PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (43) - நட்சத்ரன்natchatran
21-01-2005, 04:16 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-43


எம்புட்டுக் கஷ்டப்பட்டுப் படிச்சு பரிச்சை எழுதுச்சோ பிள்ளெ! அதான் ஒம்பதுமணிவரைக்கும் தூங்குது! நைட்டு பத்தரைக்கு மேலேதான் வந்துச்சு!

வாசலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா.யாரா இருக்கும்? போர்வையை விலக்கிவிட்டு வாசல்பக்கம் பார்த்தான் மூர்த்தி. வெயிலில் மின்னிப் பளபளத்தன ரெண்டு கொலுசுப்பாதங்கள்! யாராயிருக்கும்? பாயைவிட்டெழுந்து கண்ணைத்துடைத்தபடி வெளியே வந்தான்.வாசலில் ஜோதி நின்றுகொண்டிருந்தாள்.மெல்லிய ரோஸ்நிறச் சேலையில் பஞ்சுமிட்டாய்போல் புசுபுசுவென்றிருந்தாள் ஜோதி.

ஜோதி கிருஸ்தவப் பெண். அவனுக்கு சின்னவயசில் சி.ஏ.ட்டி. கேட், ஆர்.ஏ.ட்டீ ர்ரேட் என்று இங்லீஷ் சொல்லிக்கொடுத்தவள்.அப்போதிலிருந்து அவள் அப்படியேதான் இருக்கிறாள்: அகண்ட கருகருப்பான மையிட்ட கண்கள், ஒளிரும் முகம், கருணைததும்பும் பார்வை..

என்ன மூர்த்தி..செமெஸ்டர் எக்ஜாம் முடிஞ்சிருச்சா?

ம்ம்..முடிஞ்சிருச்சுங்க..என்றபடி வாசலில் இருந்த பித்தளைக் குடத்தில் நீரள்ளி முகம் கழுவினான்.அம்மா குப்பைமேட்டுப்பக்கம் போய் ஏதோ குப்பையைக் கொட்டிக்கொண்டிருந்தாள்.

ரொம்ப வளந்துட்டே மூர்த்தி இப்ப.நான் உன்னைப்பார்த்து ரொம்பநாள் ஆச்சா, நீ இன்னும் சின்னப்பையனாத்தான் இருப்பேன்னு நினைச்சிட்டேன்! சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள் ஜோதி: அய்ய்..மீசையெல்லாம்கூட மொளைச்சிருக்கு!

ஏய்..ஜோதி..அவன் ரொம்பக் கூச்சப்படுவாம்மா,அவனைக் கிண்டல் பண்ணாதே! என்றபடி குப்பைக்கூடையுடன் வந்தாள் அம்மா.

அவனுக்கு சுரீர் என்றது. நான் கூச்சப்படுவேனா! அப்படின்னா காலேஜில் இத்தனைநாள் அடித்த லூட்டிக்கு என்ன பேர்!

இந்த ஜோதியிடம் பேசுவதும் நேருக்குநேர் அவள் கண்களைப் பார்ப்பதும் கஷ்டம்தான்! ஜோதியின் பளீரெனத் துலங்கும் அழகு அவனை திக்குமுக்காட வைப்பது உண்மைதான்..அவள் அவன் மூணாங்கிளாஸ் படிக்கும்போது டபிள்யூ. ஓ.எம்.ஏ.என். உமன் சொல்லுபாக்கலாம்.. என்றபொழுதே அவள் முகத்தைப்பார்த்து வெட்கி நெளிந்தான் அவன்!அது இப்பவும் தொடர்றதுதான் ஆச்சர்யம்!

அவளது அகண்ட விழிகளை மீண்டும் பார்க்கணும்போல் தோணிற்று.இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க? என்று அவள் கண்களை நேராய்ப் பார்த்துக் கேட்டான். அவன் அப்படி தைர்யமாக தன்னைப் பார்த்தது ஜோதிக்குள் கிளர்வை உண்டுபண்ணியிருக்கணும்,அவள் தன் கண்ணகல அவனைப்பார்த்துப் புன்னகைத்து, எம்.எஸ்ஸி மாத்ஸ் முடிச்சிட்டு தஞ்சாவூர்லெ ஒரு ஸ்கூல்லெ டீச்சரா இருக்கேன் மூர்த்தி..இப்ப கரஸ்லே எம்.பில் பண்ணிட்டிருக்கேன்..நீ பி.இ.செகண்ட் இயர்தானே? என்று கேட்டாள்.

ஆமா..

என்ன ப்ராஞ்ச்?

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்..

ஆப்பர்சுனிட்டீஸ் இருக்கா?

இருக்கோ, இல்லையோ..எனக்கு பிடிச்ச ப்ராஞ்ச் அதான்!

ஏன், எலக்ட்ரானிக்ஸ் பிடிக்காதா?

ம்ஹம்! அதுலே சர்க்யூட்டா வரும்! அது நமக்கு சரிப்படாது!

அவர்கள் பேசுவதை குப்பைக்கூடையை கையில் வைத்தபடி கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா: அவள் முகத்தில் விவரிக்க இயலாத பரவசம்.தன் மகன் என்னல்லாம் பேசுறான், அட, இந்த ஜோதியெக் கண்டாலே முன்னெல்லாம் ஓடிஓடி ஒளியிறவன், இப்ப எப்டி நேருக்குநேர் கூச்சப்படாமெப் பேசுறான்!

அம்மாவுக்கு முன் ஜோதியிடம் அவன் அதிகம்பேச விரும்பவில்லை. அவளிடம் பேசுவதைத் தவிர்த்தால் தேவலாம்னு தோணியது. எழுந்ததும் ஜோதி முகத்தில் முழிச்சது உற்சாகமாய் இருந்தது,நெஞ்சாங்குழியில் ஏதோ பொங்கிப்பொங்கி வழிஞ்சமாதிரி..

அம்மாவுடன் வீட்டுக்குள் நுழைந்து சாணம் மெழுகிய தரையில் வெகுஇயல்பாய் உட்கார்ந்துகொண்டாள். ஒரு தேவதைபோல் அந்த சின்னக்கூரைவீட்டை நிறைத்து நிரம்பினாள் ஜோதி.அவளது வெளியே துருத்திய கொலுசுப்பாதங்களில் நிலைகுத்தி நின்றது மூர்த்தியின் பார்வை.அவனையும் அவன் பார்வையையும் எடைபோட்டபடி அடுப்பங்கரையிலிருந்த அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் ஜோதி.ஜோதி என்றாள் ஜோதிதான் அவள்! அழகின் ஜோதி..அழஹ்ஹ்ஹ்கு ஜோதி..!

அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை.வீட்டுக்குள் நுழைந்து ஜோதியைக்கடந்து உள்ளேபோய், துண்டு-சோப்பை எடுத்துக்கொண்டு, ஜோதியை அருகாமையில் பார்த்து வரட்டுங்களா! ஆத்துக்குப் போறேன் என்று அவசரமாய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஏம்ப்பா ஆத்துக்குப் போறே! பயணக்களைப்பு அலுப்பா இருக்கும்..வெந்நி வச்சுத்தாறேன், இங்கேயே குளிச்சிட்டு சாப்புடு..நேரம் ஆச்சு.. என்றாள் அம்மா அடுப்படியில் அடுப்புப்பற்ற வைத்தபடி.

இல்லம்மா..ஆத்துலெயே குளிச்சுட்டு வந்திர்றேன்..

சரி..ஆத்துலெ பாத்து கவனமாக் குளிக்கணும்,சுழல் இல்லாத எடமாப்பாத்து!

வாசலோரம் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு வேலியோர வேப்பமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கியபடி, வயல்பரப்பில் இறங்கி புற்கள் அடர்ந்த வரப்புவழி ஆற்றுக்கு நடந்தான் மூர்த்தி.ஆற்றங்கரையில் நின்ற தேக்கமரங்களும் வாகைமரங்களும் அவனை வா வா..என்றழைப்பதுபோலிருந்தது.செருப்புப்போட்டு நடந்ததால் பாதங்களுக்கு அருகம்புற்களின் குளுமை எட்டவில்லை. செருப்பை அங்கேயே வரப்போரம் ஒரு பூண்டுச்செடிக்குள் விட்டுவிட்டு வெற்றுக்கால்களுடன் நடந்தான்..ஆஹா..என்ன குளுமை..வரப்பில் படர்ந்திருந்த புல்பூண்டுகளின் இதமும், குளுமையும் அவனுள் ஜில்லெனப் பாய்ந்து அவனை நிறைத்தன.சுள்ளென போதையாய் தலையில் ஏறிற்று வெயில்..அது அவன் உடலுக்கு உணக்கையாய் இருந்தது.அடடா..இப்படி ஏகாந்தமாய் வயல்காட்டில் நடந்து எத்தனை நாளாச்சு! நெல் அறுவடை முடிந்து அடுத்த உழவுக்குத் தயாராய்க் கிடந்தது வயல்காடு.காட்டுப்பூண்டுச் செடிகளும் களைச்செடிகளும் நெல் கொருக்குகளும் வயல்வெளியை நிறைத்திருந்தன.சற்று தள்ளி யாரோ ஒருவன் நாலைந்து மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

மூர்த்தியின் வீடு கிராமத்தை விட்டொதுங்கி ஆற்றங்கரைக்கும் மெயின் தார்ச்சாலைக்கும் இடையில் தோப்புவீடாக இருந்தது. வீட்டருகே சற்று இடைவெளிவிட்டு அடர்ந்த மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்..ஒவ்வொரு தோப்பிலும் ஒன்றிரண்டு கூரைவீடுகள்..எல்லாரும் அவர்களுக்கு சொந்தம்தான் எனினும் எந்த வீட்டிலும் அவனையொத்த பையன்களோ பெண்களோ இல்லை. அவன் தன்னந்தனியே ஓடியாடித் திரிவான் கையில் பாடப்புத்தகத்தோடு..படிப்பைவிட்டால் அவனுக்கு செய்ய ஒன்றுமில்லாமல்போனது..அவ்வப்போது அவன் பள்ளித்தோழர்கள் அவனுடன் விளையாட வீட்டுக்கு வருவார்கள்.அவ்வப்போது இந்த ஜோதியும் வருவாள்..

மூர்த்தி சிறுவயசில் விளையாடுவது அவன் தம்பியுடந்தான்..தம்பி ராஜாவுக்கு படிப்பு மண்டையில் ஏறாமால் ஆறாம் வகுப்பை பாதியில் முடித்துக்கொண்டு அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.இந்நேரம் அப்பாவோடு சேர்ந்து எங்காவது வயலில் உழுதுகொண்டிருப்பான் ராஜா.

அப்பா விடிகாலையிலேயே எழுந்து வயக்காட்டுக்கு போய்விடுவார். விவசாயம்தான் அவருக்கு மூச்சு..எப்பப்பார்த்தாலும் ஏதாவது வேலையிருந்துகொண்டேயிருக்கும் வயக்காட்டில். நெல்லு,கரும்பு,நிலக்கடலை,உளுந்து,துவரை,எள்ளு.. இப்படி எப்பப்பார்த்தாலும் அப்பாவுக்கு ஏதாவது வெள்ளாமைதான்!

நீர்பாய்ச்சி,உழுது,வரப்புவெட்டி,களைபறித்து..சிரித்துக்கொண்டான் மூர்த்தி! அவனுக்கு எம்.ஜி.யார் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது: மணப்பாறெ மாடிகட்டி மாயவரம் ஏறுபூட்டி..

ச்சை! என்ன வேலை இது! இதெல்லாம் எனக்கு சரிப்பட்டும் வராது! என்னை மரியாதையா கடைசிவரைக்கும் படிக்கவச்சுருங்க,சொல்லிட்டேன்! என்று ஒரேயடியாக அப்பவிடம் சொல்லிவிட்டான் மூர்த்தி, ஏழாங்கிளாஸ் படிக்கும்போதே! அவன் வகுப்பில் எப்போதும் முதல் மார்க்தான்!அதனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்பாடுபட்டாவது அவனை கடைசிவரை படீகவைத்துவிடுவது என்ற வைராக்யம் ஏற்பட்டுவிட்டது. அவனிடம் அவர்கள் வேறெந்த வேலையும் சொல்வதில்லை! சொன்னாலும் அவன் செய்வதில்லை, செய்யவும் தெரியாது!

அவனுக்கு படிப்பில் ஆர்வம் வரக் காரணம் இந்த ஜோதிதானோ..! ஜோதியின் கைராசிதான் அவனுக்கு அவனையறியாமல் படிப்பில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திடுச்சோ!

ஜோதி அவனுக்கு இங்லீஷ் மட்டுமில்லாமல் கணக்கும் தமிழும்கூட சொல்லிக்கொடுத்திருக்கிறாள்: ஜோதியின் வீடு ஊருக்குள் இருந்தாலும் சனி ஞாயிறு ஸ்கூல் லீவில் அவர்களது வயல்காட்டைப் பார்க்கவும் மூர்த்திவீட்டு மாமரத்தில் வைக்கோல் பிரியில் ஊஞ்சல்கட்டி ஆடவும் அடிக்கடி அங்கு வருவாள்.அப்போதெல்லாம் அவளே வலியவந்து அம்மாவிடம், மூர்த்திக்கு ஏதாவது சொல்லிக்குடுக்கணும்னா சொல்லுங்க ஆண்ட்டி..எனக்கும் போரடிக்குது.. என்பாள்.அவ்வளவுதான்..மூர்த்தி அவளிடம் மாட்டிக்கொள்வான்!

ஜோதியின் அந்த அகண்டுமலர்ந்த பெரிய கண்கள்..அவை அவனுள் எப்போதும் கிளர்ச்சியை உண்டுபண்ணியதை அவனால் நன்கு உணர்ந்தான்.அவள் அவனுக்கு பாடம் சொல்லித்தரும்போது அவனைப்பார்த்து அவ்வப்போது சிரித்துக்கொள்வாள்..அவனுக்கு அவள் எப்படா விடுவாள் என்றிருக்கும். பாடம் முடிந்ததும் விட்டால் போதும் என்று ஓடிப்போய் அவள் கண்களில் சிக்காமல் எங்காவது ஒளிந்துகொள்வான்..அதெல்லாம் நெனைச்சா இப்போ சிரிப்புத்தான் வருது!

அவள் காலேஜுக்கு போனபின் ஊரிலேயே இல்லை. எங்கோ ஹாஸ்டலில் தங்கிப் படிக்குதாம் நம்ம ஜோதி..என்று அம்மாதான் அடிக்கடி யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பாள்.

சின்னவயசில் பார்த்த அதே ஜோதிதான் இவள்! அப்படியே மாறாமல் அல்லவா இருக்கிறாள்..புத்தம்புதுசாய்..பளபளப்பாய்..தூய்மையாய்!

* * *

படித்துறையில் அமர்ந்து வெகுநேரமாய் ஆற்றோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.படித்துறையை ஒட்டி பனிநீங்கிய நாணல் புற்கள் வெண்பச்சை நிறத்தில் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன.அவன் முதுகிலும் தலையிலும் ஏறுவெயில் கிர்ரென ஏறிக்கொண்டிருந்தது.எதிர்க்கரை தூங்குமூஞ்சி மரத்தில் நாலைந்து காகங்கள் அவனை வேடிக்கைபார்த்தபடி அமர்ந்திருந்தன.இக்கரையிலிருந்த தேக்குமரத்திலிருது அக்கரைநோக்கி பாடியபடி வெகு லகுவாய்ப் பறந்துபோனது குயிலொன்று.அட. குயிலுக்கும் இந்தக் காக்கைகளுக்கும் என்ன வித்யாசம்! ரெண்டும் கருப்புதானே! ஆனால்..சற்றுமுன் பாடிச்சென்ற அந்தக் குயிலின் குரல்..அதுவுமில்லாமல் குயில்கள் காக்கைகளைப்போல் கண்ட இடத்திலும் திரிவதில்லை! எங்காவது அடர்ந்த தோப்புகளில் ஏகாந்தமாய் வாழ்கின்றன..அவனுக்கு இப்போது சட்டென தட்ஷிணி ஞாபகத்துக்கு வந்தாள்..குயில்..தட்ஷிணி..அட, அழகுங்கிறது காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வித்யாசம்தானோ!

அப்ப இந்த ஜோதி யார்? அவள் என்ன பறவை? அவள் எந்த இனம்? ஒருவேளை அன்னப்பட்ஷியோ அவள்? அன்னப்பட்ஷிகளை இப்போது எங்கே பார்ப்பது!

அவனுள் சட்டென ஒரு சிறுநகை இழையோடியது: மாமியை எந்தப்பறவையோடு ஒப்பிடுவது: அவள் மயிலோ!ஆம்..மயில்தான் அவள்..மேகத்தைக்கண்டால் தோகைவிரித்து அகவியாடும் கோலமயில் அவள்! நந்தினி? அவள் காட்டில் திரியும் மணிப்புறா! சின்னஞ்சிறு அலகும் சாம்பல்புள்ளிகளும் சிற்றுடலும்கொண்ட மணிப்புறா.. அப்பாடா..! பெருமூச்சு விட்டுக்கொண்டான் மூர்த்தி. இந்த நதியைப் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கற்பனை ஊறுது!

நதிப்பரப்பில் சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடொன்று மோதியுருண்டு ஒன்றுகலந்து நதியோடுநதியாய்க் கலந்து மறைந்தன. எல்லாம் நதிதான்..ஜோதியின் அழகைப்போல! காற்றிலாடும் அவள் முடியைப்போல!கலகலத்துச் சிதறும் அவள் சிரிப்பைப்போல! அவளது சக்திபொங்கும் துள்ளல் நடையைப்போல!

வாழ்க்கை ஒரு நதி..சலசலத்தோடும் நதி..சக்தியோடு நுரைத்து அலையடித்து நகரும் நதி..அதில் நானொரு சின்ன அலை! தட்ஷிணி, மாமி, நந்தினி, ஜோதி..எல்லாம்..எல்லாமும் அலைகள்! எனக்கருகில் கிளம்பி என்னோடு கலந்து விளையாடி நதிக்குள் மறையப்போகும் அலைகள்..ஆஹா! எப்படியெல்லாம் எனக்குள் இப்படி கவிதை ஊற்றெடுக்குது!

சட்டையையும் கைலியையும் கழட்டி படியோர நாணல்புதரில் வைத்துவிட்டு இடுப்பில் துண்டோடுநின்று மீண்டும் நதியைப் பார்த்தான்..அவனுக்கு இந்த நதி ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலிருந்து, நீந்தக் கற்றதிலிருந்து இந்த நதியோடு உறவாடி வந்திருக்கிறான். அதில் மூழ்கிப்பாய்ந்து முங்கிக்குளித்து நீந்திப்புரண்டு..

ஏறுவெயில் உக்கிரமாய் அவன் பின்னந்தலையில் அடித்தது. சூடேறி தகதகவெனக் கொதித்தது தலை..அடிவயிற்றில் தீக்கொழுந்தொன்று முளைவிட்டு கண்களுக்குப் பாய்ந்து....பயங்கரமாய் எரிந்தது கண்! வயிற்றில் இப்படி திடீரென அனல்மூட்டியது யார்! ஆஹ்! நந்தினி...ரெண்டுநாளைக்குமுன் அவளுள் எப்படியெல்லாம் முங்கி நீந்தினேன்! எல்லாத்துக்கும் ஈடுகொடுத்தாளே அவளும்..எப்படியெல்லாம் சுழன்றுசுழன்று என்னுள் பாய்ந்து வளப்படுத்தினாள் என்னை! ..ச்சே! ஏன் அவளை விட்டுவிட்டு இங்குவந்தேன்!

கைகளை முன்னால் நீட்டி சர்ரென நதியுள் பாய்ந்தான் மூர்த்தி..நதி அவனை தன்னுள் அமிழ்த்திக்கொண்டது..மேலெழும்பி..மூழ்கி..மீண்டும்மீண்டும் மூழ்கி தலையிலும் கண்களிலும் பற்றியெரியும் தீயை அணைக்க முனைந்தான்..நதியோ அவனை தன்னுள் இழுத்து தன்போக்கில் தள்ளிச் சுழட்ட முனைந்தது!

நதியின் சுழலை எதிர்த்து நீந்தி முன்னேற முயன்றான் மூர்த்தி..என்னவொரு சக்தி இந்த நதிக்கு! கரையிலிருந்து பார்க்கையில் என்ன மென்மையாய் எவ்வளவு அமைதியாய் தென்பட்டது இது! இப்ப எப்படியெல்லாம் சுழட்டியடிக்குது!

நீந்தநீந்த கொஞ்சங்கொஞ்சமாய் தணிந்துகொண்டுவந்தது சூடு! கண்களில் பகபகத்த தீ தன் உக்கிரத்தைக் குறைத்திருந்தது. இந்த நதிக்குளியல்தான் எப்பேர்ப்பட்ட அனுபவம்!

நதி எப்போதும் குளுமைதான்! ஆனால்..இதில் நீந்தத்தெரியாவிட்டால் என்ன ஆகும்! அப்படியே இழுத்துச் சுருட்டி தன்னுள் மூழ்கடித்து கொன்றல்லவாவிடும் இது!

மீண்டும்மீண்டும் கைகால்களை ஆட்டி உதைத்து முழுபலத்தையும் திரட்டி நதியோட்டத்தின் எதிர்த்திசையில் ஒரு மீனென நீந்திக்கொண்டிருந்தான் மூர்த்தி. அதீத சக்தியுடன் தன்போக்கில் அவனை இழுத்துப்போக விடாப்பிடியாய் முனைந்துகொண்டிருந்தது நதி.


(தொடரும்...)