PDA

View Full Version : வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது



ஆதி
02-06-2012, 02:40 PM
வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது

அது சூரியன் தன் எல்லா கிரணங்களையும்
சிறுக சிறுக பின்வாங்கிக் கொண்டிருத்தலை
அறிவிக்கிறது

இந்த நகரத்தின் எல்லா மூலைகளிலும்
இந்த மலைகளின் பின்புறத்திலும்
ஆளில்லாத அடுக்கக வீடுகளிலும்
நாள் பூராவும் பதுங்கியிருந்த குளிர்
ஒரு பாம்பென மெல்ல வெளிவருவதை
எனதறை மின்விசிறி உணர்த்துகிறது

இந்த நகரம் முழுக்க
கடைசி வெம்மையையும்
தன் வெளிச்சத்தைப் போலவே சூரியன்
வழித்தெடுத்த பின்
ஒரு உறைபனியின் வீரியத்தோடு
பரவக்கூடும் கொடுங்குளிர்

அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவே
ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன்
ஒரு சிகிரெட்டையும் கொஞ்சம் நெருப்பையும்

பலமுறை அவஸ்தைப்பட்ட பிறகும்
உங்களை போலவே
நானும் எப்போதும் சிந்திப்பதே இல்லை
சிகிரெட்டும் தீர்ந்துவிட்ட பின்னர்
எப்படி இக்குளிரை சமாளிப்பதென

சிவா.ஜி
02-06-2012, 06:00 PM
நவீனத்துவத்தில் நவீனத்தை சாடும் கவிதை. இயற்கையை ஏமாற்றிய ஒருவன்...செயற்கையாய் நாடுவதை....நிரந்தரமாக்க முடியாமையை வெளிப்படுத்தல்....

எனது இந்த பின்னூட்டம் இக்கவிதைக்குப் பொருத்தமா எனக் கூறவியலாது....இருப்பினும் நான் புரிந்துகொண்ட வகையில் நான் சரி.

இதைப்போன்ற கவிதைகளின் பிரச்சனையே இதுதான் ஆதன்..அன்சர்ட்டனிட்டி.....குழப்பம்...இப்படிக் குழப்புதல் நல்ல கவிதையென்றால்....இதுவும் நல்ல கவிதையே. வாழ்த்துக்கள்.

ஆதி
02-06-2012, 06:18 PM
அண்ணா, நீங்கள் சொல்லும் விளக்கமும் நன்றி

இது போன்ற கவிதைகளை புரிந்து கொள்ள வாசகனுக்கு உபபிரதி() தேவைப்படுகிறது, அது அவனுடைய அனுபவத்தாலேயே கிட்டுகிறது

உண்மையை சொல்ல போனால் படிமமில்லாமல் ஒரு கவிதையை எழுதுவதென தீர்மானித்து எழுத துவங்கிய கவிதை படிமமாக மாறிவிட்ட போது, படிமங்களிலிருந்து வெளியேறுவதற்கான என் மெனக்கெடுதலைகளை கடுமையாக்க வேண்டும் என்றே தோன்றியது. இது போன்ற புதிர் மொழி புதுக்கவிதைகளிலும் உண்டு, அது திராவிட மேடைக்களால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன அண்ணா. ஒரு விடுகதையை திறப்பதை போல இந்த படிம மொழியையும் திறப்பதற்கு வாசகனுக்கு சாமர்த்தியம் தேவைப்படுகிறது அண்ணா

வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கையின் குலைவை சொல்லவில்லையா ?

உறைபனியின் தாக்கம் ஒரு பிரச்சனையை ஞாபகப்படுத்தவில்லையா ?

சிகரெட் ஒரு படிமம் எரியும், கரையும், சாம்பலாய் உதிருந்து இல்லாமலே போகும்

ஒரு பிரச்சனையை சமாளிக்கத்தான் நாம் வழி தேடுகிறோமே தவிர தீர்வு தேடுவதே இல்லை

மீண்டும் மீண்டும் அதே பிரச்சனை அதே வழிமுறை அதே தவறு, கடைசியில் தற்காலிகமாய் சமாளித்தலே தீர்வாக, உண்மையில் தீர்வே தெரியாமல் உழல்கிறோம்

சிவா.ஜி
02-06-2012, 06:55 PM
விளக்கம் அளிக்கப்பட்டபிறகு கவிதையின் முகம் மாறுதலாய் தோன்றுகிறது....ஆனால் அது கவிதைக்கு வெற்றியில்லையென்பதே என் கருத்து. எழுதப்பட்ட வரிகளை வேலைமெனக்கெட்டு தங்கள் புத்திக்குள் செலுத்தி...அதன் உண்மைக்கூற்றை, சொல்ல வந்தக் கருத்தை அறியும் முயற்சியில் எத்தனைப்பேர் இறங்குவார்கள்..

தான் சென்ற நகரத்தில் குளிரும், மூடுபனியும் விளைவித்த உபாதைகளிலிருந்து வெளிவர சிகரெட் உதவியது....ஆனால்...அது உதவியா...உபத்திரவமா...என்ற ஆதாரக் கேள்வியை எழுப்புவதாகவே நான் உணர்ந்தேன். உண்மையாய் சொல்ல வேண்டுமென்றால்...இதைத்தாண்டி என் சிந்தனை விரியவில்லை. அது என் குற்றமாய் இருக்கலாம். சிந்தனையின் குறைபாடாய் இருக்கலாம்...புரிதலின் குறைபாடாய் இருக்கலாம்....ஆயினும்....வாசிப்பவனிடம்....நிபுனத்துவத்தை எதிர்பார்க்கும் எந்தக் கவிதையும் வெற்றிக் கவிதையல்ல என்பதே என் நிலைப்பாடு.

ஹுசைன் என்ற ஒரு ஓவியன் இருந்தான். அன்னை தெரசாவையும்...இது என்ன கண்டுபிடியுங்கள் என வாரப்பத்திரிக்கை போட்டி வைக்கும் நிலையில்தான் வரைந்தான். அவனது ஓவியங்கள் என்னைப் பொருத்தவரை புரியாதவை. அதேப்போலத்தான் இந்த நவீனத்துவக் கவிதைகளும். நான் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டுமா...இல்லை படைப்பாளிகள் என் போன்றவர்களுக்காக தங்களை எளிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா.....தெரியவில்லை ஆதன்.

ஆனாலும் உங்கள் எழுத்து என்னால் மிக மிக மதிக்கப்படுபவை. வாழ்த்துக்கள் தம்பி.

vasikaran.g
03-06-2012, 07:37 AM
....வெளிச்சம் குறைந்து கொண்டிருக்கிறது..
வெளிச்சம் கூடி இருந்திருக்கும் இன்னும் கொஞ்சம் எளிமை மொழியில் இருந்திருந்தால் ..