PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) -நட்சத்ரன் அத்தியாயம்-29natchatran
11-10-2004, 08:32 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-29

குப்புறப்படுத்து தலையணையில் விம்மிக்கொண்டிருந்த தட்ஷிணியை முதுகில் மெதுவாகத்தடவிக் கொடுத்து எழுப்பமுயன்றாள் வனஜா.ஆனால் தட்ஷிணி எழுந்து உட்கார விருப்பமற்று சுவர்ப்பக்கம் முகம்சாய்த்து அப்படியே அசைவற்றுக்கிடந்தாள் தட்ஷிணி.

"ஏய்..விடிஞ்சா எக்ஜாம்..இப்பிடி அழுதிட்டிருந்தா எப்பிடி..எழுந்திரிச்சுப் படி..நம்ம மூர்த்தி ஒண்ணும் எங்கேயும் ஓடிரமாட்டான்..அவன் நம்மகிட்ட திரும்பவருவான்..எந்திரிடீ.."-இப்போது சற்று அழுத்தமாக அவள் முதுகில் தட்டினாள் வனஜ்.

"தயவுசெஞ்சு என்னைத் தனியா இருக்கவிடு.." என்று படுத்தபடியே லேசாய் முகம்தூக்கி முனகிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள் தட்ஷிணி.

"..ம்கூம்..உன்னையெத் திருத்தவே முடியாது..நா என் வேலையெப் பாக்குறேன்..மெஸ்ஸக்குச் சாப்பிடப் போறேன்..நீ மெதுவாக் கெளம்பி வா.."

வனஜா மெஸ்ஸக்குப் போய்விட்டாள்..

மெதுவாக எழுந்தமர்ந்த தட்ஷிணிக்கு வாழ்க்கை அர்த்தமேதுமற்றதாகப் பட்டது.

எப்போதும் அழகாய், இதமாய் விளங்கும் இந்த இரவும் அறையின் வெண்மையான குழல் விளக்கொளியும் அவளுக்கு மிகுந்த எரிச்சலையூட்டின.

மீண்டும் மீண்டும் இந்த மூர்த்தி ராஸ்கல் ஏன் தன் கண்ணுக்குள் வந்து நிற்கவேண்டும்?

கனவிலும் நனவிலும் அவன் ஏன் தன்னை விடாது ஒரு கொடும்பேயெனத் துரத்துகிறான்..ச்சே! அவனிடமிருந்து, அவன் பிம்பத்திலிருந்து விடுபடும் வழிதான் என்ன?

குழம்பினாள்..மிகவும் குழம்பினாள்..மூர்த்தியின் பிரிவு அவளை இப்படி உலுக்கியெடுக்கும் என்பதை அவள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை..கடவுளே..!

பசி வயிற்றைக் கிள்ளிற்று. மெஸ்ஸக்குச் சீக்கிரம் போகவேண்டும்..வயிறு ஏன் இப்படி திகுதிகுவென்று எரிகிறது?

மூர்த்தியிடம் அன்று சண்டைபோட்டு அவனை அனுப்பிவைத்த மறுகணத்திலிருந்து தொற்றிக்கொண்டது இந்த பிளம்பு! அந்தப் பிளம்பை அவள் முற்றிலுமாய் நிராகரிக்கப்பார்த்தாள்..அதில் அவளுக்குப் படுதோல்வியே கிட்டிற்று...அப்பிளம்பு, ஒரு கொள்ளிவாய்ப் பிசாசுபோல் அவளது அடிவயிற்றில் பற்றியெரியும் விந்தையை என்னென்பது!

அப்படி என்னதான் இருக்கிறது இந்த மூர்த்தி நாயிடம்!? அவனும் எல்லாரையும்போல தன் கூடப்படிக்கும் சக மாணவன்தானே! அவனைவிட உருவிலும் நிறத்திலும் ஆகச்சிறந்தவர்கள் எத்தனையோ பேர்! இந்த மூர்த்திப்பயல் அப்படியொன்றும் உருவ அமைப்பில் நேர்த்தியானவனில்லை!

கெச்சையாய்..ஒல்லியாய்..'தொசக்..தொசக்..' என்ற வாத்துநடையுடன்..ச்சே! அவனிடம் இருக்கும் மாயம்தான் என்ன!ஒழுங்காய் 'ட்ரெஸ்' கூட பண்ணத்தெரியாதவனாயிற்றே அவன்!

சட்டென அவளுக்கு மூர்த்தியின் கண்கள், அவற்றின் ஆழம், அவற்றின் ஜ்வளிப்பு, பார்ப்பவரை ஈர்த்து தம்முள் அமிழ்த்திக்கொள்ளும் அவற்றின் மாயம் இதெல்லாம் ஞாபகத்தில் பளிச்சிட்டன...

அவனது புருவங்கள்தான் என்ன அடர்த்தி! என்ன ஒரு நீளம் அவை! அவனது நீண்டு வளைந்த கண் இமைகளையும் அவற்றின் சிமிட்டலையும் அவள் மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறாள்!

ச்சே! கவுத்துட்டான் பயல்! ஆனாலும் அவன் சுத்த மோசம்தான்! பின் எதற்கு என்னிடமே வந்து நந்தினி..அது..இது..என்று கதையளக்கவேண்டும்!

அறைக்கதவைப் பூட்டிவிட்டு மெஸ்ஸக்கு நடந்தாள்..சாப்பிட்டுமுடித்து எதிரே வந்துகொண்டிருந்தாள் வனஜா..

"என்ன சோகத்திலேர்ந்து விடுபட்டுட்டியாடீ.." இரவின் மின்விளக்கொளியில் பாதிமறைந்த முகத்துடன் கேட்டாள் வனஜா..

"ச்சீ..போடி.."

"இப்ப ஏதோ உன் முகத்துலே தெளிவு வந்திருக்கே..நாளைக்கு எக்ஜாமுக்கு வர்ற மூர்த்தியைப் பார்த்துடலாம்னுதானே அந்தத் தெளிவு?"-அவள் காதுகளில் கிசிகிசுத்துக்கேட்டாள் வனஜ்.

வராண்டாவில் சாப்பிட்டுமுடித்த பெண்கள் அவரவர் அறைநோக்கி வந்துகொண்டிருந்தார்கள்..சிலர் அவர்கள் இருவரையும் பார்த்து ஏதோ கிசுகிசுத்துக்கொண்டார்கள்..

"மூர்த்தி தட்ஷிணியின் ஆள்.." என்பதுதான் அந்தக் கிசுகிசுப்பின் பொருளாக இருக்கவேண்டும்! இப்படி இன்னும் சில பெண்களுக்கு 'ப்ரத்யேக ஆட்கள்' அந்த விடுதிப்பெண்களுக்கு உண்டு! ஒருத்தியின் 'ஆளுடன்' இன்னொருத்தி ஏதும் வைத்துக்கொள்ளமாட்டாள்..இது அங்கு எழுதப்படாத விதி!

"ச்சீ..போறியா..யார் காதுலயாவது விழுந்துடப் போவுது..ரூம் கீ இருக்கா, வேணுமா?'

"அதெல்லாம் என் கீ என்கிட்டே பத்தரமா இருக்கு! உன் கீ தான் உன்கிட்டே இருக்கான்னு தெரியணும்.."

"இருக்கு..இருக்கு.."

"நான் அந்தக்கீயைக் கேக்கலே.."

"பின்னே?"

"மூர்த்தி உனக்குப் பூட்டுப்போட்டுட்டு அவன்பாட்டுக்குப் போயிட்டான்லே, அந்தக்கீயை கேட்டேன்.."

"உனக்கு கொழுப்பு ஜாஸ்திடீ.."

"கொழுப்பெல்லாம் ஒண்ணுமில்லே..இந்த வனஜா தானே நாளைக்கு உங்க ரெண்டுபேரையும் மீண்டும் சேர்த்துவைக்கப்போறேன்! அதுக்கு என்ன 'ட்ரீட்' குடுப்பே?"

"எதுவேணாக் கேளு!"-சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் தட்ஷிணி.

இப்போது அவள் அடிவயிற்றில் கபகபவென்று எரிந்துகொண்டிருந்த பிளம்பு தன் வெம்மையைக் குறைத்து அவளுக்குச் சற்று இதம் கொடுத்தது...

அவள் மெஸ்ஸை நோக்கி சிட்டாய் விரைந்தாள்...

(தொடரும்..)