PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) -நட்சத்ரன் அத்தியாயம்-30natchatran
19-10-2004, 09:29 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-30

நட்டநடு நிசி..சுவர்க்கெடியாரத்தில் மணி இரண்டரையாகியிருந்தது..தன் அறையின் குழல்விளக்கொளியில் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி: விடிந்தால் தேர்வாயிற்றே! ஒருமணிவாக்கில் அவனுக்கு மாமி ஒரு சூடான அடர்த்தியான தேநீர் கொடுத்துவிட்டுப்போனாள்..அதை அவள் இவனுக்காக ப்ரத்யேகமாக தயார்செய்து கொடுத்ததால் தேநீரின் மணமும் ருசியும் அத்ன் உச்சத்தில் இருந்தது. ருசி, தேநீரிலா, நாவிலா..இல்லை, மனசுக்குள்ளா..?மனசு என்றால், கொடுப்பவரின் மனசிலா,குடிப்பவரின் மனசிலா..?எதில், எது ஒளிஞ்சிருக்கு?

அவனுக்குத் தேநீர் தயாரித்து ஒரு ப்ளாஸ்க்கில் எடுத்துக்கொண்டு அவன் அறைக்கே வந்துவிட்டாள் மாமி..இப்படி அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை! உள்கதவைத்திறந்துவைத்து,அவர்களின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாததால், மூர்த்தி அதன் தாழ்ப்பாளை நீக்காமலே வைத்திருந்தான்..மாமி எவ்வளவோ சொல்லியும் அவன் உறுதியாக மறுத்துவிட்டான்..

அவள் முகத்தில் தூக்கக் கலக்கம் இழையோடிற்று. எனினும் அதிலொரு ப்ரத்யேக சோபை துலங்கியதைக் கண்ணுற்றான் மூர்த்தி..இவனுக்குத் தேநீர் தருவதற்காக நடுநிசிவரை தூங்காமல் கிடந்திருப்பாள்போல!

மூர்த்தி தேநீரை ஒரே மூச்சில் குடிப்பதில்லை..அதுவும், சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட இதுபோன்ற அடர்த்தியான,தேயிலையின் மணமும்,லேசான கசப்பும் மேலோங்கிய தேநீர் என்றால் அதைத் துளித்துளியாய் மெதுவாக நுனிநாக்கில் உறிஞ்சி அணுஅணுவாய் அனுபவித்துக் குடிப்பான்.

அவன் தேநீர் அருந்துவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி.மூர்த்தியும் அவள் கண்களையும் அதில் தெரிந்த விவரிக்கவொண்ணாத் திருப்தியின் இழையையும் அறிந்து திருப்தியுற்றான்..

நல்லாருக்கா டீ.. வார்த்தை வெளிவராமல் முனகலாய்க் கேட்டாள்..

நல்லாருக்கு..அவனுக்கும் வார்த்தை வெளிவரவில்லை.

சரி..படி.. என்று சொல்லிவிட்டு எலுமிச்சைநிற சேலைத் தலைப்பால் தன் உடலைப் போர்த்திக்கொண்டு எழுந்துபோனாள்.அவள் போய் ஒன்றரை மணிநேரமாகியும் மாமியின் முகமும் அதன் உயிர்ப்பான, பிசிறுதட்டாத சௌந்தர்யமும் அவன் கண்ணில் சுழன்றபடியே இருந்தது!

கையில் தேர்வுக்கான குறிப்பேட்டை விரித்துவைத்திருந்தான்..எல்லாம் ஏற்கனவே படித்தவைதான்.. என்றாலும் அனைத்தையும் ஒருமுறை திருப்பிப்பார்க்கவேண்டும்..அப்போதுதான் தடுமாறாமல் தேர்வெழுத இயலும்..

மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காத புத்தகம் ஏதாவது இருக்கிறதா உலகில் என்ற கேள்வி அவனுள் திடீரென உதித்தது. அப்படியொரு புத்தகத்தின் அதீத பக்கங்களில் தன் இருப்பு நிலைகொண்டிருப்பாய் உணர்ந்து அவனுக்கு மெய்சிலிர்த்தது..வாழ்வின் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு அனுபவமும் எல்லையற்ற பக்கங்களைக்கொண்டதொரு தலைப்பில்லாத புத்தகத்தின் பகுதிகளாகத் தோன்றின..

தேர்வுக்காக கடைசீ நேரத்தில் இப்படிக் கண்விழித்துப் படிப்பதில் ஒரு சாகஸத்தின் திருப்தி கிட்டத்தான் செய்கிறது..இந்த சாகஸம் எல்லா மாணவர்களும் செய்வதுதான்..கடைசீ நேரத்தில் விடியவிடிய ஹோல் நைட் அடித்துப்படிப்பது, கல்லூரி விடுதியிலும்சரி, வெளியே அறையெடுத்துத் தங்கிப் படிப்போரிடமும் சரி, ஒரு கட்டாய வழக்காக மாறிப்போயிருந்தது! பஸ் கிளம்பும்வரை ஏறாமல் நின்றுவிட்டு, கிளம்பியவுடன் ஓடிப்போய் தொற்றி ஏறுகையில் கிடைக்கும் சாகஸ திருப்தி,இப்படி விடியவிடியப் படிப்பதில் ஏற்படுவது உண்மைதான்! எப்படியோ ஊர்போய்ச் சேர்ந்தால் சரி என்பதுபோன்ற மனோபாவம் அனைத்து மாணவர்களிடமும் இருந்தது..இப்படியில்லாமல், ஆரம்பத்தில் இருந்தே படுசிரத்தையாகப் படிக்கும் மாணவர்களை சரியான ஞானப்பழம்!என்று கிண்டலடிப்பார்கள் அறைத்தோழர்களும் சக மாணவர்களும்.. சுத்தக் கடம்! என்றும் பயங்கர தட்டல் கேஸ்என்றும், சுத்த சொம்புடா அவன்..எப்பப்பார்த்தாலும் உருட்டிக்கிட்டே கெடப்பான்.. என்றும் கேவலப்படுத்துவது கல்லூரிகளில் சகஜம்!

மூர்த்திக்கு இவர்களின் போக்கு ஆரம்பத்தில் சற்று ஆச்சர்யமாய் இருந்தாலும், பள்ளிகளில் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தவர்களே கல்லூரிக்குப் போனவுடன் இப்படியாகிவிடுவது அவனுள் ஒரு புரிதலை ஏற்படுத்திவிட்டது.மூர்த்தி இரண்டு செயல்பாடுகளுக்கும் இடைப்பட்டவனாகத் தன்னைக் கருதிக்கொண்டான்.. அதாவது,அவன் சுத்தக் கடமும் அல்ல..முற்றிலும் படிக்காமலே கோட்டை விட்டுவிடுபவனும் அல்ல..பேராசிரியர்களின் விரிவுறைகளை அவன் நன்கு மனதில் இருத்திக்கொள்வான்..பிறகு,தேர்வுக்கு முக்கியமானவை எவை, கேள்விகளை பொதுவாக எப்படிக் கேட்பார்கள் என்பதுபோன்ற விவரங்களைச் சேகரிப்பான்..அதற்கென்று ஒரு தனியான குறிப்பேட்டை ஏற்படுத்தி, அதைத்தான் இப்படிக் கடைசீ நேரத்தில் புரட்டிப்பார்ப்பான்..எல்லார்க்கும் எல்லா வழிமுறைகளும் உதவுவதில்லை என்பதையும், அவரவர்க்கான வழிமுறைகளை அவரவரே தேர்ந்துகொள்வதுதான் சரி என்பதையும் அவன் மெல்லமெல்ல உணர ஆரம்பித்தான்..அப்படிப்பட்டதொரு தீர்மானத்தின்பேரில் தான் அவன் கிராமத்துக்குப் போகமல், இங்கேயே தங்கிப்படிப்பது!

என்றபோதிலும், இந்தப் படிப்பின்மீது, இது என்ன படிப்பு! என்ற விமர்சனமும் அவனுக்கு இருந்தது! இதெல்லாம் இவனது தனிப்பட்ட, திருப்திகரமான வாழ்க்கைக்கு உதவுமா என்பதில் அவனுக்கு எல்லையற்ற சந்தேகம் இருந்தது..தன்னால், பொறியியல் கல்வியை முடித்துவிட்டு,எந்திரமயமாய் இயங்கிவரும் நகரங்களுக்குச் சென்று பணியாற்ற இயலுமா என்ற கேள்வி அவனுக்கு எப்போதும் உண்டு! இதைவிட்டால் வேறு என்னதான் வழி என்ற குழப்பமும் அவனுக்கு உண்டு.

இந்த மனசுதான் எவ்வளவு பெரிய குரங்கு! இதற்கு ஒரே மரத்தின் கிளையும் கனிகளும் அலுத்துப்போகிறது..இதுக்கு புதுப்புதிதாய் அனுபவங்கள் தொடர்ந்து தேவையாயிருக்கிறது! தாவிக்கொண்டே இராவிட்டால் இக்குரங்கு மண்டையைப் போட்டுவிடும்,நோயுற்றுவிடும், சோகித்து-துக்கித்துத் துவண்டுபோகும்போல!

மூர்த்தி இந்தப் பத்தொன்பது வயதில் கண்டதையும் படித்து கொஞ்சம் பழுத்துப் போயிருந்தான்..அதனால்தானோ என்னவோ, அவன் மனம் எதிலும் திருப்தியற்று காற்றில் துரும்பென அலைக்கழிகிறது..

சட்டென அவன் மனத்திரையில் தட்ஷிணி உதித்தாள்..காலை பத்துமணிவாக்கில் தேர்வெழுதும் அறையில் அவளை சந்திக்கவேண்டிவரும்..அப்போது வனஜாவும் வருவாள்..அன்று ஏதோ சொல்வதற்காக அவனிடம் ஓடிவந்த வனஜாவை அவன் நிராகரித்து பஸ்ஸில் ஏறிவந்தது, அவனுக்கு மிகுந்த உறுத்தலைக்கொடுத்தது.அவனிடம் எதைச் சொல்ல வந்தாளோ..

தட்ஷிணி ஸ்றீதருடன் வரக்கூடும்! அந்தக் காட்சியை அவனால் கண்கொண்டு பார்க்க இயலாது! மூர்த்திக்கு திடீரென உச்சந்தலையில் சிலிர்ப்போடி மூச்சுக்காற்று சட்டெனச் சூடானது..அவனது உடல் மிகநுண்மையாய் உள்ளடங்கி நடுங்கிற்று!மூளை சூடாகிக்கொண்டேவந்தது..அவன் கண்கள் வெறுமையாய் தன் இருகைகளுக்கிடையே விரிக்கப்பட்டிருந்த புத்தகத்தை வெறித்துக்கொண்டிருந்தன.உடனே அதை மூடிவிட்டு, உள்ளே தாழிட்டிருந்த கதவைத்திறந்து அறைக்கு வெளியே வந்தான்..இரவின் அமைதி அவன்மீது கனமாய்க் கவிந்தது..திடீரென அவனுள் துக்கம் மேலிட்டு கண்களில் நீர் முட்டியது..

உடம்பில் சட்டையணியாமலே தெருச்சாலையில் இறங்கி நடந்தான்..சற்று தள்ளியிருந்த தார்ச்சாலையில் ஒரு லாரி அதன் கனத்த இரைச்சலோடு முக்கிமுனகிச் சென்றது.

மூர்த்திக்கு இப்போது இரவையும் அதன் கனத்த அமைதியையும் ரசிக்க இயலவில்லை.இரவின் கனம் அதீத இறுக்கத்துடன் அவன் தலையுள் கவிந்து, அவனை மூச்சுமுட்டச் செய்தது.கைகளைப் பின்னால் இறுக்கமாக் கட்டிக்கொண்டு, வீடுகளற்ற சாலையில் வெகுதூரம் நடந்தான்.பிறகு வந்த வழியே திரும்பினான்..பிறகு மீண்டும் நடந்தான்.. எத்தனை முறை அப்படி நடந்திருப்பானோ தெரியாது.

மெஸ்ஸிலிருந்து உள்ளடங்கியிருந்த ஊரின் தெருவிலிருந்து சேவலொன்று தெள்ளத்தெளிவாய்க் கூவியபோதுதான் அவனுக்கு காலப் பிரக்ஞை உண்டானது..மூர்த்திக்கு சேவலின் கூவல் பிடிக்கும்..அதை தனது வெற்றிக்கான கூவலாக அவன் பலமுறை உணர்ந்திருக்கிறன். அந்தக் கூவல் மரத்துப்போயிருந்த அவனைக் கொஞ்சம் உயிர்ப்பித்தது..கண்களில் அவனையறியாமல் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்த நீர், வற்றி, கன்னப்பரப்பிலும்,உதட்டோரத்திலும் உப்புக்கோடுகளை வரைந்திருந்தது..

ஏன் இந்தத் துக்கம்..? இதற்குக் காரணம் தட்ஷிணிதானா..இல்லை,என் அறியாமையா..ஒருவேளை, என் முட்டாள்தனம் கூட இதற்குக் காரணமாயிருக்கலாம்..! ஏன் மடத்தனமாக நந்தினி விஷயத்தை அவளிடம் அப்பட்டமாய்ச் சொன்னேன்! அதுதானே தட்ஷிணியின் கோபத்துக்கு முக்கியக் காரணம்! மற்றபடி தட்ஷிணி எவ்வளவு நல்லவள்! அவள் என்மீது அதீதப் பிரியம் வைத்திருப்பதை எத்தனை சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்..மெல்லிய இரவின் மென்தென்றல் போன்றதல்லவா அவளின் ப்ரியம்..அதைக் கொடூரமாய்க் குத்திக்கிழித்த கொடுமையைச் செய்தவன் நான்தானே..

இப்போது இரண்டாம் முறையாக ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமாகக் கூவிற்று சேவல்..அவனுக்குள் இப்போது ஏதோவொரு சக்தி முகிழ்த்து முளைவிட்டு வளர்ந்தது..தனக்கு ஏதோவொரு நல்ல விஷயம் நடக்கப்போவது உறுதியாகிவிட்டதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது!

வேகமாய் அறைநோக்கி நடந்தான்.வைகறையின் தெளிந்த மென்குளிர்க்காற்று அவன் மேனியைத் தழுவிச்சென்றது.

(தொடரும்..)