PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) அத்தியாயம்-44natchatran
26-02-2005, 04:56 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-44

இன்னும் அழுதுகொண்டிருந்தாள் தட்ஷிணி.

"சத்யாவையே நெனச்சு இப்டி சாப்டாமெக் கொள்ளாமெ ரெண்டுநாளா அழுதுட்டிருந்தா உடம்பு என்னத்துக்கும்மா ஆகும்?" என்று கேட்டார் அவள் அப்பா. அவர் முகத்திலும் சோகக்களை.

"தட்ஷி தட்ஷின்னு உயிரா இருப்பா பாவம், அவளுக்கு என்ன வந்துச்சோ தெரியலை.காலம் கலிகாலம்! யாரு நல்லவ, யாரு கெட்டவன்னே தெரியலை" அடுப்படியிலிருந்து புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.

"சீ, நாயே! நம்ம சத்யா தங்கமான பொண்ணுடி! அவ எந்த வெவகாரத்துலயும் சிக்காதவ! அவளைப்போய் சந்தேகப்படாதே!", என்றார் அப்பா, மீசையைக் கவலையுடன் மேலேற்றித் திருகியபடி.

அவரது கடா மீசையும் முகபாவமும் வெளியாட்களுக்கு பயத்தை உண்டுபண்ணினாலும் தட்ஷிணி அப்பாவுக்கு ஒருபோதும் பயந்ததில்லை.அவள் அவருக்கு எப்போதும் செல்லம்தான்.ஆனால் சத்யாவுக்கு?

முந்தா நாள் ராத்திரி சத்யா பாத்ரூமைப் பூட்டிக்கொண்டு தன் உடம்பு முழுக்க பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்துப் போனாள்! பாத்ரூம் கதவை உடைத்து கரியாகிப்போன சத்யாவை கூட்டத்தோடு கூட்டமாய் தட்ஷிணியும் பார்த்தாள்...அய்யோ! சத்யாவா அவள்! ஒண்ணாங் கிளாஸ்லேர்ந்து என்கூடப் படித்த சத்யாவா அது! ம்ஹம்! அது வேறு ஏதோ பொருள்! அது வெறும் கரிக்கட்டை!

சத்யாவின் இந்த முடிவுக்கு யார் காரணம்? ஊரே அவளைப்பற்றி தாறுமாறாகப் பேசியது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு யூகம்! ஆனால் தட்ஷிக்குத்தான் உண்மை தெரியும்! அந்த உண்மையின் கனம்தான் இப்போது அவளை அலைக்களித்து ஆட்டிவைக்குது. எப்படியிருந்தாலும் சத்யா இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டியதில்லை! சின்ன வயதிலிருந்தே அவள் அசடுதான்! தட்ஷிக்கு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தபோது சத்யாவுக்கு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரிதான் கிடைச்சது! அவளுக்கு படிப்பில் ஒன்றும் அவ்வளவு லயிப்பில்லை! விதியே என்றுதான் படித்தாள். ஆனால் பேச்சில் திறமைசாலி!

பக்கத்துத் தெருவில்தான் சத்யாவின் வீடு. தட்ஷிணி மேல் அவளுக்கு அளவு கடந்த ப்ரியம்! அவளுக்கு தட்ஷி என்று செல்லப்பேரிட்டவளும் அவதான்! தட்ஷிணி ஹாஸ்டலைவிட்டு ஊருக்கு வந்துவிட்டாள் போதும்! சாயந்தரம் வீட்டுக்கு வந்தால், ராத்திரி எட்டுமணிக்குத்தான் வீடுதிரும்புவாள்! அப்படித்தான் அவள் நான்குநாள் முன்பு காலேஜிலிருந்து வந்த அன்றும் நடந்தது...

"தட்ஷி எப்டிடி இருக்கே? எக்ஸாம்லாம் எப்டிடி எழுதினே? எப்படி வந்தே?", மூச்சுவிடாமல் கேட்டபடி அன்று வீட்டுக்குள் புயல் மாதிரி நுழைந்தாள் சத்யா.

வீட்டு வாசலில் பைப்பில் குடிதண்ணி பிடித்துக்கொண்டிருந்த தட்ஷிணிக்கு அவளைப் பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவரும் மொட்டைமாடிக்குப் போனார்கள்.

மாடிப்படி ஏறும்போது, "எப்படி வந்தேன்னு கேட்டேன்லெ?", என்று மீண்டும் கேட்டாள் சத்யா.

தட்ஷிணி, "மத்யானம்தாண்டி வந்தேன்", என்றாள்.

செல்லமாய் அவள் முதுகில் ஒரு குத்துவிட்ட சத்யா, "ஏ நாயே! வீட்டுக்கு வந்திருக்கலாமில்லே! எவ்ளோ இருக்கு பேசுறதுக்கு?", என்று கடிந்துகொண்டாள்.

"ஏண்டீ ஓம் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு! கலகலப்பாவே இல்லையே நீ!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லேடி! எப்பவும்போலதான் இருக்கேன்"

"இல்லையே, ஓம் மூஞ்சியப்பாத்தா அப்டித் தெரியலையே"

"எனக்கும் ஓங்கூடப் பேசுறதுக்கு நெறைய இருக்குடீ"

"ஹய்யா! லவ்வா! முன்னாடி எவனோ சொன்னியே! மூர்த்தியோ என்னமோ! அவந்தானே?"

"ச்சீய்ய்! சும்மா கத்தாதே! அம்மா ஏதும் வந்துறப்போறாங்க"

"வந்தா என்னடி இப்போ! சும்மா சினிமாக்கதை பேசிட்டிருக்கோம்ணு சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்!"

"அய்யய்யோ! வேண்டாம்ப்பா! எங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான்! அப்றம் நான் சாகவேண்டியதுதான்!"

"ச்சீ! சாவப்பத்தி ஏண்டி பேசுறே! லவ்வப்பத்திப் பேசுடீன்னா..."

"சரி. ஓங்கதை என்னாச்சு? அதெச்சொல்லுடி மொதல்லே"

"சரி சொல்றேன்.அதுக்கு முன்னாடி ஒனக்கு ஒரு ஷாக் தரப்போறேன்!"

"என்ன ஷாக்? சும்மா பொறுமையெச் சோதிக்காமச் சொல்லு!"

"நான் இப்போ நான் மட்டும் இல்லே!"

"அப்டீன்னா?" உண்மையிலேயே அதிர்ந்துபோய்க்கேட்டாள்.

"என் குட்டிச்செல்லம் இப்போ என் வயத்துலே!"

"ஏய்! உண்மையாவா சொல்றே?"

"அதுக்குள்ளெ எப்டிடி...?"

"ம்ம்! அதெல்லாம் எல்லாம் முடிஞ்சுபோச்சு! ஆனா அது இல்லே இப்ப பிரச்சனை!"

"வேறென்ன ப்ராப்ளம்?"

"அப்பா என்னெ குருவுக்கு கட்டிக்குடுக்க மாட்டாராம்!"

"அவன் உன் மாமா பையந்தானே! சின்ன வயசிலேர்ந்து உனக்கு அவன், அவனுக்கு நீன்னுதானே இருந்தீங்க! அதுக்கு உங்க அப்பாவும்தானே சம்மதிச்சிருந்தாரு!"

"இப்போ எங்க தாய்மாமா அப்பாவெ மதிக்கலையாம்! குருவுக்கும் உருப்படியா ஒரு வேலை இல்லையாம்! தனியார் கம்பெனி வேலையாம்!"

"அதுக்கு?"

"அதெ ஏண்டி கேக்குறே! அப்பா ரொம்ப கூறுகெட்டுப்போயி எனக்கு ஒரு மாப்ளே வேறெ பாத்து வச்சிருக்கார்!"

"சீரியஸாவா சொல்றே?"

"இது ஒண்ணும் காக்காக் கதெ இல்லடி! நடப்பு! வீடே நரகமாயிடுச்சுடி! என்ன நடக்கப்போகுதோ தெரியலே"

சத்யாவின் கண்களில் நீர்ப்பெருக்கு! தட்ஷிணி அவள் கண்களைத் துடைத்துவிட்டாள். அன்றுதான் அவள் சத்யாவை கடைசியாய்ப்பார்த்தது.

அப்புறம் என்னாயிற்றோ தெரியவில்லை. தினமும் அவளைத் தவறாமல் பார்க்கவரும் சத்யா அதுக்குப்பிறகு வரவேயில்லை. சத்யாவின் இந்த முடிவுக்கு அவள் அப்பாவே எமனாகிவிட்டார்!

அன்று கடைசியாகப் போகும்பொழுது "தட்ஷி என்ன எப்பவும் மறந்துறாதடீ!" என்றாள் சத்யா. அப்போதும்கூட அவள் இப்படி தன்னைத்தானே எரித்துக்கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை தட்ஷிணி.

எங்கோ போய்விட்டு வந்து அறையை எட்டிப்பார்த்தார் தட்ஷிணியின் அப்பா.

"தட்ஷிணீ! ரூமுக்குள்ளேயே அடஞ்சுகெடக்காமே வெளியவந்து அம்மாகூடச் சேர்ந்து ஏதாவது வேலையெப் பாரு. அப்பத்தான் மனசு ஆறும் உனக்கு..." என்றார் அப்பா. இப்போதும் அவரது வலக்கை அவரது கடாமீசையைத் தடவிக்கொண்டிருந்தது. ஆனால்... இப்போது அவர் மீசைக்குள்ளும் கண்களுக்குள்ளும் ஏதோ ஆவி புகுந்துகொண்டதுபோல் தோணியது. அதில் சத்யாவின் அப்பா முகம் பிரதிபலித்தது.

மீண்டும் அழுகையில் வெடித்தாள் தட்ஷிணி.

(தொடரும்..)