PDA

View Full Version : என்ன தான் மிச்சம்?



Iniyan
20-12-2004, 01:41 PM
என்ன தான் மிச்சம்?



கண்கள் சிவக்க

கண்ணீர் வழிய

அம்மாவின் திட்டுக்களுடன்

எண்ணெய்க் குளியல்.



மொடமொடக்கும்

புதுத் துணியும்,

அதில் வைத்த

சந்தன வாசமும்.



நாக்கு சுட

மேலண்ணம் பொத்துப் போக

அவசர அவசரமாய்

சாமி கும்பிடும் முன்னே

திருடித் தின்னும்

எண்ணெய்ப் பலகாரங்கள்.



பலகாரக் கூடையுடன்

பெரிம்மா பெரிப்பா

சின்னம்மா சித்தப்பா

வீட்டுக்கெல்லாம் ஒரு நடை.



தின்று கழித்து

உண்டு மகிழ்ந்து

வெடித்து வலித்து

சத்தம் ஓய்ந்த

உச்சி வெயிலில்

உள்ளூர் டூரிங் டாகீசில்

ஒரு தரை டிக்கெட் சினிமா.



கையில் வெடி வெடித்துக் காந்த

கத்தும் அப்பாவுக்கு பயந்து

நான் மறைக்க நினைத்தாலும்

என்னையும் அறியாமல்

வலியால் தானாய்ச் சுரந்து

கொட்டும் கண்ணீர்.



தெருவோரக் குட்டிச் சுவற்றை

அதிர அதிர அடித்த வெங்காய வெடி.

அந்த வெங்காய வெடியை

எனக்கு அறிமுகம் செய்து வைத்து

அடுத்த வருசமே செத்துப் போன

செல்வராசு சித்தப்பா.



அவர் போலவே இப்போதெல்லாம்

தீபாவளியையும் காணோம்.



என்ன தான் மிச்சம்?



வழக்கம் போல அரக்க பரக்க

ஆபீஸ் கிளம்பி ஓடும் போது

'ஹேப்பி தீவாளி மாப்ஸ்' என்ற

சினேகிதனின் வாழ்த்தைத் தவிர???

பாரதி
20-12-2004, 04:24 PM
குறைந்த பட்சம் இனிய நினைவுகளை மட்டுமாவது 'மிச்சம்' வைத்துக்கொள்ளுங்களேன்... நன்றாக இருக்கிறது நண்பரே.. பாராட்டுக்கள்.. முன்பு நிலா எழுதிய தீபாவளி பற்றிய கவிதையையும் நினைவு கொள்ள வைத்திருக்கிறது உங்கள் கவிதை..!

இளசு
20-12-2004, 09:30 PM
பாராட்டுகள் இனியன்..

அனுபவப் பகிர்தலில் முழுவெற்றி கண்டுவிட்டீர்கள் இக்கவிதையில்..


இன்னும் படையுங்கள்.. பரிமாறுங்கள்..
மிச்சம் இல்லாமல்...

பிரியன்
21-12-2004, 05:16 PM
வாழ்த்துக்கள் இனியன்..........

உண்மையின் தன்மையே அழகுதான் ....
அடி மனதில் சேமித்து வைத்த நினைவுகள் அலங்காரமில்லாமல் ஆனால் ஆழமாய் கவிதையில் வெளிப்பட்டுள்ளது....

இது போன்ற கவிதைகள் வாசிக்கும் போதும்,எழுதும் போதும் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது...

தொடர்ந்து தாருங்கள்.

manitha
23-12-2004, 12:00 PM
இன்றைய இயந்திர வாழ்க்கையின்
எதிரொலி
இனியனின் இயல்பான மனிதர்களின்
எடுத்துக்காட்டு.

வாழ்த்துக்கள் இனியன்.

babu4780
20-01-2005, 07:02 AM
இயந்திர மயமாக்கப்பட்ட வாழ்க்கைக்கு இப்படி ஒரு குட்டு..!

அருமை ..

gankrish
01-02-2005, 09:23 AM
அற்புதமான, நிஜங்களின் கவிதை.

thamarai
01-02-2005, 07:49 PM
என்ன தான் மிச்சம் என்ற வினா எழுப்பி... ஞாபகங்களை மட்டும் நினைவாய் மீட்டிய கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

அறிஞர்
03-02-2005, 08:25 AM
அழகாக எழுதி.... பழைய நினைவுகளை மீட்டு விட்டீர்கள்...

இன்று குடும்பத்தை விட்டு.. வேறு தேசத்தில் போன் மூலம் சில வாழ்த்து..... ஈமெயில் வாழ்த்து அவற்றுடன் முடித்துவிடுகிறோம்...

நாம் சிறு வயதில் அனுபவித்ததை.... நம் குழந்தைகள் எங்கு காணப்போகிறார்களோ

kavitha
07-02-2005, 08:56 AM
காலத்தின் ஓட்டத்தில் கடந்தவைகள் மாறினாலும் பாசம் என்னும் ஆணிவேர் மாறாதது. இனி வரும் தலைமுறையினருக்கு முன்னோடியாக இருத்தல் நம் கடமை.

அருமையான கவிதை. பாராட்டுகள் இனியன்.