PDA

View Full Version : ’ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ – ஜெயகாந்தன்



கலையரசி
09-06-2012, 02:47 PM
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்துள்ள எழுத்தாளர் ஜெயகாந்தனின் ’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்,’ என்ற நாவலை அண்மையில் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

இது தான் ஆசிரியருக்கு மிகவும் பிடித்த நாவலாம். அவரது நாவல்களிலேயே இது தான் மிகவும் சிறப்பானதென்று இலக்கிய விமர்சகர்கள் சுட்டுவதாக முன்னுரை மூலம் அறிந்தேன்.

இரண்டாம் உலகப்போரின் போது சபாபதிப்பிள்ளை, மைக்கேல் அவரது மனைவி மூவரும் ரங்கூனிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வரும் வழியில் ரயில் நிலையத்தில் அநாதைக் குழந்தையாகக் கண்டெடுக்கப்படுகிறான் ஹென்றி.

தன் வளர்ப்புத் தந்தையின் மறைவுக்குப் பின் பெங்களூரிலிருந்து அவரது கிராமமான கிருஷ்ணராஜபுரத்துக்கு ஹென்றி வருகிறான். இவ்வூரின் வாழ்க்கை சூழலே நாவலின் பின்னணியாக அமைந்துள்ளது.

அவ்வூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜன் என்பவனுடன் சிநேகம் ஏற்படுகிறது. தன் கிராமத்துப் பழக்க வழக்கங்களில் அதிருப்தியும் வெட்கமும் கொள்கிறவனாகவும் அச்சூழலில் அந்நியப்பட்டும் வாழ்கிறான் இவன். ஆனால் எங்கோ பிறந்து பெங்களூரில் வளர்ந்த ஹென்றி, தன் வளர்ப்புத் தந்தையின் கிராமத்துக்கு வந்து, அந்த வாழ்க்கையை அதன் இயல்புகளோடு ஏற்றுக்கொண்டு கிராமச் சூழலோடு ஒன்றிப் போகிறான்.

பூட்டப்பட்டுக் கிடக்கும் தந்தையின் வீட்டை முதன்முதலாகப் பார்க்கும் போது அவன் நெஞ்சு படபடக்கிறது.

முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் பூட்டப்பட்ட அந்த வீட்டின் கதையையும் அது பூட்டப்பட்டதற்கான காரணத்தையும் தந்தை வாயிலாக அவன் தெரிந்து கொள்ளும் இடம், அவனைப் போலவே நம்மையும் நெகிழ வைக்கிறது.
.
பப்பாவின் மனைவி என்னவானாள்? சித்தப்பிரமை பிடித்து நிர்வாணமாக அலையும் அந்தப் பேபி யார்? ஹென்றியின் வார்த்தைகளுக்கு மட்டும் அவள் கட்டுப் படுவதேன்? இது போன்ற சில மர்ம முடிச்சுக்களைக் கடைசி வரை அவிழ்க்காமல், வாசகரின் அனுமானத்திற்கே விட்டிருப்பது சிறப்பு.

ஊர், மொழி, இனம் கடந்த ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்,’ என்ற உயரிய் மனப்பான்மை கொண்ட உலகப் பொது மனிதனாக ஹென்றியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ’என் உள்ளம் தான் ஹென்றி,’ என்று ஜெயகாந்தன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறாராம்.

இக்கதாபாத்திரம் பற்றிச் சுந்தர ராமசாமி சொல்வதாவது:-

“இந்நாவலில் ஹென்றி என்ற கதாபாத்திரம் சமூகத்துக்கு வெளியே நிற்கிறான். நம்மை ஒத்த பழக்க வழக்கங்களைக் கொள்ளாதவனை அந்நியன் என்று சொல்கிறோம். அவனைப் புறக்கணிக்கிறோம். அவன் மீது ஒரு முத்திரையைக் குத்துகிறோம். சமூகத்துக்கு அவன் ஆகாதவன் என்கிறோம். தொடர்ந்து அந்த நாவலுக்குள் பயணம் செய்கிற போது ஹென்றியும் நம்மைப் போன்ற மனித உணர்ச்சி கொண்டவன் தான் என்ற உண்மை வெளியாகிறது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட அதிக மனிதத்தன்மை கொண்டவன் என்பது வெளிப்படுகிறது”

வாய்ப்புக் கிடைத்தால் வாசிக்க வேண்டிய நாவல்.

சிவா.ஜி
09-06-2012, 05:12 PM
மிக அருமையான விமர்சனம் மேடம். தேடிப் படிக்கவேண்டிய கதைகளை..அறிமுகப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி.

Keelai Naadaan
09-06-2012, 05:45 PM
அருமையான கதையை-காவியத்தை நினைவு படுத்தியிருக்கிறீர்கள் நன்றி. இந்த கதையின் மனிதர்களுடன் மானசீகமாக வாழ்ந்தது உண்டு.

ஹென்றி - பப்பா (சபாபதி பிள்ளை) - மம்மா - பரியாறி - தேவராஜன்-அக்கம்மா - அவர்களின் தாத்தா - கிளியாம்பா - அவளது தாய் தகப்பன் - போஸ்ட் அய்யர் - மணியக்காரர் - துரைக்கண்ணு - அவர் மனைவி நவநீதம் - பிள்ளைகள் - மாமியார் கிழவி - லாரி கிளீனர் பையன் - கிழங்குக்காரி - பேபி - ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதை விட்டு நீங்காதவை.

கலையரசி
26-06-2012, 01:27 PM
அருமையான கதையை-காவியத்தை நினைவு படுத்தியிருக்கிறீர்கள் நன்றி. இந்த கதையின் மனிதர்களுடன் மானசீகமாக வாழ்ந்தது உண்டு.

ஹென்றி - பப்பா (சபாபதி பிள்ளை) - மம்மா - பரியாறி - தேவராஜன்-அக்கம்மா - அவர்களின் தாத்தா - கிளியாம்பா - அவளது தாய் தகப்பன் - போஸ்ட் அய்யர் - மணியக்காரர் - துரைக்கண்ணு - அவர் மனைவி நவநீதம் - பிள்ளைகள் - மாமியார் கிழவி - லாரி கிளீனர் பையன் - கிழங்குக்காரி - பேபி - ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதை விட்டு நீங்காதவை.

எல்லாப் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதிலிருந்து இந்நாவலை எவ்வளவு தூரம் மனம் ஒன்றிப்படித்திருக்கிறீர்கள் என்பது விளங்குகிறது. கருத்துக்கு மிக்க நன்றி கீழை நாடான்!

பாரதி
26-06-2012, 02:32 PM
இந்நாவலைக் குறித்த விமர்சனங்களை பல முறை படித்திருந்தாலும் இதுவரை நாவலைப் படித்ததில்லை. உங்கள் விமர்சனமும் நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது. நன்றி.

கலையரசி
28-06-2012, 01:30 PM
இந்நாவலைக் குறித்த விமர்சனங்களை பல முறை படித்திருந்தாலும் இதுவரை நாவலைப் படித்ததில்லை. உங்கள் விமர்சனமும் நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது. நன்றி.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

Ravee
28-06-2012, 03:08 PM
http://img1.dinamalar.com/admin/Bookimages/307727.jpg

ஆஹா நான் முதல் முதலாக படித்த சமுக நாவல் இது . இந்த நாவலை படித்த பின் ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன் . யாருக்காக அழுதான் , ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் , என் மனதை ஒட்டிய நாவல்கள் . இந்த நாவலில் மின்னலாக தொட்டு விட்டு போகும் காட்சிகளிலும் வசனங்களிலும் ஹென்றியின் பாத்திரத்தை சிகரத்திற்கு நகர்த்தி போகும் ஜெயகாந்தன் பல சம்பவங்களில் நம் வாழ்க்கையும் தொட்டு போவார். மாமியார் கிழவி குழந்தைகளை பராமரிப்பது , ராஜா தேசிங்கு பாடலை குழந்தைகளோடு நம்மையும் வாய்விட்டு பாட வைப்பது , சித்தப்பாவின் அதட்டலான பாசம் , அந்த கிளினர் பையன் , நிர்வாணமாக வந்து போகும் மன நலம் இல்லாத பெண் , அதற்கு மேல் தந்தையின் பாசத்தை ஹென்றியிடம் காட்டும் காட்சிகள் பக்கத்திற்கு பக்கம் காட்சிகளாக கண் முன் வந்து போகும் நாவல் இது .

கலையரசி
01-07-2012, 11:49 AM
இந்நாவலை நன்கு அனுபவித்து வாசித்திருக்கிறீர்கள் என்பது உங்களது பின்னூட்டத்திலிருந்து புரிகிறது. பகிர்வுக்கு நன்றி ரவி.