ சொல்ல அறியப் பெற்றேன்.. மற்றுமொரு நாள், அவ்வசை மொழிகளை அக்கதவைக் கடக்கையில் கேட்டுமிருந்தேன்.. அச்சிறுமி கதவைத் திறந்து அதைத் தாங்கி விசும்பியபடி நிற்பதைக் காண நேர்கையில் அவள் விழி நம் விழி பார்த்ததும் குனிந்து கொள்ளும்.. ஆற்றாமையும் அவமானமும் அவள் முகத்தை இன்னும் இருளுக்குக் கொண்டு சென்றிருக்கும்..


அச்சிறுமி பற்றிய நினைவு தொடர்ந்து சில காலம் உறக்கமில்லா நெடிய இரவுகளாக என் இரவுகளை மாற்றியது.. அழுதழுது வீங்கிய கண்களோடு வேறொரு சமயம், சிறுமியைக் காண்கையில் அவள் தன் பிசுபிசுப்பான முடியை வாரிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கென்று தோழியில்லை.. யாரோடும் அவள் பேசுவதைப் பார்த்ததுமில்லை..


அவ்வீடு பற்றி யாருக்கும் அதிக நாட்டமிருந்ததில்லை.. ஓர் வயோதிகர் கடும் இறுமல் நோயால் போராடுவதாகவும், அவரின் பேத்தியான அச்சிறுமி தான் அவருக்கு துணையெனவும் பக்கத்து வீட்டு பூந்தோட்டக்காரர் உரைத்திருந்தார்..


ஓர் காலை நேரம், என் பணிக்குச் செல்வதையும் தவிர்த்து, அச்சிறுமி வீட்டினுள் நுழைந்து என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி வெகு வேகமாக நடந்த வண்ணம் அத்தெருவை அடைய..


தெருவில் அச்சிறுமி வீட்டருகே பெருங்கூட்டமொன்று கூடியிருந்தது.. விரைந்து அக்கூட்டதினுள் நுழைந்து அவள் முகம் காண தேட அதிர்ச்சியில் கண்கள் உறைந்தது..


அழுக்குத் துண்டையும் கிழிந்த பழுப்பேறிய வேட்டியையும் எலும்புடலோடிருந்த அம்முதியவர் அக்கதவருகே விழுந்திருந்தார்.. கண்கள் மேல் நிலைக்க.. வாய் திறந்த நிலையில் அவரின் நிலை அவர் மரணமடைந்திருப்பதைக் காட்டியிருந்தது.. கைகளிலும் கால்களிலும் சங்கலி பூட்டியிருக்க.. அது பாதியறுந்து கீழே கிடந்தது..


சிறுமி ஓர் மூலையில் தன் கால்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது அழுத வண்ணம் இருந்தாள்.. அவளோடான என் அன்புப் பார்வை அவள் அருகில் எனைக் கொண்டு சென்றது.
என் வருகை அவளறியச் செய்ய.. கதவு தாண்டி அவள் குடிசை நுழைந்தேன்.. மூளையில் கிடத்தப்பட்ட அந்த கட்டிலும், மற்றொரு மூலையில் கூட்டப்பட்ட அடுப்பும் போடப்பட்டிருந்தது.. இரு அலுமனியப் பாத்திரமும், ஒரு மண் பானையும் அடுப்பருகே வைக்கப்பட்டிருந்தது..


சிறுமியின் விசும்பல் ஓயவில்லை.. வேடிக்கை பார்ப்பவர் மெல்ல கலையத் துவங்க.. நான் காவல் துறைக்கு தகவல் சொல்ல ஆளை அனுப்ப ஏற்பாடு செய்தேன்.. அச்சிறுமி குறித்து அடுத்த வீட்டு தோட்டக்காரரிடம் சொந்தங்கள் பற்றி கேட்க.. எங்கிருந்தோ ஒரு வருடம் முன்பு வந்தனர்.. உறவென்று இவ்வூரில் யாருமில்லை என்றுரைத்தார்..


உடலை கதவருகிருந்து எடுத்து கூடத்தில் கிடத்தி, மாலை வாங்கி வந்து அணிவித்தேன்... சிறுமி அப்போதும் அழுகை ஓயாமல் விசும்பிய வண்ணமே இருந்தாள்.. மெல்ல அவள் தலை கோத, அவள் திடுக்கிட்டு ஏறிட்டாள்.. கண்கள் சிவக்க.. முகமெல்லாம் வீங்கியிருக்க அவளின் கோலம் மனதை வாட்டியது..என் கண்கள் கண்டதும் சின்ன ஆறுதல் கிட்டியிருக்கக் கூடும்.. அழுகை நின்றிருந்தது.. சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்து அவரை மின்மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஆட்கள் வந்தனர்.


கூட்டம் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி வெளியேறத் தலைப்பட்டனர்.. சிறுமி அதன் பின் அழவே இல்லை.. இருந்த இடம் விட்டும் அசையவுமில்லை.. மாலை நெருங்க.. அவளை விட்டு எப்படி செல்வதென்று யோசனை வரத் துவங்கியது.. அவள் நாள் முழுதும் உண்ண மறுத்ததால் பசியில் வாடித் துவண்டு அவ்விடத்திலேயே படுத்திருந்தாள்.. சொல்லாமல் செல்லச் சொன்ன சிலர், என்னிடம் சொல்லாமலே சென்றிருந்தனர்.. இறுதியில் ஓர் முடிவெடுத்து அவள் கை பற்றி வெளியே வந்தேன்..


அவ்வீட்டு கதவு அதன் பின் திறக்கவே இல்லை.. வழியெங்கும் மஞ்சள் பூக்கள் எங்களை இளஞ்சூரியன் வெளிச்சத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தது.. அச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..

ஜானகி
15-06-2012, 10:05 AM
சிறுமியின் கண்ணீர் பொறுக்கமாட்டாமல் இறைவனே ஒரு தந்தையாக மாறினானோ...?

மரவெட்டை மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தந்தையாக மாறின மனிதாபிமானியை பாராட்டுவோமே...?

சோகமாக ஆரம்பித்த கதையை சுபமாக, சுகமாக முடித்ததற்கு நன்றி. சினிமா பார்ப்பது போலிருந்தது....!

நடைமுறை வாழ்க்கையிலும் இந்தமாதிரி தந்தைகள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்...! அதனால்தான் வானம் பொழிந்துகொண்டிருக்கிறது..

sarcharan
15-06-2012, 10:10 AM
நல்ல கதை. நன்றாய் இருந்தது.

[QUOTE=பூமகள்;551563] அச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..</QUOTE>

ஆரம்பத்தில் சிறுமியை பின்தொடர்ந்து சென்றது/ கவனித்தது எல்லாம் ஒரு பெண்மணியை இருக்கும் என்று நினைத்தேன்.

கதையின் கடைசி வரிகள் ஒரு சாயலில் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தை நினைவுபடுத்தியது

கீதம்
16-06-2012, 02:55 AM
மரவட்டையெனச் சுருங்கிய மனங்களிடையே வாழ்ந்த கூட்டுப்புழு அவள். பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கத் துடிப்பவளை முடக்கி, ஒதுக்கி வாழும் சமூகத்தில், மனம் விரிந்த மனிதர்களும் உண்டு என்பதை மிகவும் அழகாக, ஆழமாக உணர்த்திய கதை.

அவ்வீட்டையும் வெளியுலகையும் பிரிக்கும் அந்த இறுகிய மரக்கதவைப் போலவே, அவளைச் சுற்றிலும் ஒரு இறுக்கமான சூழல்.

அக்கதவில் தொங்கி ஊ(ஞ்)சலாடும் சிறுமியின் நிலை அம்மனிதர்களிடம் தன்னையும் சமூகத்தின் ஒரு அங்கமாய் இணைத்துக்கொள்ளக் கெஞ்சுவது போலவே எனக்குத் தோன்றுகிறது.

மனக்கண்ணில் ஓவியமாய் வரையத்தக்கக் காட்சிகளை அற்புதமாய் சித்தரித்த பாங்கைப் பாராட்டுகிறேன் பூமகள்.

இயலாமையின் வெளிப்பாட்டாய் அக்கிழவனாரின் வசைமொழிகள். அதன் தகிப்புத் தாளாமல் தவிக்கும் குழந்தையின் தவிப்பினைச் சொல்லிய விதமும், மற்றும் இன்னதெனக் குறிப்பிடாமல் அச்சிறுமியின் இயல்புகளைக் குறிப்பிட்ட விதமும் (நேர்த்தி - கிழிசல் உடையையும் அழகாய் தைத்து உடுத்தியிருப்பது, அழகுணர்வு - ரோஜாவை சூடியிருப்பது, சுத்தம் - கூட்டித் தண்ணீர் தெளிப்பது, பொறுப்பு - சோறாக்குவது, படிப்பின் மீதான ஆர்வம் -- பள்ளிக்குழந்தைகளை ஏக்கமாய்ப் பார்ப்பது இவை போன்று...) மனம் கவர்ந்தன. இத்தகு இயல்புள்ள சுயகௌரவமிக்க ஒருத்தி காலத்தின் கையில் அகப்பட்டு அலங்கோலமாவதற்குள், அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பையும் கொடுத்து, கதையை முடித்தவிதம் மனம் நெகிழ்த்துகிறது. அருமையான மனம் தொட்ட கதைக்குப் பாராட்டுகள் பூமகள். யதார்த்த வாழ்விலும் இது போன்ற ஈரமனங்கள் சில அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது ஆறுதல்.

(சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. களையப்பட்டால் இன்னும் ரசிக்கும் பூமகள்.)

Keelai Naadaan
16-06-2012, 02:51 PM
அருமையான வர்ணனை. கவிதை நயமாய்.
மரவெட்டை மனிதர்களுக்கு மத்தியில் மலர்களாய் மணம் வீசும் மனிதமும் இருப்பதை உறுதி செய்கிறது.
வாழ்த்துக்கள்

jayanth
16-06-2012, 05:47 PM
இதுதான் மனித நேயமோ...(.) நல்ல கதை(.)

பூமகள்
17-06-2012, 03:33 AM
முதல் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் ஜானகி அம்மா.

உண்மை தான்.. இத்தகைய தந்தைகள் தரணியில் இருப்பதால் தான் இன்னும் வானம் தன் ஈரமனதை நமக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.. :)

சிவா.ஜி
17-06-2012, 08:54 AM
கவிதையாய் ஒரு கதை. அந்த சிறுமியின் நிலை சொல்லும் வரிகளில் வர்ணிப்பையும் தாண்டி ஒரு சோகம் இழையோடுகிறது.


பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரிய வேண்டிய வயதில் கூட்டுப்புழுவாய் வீட்டுக்குள் அடைந்திருக்க வேண்டிய நிலை. அந்தக் கிழவரின் மரணம் இந்த சிறுமிக்கு ஒரு விடுதலையாகவே தோன்றுகிறது.


இந்தத் தாயுமான தந்தைக் கிடைத்ததில் அவளது புது உலகம் பூப்புத்திருக்கிறது.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கையின் கதை....நல்ல கருத்தை சுவையான நடையில் அளித்திருக்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
22-06-2012, 01:16 PM
கண்டுகொள்ளபடாத குழந்தைகளின் உலகத்தை உருக்கத்துடன் நெருக்கத்தில் சென்று எடுத்துகாட்டும் குறும்படத்தை பார்த்தது போன்ற உணர்வு..!!

அழகியலுடன் கூடிய தேர்ந்த எழுத்து நடை... நீ சிறந்த கதைசொல்லியாகி விட்டாய்... பாராட்டுக்கள் பூமகள்..!!