PDA

View Full Version : நீங்களும் பிரிச்சு மேயலாம்



ஆதி
04-06-2012, 10:57 AM
//1. நம் இருவருக்கும் இடையே ஆன
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே...
//

இந்த கவிதையில் நம் எனும் வார்த்தை பிளவு மனதையும் குறிக்கிறது, புத்தனையும் குறிக்கிறது

என் உன் என்பது நம் மனம், மூன்றாம் கோப்பை புத்தன்

புத்தன் எப்போதுமே எந்த சலனமும் இல்லாமல் காலியாகவே இருக்கிறான்

நம் இருவருக்கும் இடையில் இருக்கும் தேநீர் கோப்பைகளில்

என் கோப்பையை நான் அருந்த அருந்த, இது வெளி மனம், நான் எனும் ஆங்காரம் கொண்ட நிலை

உன் கோப்பை நிரம்பிக் கொண்டே இருக்கிறது, எப்படி ?

வெறுமையால் நிரம்பலாம், திமிரால் நிரம்பலாம், எல்லாம் தெரியும் எனும் கர்வத்தோடு நிர்ம்பலாம், எல்லாம் சூன்யம் எனும் புத்த தத்துவத்தில் உற்ற விழிப்புணர்வால் நிரம்பலாம்

எப்படி நிரம்பினாலும் அந்த மாற்றம் என்னோடு முடிவுக்கு வந்துவிடுகிறது

நீ(புத்தன்) எப்போதும் போலவே நிச்சலனமாய் இருக்கிறாய் என்று சொல்கிறது


//2.குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..
//

இது நேரடியாக பேசுகிறது, ஆனால் இது ஒரு சின்ன நுட்பம் உண்டு

கடவுளை வெளிப்புறமாய் தேடுவது விஞ்ஞானம்

உட்புறமாய் தேடுவது மெஞ்ஞான*ம்

ஒரு காட்சி இங்கு உதார*ண*மாய் சொல்லப்பட்டிருக்கிறது, ஒருவன் புத்த சிலையை எரிக்கிறான்

ஏன் எரிக்க வேண்டும் ?

மிஸல் ஃபூகோ(பின்னவீனத்துவ சித்தாந்தி) கூட பதில் சொல்றான்

குறிக்கும் குறிப்பீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

கதவு எனும் சொல்லுக்கும் கதவு எனும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

கதவு எனும் சொல் குறிப்பீடு

கதவு எனும் பொருள் குறி(இமேஜ்)

கதவை ஆங்கிலத்தில் door என்றும் சொல்கிறோம், அப்படி சொல்வதால் அதன் இமேஜ் மாறிவிடுவதில்லை

தமிழில் கதவு எனும் போதும் ஆங்கிலத்தில் door எனும் போதும் நமக்கு தோன்று இமேஜ் என்னவோ கதவை பற்றித்தான், door எனும் போது நாம் சுவரை நினைப்பதில்லை

அப்படியானால் இந்த உலகம் இமேஜால் ஆனது, மொழி கூட இமேஜால் ஆனதுதான் இல்லையா

புத்தனின் சிலை என்பது இமேஜ், புத்தனே அல்ல(இங்கே எண்டர் தி டிராகன், எனும் புரூஸ்லீயின் படத்தில், கடைசி கட்டத்தில் வரும் பிரேக் தி இமேஜ் எனும் வசனம் நினைவு கூரவும்)

அது புத்தனின் மாயை புத்தனை போல தோன்றுதல் புத்தனே அல்ல

அதனை அழிக்கும் போதே உண்மையான புத்தன் கிடைக்கிறான்

நாம் கடவுளுக்கு ஒரு குணம் வைத்திருப்போம், கடவுள் என்றால் இப்படி கடவுள் என்றால் அப்படி என்று, அந்த இமேஜோடு கடவுள் இல்லை என்றால் நமக்கு உண்டாகும் ஏமாற்றம் கடவுளை வெறுக்க வைக்கும் அல்லது கடவுளே இல்லை என்று பிரகடனப்படுத்த வைக்கும் இல்லையா

கடவுளை கடவுளாய் ஏற்றுக் கொள்ளுதல்

எப்படி இது சாத்தியம் என்றால் ?

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமல் இருப்பதால் மட்டுமே

அதனால்த்தான் நீ நீயாய் இரு என்று சொல்கிறோம்

பிறரை அப்படியே ஏற்று கொள்ள பழக, முதலில் நாம் நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்

இப்போது புதிர் அவிழ்ந்துவிடுகிறது அக புத்தனை காக்க ஏன் புற புத்தன் எரிக்கப்பட்டானென

கீதம்
04-06-2012, 11:10 AM
ஆதியும் அந்தமும் ஆதிக்கே வெளிச்சம். அதனால்...

நீங்க பிரிச்சிப் போடுங்க. நான் மேயறேன். :icon_b:

நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவைப்பதற்கு நன்றி ஆதன்.

வாசகர் பார்வையையும் எண்ணத்தையும் விரிவாக்கும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

செல்வா
05-06-2012, 03:00 AM
தொடரட்டும் நற்பணி

தாமரை
05-06-2012, 01:32 PM
//1. நம் இருவருக்கும் இடையே ஆன
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே...
//

மூன்று கோப்பைகள் இருக்கின்றன.

ஒன்று எப்பொழுதுமே காலி..

மற்ற இரண்டில் தான் பிரச்சனை.

என் கோப்பையில் இருந்து நான் தேநீர் அருந்துகிறேன்.. அப்படியென்றால் என் கோப்பையில் தேநீர் இருந்தது.

உன் கோப்பையில் நான் அருந்த அருந்த தேநீர் நிறைந்து கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் அதில் சிறிதேனும் தேநீர் இருந்ததா? இல்லை அது காலியாக இருந்ததா? தெரியாது..

நான் அருந்த உன்னில் நிறைகிறது என்பது ஒரு நல்ல குறியீடு. நான் அருந்துவது உன்னை நிறைவடையச் செய்கிறது என்றால் அது புறமும் அகமுமே ஆகும். இந்தப் பேரண்டம் நமது கோப்பை. அதை நாம் புலன்களால் அருந்துகிறோம். நம் அறிவுக் கோப்பை அதனால் நிறைய ஆரம்பிக்கிறது. புற உடல் நான் என்றால் அகம் நீ ஆகிறது.

இதில் மூன்றாம் கோப்பை எது? அது எங்கிருக்கிறது? அதில் ஏன் எதுவுமே இல்லை?

உடல் - மனம்

இரண்டுக்கும் சேராத ஒன்று இருக்கிறது. அது என்னவோ அது அப்படியே இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை அந்தக் கோப்பை காலியாகவே இருக்கிறது.

அது யாருக்குச் சொந்தமானது என்று அறியாமலேயே இருக்கிறோம்.

ஒரு வேளை உள்மனம் தன் கோப்பைத் தேநீரை அருந்தத் தொடங்கி இருந்தால் அந்தக் கோப்பையில் ஏதேனும் சலனம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மனம் தேநீரை அருந்தியதாகத் தெரியவில்லை.

அதாவது பெற்ற அறிவை நாம் உபயோகிக்கவில்லை என்பது உள்ளே இருக்கிறது.

இன்னும் கோப்பைகள் இருக்கின்றன என்பதும் உள்ளே இருக்கிறது.

அதில் ஒரு கோப்பை சிறிது தெரியவும் செய்கிறது.

கோப்பை இருப்பது தெரிஞ்ச வரைக்கும் நல்ல விஷயம்

அது காலியா இருப்பதும் தெரிஞ்ச வரைக்கும் ரொம்பவே நல்லது.

அது நிறையணுமா? காலியாவே இருக்கணுமா என்று தெரியவில்லை.

பாகவதம் சொல்கிறது..

மனம் என்பது வேறு.. புத்தி என்பது வேறு

மனம் உணர்வு மயமானது.
புத்தி அறிவு மயமானது

மனம் தன் கோப்பையில் உள்ளதை அருந்துகிறது.
புத்தியின் கோப்பை நிறைகிறது.

மனமும் புத்தியும் இப்படி இருக்க ஞானம் என்னும் கோப்பை காலியாகவே இருக்கிறது. புத்தி அருந்தினால் ஞானம் நிறையலாம்.

இன்னொன்றும் அதே பாகவததில் உள்ளது...

உடலில் ஆன்மா எப்படி இருக்கிறதோ அப்படியே ஆன்மாவில் இறைவனும் கலந்திருக்கிறான்.

உடலை உணர்கிறோம். ஆன்மாவை உணர்கிறோம். ஆனால் ஆன்மாவில் உள்ள பரமாத்மாவை உணர்வதில்லை.

உடல்பலம் தேய்கிறது. ஆன்மபலம் வளர்கிறது. ஆனால் இறை மாற்றமே இல்லாமல் இருக்கிறது.

சிவா.ஜி
06-06-2012, 05:26 PM
அட இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா...? வாசிக்க வாசிக்க ஏதோ ஒன்று எனக்குள் எதையோ திறப்பதைப்போல உணர்ந்தேன். ஆதியின் விளக்கமும், தாமரையின் விளக்கமும்....என்னென்னவோ செய்துவிட்டது. தொடருங்கள் அறிஞர்களே....தொடர்கிறேன்....நிரப்பிக்கொள்ளும் பாத்திரமாய்.

vasikaran.g
16-06-2012, 11:26 AM
நிறைய விஷயங்களை விரிச்சிப்போட்டு பிரிச்சி மேஞ்சிட்டிங்க ஆதன் ..
சிறுத்த
கவிதைக்கு
பெருத்த
விளக்கம்
பொருத்தமாய்
இருக்கு ..
அருமை ..

HEMA BALAJI
16-07-2012, 01:44 PM
மிகவும் அறிவான தெளிவான விளக்கங்கள். எழுதப்பட்ட விதத்தை விடவும் பிரித்து மேய்ந்த விதம் மிக மிக அருமை. நன்றிகள் ஆதன் மற்றும் திரு.தாமரை.

ந.க
28-10-2012, 05:10 PM
வெறுமையில் - நிர்வாணத்தில் பூரணம்,
புத்தனைப் புரிந்து கொள்ளல்

அத்வைதம் அன்று
அதில் துவைதமும் இல்லை

வெறுமையாய் இரு
வேற்றுமை அற்று இரு

இறை பொருள் இருப்பது,

என்றுமே உள்ளது.
நிரப்பப் படுவதும் அல்ல-பாத்திரமும் அன்று.
நிரப்பும் பொருளும் அல்ல- பானமும் அன்று.

நிரப்புதல் ஆசை.....
ஆசையால் வருவது
அர்த்தமற்றவை
அவை கனமானவை
துன்பத்திற்கே காரணமானவை..

புத்தனின் நிர்வாணக் கொள்கை,
பூஜ்யத்தில் ராஜ்ஜியம் காணும் கொள்கை.

நான் குடிப்பதும்- நுகர்வதும்
உன்னில் நிறைவதும்
இறை பொருள் அன்று..

அந்த மாயையின் விளக்கம்
சூன்ய வாதம் மிக ஆரோக்கியமானது,
இங்கே வந்து இந்தப் பதிவை படிக்க நேர்ந்தது
அதிலும் நிறைவானது.

நான் நிறைந்து கொள்கின்றேனா?
வீண்
-தர்க்கத்தில் ? -தற்பெருமையில்?

வெறுமையால் பூரணமாதல்
புத்தனின் நிலை.

இறை பொருள் ஒரு பெயரிடப் படும் பொருளல்ல...

நன்றி............ஆசா பாசமற்று வெறுமை ஆவது எப்போது.......?