PDA

View Full Version : 4. என்னைக்கவர்ந்த வலைப்பூவிலிருந்து சில பகுதிகள்பாரதி
07-08-2004, 07:28 AM
தமிழில் பிரிக்கமுடியாத ஒரே ஒரு வார்த்தை அதிகபட்சம் ஐந்து முதல் எழு எழுத்துக்களால் ஆனது என்று. தேமாந்தண்நிழல் அல்லது கருவிளநறுநிழலால் ஆன பிரிக்கமுடியாத வார்த்தை கொண்ட ஒரு கவிதை ஏதாவது சொல்லமுடியுமா?
- பிரசன்னா.

வார்த்தை வேறு. சீர் வேறு. அதை அப்புறம் பார்க்கலாம். நாற்சீர்களால் அமைந்த பாடல்கள் அவ்வளவு அதிகமில்லை. இப்போது வெண்பாவை மட்டும் பார்க்கப் போகிறோம். இங்கே அதிகபட்சம் மூன்று சீர்கள்தாம் வரும். நாற்சீருக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால், நெய்க்கு அலைவானேன்? நீரே இருக்கிறீர்!

ஒன்று வேண்டுமானால் உடனடியாகச் செய்யலாம். நரசிம்மத்தைப் பற்றி எழுத ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது ஒன்று. இதைப் பாருங்கள்.

கருவிடு வெறிபடு பொறிவர திரிதரு

கதமுறு முளமொரு கதிரென எரிதர

கனகனு நெறுநெறு நெறுவென எயிறது

கடிபட கரதல மெதிரெதி ரிடிதர நகைதானோர்

கருகிடு பொறிபடு எரிவரு புகைவிடு

கனமுறு முகிலிடு வெடியென யிடியுற

கடகட கடவென கடலெழு மலையென

கதிரது கருகிட கடலுட லருகிட வெறியேறி


இதில் 'நகைதானோர்' மற்றும் 'வெறியேறி' ஆகிய இரண்டையும் தவிர மற்றவை எல்லாம் கருவிளம். பதினாறு சீர் விருத்தம். இதையே எண்சீராக்கினால், இப்படி அமையும்:கருவிடுவெறிபடு பொறிவரதிரிதரு கதமுறுமுளமொரு கதிரெனஎரிதர

கனகனுநெறுநெறு நெறுவெனஎயிறது கடிபடகரதல மெதிரெதிரிடிதர நகைதானோர்

கருகிடுபொறிபடு எரிவருபுகைவிடு கனமுறுமுகிலிடு வெடியெனயிடியுற

கடகடகடவென கடலெழுமலையென கதிரதுகருகிட கடலுடலருகிட வெறியேறி

கருவிளம் கருவிளம் என்று இருப்பதைக் காட்டிலும் இப்படிப் போடும்போது படித்தால் மூச்சு முட்டும். படித்துப் படித்துப் பழகினால் ஒழிய, வாய்விட்டுப் படிக்க முடியாமல் போகும். பதினாறு சீராகப் பிரித்துப் போடும் போதும் அப்படித்தான் ஆகும். ஆனால் சிறுசிறு துண்டுகளாக இருப்பதால் கொஞ்சம் எளிதாகும். கடைசிச் சீரை மூன்று சீராக வைத்து ஒரு ப்ரேக் கொடுப்பதால் சின்ன relief கிடைக்கும்.

இவை வண்ண விருத்தங்கள் என்ற வகையில் போகும். இப்போது வேண்டாம். குழம்பும்.

இன்றே தொடங்கும் இலக்கணம் பின்பயனாய்
நன்றே எழுதுவேன்வெண் பா

இலக்கண சுத்தமாக இருக்கிறது. முதல்நிலை தாண்டியாகிவிட்டது. 'எழுதுவேன்வெண்' சொல்லிப் பாருங்கள். நாக்கு தடுக்குகிறது இல்லையா? எங்கே நிற்கிறது? வேன்வெண், அங்கே. ஏன்? ஒரேமாதிரி ஒலி. ஒன்று நெடில், இன்னொன்று குறில். எழுதுவேன் என்பதை வேறு எப்படிச் சொல்லலாம்? யோசிக்க வேண்டும். ஒரு மாதிரிதரட்டுமா? 'நன்றேவெண் பாவடிப்பேன் நான்.' வெண்பா வடித்தல். 'நன்றாகும் வெண்பா நயந்து.' நன்று என்ற எதுகையை மாற்றிப் போட்டால்? 'வென்றிதரும் வெண்பா விரைந்து'. பண்டிதத்தனமாக இருந்தால் பரவாயில்லை. நாலு விதமாய் மாற்றிமாற்றிப் போட்டுப் பாருங்கள்.

விருத்தத்தில் எழுதிக் கொண்டிருந்தான் பாரதி. 'வள்ளுவன்' என்று நினைத்தான். அவனை அறியாமல் குறள் வடிவத்தில் தானாக அமைந்தது.

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்டதமிழ் நாடு.

அலகிட்டுப் பாருங்கள். குறள் வெண்பா மிகச் சரியாக நிற்கும். பழகப் பழக, இந்தப் புலிமேல் சவாரி செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் இறங்கக் கூடிய புலிமுதுகு சவாரி. நமக்கெல்லாம் சவாரி மட்டும்தான் செய்ய முடியும். பாரதியிடம் அந்தப் புலிவால்குழைத்து, காலடியில் படுத்து, அவன் காலை நக்கிக் கொண்டிருந்தது. பாரதியின் வெண்பாக்களை எடுத்து அலகிட்டுப் பாருங்கள்.

[b]வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம்
செய்யக் கருதியிது செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்.

சொல்லுகின்ற கருத்தைப் பிறகு பார்க்கலாம். வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். எங்காவது தடுக்குகிறதா? இடறுகிறதா? சொல் இரண்டாகப் பிளந்திருக்கிறதா? (வகையுளி என்று சொல்வார்கள். பிறகு பார்க்கலாம்.) இஷ்ஷ்க் என்று வழுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

நல்ல ஆரம்பம். வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

மன்மதன்
07-08-2004, 09:33 AM
அருமையான தெரிவு.. நீங்கள் படித்ததில் பிடித்ததை இங்கே தேர்வு செய்து கொடுத்துள்ளீர்கள்.. இளசு அண்ணா வந்து விரிவாக கருத்து சொல்வார்கள்.. இது போல தொடர்ந்து கொடுத்து எங்கள் தமிழ் ஈடுபாட்டை வளருங்கள். நன்றி ..

அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
08-08-2004, 10:18 AM
சிறிது காலம் தொடர்ந்து பயின்றால் வெண்பா என்ன இலக்கணம் முழுமையாய் அறியும் வாய்ப்புள்ளது நண்பரே. நன்றி.

thamarai
18-02-2005, 11:33 AM
படித்ததை அறியத்தந்தமைக்கு நன்றிகள்...