PDA

View Full Version : எப்பொழுது கையெழுத்திடுவாய்...?Nanban
11-04-2003, 04:37 PM
எப்பொழுது கையெழுத்திடுவாய்...........?


துப்பாக்கி பூப்பறிக்கும்
எதிரியின் கையில் இருக்கும் போது -
என்று தெரியும் உனக்கு.

தோழி நிலம் கொடுத்து,
நீ விதைத்து விளைந்த பூக்களை,
இருவரும் முத்தமிட்டு,
தொட்டு பேசித் தழுவிய
புன்னகை பூக்கும் பூக்களை
துப்பாக்கி பூப்பறிக்கும்.
ஆனாலும் நீ பொறுத்திட வேண்டும்.

ஓடி ஓடி நீ உழைத்து
கூடிக் கூடி நீ கட்டிய
கூட்டைக் கலைக்கும்
கூண்டோடு -
கூட்டில் பொறிப்பதற்குக்
காத்திருக்கும் உன் கனவுகளோடு.
ஆனாலும் நீ அமைதி காத்திட வேண்டும்.

உன் இணைப் பறவையின்
சிறகுகளை முறித்திடும்.
பறக்க முயற்சிக்கும் குஞ்சுகளின்
கழுத்தைத் திருகிடும்.
ஆனாலும் நீ இனியவனாக இருந்திட வேண்டும்.

ஆமாம் தோழனே!
எதிரி உன் கையில் சிக்கினால்
அவனை துன்பிக்கக் கூடாதாம் -
ஒப்பந்தம் ஒன்று இருக்கிறதாம் -
ஜெனீவா என்ற இடத்தில் கையெழுத்திட்டார்களாம்.

எப்பொழுது இவர்கள் கையெழுத்திடுவார்கள்?
பூக்களைப் பறிக்க மாட்டோமென்று,
கூட்டைக் கலைக்க மாட்டோமென்று,
பறவைகளைக் கொல்ல மாட்டோமென்று.....
எப்பொழுது இவர்கள் கையெழுத்திடுவார்கள்?

இளசு
11-04-2003, 05:26 PM
பூப்பறிக்கும்
இரண்டாவது முறை வரும்போது அதிர்ந்துவிட்டேன் அதன் அர்த்தம் கண்டு..

முள்ளுக்கு முள்ளா
கண்ணுக்குக் கண்ணா
கேள்வி புரிகிறது
விடைதான் தெரியவில்லை

madhuraikumaran
11-04-2003, 06:34 PM
இந்த POW ஒப்பந்தம் எனக்கும் புரியாப் புதிராய்த்தான் இருக்கிறது. போர் தொடுக்கப் போனவனைத் தடுக்க ஒரு நியாயம் இல்லை, தொடுக்கப்பட்டவனிடம் மட்டும் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது எந்த ஊர் நியாயம்?..
இளசு சொன்ன அஹிம்சைவாதம் காந்தி காலத்தோடு சரி. இப்போது கலாம் சொல்வதுதான் சரி! வலியவனையே உலகம் மதிக்கும் !
நன்றி நண்பனே !

Narathar
12-04-2003, 05:05 AM
ஆழமான அர்த்தங்கள் பொதிந்த கவிதை!
நமக்கு.....ஏன் யாருக்குமே விடை தெரியாத கேள்வியுடன்.

மன்மதன்
28-09-2004, 09:30 AM
சாட்டையடிக்கேள்வியாய் ஒரு கவிதை... பாராட்டுக்கள் நண்பன்,
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
28-09-2004, 04:40 PM
நண்பனின் கவிதை என்றாலே அதில் அனல் பறக்கும் வரிகள் இருக்கும் என்பது உண்மை.

அத்தனையும் உண்மையான வரிகள்.

Nanban
28-09-2004, 07:08 PM
என்ன ஆயிற்று....?

திடீரென்று, ஆவேசக் கவிதைகளாகப் பார்த்து எழுதுகிறேன்... படிப்பவர்கள் கூட, தோண்டித் துருவி, அதே வடிவத்தில் உண்டான, கவிதைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள்....

ஆனால், பழைய கவிதைகளை வாசித்ததில் ஒரு திருப்தி... ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கப்புறம், தேசம் மாறியதன் பின், என் பார்வையில் ஏதேனும் மாற்றங்கள் வந்திருக்கிறதா...?

இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

என் பார்வைகள் 'ஆன்டி-எஸ்டாபிளிஷ்மென்ட்' என்ற தளத்திலே இயங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது....

எல்லோரும் இயங்கும் ஒரு தளத்திலிருந்து, ஏன் மாறுபட்டு சிந்திக்கிறேன் - ஏன் ஒவ்வொரு வாதத்தின் மறுபக்கத்தையும் அலச விரும்புகிறேன்?

ஒவ்வொரு சட்டமும் இயற்றப்படும் பொழுது, அது தன் உண்மையான தேவையை மறந்து விடுகிறது - ஒரு கால கட்டத்திற்குப் பின். அந்த சட்டங்களின் சாராம்சம் எல்லாம் - தன்னுடைய எடையாலயே ஆழத்திற்குள் மூழ்கிவிட, சாரமற்ற, நீர்த்துப் போன சட்டத்தையே எல்லோரும் அமலாக்கம் செய்கின்றனர். அதனாலே, அது தன் கடமையைச் செய்வதை விட, அதற்கு நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு சட்டத்தையும், ஒரு கால் நூற்றாண்டுகளுக்குள்ளாக, மறுபரிசீலனை செய்ய வேண்டும்... ஒத்து வரவில்லையென்றால், தூக்கி எறிந்து விட்டு, புதிதாக சட்டங்களை ஏற்படுத்திக் கொள்வது தான் முறை....

அதனால் தான், எந்த ஒரு மதமும், ஒரு பொதுவான சிவில் சட்ட வரைமுறைகளுக்கு ஒத்து போவதில்லை. தனக்கென உருப்படியான சட்டங்கள் இயற்றத்தெரியாத மனிதன், மத சட்டங்களை மாற்றி தான் இயற்றிய சட்டங்களை அந்த இடத்தில் வைத்தால்... ஒவ்வொரு தலைமுறைக்கும் மதம் தன் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்....

இப்பொழுது இந்த ஜெனீவா ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. முதல் இரண்டு உலகப் போர்களின் அனுபவத்தால், ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் - மனிதனை இழிவு செய்யும் சித்ரவதைகளை செய்வதில்லை என்று. ஒவ்வொரு போர்வீரனும் தன்னுடைய நாட்டிற்காகப் போராடுபவனே தவிர குற்றவாளி அல்ல. அதனால், அவன் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்று.

ஆனால், அப்பொழுது உலகம் அறிந்திருக்கவில்லை - எதிர்காலத்தில், கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராட வேண்டும் என்று. சட்டங்கள் மூலம், ஒப்பந்தம் செய்தவர்கள் அதை மதிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியும். ஆனால், தீவிரவாதி எந்த நாட்டைச் சார்ந்தவன், எந்த இடத்தில் இருக்கிறான் என்று எதுவுமே அறியப்படாத பொழுது, அவன் எப்படி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட முடியும்? அவன் அந்த ஒப்பந்ததில் சம்பந்தப்பட்டவனே இல்லை.

ஆனால், கையெழுத்திட்ட நாடுகள் அதைப் பின்பற்றுகின்றனவா? இல்லை. மனிதனை அவமானப்படுத்துகின்றன. ஆஃப்கானிஸ்தானத்தில் பிடிபட்ட தாலிபான்களை, நிர்வாணமாக, சிலுவையில் அறைந்தது போன்று கட்டிப் போட்டு தான் அழைத்துச் சென்றனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்குள் யாரும் போய் பார்த்துவிட முடியாது. இராக்கியர்களை அம்மணமாக்கி, அதை பெண்களை ரசிக்க வைத்து - நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

பிறகு எப்படி ஜெனீவா ஒப்பந்தத்தை கைகொள்ளும்படி இவர்கள் கேட்கிறார்கள் என்று புரியவில்லை. தாங்கள் இயற்றிய சட்டங்களை தாங்களே மதிக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்கிறார்கள்...

தீர்வு என்னதான் என்று கேட்கிறார்கள்...

யுத்தகைதிகளை மட்டுமல்ல, மற்ற மனிதர்களையும், கௌரவத்துடன் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். மனிதனின் பண்பாட்டு, இலக்கிய, மத, மொழி அடையாளச் சின்னங்கள் மதிக்கப் பட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அவமானப் படுத்தவோ, அலட்சியப்படுத்தவோ செய்தால், அது ஒரு கட்டத்தில், ஏதாவது ஒரு வடிவில் போர்க்குணம் எடுக்கும்.

இந்த அக வாழ்வியல் முறைகளை அன்றி புற வாழ்வியல் தேவைகளும் தீவிர வாத வடிவம் எடுக்கக் கூடும். அதையும் மனித இனம் இப்பொழுதே அடையாளம் கண்டு, அதற்கு தீர்வான விடை காண்பது அவசியம். இந்த வகையில், உலகின் எதிர்காலத்தில், நாடுகளுக்கிடையேயான யுத்தம், தீவிரவாத குழுக்கள் எதை மையப்படுத்தி, அடையாளமாக்கித் தோன்றப் போகிறது தெரியுமா?

நீர்.....

ஆமாம், தண்ணீர்ப் பங்கீட்டுச் சண்டைகள் தான் எதிர்காலத்தில், தீவிரவாத, யுத்த எண்ணங்களின் விளைநிலமாக இருக்கப் போகிறது......

சிந்தனை செய்யுங்கள், இப்பொழுதே.....

நம் அருகிலே, சுவாசம் தொட்டுவிடக் கூடிய தூரத்தில், தீவிர வாதம் வாசம் செய்கிறது.....