PDA

View Full Version : நதிமூலம் (நாவல்) (45) -நட்சத்ரன்natchatran
26-02-2005, 05:01 AM
நதிமூலம் (நாவல்)

-நட்சத்ரன்

அத்தியாயம்-45


"இந்த நைண்ட்டீன் எய்ட்டி எய்ட்லே, நீ ஒருத்தன்தான் மூர்த்தி நம்ம செட்லே இன்ஜினியருக்குப் படிக்கிறவன்! மத்தவன்லாம் அஞ்சாங்கிளாஸ்லேயும் ஆறாங்கிளாஸ்லேயும் கோட் அடிச்சுட்டு தானுண்டு தன் மாடுண்டுன்னு மாடு மேச்சுக்கிட்டு உழுதுக்கிட்டு வயக்காடே கதின்னு கெடக்குறானுங்க! உனக்கடுத்து நாமட்டுந்தான் டெய்லரா நெழல்லே உக்காந்து பொழப்பு நடத்திக்கிட்டிருக்கேன். அந்த அய்யாச்சாமி வாத்யார் மட்டும் எனக்கு இங்கிலீஸ் சுட்டு போட்டாலும் வராதுன்னு சொல்லி கம்பாலே வெளுவெளுன்னு வெளுக்கலைன்னா, எட்டாங்கிளாஸெ பாதிலே விட்டுட்டு வந்திருக்கமாட்டேன்! இந்நேரம் ஓங்கூட காலேஜ்லே படிச்சிக்கிட்டிருப்பேன்!" தையல் மெஷினை ஓட்டியபடி மூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தான் சேகர்.

ஒரு சட்டை தைப்பதற்காக ஜாய்ஸ் டெய்லர்ஸ் என்று பெயரிடப்பட்ட சேகரின் தையல்கடைக்கு வந்து சேகருக்குப் பக்கத்தில் ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. கிராமத்தின் மையமான அந்த சிறு கடைத் தெருவில் இரண்டு டீக்கடைகளும், இரண்டு மூன்று பெட்டிக் கடைகளும் ஒரு மளிகைக் கடையும் இருந்தன. ஆற்றங்கரையை மையமாகக் கொண்டு ஆற்றின் இருபுறமும் பெரும்பாலும் தென்னங்கீற்று வீடுகளைக்கொண்ட தெருக்கள் நீண்டுகிடந்தன. அக்கரைக்கும் இக்கரைக்கும் ஒரு பழைய சிதிலமான இணைப்பு ப்பாலம் இருந்தது. தஞ்சாவூர் ஒரத்தநாட்டுக்குப்போகும் மக்கள் எப்போதாவது வரும் டவுண் பஸ்ஸக்காகவும் ரூட் பஸ்ஸக்காவும் கடைத்தெரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். ஆண்களும் பெண்களுமாய் கடைத்தெருவுக்கு ஏதாவது ஜாமான் வாங்க வந்துபோனார்கள். அவனுக்குத் தெரிந்த சிலர் அவனைப் பார்த்துப் புன்னகைத்து நலம் விசாரித்துப் போனார்கள்.

மெயின் கடைத்தெருவிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கூரைவீட்டில் தையல்கடை வைத்திருந்தான் சேகர்.

பனிரெண்டுமணி வெயில் கடைத்தெரு தார்ச்சாலையைப் பளபளக்கச்செய்தது.

சேகர் பேசுவதைக் கேட்டபடி கடைத் தெருவை வேடிக்கைபார்த்த மூர்த்தி, "அதெ விடு! நம்ம கிளாஸ்மேட் இந்திரா இப்ப உங்கூடப் பேசுவாளா?" என்றான் ஆவல் தொனிக்க.

"அட! அதெல்லாம் இன்னம் ஞாபகம் வச்சிருக்கியா? அதெ ஏம்ப்பா கேக்குறே! கல்யாணம் பண்ணி ஒரத்தநாடு தாண்டி அவ புருஷன் வீட்டுக்குப் போனப்புறமும் அடிக்கடி ஊருக்கு வந்து என்னெத் தொந்தரவு பண்ணிட்டிருந்தாப்பா! அது அவ புருஷனுக்குத் தெரிஞ்சு பெரிய ப்ராப்ளம் ஆயிடுச்சு!"

"ப்ராப்ளம்னா?"

"ப்ரப்ளம்னா அடிதடிதான். ஒருநாள் அவளை வீட்டுக்குள்ள வச்சு பின்னுபின்னுன்னு பின்னிட்டானாம்! அவ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுலெ வந்து கெடக்குறா!"

"அப்ப ஒன்னெ இப்பப் பாக்குறதில்லே?"

"நீ ஒரு மண்டு இவனே! அவ புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்ததே எங்கூட இருக்கத்தானே!"

"அடப்பாவி! அவ அம்மா வீட்டுலெ ஒண்ணும் சொல்லலையா சேகர்?"

"இங்கெ பாரு! என்னெ ரொம்ப நோண்டி நோண்டிக் கேக்காதே! அப்புறம் நா வாயை விட்டுருவேன்!"

"ஏய்...சொல்லுப்பா! நா யார்ட்டப் போய் சொல்லப்போறேன்"

"சொன்னாத்தான் என்னப்பா! சொல்றதுன்னாலும் சொல்லிக்க! அதெப்பத்தி நான் கவலைப்படலெ! ஊருக்கே தெரியும் எங்க விஷயம்!"

"அப்பறென்ன! சொல்லு!"

"அவ அம்மாவே என்னையெ வீட்டுக்குள்ளெ உட்டுட்டு வாசல்லெ உக்காந்து காவல் காத்துப்பா! த்தூ! பொம்பளையா அவ!"

"ஏம்ப்பா! உனக்கு நல்லது செய்றவங்களெ இப்பிடி அநியாயத்துக்கு திட்றே?"

"அவளா நல்லது செய்றா! அவளோட சின்ன மகளெ நான் கட்டிக்கணுமாம்! அதுக்காக கட்டிக் குடுத்த மூத்த மகளையும் தானம் பண்றா

"அந்த இந்திராவும் நீயும் ஒண்ணாங் கிளாஸ்லேர்ந்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாத்தானே வருவீங்க, போவீங்க? அது உனக்கு பக்கத்துவீடுதானே? அவளைத்தானே நீ லவ் பண்ணே?"

"லவ்வாவது, மண்ணாவது! அதெல்லாம் ஒரு மண்ணுமில்லப்பா! நீ படிச்சவன், உனக்குத்தெரியாதா! எல்லாம் அரிப்புப்பா, உடம்பு அரிப்பு எல்லாம்! வேறொண்ணுமில்லே இதுலே!"

"அப்பிடியெல்லாம் சொல்லாதே சேகர்! அப்ப உண்மையான லவ்வுன்னு ஒண்ணுமே கெடையாதுங்கிறியா?"

"ஆமாப்பா! நீ போகப் போகத் தெரிஞ்சுக்குவே! எல்லாத்துக்கும் உடம்புப் பசிதான் காரணம்! உடம்பு கேக்குது குடுகுடுன்னு! அதான் நா இப்பிடி நாயா அலையிறேன், இந்திராவையும் அவ தங்கச்சியையும் தேடி"

"அடப்பாவி! அவ தங்கச்சியையும் விட்டுவைக்கலையா நீ?"

"இதெல்லாம் ஒண்ணுமே இல்லே மூர்த்தி! நீதான் ரொம்ப அப்பாவியா இருக்கே! இதுவரைக்கும் நீ எதுமே பண்ணதில்லையா?"

"ம்ஹம்!"

"எனக்கும் உன் வயசுதான்! நா இதுவரைக்கும் எத்தனை பேரைப் பாத்திருக்கேன் தெரியுமா!"

"எத்தன பேரு?"

ஏம்ப்பா இப்டி வாயெப் பொளக்குறே!

"அதெப்படிப்பா?! இந்திரா...அவ தங்கச்சி, அவ பேரென்ன..ம்ம்...மல்லிகா... அவ...அதுபோக அப்றம் யாரெல்லாம்..."

"சாரிப்பா. நீ படிச்சிட்டிருக்கிறவன்! நான் ஓங்கூடப் படிச்சுட்டு எட்டாங்கிளாஸைப் பாதியில் விட்டவன்! கண்டதெல்லாம் சொல்லி ஒம் மனசைக் கெடுக்க விரும்பலே. நீ ஒழுங்காப் படிக்கிற வேலையெப்பாரு! உன்னெப்படிக்க வைக்க உங்கப்பாவும் அம்மாவும் தம்பியும் வயக்காட்டுலெ என்ன பாடு படுறாங்க தெரியுமா?"

"ஏய்..! அதெல்லாம் எனக்குத் தெரியும்ப்பா! நான்லாம் நல்லாப்படிச்சுப் பாஸ் பண்ணிருவேன்! நீ சொல்லு, சும்மா தெரிஞ்சு வச்சுக்கிறேன்!"

"விடுப்பா! இப்ப அதெல்லாம் தெரிஞ்சு என்னாகப் போகுது உனக்கு?"

"ஒண்ணும் ஆகாது! நீ சும்மா சொல்லு!"

"அதெல்லாம் கணக்கு வழக்கில்லப்பா...எப்டியும் பத்துப் பதினஞ்சு தேறும்!"

"அடப்பாவி! பத்துப் பதினஞ்சா! அதுக்குள்ளேயா? ஒடம்பு என்னத்துக்குய்யா ஆகும்? உண்மைதானா, சும்மா கப்சா விடுறியா?"

"அதுக்குத்தான் இதெல்லாம் சொல்லமாட்டேன்னேன்! விட்டியா நீ! நான் செஞ்சதெ சொல்லிட்டேன். சரி, அதெ விடு, காலேஜ்லெ நீ ஏதாவது..?"

"சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா."

"அப்ப காஞ்சுபோய் கெடக்குறேனு சொல்லு."

"ஆமாப்பா"

"அப்ப ஏங்கூட சவுக்குத்தோப்புக்கு வர்ரியா?"

"ஏன் அங்கேபோய் பேய் பிசாசெ காட்டப்போறியா?"

"நம்ம டாவு ஒண்ணு நாளைக்கி அங்க வர்ரேன்னுருக்கு"

"நெஜமாவா?"

"அப்றம்! சொன்னா சொன்னபடி டாண்ணு வந்து நிக்கும்! நாளைக்கி மத்தியானம் ஒருமணிக்கு வரச் சொல்லிருக்கேன். நீயும் வர்ரதுன்னா சொல்லு"

"ஒருமணிக்கா! உச்சி வெயில்லே பேய் பிசாசு...?"

"எல்லாம் என்னெமாதிரி ஆளுங்க கெளப்பி விட்டதுதான்! அப்பத்தானேப்பா நாங்கல்லாம் அங்க போயி ஜாலியா இருக்கலாம்! கிராமத்லெ டவுன்லெ மாதிரி இதுக்கெல்லாம் லாட்ஜா இருக்கு?"

"ஏம்ப்பா, இருந்திருந்தும் ஒனக்கு சவுக்குத் தோப்புதானா கெடச்சது?"

"அட! அதாம்ப்பா ஊரெவிட்டு ஒதுக்குப்புறமாவும் விஸ்சுன்னு எப்பவும் ம்யூசிக் மாதிரி காத்து வீசிக்கிட்டு சூப்பரா இருக்கும்! கீழெ மணல் வேறெ கும்பல் கும்பலாக் கெடக்குதா, சும்மா மெத்தைமாதிரி ஜம்ஜம்னு இருக்கும்ப்பா! சவுக்குத் தோப்புதான் நம்ப சொர்க்காபுரின்னு வச்சுக்கோயேன்!"

மூர்த்தி யோசித்தான்.

"என்ன யோசிக்கிறே? ஒரு நாளைக்கு வந்துதான் பாறேன்!"

"என்னத்தப் பாக்குறது?"

"உனக்கு ஒண்ணு தனியா வரச்சொல்லிர்றேன்.. எங்க ஆளோட ப்ரெண்டே இருக்கா ஒருத்தி!"

"காசு குடுக்கவேணாம்?"

"ச்சேச்சே! இங்கேயெல்லாம் டவுன்மாதிரி கெடையாதுப்பா. சும்மா ஜாலிக்காகத்தாம்ப்பா எல்லாம்! இப்டி திருட்டுத்தனமா பண்றதுலே ஒரு த்ரில் இருக்குப்பா... அப்றம் அததும் எவனையாவது கட்டிக்கிட்டு ஏதாவது பத்து ஊர் தள்ளி போயிடுவாளுக!"

"மாட்டிக்கிட்டா?"

"ஏன் மாட்டிக்கிறோம்! நாம சும்மா வயக்காட்டுக்குப் போறோம்! அதுங்க வெறகு பொறுக்க சவுக்குத்தோப்புக்கு வருதுங்க! யாராவது வந்துட்டா அதுங்க உடனே வெறகு பொறுக்க ஆரம்பிச்சிடுங்க!"

"சரி! யாருப்பா அங்கெ வர்ரேன்னு சொல்லிருக்கிறது?"

"அது சஸ்பென்ஸ்! ஆனா ஒண்ணு, எல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்! நம்ம எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அது நம்ம ஸ்கூல்லே ஏழாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தது."

"யாரு காவேரியா"

"இல்லே"

"ரேணு?"

"அதுவும் இல்லே"

"சுசீலா?"

"அட! கண்டுபிடிச்சிட்டியே! அவளேதாம்ப்பா! ஆனா, அவ வர்ரது என்னெப்பாக்க! அவ ப்ரெண்டு ஒருத்தி பக்கத்து கிராமத்துலேர்ந்து அவ வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்கா! அவதான் உனக்குத் தோது!"

"அது எப்பிடிப்பா! அவ ஒத்துக்கணுமே!"

"அட நீ ஒண்ணு! அவ அவளும் ஆள் கெடைக்காமே அலைஞ்சிக்கிட்டிருக்கா! மண்ணு திங்கிற உடம்ப மனுஷன் திங்கட்டுமேங்கிறதுதான் அவளவளுக்கு! புரியிதா! அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்! நீ ரெடியா இரு! வாழ்க்கையிலே இப்டியே சுத்தபத்தமா இருந்து சாகும்போது என்னத்தப்பா கட்டிக்கிட்டு போப்போறே? சும்மா வா! அவளுக என்ன உன்னையெ கட்டிக்கவா சொல்லப் போறாளுக? சும்மா ஜாலிக்குத்தான் வர்ராளுக! நீ ஒண்ணும் கவலைப்படாதே!"

"ம்ம்...? அப்டீங்குறே...? சரி பாக்கலாம்!"

"என்ன பாக்கலாம்! வர்ரே நாளைக்கி!"

"சரி"

"நாளக்கி உன்னையெ கண்டிப்பா எதிர்பார்ப்பேன்!"

"வேறேதும் ப்ராப்ளம்...?"

"ஏய்! மொதல்லெ ஆம்பளையா லெட்சணமா இருப்பா! அவனவன் மொளைச்சு மூணு எலை வுடுறதுக்குள்ளே தைர்யமா என்னென்னமோ பண்றான்! நீ என்னடான்னா..."

"சரி சேகர்! கட்டாயம் வர்ரேன்! நீதான் ப்ராப்ளம் வராமெப் பாத்துக்கணும்! ஆமா, இந்த பொம்பளெ சீக்கு ஏதும் தொத்திக்காதே?"

"அதா! இப்ப என்னென்னமோ சொல்றானுங்க! எய்ட்ஸ் அது இதுன்னு! ஆனா அதெல்லாம் டவுண்லேதாம்ப்பா வரும்! இதுங்கல்லாம் தொழில் செய்யிற ஆளுங்க இல்லப்பா! ஏதோ ஜாலிக்காக வர்றவளுங்க! சீக்குங்குற பேச்சுக்கே எடமில்லே இங்கே!"

சேகரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.அவன் பார்வை சேகருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கணும். அதனால்தான் அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.

"இந்தாப்பா மூர்த்தி! வேணுன்னா வா, வேணாட்டி விட்டுரு! எதுவும் கட்டாயமில்லெ, புரியிதா?"

"இல்லே சேகர், நாளைக்கி கட்டாயம் வர்றேன்! எனக்கு சவுக்குத்தோப்ப பாக்கணும்போலருக்கு!"

"ஓக்கே! அப்ப வந்துரு!"

சேகரிடமிருந்து விடைபெற்று கடையைவிட்டு வெளியே வந்தான் மூர்த்தி. சற்று தள்ளி எப்போதும்போல மசமசப்பாய் உச்சிவெயிலில் காய்ந்துகிடந்தது கடைத்தெரு. மெதுவாக ஊரை விட்டொதுங்கியிருக்கும் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் தலையில் சுள்ளென அறைந்தது வெயில். மனசு முழுக்க நாளைக்குப் பார்க்கப்போகும் சவுக்குத்தோப்பும் அது தரப்போகும் அனுபவமும் அவனுள் சூடாய் நிறைந்து வழிந்தோடிற்று.


(தொடரும்..)