PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) அத்தியாயம்-41natchatran
07-01-2005, 03:45 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-41

கொல்லப்புற கிணற்றடி புளியமரத்தடியில் மல்லாக்கப்படுத்திருந்தாள் நந்தினி. மரம் பூப்பூக்க ஆரம்பித்திருந்தது.சின்னச்சின்ன மஞ்சள் பூக்களில் இடையிடையே செவ்வரிகள் ஓடி புளியம்பூக்கள் அழகாயிருந்தன.சில பூக்கள் பச்சைநிறத்தில் பிஞ்சாகி குட்டிகுட்டி புளியம்பிஞ்சுகள் எல்லாக் கிளையிலும் , நெளிநெளியாய்த் தொங்கின.கிளைகளுக்கு ஊடே காத்திரமான ஏறுவெயில் புகுந்து பூக்களும் பிஞ்சுகளும் சூடாக ஆரம்பித்திருந்தன. வேலியோரம் நின்ற வேப்பமரத்தில் காகம் ஒன்று ஒற்றைக்குரலில் விட்டுவிட்டுக் கரைந்துகொண்டிருந்தது.

காக்கா கத்துனா விருந்தாடி வருவாகளாம்! அப்ப, மூர்த்தி இன்னிக்கு வந்துரும்! எம் மூர்த்தி என்னை ஏமாத்திராது! அது இன்னிக்கு எப்பிடியாவது வந்துரும்! அதுக்கு பரிச்சையெல்லாம் இந்நேரம் முடிஞ்சிருக்கும்.

நந்தினி புளியமரக் கிளைகளிலூடே கண்களை அலையவிட்டாள். ஒரு கிளையில் ஒரு சின்னூந்து தேன்சிட்டு தாவித்தாவி புளியம்பூக்களில் தேனுறிஞ்சிக்கிட்டிருந்தது.

மூர்த்தியும் இப்படித்தான். அதும் இப்படித்தான் ஏங்கிட்டெ தேனெடுக்கும்! ஏழெட்டுநாள் ஆச்சு.அது வர்ற பாதையெ பாத்துப்பாத்து கண் பூத்துப்போச்சு! வரவர பசிக்கவே மாட்டேனுது! எப்பப்பாத்தாலும் அது நெனப்பாவே இருக்கு! மனசு முச்சூடும் அதுதான் நெறைஞ்சிருக்கு! எப்ப வரும் மூர்த்தி, இந்தச் சிட்டு மாதிரி ஏங்கிட்டெ தேனுறிஞ்ச?

இந்தப் புளியம்பிஞ்சுகள்ளாம் முத்தி பழமாக ரொம்பநாள் ஆவும்.பழம் நல்ல இனிப்பாயிருக்கும்.அதனாலெதான் இந்த மரத்தை எல்லாரும் இனிப்புக்காச்சி அப்பிடிம்பாக! இது அம்மா வெச்ச புளியமரம்.பாவி மக! அவ வச்சுட்டுப்போன புளியமரம் இருக்கு, அவபோய்ச் சேந்துட்டா,இப்பிடி என்னெப் பசியும் பட்டினியுமா தவிக்கவிட்டுட்டு!

மூர்த்தி வந்த உடனே அதுக்கு ஒரு புளியம்பிஞ்சப் பறிச்சு ஊட்டிவிடணும்! அதுக்கு புளிப்பு தாங்காது! பல்லெல்லாம் கூசும்! அப்ப அதோட கண்ணு மொகமெல்லாம் அப்டியே கோணும்! நான் அப்ப அதெப் பாத்து ரசிக்கணும்!

ரெண்டு நாளில் திரும்பிவந்து உனக்கு ஒரு வேலைக்கு வழி சொல்லிட்டுப்போறேன்..னு சொல்லிட்டுப்போன மூர்த்தி எங்கே போய்த் தொலைஞ்சுச்சோ! அதுக்கு வேறெ எவளும் வலை போட்டாளோ! எங்காவது எவகிட்டயாவது வசமா சிக்கிக்கிச்சோ!

நந்தினிக்கு அழுகை முட்டியது.காலையிலிருந்து - இப்ப மணி பதினொண்ணு இருக்கும்- காலையிலேர்ந்து அவ இன்னும் முகத்தைக்கூடக் கழுவலே! ஏன்னா அவ விடியக்காலம் ஒரு கனவு கண்டிருந்தா!

அந்தக் கனவில் மூர்த்தி வந்துச்சு! மூர்த்தி அப்பிடியே வானத்துலே பறந்து அந்த தேன்சிட்டாட்டம் எம்மேலே வந்து ஒட்டிக்கிச்சு! அப்டியே நெஜம்போலவே இருந்துச்சு!அப்பிடியே அணுஅணுவா-துளித்துளியா அது எங்கிட்டே தேன் குடிச்சுட்டு சட்டுனு பறந்து போயிடுச்சு!
நந்தினிக்கு அந்த நினைப்பில் உடம்பு முழுக்கக் கூசியது.அவள்
மணல்தரையில் புரண்டு குப்புறப்படுத்தாள்.கால்களை உயர்த்தி ஆட்டியபடி, மண்தரையில் கோலம் போட்டாள். அந்தக் கோலம் தாமரைப்பூக் கோலம்! மலர்ந்திருக்கும் தாமரைப்பூ! அது அவளுக்கு எப்பவுமே ரொம்பப்பிடிக்கும்! மார்கழி மாசமான அந்தக்கோலத்தைத்தான் அவள் எல்லா நாட்களிலும் வாசலில் சாணம் தெளித்துவிட்டுப் போடுவாள்.

அவள் காதுகளில் இப்போது டகடகவென்று குதிரைகளின் கனைப்புச்சத்தம் கேட்டது!கூடவே குதிரைகளின் குளம்போசைகள் அவளை நெருங்கிவந்தன.ஒரு வெள்ளைக்குதிரை அவளைநோக்கி வருது.அதிலெ மூர்த்தி ராசாபோல உக்காந்து சிரிச்சிட்டிருக்கு! அப்பிடியே பகீர்ங்குது அவளுக்கு.அவ்ளொ பெரிய குதிரையிலே மூர்த்தி விழுந்துட்டா?

அவ வாரிச்சுருட்டிக்கிட்டு எழறா!மூர்த்தி வாவான்னு கைகாட்டுது! அது ராஜாவேதான்! அதோட சிரிப்பு ஏன் அடிவயித்தெ கரையவெக்குது!

திடுக்குனு எழுந்துரிச்சா நந்தினி. காலையிலிருந்து எதுமே சாப்பிடலை. தலை கிறுகிறுத்து மயக்கமாய் வருது..மெதுவா எழுந்துரிச்சு சுத்துமுத்தும் பாக்குறா. குதிரைகளைக் காணும்! மூர்த்தியெயுங் காணும்!

எழுந்து வீட்டைச் சுத்திக்கிட்டு முன்புறமா வர்றா..வெயில் அவள் உச்சியிலெ பட்டுனு அடிக்குது! அவளுக்கு ரொம்பத் தலையெச் சுத்திக்கிட்டு வருது! அந்தப் பழைய ஓட்டுவீட்டுத் திண்ணையிலே அப்பிடியே பொத்துன்னு விழுந்துட்டா! அவளுக்கு எல்லாமே கனவாத் தெரியுது! ஆமா, இப்ப அவ கனவு காணாமெ இருக்கமுடியாது..அதுக்காகவே அவ தூங்கித்தூங்கிக் கெடக்குறா! அவ கனவுபூராவும் மூர்த்தி விதவிதமா வருது! என்னென்னவோ பண்ணுது!அதான் எப்பவும் கனவுலெயே கெடக்குறா அவ!

அவளுக்கு நல்லாப் பசிக்குது! அதான் அவ கனவுலே மூர்த்தியே அணுஅணுவா பிச்சுபிச்சு சாப்டுறா!பசி! பசி! பயங்கரப் பசி!

அப்டியே அவ வயிறு பூரா தீ! பசித் தீ! கபகபன்னு பத்தியெரியுது வயிறு! அந்தத் தீயெ மூர்த்திதான் அணைச்சு வக்கிது, அதும் கனவுலெ வந்து!

நேரா எப்பவருமோ தெரியாது..எப்ப வருமோ..எப்பவருமோ..

நான் சாகத்தான்போறேன்! செத்துறணும்! மூர்த்தி வராட்ட செத்துத்தான் போகணும்..!

அக்கா.. என்று ஒரு குரல். அந்தக் குரல் திண்ணையில் கண்மூடிக்கிடந்த அவளை தோளில் தட்டி எழிப்பிற்று..வள்ளி..வேதவள்ளி..அக்கா..அக்கா..ஏங்க்கா நீ சாகணும்! ஏங்க்கா எப்பப்பாத்தாலும் இப்பிடி பொலம்பிக்கிட்டே கெடக்குறீங்க?

மெதுவா கண்திறந்து பார்த்தாள் நந்தினி..வள்ளி சோகமா மூஞ்சி சுருங்கி நிக்கிறா! இவ மட்டுந்தான் இப்ப அவளுக்குத் துணை.நந்து மெதுவா எழுந்து உட்கார்றா..வள்ளி கையில் ஒரு சில்வர் டப்பா.நந்தினியும் எதிர்பாத்ததுதான்.நந்தினிக்கு இப்போது உயிர் குடுக்குறது வள்ளிதான்..அவள் தெனந்தெனம் நந்தினிக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவந்துர்றா!

மெதுவாக கையூன்றி எழுந்து உட்கார்ந்துகொண்டு, இப்பிடி உக்காரு.. என்று அவள் பக்கத்தில் கைகாட்டினாள் நந்தினி. வள்ளியும் அவளை ஒட்டி உட்கார்ந்துகொண்டாள்.

அம்மா கொலுக்கட்டை சுட்டுச்சுக்கா..உனக்கு நாலு கொண்டுவந்தேன்..மணி பதினொன்னாச்சு..நீ சாப்டாமெக் கெடப்பேன்னு அவசரமா ஓடியாந்தேன்..மூச்சு எறைக்கிது பாறேன்!

ஒண்ணும் பேசாமெ அவள் நீட்டிய டப்பாவை வாங்கித் திறந்க்க முயன்றாள் நந்து. அவளுக்குக் கையில் வலுவில்லை.

ரொம்ப கெறங்கிப் போயிட்டேக்கா.. என்ற வள்ளி,டப்பாவை வாங்கி ஒருநொடியில் திறந்துகொடுத்தாள்.வள்ளிக்கு அவள் பசி தெரியும். அவள் வலி தெரியும். அவள் மனசு தெரியும். நந்தக்கா மனசு முழுக்க மூர்த்திதான்.அவள் எப்பப்பாத்தாலும் மூர்த்திமூர்த்தின்னு மூர்த்திப்பைத்யமா ஆயிட்டா!

அவளோடு ராத்ரிநேரத்தில் படுத்துத்தூங்கும்போது நந்தக்கா மூர்த்தீ..மூர்த்தீ..ன்னு வாய்விட்டுப் பொலம்புறா! ஒருநா நடு ஜாமத்தில் திடுக்கெனெ எழுந்து உட்கார்ந்து வள்ளீ..வள்ளீ.. என்று அவளை உலுக்கி எழுப்பி, மூர்த்தி வந்துச்சா வள்ளி..அதோட காலடிச்சத்தம் வாசல்லெ கேட்டுச்சு இப்ப.. என்றாள். வள்ளிக்கு தூக்கக்கலக்கத்தில் ஒருநிமிசம் எதுவும் புரியலை.

கனவுலயாவது உம் மூர்த்தி வருதே..அதுலேயே சந்தோஷப்படு! என்று தூக்கக்கலக்கத்தில் சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினாள் வள்ளி.திடீரென வாய்விட்டு ஒப்பரிவைத்து அழ ஆரம்பித்தாள் நந்தினி!

ஏங்க்கா..ஏங்க்கா இப்பிடி அழுவுறே?! எழுந்து உட்கார்ந்து அவளது தோளில் கைவைத்துக் கேட்டாள் வள்ளி. அதுக்கு நந்தினி, இனி இப்டியெல்லாம் பேசுனா இங்கே படுக்கவராதே! நான் தனியாக்கெடந்து எக்கேடுகெட்டோ போறேன்..அன்னிக்கே நா ரயில்லே போயிருக்கணும்..இந்த மூர்த்தி வந்து.. அன்று விடியவிடிய அழுதுகொண்டேயிருந்தாள் நந்தினி.விடிந்தபின்னும் வள்ளியிடம் அவள் முகம்கொடுத்துப்பேசவில்லை. வயசில் சின்னவளாக இருந்தாலும் நந்தினியை நன்றாகப் புரிந்துகொண்டாள் வள்ளி: நந்தக்கா என்னவேணாலும் என்னைத் திட்டிக்க! ஏங்கிட்டத்தானே நீ கோவிச்சுக்க முடியும்! என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டாள் வள்ளி.

அப்படி வள்ளி சொன்னதுமுதல் அவளிடம் எரிந்துவிழுவதை கொஞ்சம் குறைத்துக்கொண்டாள் நந்து. இரவில் இருவரும் ஒரே பாயில் படுத்துக்கொண்டார்கள்..வள்ளி பேய்பிசாசுகளுக்கு அதிகம் பயந்தாள்.அதுவும் பொழுது இருட்டிவிட்டால் அவளுக்கு கிலி பிடித்துவிடும்.அவளால் வேறெங்கும் வெளியே போகத்தோணாது.

ஆனால்..இந்த நந்தக்கா எப்பிடி அம்பூட்டு அமாவசை இருட்டுலெ தண்டவாளத்துக்குப் போச்சு! எவ்ளோ தைரியம் அதுக்கு!

சிலநாள் ராத்திரி தூக்கத்தில் நந்தக்கா வள்ளியை பயங்கரமாகக் கட்டீப்பிடித்து அணைத்துக்கொள்வாள்! அப்பவெல்லாம் அவளுக்கு மூச்சுத்திணறும். ஆனாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டாள் வள்ளி..பாவம் நந்தக்கா..ஏதாவது பயங்கரக் கனவுகண்டிருக்கும்..அதான் இப்பிடி என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவாள்..எல்லாம் இந்த மூர்த்தி அவள் வாழ்வில் பூந்தபிறகு நடக்கிறதுதான்! அதுக்கு முந்தி இப்பிடில்லாம் நடந்துக்காது நந்தக்கா.

நினைக்கும்போது வள்ளிக்கு கூச்சமாயிருந்தது. அவளுக்கும் வரவர தூங்கும்போது கெட்டகெட்ட கனவெல்லாம் வர ஆரம்பித்திருந்தது.அடிக்கடி பூப்பூவாய் பூத்துக்கிடக்கும் தோட்டம் கனவில் வந்தது.

நந்தக்காவையும் அவளுடன் ராப்பொழுதுகளில் ஒன்றாய்ப்படுத்து அவளுக்குத் துணையாய்த் தூங்குவதையும் நந்தக்கா மீதுள்ள பிரியத்தாலெதான் செஞ்சா வள்ளி. பாவம் நந்தக்கா..திரும்பவும் தண்டாவாளத்துக்கு தலையெக் குடுக்க ஓடமாட்டாங்கிறது என்ன நிச்சயம்!

வள்ளி கொண்டுவந்த கொலுக்கட்டையெ குழந்தைபோல் ஆவலுடன் கடிச்சுச் சாப்ட்டா நந்து.அவளையே பார்த்துக்கிட்டிருந்த வள்ளியிடம்,என்னடி..பலத்த யோசனே..? நான் கொலுக்கட்டை சாப்டுற லட்சணம் அவ்வளவு கேவலமாவா இருக்கு? வாய்நிறைய கொலுக்கட்டையை அதப்பியவாறு கேட்டாள் நந்து.

நந்தக்காவோட தாத்தா பக்கத்து கிராமத்துக்கு கோழிவாங்கப் போயிட்டார்.அவர் வீட்டிலிருந்தால் வள்ளிக்கு தெம்பாக இருக்கும்.. பேயாவது, பிசாசாவது..எல்லாம் வெறும் கதைடி வள்ளி! தாத்தா எப்பிடியிருந்தவன் தெர்யுமா! ஊருக்கு ஒரு வைப்பு இருந்துச்சி வள்ளி எனக்கு! நீதான் இப்ப தாத்தாவெக் கட்டிக்கடின்னா கட்டிக்க மாட்டேங்குறே! ம்ஹம்.. இப்பத்தான் இப்டி வத்திப்போன சீக்குக்கோழியா ஆய்ட்டேன்!..எம்பேத்தி நந்தினிக்குக்கூட என்னாலெ கஞ்சி ஊத்தமுடியலே.. என்று அழுவார் தாத்தா.

தாத்தா எப்பவும் முற்றத்தில் கயிற்றுக்கட்டிலைப்போட்டு படுத்துக்கொண்டு வானத்தைப்பார்த்து ஏதாவது பழங்கால சினிமாப்பாட்டைப் பாடியபடியே தூங்கிப்போவார்.எல்லாம் அவர் காலத்துப்பாட்டுகதான்! அடிக்கடி பாகவதர் பாட்டு,கலைவாணர் பாட்டுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வள்ளி! அவரும் மதுரமும் நடிச்சாங்கண்டா அப்டியே வச்சகண் வாங்காமெ பாத்துக்கிட்டெ இருப்பேன்!அப்டீம்பார்.

முன்பெல்லாம் தாத்தா சுத்துப்பட்டு கிராமம் பதினாறுக்கும் பெரிய்ய கோழி யாவாரியாக இருந்தவராம்.அவர்தான் இப்பிடி அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பார்.வள்ளிக்கு ஆச்சிரியமா இருக்கும்.அவர் பேருகூட பலபேருக்கு இப்பவும் தெரியாது. ஊர்லெ எல்லாரும் நந்தக்காவெக்கூட கோழிக்கார்ரு பேத்தி அப்டீண்டுதான் கூப்புடுவாக! இப்ப பாவம் தாத்தா! வயசாகி கண்தெரியாமப் போச்சு அவருக்கு!அவர் கோழி யாவாரத்துக்கு வச்சிருந்த சைக்கிள் துருப்பிடிச்சு திண்ணையிலே ஒரு ஓரமாக்கெடக்கு.அதெ எடக்கிப்போட்டாக்கூட அஞ்சுபத்து கெடைக்கும்..பிடிவாதமா அதெ விக்கக்கூடாதுண்டுட்டார் தாத்தா.அவர் செத்தப் பிறகுதான் அதெ விக்கணுமாம்!

கொலுக்கட்டையை அவசர அவசரமாய் விழுங்கிக்கொண்டிருந்தாள் நந்தினி.அவளுக்குத் திடீரென விக்கலெக்க ஆரம்பித்தது. வள்ளி எழுந்து அவசரமாய் வீட்டுக்குள் ஓடி ஒரு டம்ளரில் தண்ணிகொண்டுவந்து நந்துவின் வாயில் குடிப்பதற்குத் தோதாய் வைத்தாள்.. தண்ணியை குழந்தைபோல் எச்சிவைத்துக் குடித்தாள் நந்தினி. வள்ளிக்கு இப்போது நந்தினி ஒரு சின்னக்குழந்தைபோல் தெரிந்தாள்! நந்துவின் கண்களில் சரஞ்சரமாய் நீர் உகுந்து கன்னங்களில் கோடுகோடாய் வழிந்தது.அவள் வள்ளியின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.கண்ணீரின் ஊடே தெரிந்த வள்ளியின் முகத்தில் நந்தினி ஏழெட்டு வருஷம் முன்பு பார்த்திருந்த அவள் அம்மாவின் முகம் மங்கலாய்த் தெரிந்தது.


(தொடரும்..)