PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) -நட்சத்ரன் அத்தியாயம்-32natchatran
30-10-2004, 11:34 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-32

தேர்வறையைவிட்டு வெளிவந்து மீண்டும் காலையில் தட்ஷிணியிடம் பேசிக்கொண்டிருந்த அதே சிமெண்ட் ஸ்லாப்புக்கு வந்து அவளுக்காகக் காத்திருந்தான்.எப்படியோ ஒரு வழியாய் முடிந்தது தேர்வு!மூர்த்தி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.புங்கை மரத்தின் அடர்த்தியான நிழலின் ஊடே சுட்டெரிக்கும் சூரியக்கதிர் பாய்ந்து புல் முளைத்திருக்கும் மணல்தரையில் நவீன ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தது.தன் கையில் இருந்த கேள்வித்தாளைப் பார்த்தான்.அப்பாடா..கேள்விகள் ஒன்றும் அவன் எதிர்பார்த்ததுபோல் கடுமையாக இல்லை! அறுபது,எழுபது மார்க் வாங்கிவிடலாம்..எப்படியோ அறுபதைத் தாண்டிவிட்டால் முதல்வகுப்பில் பாஸ் பண்ணிவிடலாம்..

அவன் பத்து இருபத்தைந்துக்குத்தான் தேர்வறைக்குள் நுழைந்தான்.. எல்லோரும் மூன்று மணிநேரம் எழுதும் தேர்வை இரண்டரைமணி நேரம்தான் எழுதினான்..அந்த கடைசீ அரைமணிநேரத்தில் புரட்டிப்பார்த்த பதில்களே அவன் பாஸ் பண்ண வழிவகுத்தன...அப்படியே, புரட்டிப்பார்க்காமல் உள்ளேபோயிருந்தால் என்னாகியிருக்கும்..

இன்று அதிகாலை கேட்ட சேவலின் உற்சாகக் கூவல் மூர்த்தியின் காதுகளில் எதிரொலித்தது.கையில் இருந்த நீலநிற கேள்வித்தாளில் எண்ணற்ற கேள்விகள் அவற்றின் முடிவில் கேள்விக்குறிகளைத் தாங்கியிருந்தன.அவை அவனுள் ஒருவித புதிரான உணர்வைத் தூண்டிவிட்டன.

வாழ்க்கையிலும்தான் இப்படி எத்தனையெத்தனை கேள்விகள்,கேள்விக்குறிகள்!அனைத்துக் கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் இருக்கிறதா! எல்லாக் கேள்விகளுக்கும் எல்லாராலும் பதிலளிக்க இயலுமா!

தேர்வு முடிந்து எல்லா மாணவமாணவிகளும் கும்பல் கும்பலாக வெளியேறிக்கொண்டிருந்தனர்..எல்லார் கையிலும் கேள்வித் தாள்கள்! எல்லாருக்கும் வாழ்க்கை தேர்வுநடத்திக்கொண்டுதான் இருக்கிறது..அவரவரும் அவரவர்க்கு முடிந்த பதில்களை வாழ்க்கை எனும் ஏட்டில் எழுத்தித்தான் ஆகணும்போல!

பெண்கள்விடுதியை நோக்கி வெவ்வேறு வண்ணங்களாலான சுடிதார்களில் ஒரு கும்பல் கைகளில் கேள்வித்தாள்களைப் புரட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தது..அவர்களின் தலைப்பரப்பு வெயில்பட்டு வெண்ணிறமாகக் காட்சியளித்தது..சிலர் அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சட்டென முகத்தைத்திருப்பிக்கொண்டனர்.தட்ஷிணியின் தோழிகள் சிலர் அவனைப் பார்த்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்..ஒருவேளை 'எல்லாவற்றையும்' எல்லாரிடமும் சொல்லிவிட்டாளோ தட்ஷிணி?இந்தக் கும்பலில் தட்ஷிணி ஏன் வரவில்லை?வனஜாவையும் காணோமே!

மிகவும் களைப்பாக இருந்தது மூர்த்திக்கு.சாப்பிட இனி மாமி மெஸ்சுக்குத்தான் போகணும்..இந்த வெயிலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடக்கணும்..ஒரே அலுப்பக இருந்தது..
அப்படியே அந்த சிமெண்ட் ஸ்லாப்பில் மல்லாக்கப் படுத்துக்கொண்டான்..தட்ஷிணியிடமும் வனஜாவிடமும் பேசிவிட்டுப் போனால்தான் களைப்பு தீரும்! இல்லையென்றால் இன்றிரவு தூக்கம் வராது! கடவுளே..எங்கே போய்த் தொலைந்தாள்கள் இவள்கள்!

புங்கை மர கரும்பச்சை இலைகளின் ஊடே ஒரு சின்னஞ்சிறு குருவி அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது..அதைப் பார்க்கையில் தட்ஷிணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு! இந்தக் குருவியிடம் இருக்கும் ஏதோவொன்று அவளிடமும் இருக்கக்கூடும்!இந்தக் குருவி தனியாகவா இருக்குது! கிளைகளூடே கண்களால் துளாவினான்..அதோ..இன்னொரு கிளையில் இன்னொரு குருவி..அதன் அலகில் ஒரு செம்புள்ளி இருந்ததைவைத்து அதன் உருவமும் சற்றே பெரிதாய் இருப்பதாலும் அது ஆண்குருவியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்குவந்தான்..என்ன ஒரு அற்புதமான,ஆனந்தமயாமான வாழ்க்கை இந்தக் குருவிகளுக்கு..இந்தக் குருவிகள் எந்தத் தேர்வை எழுதுகின்றன!அப்படியானால் அவற்றின் வாழ்வில் தேர்வுகளும் சோதனைகளும் அறவே இல்லையா!...மனிதனுக்கு மட்டும்தான் இத்தனை வலிகளா..சிண்டுகளா..சிக்கல்களா! அவனுக்கு அந்தக் குருவிகளைப்பார்த்து சற்றே பொறாமையாக இருந்தது..எத்தனை சுதந்திரமான இருப்பு!

மூர்த்தியின் மோனநிலை, அறைத்தோழன் மனோகரால் கலைந்தது. என்னடா மாப்ளே படுத்திட்டே.. ஹோல் நைட் அடுச்ச களைப்பா..

ஹோல் நைட் அடிச்சது உண்மைதான்! எங்கடா படிக்க முடியுது! ஒரே ப்ராப்ளமா இருக்குடா மாப்ளே!என்றபடி எழுந்து இருபக்கமும் கையை ஊன்றி அமர்ந்துகொகொண்டான்.

இனி அடுத்த செமெஸ்டரும் மாமிமெஸ் ரூம்தானா..? ஹாஸ்டலுக்கே வரமாட்டியா மாப்ளே..? மனோகரின் குரலில் ஒருவித சோகம்.

பாப்போம்டா மாப்ளே..எக்ஜாம் முடிஞ்சு ஒரு மாசம் லீவ் இருக்கே..ஊருக்குப் போயிட்டு அதுக்குப்புறம் முடிவுசெஞ்சுக்கலாம்..

உங்கப்பா ஒன்னையெ வெளிலெல்லாம் விடமாட்டார்..ஸ்காலர்ஸிப் போயிடுமே..

என்னாகுதுன்னு பாப்போம்!

சொல்லிக்கொண்டிருக்கையில் கல்லூரியின் முக்கிய வாயில்வழியாக தட்ஷிணியும் வனஜாவும் வெளிப்பட்டார்கள்..

வனஜா மட்டும் அவனை நோக்கி வந்தாள்.அவள் வருவதைப் பார்த்த மனோகர், அப்ப ரூமுக்குப் போறேண்டா மாப்ளே..அடுத்த செமஸ்டர் ஹாஸ்டலுக்கே வந்துரு பேசாமே..நீ இல்லாதது ஒரே அலுப்பா இருக்கு..நீ இருந்தா ஏதாவது பேசிட்டேயிருப்பே,கலகலப்பா இருக்கும்! என்று சொல்லிக்கொண்டே ஆடவர் விடுதிக்குச் செல்லும் சாலையில் நகர்ந்தான். பெண்கள் விடுதிக்குச் செல்லும் சாலையில் வேகமாய் நடந்துகொண்டிருந்தாள் தட்ஷிணி,மூர்த்தியைத் திரும்பிக்கூடப் பாராமல்.

அவள் வேகமாய்ப் பிரிந்து போவதைப் பார்த்து படபடப்புடன் வனஜாவைப்பார்த்து, என்னாச்சு..எக்ஜாம் முடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு..எங்கெ போனீங்க? என்று கேட்டான் மூர்த்தி.

ம்ம்? முடிவெட்டிட்டு வர்ரோம்! சும்மா இரு மூர்த்தி! எக்ஜாம்லே நிச்சயம் பெய்ல் ஆகிருவாளாம் தட்ஷிணி..நல்லாவே எழுதலேயாம்! என்னவோ தெரியலே,எழுதவே தோணலேங்கறா கேட்டா.. படிச்சது ஒண்ணுகூட மனசிலெ தங்கலையாம்..இன்னவரைக்கும் ஹால்லயே உக்கார்ந்து அழுதுட்டேருந்தா..!

நீ எப்டி எழுதிருக்கே?

ஏதோ சொதப்பிவச்சிருக்கேன்! மதில்மேல் பூனைதான்!
பாஸாவனோ, பெய்ல் ஆவனோ தெரியாது! எல்லாம் திருத்துறவன் கையிலெதான் இருக்கு!

அப்ப நான் தேவலாம்னு சொல்லு! எப்பிடியும் அறுபதுக்கு மேலதான் வரும்! என்னதான் ஸ்ட்ரிக்ட்டா திருத்தினாலும்!

நீ ஒரு செல்பிஷ் மூர்த்தி! உன்னாலெதான் இப்டி ஆயிருச்சாம்,சொல்லிச் சொல்லிப் பொலம்புறா தட்ஸ்..அவளெ அப்பிடியே அந்தரத்துலெ விட்டுட்டு நீபாட்டுக்குப் போயிட்டே..அவ எத்தினிநாள் சாப்டாமே அழுதுக்கிட்டே கெடந்தா தெரியுமா உனக்கு..

அவதானே வனஜ் என்னெ திட்டி அனுப்பிச்சா!

ஏதோவொரு கோபத்துலெ திட்டினா! அப்டியே அம்போன்னு விட்டுட்டுப் போய்றதா! காலேஜ்க்கு வந்த இந்த ஒன்றரை வருஷத்துலே என்னிக்காவது உன்னெ அவ பாக்காமெ இருந்திருக்காளா?

தலையைக் குனிந்து புல்தரையில் கண்களைப் பதித்தபடி யோசித்துப்பார்த்தான் மூர்த்தி....ஆம்..விடுமுறைக்கு ஊருக்குப் போன நாட்களைத்தவிர, அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்ததே நாட்களே இல்லை! சொல்லப்போனால், வகுப்புகளுக்கு மட்டம் போடாமல் அவன் ரெகுலராக வருவதே அவளைப் பார்க்கவும், அவளிடம் பேசவும்தான்!

மௌனமாக யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தியிடம்,
ஆமா..அவகிட்டே நீ ஏம் மூர்த்தி நந்தினி,கிந்தினின்னு உளர்னே..? அப்றம் அவ டென்ஷனாக மாட்டாளா? அப்பிடியே நீ பண்ணது உண்மையா இருந்தாலும் அதெ அவகிட்டெ ஏன் சொன்னே?

ஏதோ எனக்கு அப்போ வாய்ச் சனி! உளறிட்டேன்..இப்ப என்னசெய்யலாம்..அதெச்சொல்லு!

என்ன செய்யலாம்னு அப்றம் சொல்றேன்..இந்த நந்தினி கதையெல்லாம் உண்மைதானா? எங்கிட்டெ உள்ளதைச் சொல்லு! நான் தட்ஷிணிகிட்டெ பேசுறதுக்கு வசதியாயிருக்கும்!

அது சத்தியமா பொய்தான் வனஜ்! சும்மா ஜாலியா ஒரு கதைவுட்டுப் பார்த்தேன்! அவ அதெ நம்பிட்டா..நீதான் வனஜ் அவகிட்டே எடுத்துச் சொல்லணும்!

இல்லையே! நீ அன்னிக்குச் சொன்னப்போ உண்மை மாதிரி இருந்துச்சே!

இல்லெவே இல்லை! சும்மா கதைதான் விட்டேன்!..ஏதோவொரு ஜாலி மூடுலெ உளறிட்டேன்!

சரி..எது,எப்பிடியோ..இப்ப எனக்குத் தலையெ வலிக்குது..பசிவேறெ! நான் போய் சாப்ட்டுத் தூங்கணும்..இனி, நாளான்னிக்குதானே எக்ஜாம்..அதுக்காவது உருப்படியாப் படிக்கணும்!

சரி..தட்ஸ் ஏன் இப்பிடியிருக்கா! ஏன் எங்கிட்டே ஒருவார்த்தைக்கூட பேசாமெப்போறா..ரொம்ப எனக்கு பீலிங்கா இருக்குன்னு அவகிட்டே சொல்லு வனஜ்!

சரி சொல்றேன்..அப்றம்..வரட்டுமா.. என்றவள் சற்றே தயங்கிநின்று தன் அகல விழிகளால் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்: உன்னையும் பாத்தா பாவமாத்தான் இருக்கு மூர்த்தி!..இந்த தட்ஷிணி ஏந்தான் இப்டி இருக்காளோ.. அளவுக்குமீறி பொஸஸிவ்வா இருக்கா அவ! இது எங்கேபோயி முடியுமோ தெரியலே! அவ ஒம்மேலே பைத்தியமா இருக்குறது ஹாஸ்டல்லே எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு..ஒருத்திக்குத் தெர்ஞ்சாத்தான் போதுமே,ஊதுகுழல்வச்சு ஊதிடுவாளுங்களே..சரி..அப்ப வர்ரேன்..ஏதோ என்னாலே முடிஞ்சவரைக்கும் சமாதானப் படுத்தப்பாக்குறேன்! ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டுவிட்டு நகர்ந்தாள்.

அந்த சிமெண்ட் பெஞ்ச்சில் மீண்டும் மல்லாக்கப் படுத்துக்கொண்டான் மூர்த்தி. கண்கள் சற்றுமுன் பார்த்த குருவிகளைத்தேடி புங்கைமரக் கிளைகளில் துளாவின.குருவிகள் எங்கோ பறந்துபோய்விட்டிருந்தன.


(தொடரும்..)

(தொடரும்...)