PDA

View Full Version : ஒய் திஸ் தலைவலி?



அமீனுதீன்
05-06-2012, 06:03 PM
உலகின் ஈடு இணையற்ற கவரேஜ் கொண்ட அல்டிமேட் நெட்வொர்க்... மனித மூளை!
6 லட்சம் நரம்புகள், 8 ஆயிரம் கோடி நியூரான்கள் எனப் பிரம்மாண்டமாக இயங்கும் ஒரு தனி உலகம் அது. சராசரியாக 1,500 கிராம் எடைகொண்ட இதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ, ஒரு நுண்இழை சிதைந்தாலோ, பாதிப்பு வந்தாலோ... தலைவலிதான்.

மருத்துவம் வளர்வதற்கு முந்தைய காலக்கட்டத்தில், தலைவலி வந்தால், 'ஏதோ தெய்வக் குத்தம்’ என்றே நினைத்தார்கள். 'தலைக்குள் கடவுள் புகுந்துகொண்டு ஆட்டிப்படைப்பதால்தான் தலைவலி வருகிறது’ என்றே நம்பினார்கள். சுமேரியர்கள்தான் 'கடவுளுக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலைகள் இருக்கின்றன. தலைவலி வருவதற்கான முக்கியக் காரணம் மூளைக்குள் நிகழும் ஆரோக்கியக் குறைபாடுதான்’ என்று கண்டுபிடித்தார்கள்.

இதில் மகா ஆச்சர்யம் ஒன்று உண்டு. உடலில் எங்கு அடிபட்டாலும் வலியை முந்திக்கொண்டு முதலில் அதை உணரும் மூளைக்கு, தன் வலியை உணரத் தெரியாது.

''மூளைக்கு அடியில் இருக்கும் 'டிரை ஜெமினல் நியூரான்’கள்தான் தலைவலியை மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. அதன் பிறகுதான் வலி உணரப்படும். மூளைக்குள் என்ன செய்தாலும் வலியை உணராத மூளை, தன்னைச் சுற்றி இருக்கும் உறையிலோ அல்லது ரத்த நாளங்களிலோ பாதிப்பு ஏற்படும்போது வலியை உணர்வது இதனால்தான்'' என்று விளக்குகிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணரான லட்சுமி நரசிம்மன்.

ஒற்றைத் தலைவலி, பித்தத் தலைவலி, நீர்க்கட்டுத் தலைவலி, கண் பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலி, அதீத வெயிலினால் ஏற்படும் தலைவலி என வகை வகையாகப் பெருத்து நீண்டுகொண்டே போகிறது தலைவலிப் பட்டியல். இவை எல்லாவற்றையும் முதல் நிலைத் தலைவலி, இரண்டாம் நிலைத் தலைவலி என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அடிக்கடி வரும் விருந்தினர்கள்போலவோ, அவ்வப்போது வந்து செல்லும் மின்சாரம்போலவோ வரும் தலைவலிகள் எல்லாம் ஆபத்து இல்லாத முதல் நிலைத் தலைவலிப் பட்டியலில் வருகின்றன. காபி சாப்பிடாதது, தூக்கம் இல்லாதது, மெகா சீரியல் பார்க்காதது, டென்ஷன் காரணமாக வருவது என்று பல தலைவலிகளும் இதில் அடங்கும். இவை எளிதில் குணமாகிவிடும். ஆனால், இரண்டாம் நிலைத் தலைவலிகள் கொஞ்சம் ஆபத்தானவை.

மூளைக்குள் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளால் வருபவை. சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், வாழ்நாள் முழுக்கத் தலைவலிதான். இதேபோல், சைனஸ் தலைவலி மற்றும் பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலிக்கும் நீங்கள் டாக்டரைச் சந்திப்பதே நலம்.
தலைவலி வந்தவுடன் நாம் முதலில் தேடுவது கண் மருத்துவரைத்தான். தலைவலி வருவதற்கான காரணங்களையும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார் கண் மற்றும் நரம்பியல் மருத்துவரான அம்பிகா.

''பார்வைக் குறைபாடு இருந்து கண்ணாடி அணியாத பட்சத்திலோ அல்லது கண்ணுக்கு ஏற்ற கண்ணாடியை அணியாமல் இருந்தாலோ, தலைவலி வரும். கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ பாதிப்பு வரலாம்.

சில பெண்கள் தங்களின் கணவரின் கண்ணாடியை உபயோகப்படுத்துவார்கள். 'படிக்கிறதுக்காகப் போட்டிருக்கேன்...’ 'கொஞ்ச நேரம் கண்ணாடி போட்டிருந்தா, தலைவலி சரியாயிடுது...’ என்று காரணமும் சொல்வார்கள். ஆனால், இது தவறு. ஒருவரின் கண்ணாடியின் பவரும் மற்றவருடைய கண்ணின் பவரும் வேறுவேறு. மாற்றிப் பயன்படுத்தும்போது, நிச்சயமாகத் தலைவலி வரும்.

சுய மருத்துவம் என்பது தலைவலியில் அதிகம். போகிறபோக்கில் ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொண்டு போவார்கள். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக வலியை நிறுத்தினாலும், நிறையப் பக்க விளைவுகளை உண்டாக்கும். உச்சக்கட்டமாக கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று எச்சரிக்கிறார் அம்பிகா.

முதல் நிலைத் தலைவலியான மைக்ரேன், க்ளஸ்டர், டென்ஷன் தலைவலி மற்றும் இரண்டாம் நிலைத் தலைவலிகள்பற்றி டாக்டர் லட்சுமி நரசிம்மன் விவரிப்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஒற்றைத் தலைவலி! (மைக்ரேன்)
பரம்பரைக் குறைபாட்டால் வரும் ஒற்றைத் தலைவலி இது. பெண்களை அதிகம் தாக்கும் என்பதால் இதை 'பெண்களுக்கான தலைவலி’ என்று சொல்லலாம். மன அழுத்தம், சேராத உணவுப் பொருட்கள், அதிக வெளிச்சம், தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம், சாப்பிடாமல் இருப்பது, தலையில் காயம்படுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். அதுவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி குறைந்துவிடும். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிடும்.
ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன், கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு... போன்ற அறிகுறிகள் தென்படும்.

க்ளஸ்டர் தலைவலி
இதை 'ஆண்கள் தலைவலி’ என்று சொல்லலாம். குடிப் பழக்கம் உள்ளவர்களும் உடல் பருமனானவர்களும் இந்தத் தலைவலிக்கு எளிதில் இலக்காவார்கள். பால்காரர் வீட்டுக்கு வருவதுபோல் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்துபோகும். இன்று வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வந்தால், நாளை வெள்ளிக்கிழமையும் காலை 6 மணிக்கு வரும். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குக்கூட நீடிக்கலாம். பிறகு, சரியாகி மீண்டும் 10 வருடங்கள் கழித்து வந்துகூடப் பழி வாங்கலாம்.

டென்ஷன் தலைவலி
இன்றைய அவசர வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் தலைவலி இது. அந்த மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ-யை நினைத்துக்கொண்டோ, டார்கெட்டை மனதில் வைத்துக்கொண்டோ பதற்றத்தில் ஓடுபவர்களுக்கு அதிகம் வரும். டென்ஷனைக் குறைத்தால், இந்தத் தலைவலி போயே போச்!

இரண்டாம் நிலைத் தலைவலி
இந்த வகை தலைவலிகள் கொஞ்சம் சீரியஸானவை. மூளையில் கட்டி, மூளைக் காய்ச்சல், ரத்த நாளங்கள் வெடிப்பது, மூளையில் ரத்தக்கசிவு போன்ற காரணங்களால் வருவது.

''உங்களுக்கு வந்திருக்கும் தலைவலி எந்த வகை என்பதை ஒரு மருத்துவர்தான் பரிசோதித்து முடிவுசெய்து சிகிச்சை அளிப்பார். அடிக்கடி வருகிறது, தொடர்ந்து இருக்கிறது, மண்டையைப் பிளப்பதுபோல் இருக்கிறது என்றெல்லாம் தலைவலி பற்றித் தோன்றினால், தாமதிக்காமல் ஒரு நரம்பியல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று அக்கறையோடு முடிக்கிறார் லட்சுமி நரசிம்மன்.

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஒற்றைத் தலைவலிக்காரர். சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் தலைவலியுடனேயே வாழ்ந்தவர். புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷாவும் தீராத ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டவர். ஆனால், தன் 70 வயதில், 'தடால்’ என்று சைவ உணவுக்கு மாறி, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். இதனால் தன் ஆயுளின் கடைசி 24 ஆண்டுகள் தலைவலி இல்லாமல் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தார்.

அறிவிலும் ஆராய்ச்சியிலும் கிரஹாம் பெல்லாய் இருக்க ஆசைப்பட்டாலும், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டு தலைவலியில் இருந்து தப்பிப்பதில் பெர்னாட்ஷாவாக இருப்போம்!

நன்றி: http://www.vikatan.com/article.php?mid=17&sid=539&aid=19893#cmt241

கீதம்
06-06-2012, 12:12 AM
தலைவலியின் வகைகள் குறித்தும் அதை அலட்சியமாக இல்லாமல் கவனிக்கவேண்டிய அவசியம் குறித்தும் தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. படிக்கும்போது எழுத்துகள் சரிவர புலப்படுவதில்லை என்று அடுத்தவர் கண்ணாடியை வாங்கிப் போட்டுப் படிக்கும் சிலரை நானும் பார்த்திருக்கிறேன். அவரைப் போன்றவர்களின் அறியாமையை நீக்கக்கூடிய நல்லதொரு பதிவு.

அன்புரசிகன்
06-06-2012, 01:43 AM
நல்லதொரு பகிர்வு.
சரியாக நீர் அருந்தாவிட்டால் எனக்கு தலைவலி வரும்...

M.Jagadeesan
06-06-2012, 01:46 AM
தலைவலி குறித்த பல அரிய தகவல்களை ,அறியத் தந்தமைக்கு நன்றி!

sarcharan
07-06-2012, 01:04 PM
அருமையான பதிப்பு. பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் பல உங்களுக்கு.

சிவா.ஜி
07-06-2012, 08:13 PM
எப்போதும்போல மிக மிக உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி அமினுதீன்.