PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (42) -நட்சத்ரன்



natchatran
21-01-2005, 04:12 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-42

பஸ்சின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இருளில் எதிர்த்திசையில் விரைந்தோடும் மரங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவனுள் விதவிதமான நினைவுச் சுழல்..

எல்லாத் தேர்வும் எப்படியோ காமாசோமாவென்று முடிஞ்சிருச்சு. அடுத்த செமஸ்டர் ஆரம்பிக்க இன்னும் இருபது நாளுக்குமேல் ஆகும். அதுவரை மாமி மெஸ்சில் தங்கி வெட்டியா சாப்பிட்டுக்கிட்டு இருந்தா அப்பா நொந்துபோவார்.அடுத்து ஒரு வேலையும் இல்லாமே எப்பிடி ரெண்டுமூணுவாரத்துக்கு ஒரு எடத்துலே இருக்குறது..

தட்ஷிணி இந்நேரம் ஊர்போய்ச் சேர்த்திருப்பாள்.அவளை நினைக்கையில் அவனுக்கு வயிறு சில்லிட்டு மூளையில் புதுரத்தம் பாய்ந்தது.அவள் அவனுக்கு ஒரு புறாவைப்போல் தெரிந்தாள்..அவள் நடை, அசைவு, அவளது கச்சிதமான அளவான சின்னதுமில்லாத, பெரிதுமில்லாத உடல்,முகம்,நல்லபாம்பு படம் எடுத்ததுபோன்றிருந்த அவள் ஜடை..லேசான பூனைமுடி வளர்ந்திருக்கும் கைகள், அழகழகான பிஞ்சு விரல்கள்..சற்றே முன்பின்னாக இருந்த அளவான முன்பற்கள்..நெளிநெளியாய் வரியோடிய உதடுகள்..தேன்போல் வழிந்தோடி அவனை தன்னுள் ஈர்க்கும் மயக்குக் குரல்..அவள் சிரிப்பு..சிணுங்கல்..கோபம்..

தானே சிரித்துக்கொண்டான் மூர்த்தி. பக்கத்துச் சீட்டுக்காரன் அவனை ஒரு மாதிரியாகத் திரும்பிப்பார்க்க, ஹலோ சார்..டைம் என்ன இப்போ? என்று அவனிடம் பேசி சமாளித்தான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த பக்கத்து சீட்காரன், தன் மணிக்கட்டைப் பார்த்து, டைம் ஒம்பதரை.. என்றான்.

ரெண்டுநாளைக்கு முன்பு தேர்வு முடிந்தும் இப்போதுதான் ஊருக்குப் போகிறான் மூர்த்தி.புதுக்குடிக்கு-நந்தினி வீட்டுக்குப் போகாமல் ஊருக்குப்போக மனசில்லை! முந்தாநாள் அவள் வீட்டில் அவளோடுதான் தங்கியிருந்தான் மூர்த்தி.

காக்கா கத்தும்போதே நெனைச்சேன்..நீங்க வருவீங்கன்னு.. என்று அவன் மடியில் படுத்து அவனுக்கு ஒரு சின்னஞ்சிறு பிஞ்சை ஊட்டிவிட்டாள்..அப்புறம் தனக்குத்தானே சிரித்துக்கொண்ட நந்தினி, கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் நீங்க வெள்ளைக்குதிரையிலே ராசாமாதிரி வர்றாப்லெ கனவுகண்டேன்! அதே மாதிரி வந்துட்டீங்க! என்றாள். மெலிதான இசைபோலிருந்தது அவள் குரல். அக்குரலில் மெலிதான ஆண்குரல் ஊடோடியது, அவள் குரலுக்கு ஒரு தனீக் கவர்ச்சியைக் கொடுத்தது.

இந்த ஸ்டடி லீவ்லெ என்னென்னெல்லாம் நடந்துபோச்சு! எவ்ளோ அனுபவம்! எவ்ளோ அலைச்சல்! எவ்ளோ வலி! எவ்ளோ இன்பம்!

பஸ்சின் இரைச்சல் அவன் காதுகளில் ஒரு வாத்திய இசையென இறங்கி வெட்டவெளியில் வழிந்தோடியது.ஜன்னல்வழி விஸ்ஸெனப் புகுந்து அவன் காதுமடல்களில் ரகசியமாய் சங்கீதம் பாடியது சூடான மென்காற்று.அவன் முடிக்கற்றை காற்றின் பாடலுக்கேற்ப முன்னந்தலையில் எழுந்தாடி மகிழ்ந்தது..

நந்தினியோடு நேற்றுமுழுக்க இப்படியான சூழலில்தான் இருந்தான் மூர்த்தி..இந்த காற்றுபோல் மென்மையானவள்தான் நந்தினி..கிராமத்து காற்று அவள்..அவள் அவன் மடியில் படுத்து அவன் முடிக்கற்றைய எப்போதும் கோதிக்கொண்டேயிருந்தாள்..

மூர்த்தி தன் தலையை விரல்களால் தலைமுடியைக் கோதிக்கொண்டான்..அவனுக்கு பஸ்ஸில் இருப்புக்கொள்ளவில்லை. ஊர் எப்படா வரும் என்றிருந்தது. இன்னும் பத்திருபதுநாளைக்கு அவனுக்கு ஆற்றிலும் வயல்வெளியிலும்தான் வாசம்..கிராமத்தில் மாமரங்களும் கொய்யாமரங்களும் சூழ்ந்த தோப்புகளில் நண்பர்களோடு சுற்றித் திரியவேண்டியதுதான்..

ச்சை..பேசாமல் மாமி மெஸ்ஸிலேயே தங்கியிருந்திருக்கலாம்..என்னமாய் அழுது அடம்பிடிக்கிறாள் மாமி ஒரு குழந்தைபோல! அவன் ஊருக்குப் போவதை அவள் முற்றிலுமாய் விரும்பவேயில்லை! மாமிக்கு அவ்வளவு வயசாகியும் ஏன் இப்படி குழந்தைபோலிருக்கிறாள்..

ஊர்லெபோய் என்னடாம்பீ பண்ணப்போறே! பேசாமே இங்கேயிருந்து அடுத்த செமஸ்டர் பாடங்களைப் படிக்கலாமோன்னோ! முன்கூட்டியே படிச்சிட்டா நோக்குத்தானேடாம்பீ நல்லது? இப்படி நேரடியாகவே அவள் விருப்பத்தைச் சொல்லிவிட்டாள் மாமி. புவனாவும் அதை ஆமோதித்தாள். அவன் விடாப்பிடியாக மறுத்துவிட்டான்: இல்லெ மாமி, நா ஊருக்குப் போகலைன்னா அப்பா என்னெ இஙெ தேடி வந்துருவாரு..ஹாஸ்டல்லே போயி தேடுவாரு..மனோகர் இங்கெ நா மெஸ்ஸலெ தங்கியிருக்குறதைச் சொல்லிடுவான்..நேரா இங்கெ வந்ந்துருவார்..அப்றம் அவ்வளவுதான்! திருப்பி என்னெ ஹாஸ்டலுக்கு அனுப்பிடுவார்..அடுத்த செமெஸ்டரும் அங்கெதான் தங்கணும்னு அடம்பிடிச்சார்னா அப்றம் நா ஒண்ணும் பண்ணமுடியாது! பழ்யை அப்பாமேல் போட்டுவிட்டு தப்பித்துக்கொண்டான்..அவன் அப்படிச்சொன்னபிறகுதான் மாமி அவனை விட்டாள்! ஆனாலும், அவன் கிளம்பும்போது அவள் முகம் களையிழந்து கூம்பிப்போனதை அவனால் நன்கு உணரமுடிந்தது. பஸ் நிலையம் வந்தபிறகும் அவன் மாமிமெஸ்ஸக்கு திரும்பிவிடலாமா என்று யோசித்தான்.கொஞ்சதூரம் திரும்பி நடந்தும்விட்டான்..ஆனால்..அவனுக்கு அந்தத் திட்டம் சரியென்று தோணவில்லை..

திட்டம்..திட்டம் என்றதும்தான் அவனுக்கு நினைப்பு வருகிறது: நந்தினிக்கு வேலைகொடுத்து அவளை அங்கேயே தங்கவைத்துக்கொள்ள மாமி சம்மதித்ததே அவனுக்காகத்தான்..அப்போதுதான் அடுத்த செமெஸ்டருக்கும் அவன் மெஸ்ஸில் வந்து தங்குவான் என்று தீர்மானித்திருந்தாள் மாமி! அது அவள் பேச்சிலும் நடவடிக்கையிலும் நன்றாகத் தெரிந்தது: உனக்காகத்தாண்டாம்பீ நந்தினியே மெஸ்சுலெ வேலைகுடுத்து இங்கேயே தங்கிக்கவும் வச்சிருக்கேன்! மாமாவுக்கு இதெல்லாம் பிடிக்கலே தெரியுமோ? புவனாவுக்கும் பிடிக்கலேடா, நந்தினி இங்கே தங்குறது! அதெ விடு, நன்னா ஞாவகம் வச்சுக்கோ! நீ சத்தியம் பண்ணிருக்கே! அடுத்து ரெண்டுவருஷத்துக்கு இங்கேதான் தங்குவேன்னு ஏங்கையிலெ அடிச்சு சத்யம் பண்ணிருக்கே! அதுக்காகத்தான் நீ சொன்னதெல்லாம் சரிசரின்னு பூம்பீம் மாடாட்டம் செஞ்சுண்டிருக்கேன்.. சொல்லி முடிக்கையில் மாமியின் குரல் தழுதழுத்தது. அவனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. இப்படியொரு உறவும் பந்தமும் இப்படி படிக்கிற காலத்தில் தனக்குக்கிட்டும் என்று அவன் நினைத்துக்கூடப்பார்க்கவில்லை!

நேற்றிரவுகூட நந்தினி மெஸ் மாடியில் உள்ள கீற்றுக்குடிலில்தான் தங்கியிருந்தாள். ஆனால் மூர்த்தியால் அங்கு போகமுடியவில்லை.மாமி இரவு பத்துமணிவரை அவளிடம் வேலைவாங்கிவிட்டு, அவளும் நந்தினியுடன் கூடவே மொட்டைமாடி குடிலுக்குப்போய் அவளிடம் கொஞ்சநேரம் பேசியிருந்துவிட்டுத்தான் வந்தாள். அப்படி நேரத்தில் நந்தினியுடன் அவனால் பேசக்கூடமுடியாமல் போனது.
ஆனால், நந்தினியிடம் மாமி என்னென்ன பேசிக்கொண்டிருந்தாளோ தெரியாது. இன்று காலையில் அவன் மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு நந்தினிதான் பரிமாறினாள்..அப்போது அவள் அவன் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை..எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை!

ஒருவேளை,மாமிக்கு அரசல்புரசலாக நந்தினிக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு தெரிந்துபோயிருக்குமோ!காலையில் மாமி அவனை ஒரு மாதிரியான புன்னகையுடன் பார்த்ததிலிருந்துதான் அவனுக்கு அப்படியொரு யூகம் கிளம்பிற்று. நேற்றிரவு நந்தினியுடன் பேசும்போது அவள் வாயைக்கிளறி எல்லாவிவரமும் தெரிந்துகொண்டாளோ என்னவோ! மாமிதான் பேச்சில் கில்லாடியாயிற்றே!பாவம் நந்தினி ஒரு அப்பாவி! மாமியிடம் என்னத்தை உளறிக்கொட்டினாளோ!

நான் மூர்த்திக்கு தூரத்துச் சொந்தம் என்று மட்டும் சொல்லிடு நந்தினி..மாமி எனக்காகத்தான் உன்னையெ வேலைக்குச் சேர்க்குது..அங்கே வந்து வேறெதையும் உளறிக்கிட்டிருக்காதே! என்று எச்சரித்துதான் டவுன்பஸ்ஸில் கூட்டிவந்தான். அவளை மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துவிட்டுப்போக வள்ளியின் அப்பாவும் வந்திருந்தார். அவர் அவனிடம் ரொம்ப நன்றி தம்பீ! மாமியப் பாத்தா நல்லமாதிரிதான் தெரியுது! நந்தினி அதுபாட்டுக்கு அதுவயித்தக் கழுவுனா போதும்..அவ தாத்தா அவர்பாட்டுக்கு நாலு கோழிய வாங்கி, வித்துப் பொழச்சிருவாரு.. என்று சொல்லிவிட்டு லேசய் கண்கலங்கினார்.

ஏதோ என்னாலெமுடிஞ்ச ஹெல்ப்..பண்ணினேன்..நீங்க அப்பப்ப வந்து நந்தினியெப் பாத்துட்டுப் போங்க! என்று அவரை அனுப்பிவைத்தான். அவர் பஸ் ஏறுமுன் நந்தினிக்கு நீங்கதான் தம்பீ தெய்வம்! நீங்கதான் ரயில்லேர்ந்து காப்பாத்துனீங்க! இப்ப அவ பட்டினியாலெ சாகாமெ இருக்கவும் உதவி பண்ணியிருக்கீங்க! எல்லாம் விதிப்படி நடக்கும் தம்பீ! என்று சொல்லி அவனை இருகைகூப்பி கும்பிட்டார்.

சும்மாருங்க சார்! எங்கையிலே என்ன இருக்கு சொல்லுங்க! எல்லாம் தன்னாலெ நடக்குது! நா ஒரு கருவி, அவ்வளவுதான்! என்றான் மூர்த்தி.

எனக்கு இப்படியெல்லாம்கூட பேசவருமா! சாயந்தரம் அவன் ஊருக்குக் கிளம்பும்போது மெஸ்சில் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த நந்தினி கண்ணைக் கசக்கிக்கொண்டாள். மாமி மனசேயில்லாமல் சரி! நல்லவிதமாப் போயிட்டு சமத்தா வந்துடு! இந்த மாமியெ மறந்துறாதே! அப்புறம் மாமியெ நீ பாக்கமுடியாது! ஆமா!

மீண்டும்மீண்டும் ஏன் இப்படி பச்சையாய் மிரட்டுகிறாள் மாமி! நான் அடுத்த செமஸ்டர் மெஸ்ஸக்குப் போனால் என்னென்ன விபரீதமெல்லாம் நடக்குமோ தெரியாது! மெஸ்ஸக்குப் போகாவிட்டாலும் ஏதாவது விபரீதம் நடந்திவிடுமோ!

நந்தினி அவனிடம் மெஸ்ஸில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தைக் குறிப்பாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டாள். அதாவது அவள் அவன் முகத்தை மட்டும் பாத்துக்கிட்டிருந்தா போதுமாம்! அவள் அவனை வேறெந்த வகையிலும் தொந்தரவுசெய்யமாட்டாளாம்! எனக்கு நீங்க எம்பூட்டு செஞ்சிருக்கீங்க! நான் உங்களுக்கு தொந்தரவு செய்யலாமா! உங்களுக்கு எதுபிடிச்சுருக்கோ அதைச் செய்ங்க! நல்லவிதமா ஊருக்குப் போயிட்டு வாங்க! இப்பத்தான் எனக்கு உயிர்வாழணும்னு ஆசையாயிருக்கு! என்னெப்பத்தி இனி நீங்க கவலைப்படவேணாம்! நா இனி சாகவே மாட்டேன்!

அப்போது மாமி வந்துவிட்டாள். அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டிருப்பாளோ! மாமி இருக்கையில் நந்தினியிடம் அவன் அதிகம் பேச விரும்பவில்லை! அப்போது மாமி அதிரடியாய் ஒரு செய்தியைச் சொன்னாள்: மூர்த்திப் பையா! இந்த மாமிக்கு எல்லாம் தெரியும்டா! நீ நந்தினி, நந்தினின்னு பொலம்புனப்பவே நா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்! பத்தாக்கொறைக்கு ராத்திரி நந்தினியும் எல்லாத்தையும் உளறிட்டா! ஆனா, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையில்லே! இந்த மாமி எல்லார்மாதிரியும் கிடையாது! ரொம்ப வித்யாசமானவடாம்பீ இந்த மாமி! புரியறதோ?

உண்மையில் ஒண்ணும் புரியவில்லை மூர்த்திக்கு! அவன் தேமே என்று முழிப்பதை ரசிப்புடனும் புன்முறுவலுடனும் பார்த்த மாமி,அவன் அருகில்வந்து கிசுகிசுப்பான குரலில். ஆதாயம் இல்லாமே ஆத்தக்கட்டி எறைக்க மாட்டான் எவனும்..உனக்கு நந்தினி தினமும் வேணும்! எனக்கு நீ வேணும்! இப்பப் புரியறதாடாம்பீ!

என்ன சொல்றீங்க மாமீ? அவன் திணறினான்.

ஒண்ணும் தப்பா நெனச்சிக்காதேடாம்பீ! நீ எப்ப வேணாலும் நந்தினிகூடப் பேசலாம், வைக்கலாம்..அதே மாதிரி ஏங்கூடயும் இருக்கணும்!

மூர்த்தி அதிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்

எதையும் தப்பா எடுத்துக்காதேடா மண்டூ! தினந்தினம் உன்னைப் பாத்துகிட்டு, பேசிக்கிட்டு இருக்கணும்! இல்லாட்டி எனக்கு மண்டைக்கொழப்பம் வந்துடும், சொல்லவேண்டியதெ சொல்லிப்பிட்டேன்!அப்றம், நீதாண்டாம்பீ பாத்துக்கணும்..

அதற்குமேல் அங்கு நில்லாமல் வீட்டுக்குள் ஓடிவிட்டாள் மாமி.

பஸ் வேகமாய் ஒரேவிதமான லயத்துடன் விரைந்தோடிக்கொண்டிருந்தது.

அது இப்போது ஏதோவொரு ஊருக்குள் நுழைந்திருந்தது.அது என்ன ஊராக இருக்கும்? ஜன்னல்வழியே பார்த்தான் மூர்த்தி. அங்கு ஒரு மின்விளக்குக்குக் கீழே மாயாபுரி என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.


(தொடரும்..)